செருவாமணி 23
Written by Baskar Sathya
ஒத்தைத் தெருவில் சித்தப்பாவை ரிக்ஷாவில் செருவாமணி விட்டுவிட்டு வீடு வரும்போது எட்டாகிவிட்டது.
வாசல் கதவை திறக்கும் போதே விசாலம் கேட்டது, 'பையன் எப்படி இருக்கான்? நந்துக்கு பொருத்தமா இருக்கானா?'
எல்லாவற்றையும் சொன்னார். சந்தோஷம் விசாலம் முகத்தில்.
'மாப்பிள்ள முறுக்கை இப்பவே காண்பிக்கறாரே. ஒத்துப்பாளோன்னோ?'
'எனக்கென்ன தெரியும் சாலி. எல்லாம் கோபு வாத்யார் பார்த்துக்கறேன்னு சொல்றார். நல்ல மாதிரியா தெரியரார். நான் கேட்டு சொல்றேன், கவலைப் படாம போங்கோன்னு சொன்னார். வேற என்ன நாம பண்ண முடியும், நம்பிக்கையோட இருக்கணும்.'
'பையனோட அப்பா தங்கம் டி. நன்னா பேசறார். மாமி மேல ரொம்ப பிரியம் தெரியுமோ, என்ன மாதிரி.'
'போதும் வழியாதீங்கோ. இந்த வழிசலுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன்.'
திங்களாச்சு, செவ்வாயாச்சு, புதனாச்சு. மெட்ராஸ்லேந்து தகவல் வரல.
'சித்தப்பாக்கு வேற மாதிரி தகவல் வந்திருக்குமோ. சங்கோஜ பட்டுண்டு ஒரு வேளை சொல்ல தயங்கறாரோ சாலி.'
'நம்மாத்து நம்பரை கொடுத்திருக்கேளோ?'
'நம்ம பொண்ணு ஜாதகத்திலயே எழுதியிருக்கே, பார்க்க மாட்டாரா என்ன? எதுக்கும் சாயந்திரம் சித்தப்பாகிட்ட பேசிட்டு வரேன்.'
மீண்டும் ஆனந்த விநாயகர். அப்ளிகேஷன் வரன் கிட்டேந்து நல்ல தகவல் வர்ரதுக்கு. அன்னிக்கு என்னமோ வெள்ளிக் காப்பில் பிள்ளையார் உர்ருனு இருந்தார். ஒருவேளை சந்தனக் காப்புதான் அவருக்கு பிடிக்குமோ என்னவோ, யார் கண்டா?
'சித்தப்பாவாத்துக்கு இப்ப போறேன். நல்ல தகவல் அவர் கொடுத்தார்னா உனக்கு வெள்ளிக் கிழமையே சந்தனக் காப்பு, என்ன?'.
ஒரு சின்ன எம்ஓயு பிள்ளையாரோடு. மனசோடு அக்ரிமென்ட் முடிஞ்சோண்ண இப்ப பிள்ளையார் சிரிக்கிர மாதிரி தோணியது செருவாமணிக்கு. சிரிச்சது அவரே இருந்தாலும் செருவாமணிக்கு பிள்ளையார் சிரிச்சதாத்தானே அர்த்தம்?
'வாங்கோ மாப்ள, இப்பத்தான் கோபு ஃபோன் பண்ணினான். வர ஞாயித்துக் கெழமை பொண் பார்க்க சௌரியப்படுமான்னு கேட்டான். நான் கேட்டு சொல்றேன்னு சொன்னேன். இத உட்டா, பையன் ஏதோ மெடிகல் கேம்ப் போறானாம். என்ன சொல்றேள்?'
'ரொம்ப சந்தோஷம் சித்தப்பா. சாலிகிட்ட ஒரு வார்த்தை.'
'இப்பவே புதன் ஆயிடுத்து. ரெண்டு நாள்ல அவா டிக்கெட் எடுத்து ஏற்பாடெல்லாம் பண்ணனுமே மாப்ள. நம்மாத்து ஓனராத்து ஃபோன்லேந்து விசாலத்துகிட்ட பேசுங்கோளேன்.'
ஆத்துக்கு ஃபோன் சித்தப்பாவுக்கு தெரிஞ்ச ஆத்துலேந்து. சாலியிடம் விவரம்.
'ஏன்னா, இதுக்கெல்லாமா என் கிட்ட கேட்கணும்? சரி சொல்லுங்கோ யோசிக்காம'
'சரி மாப்ள. நான் சாப்பிட்டுட்டு கோபு கிட்ட சொல்லிடறேன். நீங்க கிளம்புங்கோ.'
வரும்போது ஆனந்த விநாயகர் கோவிலில் கூட்டம். தாவாங்கட்டையில ஒரு மிருதங்க தட்டு தட்டிட்டு 'சும்மா சும்மா அவரை தொந்தரவு பண்ணக் கூடாது' ஒரு தேறுதல் மனசுக்குள்ளேயே.
வீடு வந்தாச்சு, கடையிலே சிறிது நேரம் அமர்ந்துவிட்டு.
வரும்போதே சிரித்துக் கொண்டே ஜாங்கிரி பாக்ஸை நீட்டினார் சாலியிடம். பிறகு சந்தனக்காப்பு வேண்டுதல சொன்னார் அவளிடம்.
'ஏன்னா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சோண்ண பண்ணலாமே. என்ன அவசரம். கொழந்தைய சனிக்கெழம தானே திருச்சிலேந்து அழச்சிண்டு வர முடியும். சந்தனக் காப்பு அவ பார்க்க வேண்டாமா?'
'என்னவோ கவலையா இருந்தது. அதான் வேண்டிண்டேன் சாலி.'
'நான் வேண்டாம்னு சொல்லலைனா. ஞாயித்துக் கிழமை அவா பொண் பார்த்தவுடனே அவாளையும் அழச்சிண்டு சந்தனக்காப்பு பார்த்துட்டு வரலாமே. நம்ம பொண்ணும் இருப்பா. எனக்கு என்னவோ இது நல்ல ஐடியாவா தோணறது.'
யோசித்தார். 'சாலி சொல்றதுதான் சரி'.
சந்தனக்காப்புக்கு சொல்லியாச்சு. திருச்சிலேந்து நந்து குட்டியையும் அழச்சிண்டு வந்தாச்சு.
ஞாயிற்றுக் கிழமை வந்தாச்சு.
தொடரும்....
No comments:
Post a Comment