Sunday, January 2, 2022

செருவாமணி 2

 #SERUVAAMANI

Written by Baskar Sathya 

#Seruvaamani_2

அத்யாயம்: 2 ..  செருவாமணி

ராஜப்பையர் அவர்கள் ஷைலாக் டைப். வட்டிக்கு வட்டி  (பவுண்ட் ஆஃப் ஃப்லெஷ்)  வாங்குவார்.  ஆனாலும் ஒரு பயம். தன் வாரிசுக்கு எந்தவித பங்கமும் வந்து விடக்கூடாது என்று.

தர்மாம்பாள் மாமிக்கு ஆத்துக்கு ஒரு பொண்ணு இருந்தால் நல்லது என நினைத்தாள்.  வாய்விட்டே ஒரு முறை கேட்டு விட்டாள்.

'ஏன்னா, ஆஸ்திக்கு ஒருத்தன் இருந்தாலும், ஆசைக்கும் ஒன்று  வேண்டாமா?'

'போடி நான் குருவி சேக்கிர மாதிரி சேக்கிரேன் . இவன்தான் நமக்கு ஆஸ்தி, ஆசை  எல்லாம். நீ வேற கணக்கெல்லாம் போடாத.'

ஆதங்கம் மட்டுமே மிச்சம். எதிர்த்து பேசமுடியாது அவளால்.

அவருக்கு செல்லமா பெத்தவர்கள் வைத்த சிறுவயது நாமகரணமே "துர்வாசர்"  தான்.

மாமிக்கு தெரியாதா துர்வாசர் கோபம்.  பகவான் விட்ட வழி என மனதை திடப்படுத்திக் கொள்வாள்.

ஆனால் ஐயர் வாய் பேச்சில் கில்லாடி.  ஒருவர்  சொத்து தனக்கு சேர வேண்டும் என்றால் கம்பீரத்துடன் குழைவார்.  தவணை மீறினால் பச்சாதாபம் பார்க்க மாட்டார்.

பாலு என்னவோ அப்பாவின் லேவாதேவியில் நாட்டம் காட்டினாலும், அப்பாவின் பணவசூல் கெடுபிடிகள் அவனுக்கு பிடிக்க வில்லை.

இப்படித்தான் ஒரு முறை ஒருத்தன் தன்நிலத்தை இவருக்கு கிரயம்பேசி, ரிஜிஸ்டர் ஆபீசில் பணம் பட்டுவாடா செய்தான்.  ஊருக்கு திரும்பி போக கூட பணம் இல்லாமல் தயங்கினான்.  இவரிடம் கெஞ்சியபோது, 'ஏண்டா சொத்து இல்லாதவன்  எதுக்கு 

பணம் கொடுத்து பஸ்ஸில் போகணும்?  நடந்து போ' என தாக்ஷண்யம் இல்லாமல் சொல்லி, தன் மாட்டு வண்டியில் கிளம்பி விட்டார்.  அவன் முணுமுணுப்பது காதில் விழுந்தாலும், சட்டை செய்யவில்லை.

ஒரு நாள் துணிந்தே கேட்டுவிட்டாள் தர்மாம்பாள்.  'எல்லாரோட வயத்தெரிச்சலையும் இப்படி கொட்டிக்கறேளே. கருவேப்பிலை கன்னு மாதிரி நமக்கு ஒரு வாரிசு அவனை இதெல்லாம் தாக்காதா'.

முறைத்து விட்டு தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மாதிரி  பார்த்தார்.  உள்ளூர பயம் பிடித்து கொண்டது இருந்தாலும்  காட்டிக்கொள்ளவில்லை.

பாலுவுக்கோ லேவாதேவி பிடித்திருந்தாலும், அப்பாவின் பண வசூல் கெடுபிடிகள் பிடிக்கவில்லை.  ஏதோ கணக்கு வழக்கு எழுதுவது, வரவு வெய்ப்பது, அடகு வைத்த பொருட்களையும் தஸ்தாவேஜுகளையும் பணம் வசூல் ஆனதும் திருப்பிக் கொடுப்பதில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் 'நமக்கோ பல ஏக்கர் நில புலம் இருக்கு.  ஏன் இதுல போய்?'

காலங்கள் கடந்தன.  பாலுவுக்கு பதினெட்டாவது வயதிலேயே திருமணத்தை முடித்து விட்டார்.  வந்த மருமகள் பெயர் விசாலம்.  பாலுவுக்கு இணையான அழகு.

இரு அழகும் இணைந்து இன்னொரு அழகையும் வீட்டுக்குள் சேர்த்துவிட்டன அடுத்த வருடமே.  பெண் குழந்தை.  நந்தினி என்று பெயர் வைத்தார்கள்.

திருப்பங்கள் இல்லாதது வாழ்க்கையா என்ன?


தொடரும்...

No comments:

Post a Comment