Monday, January 3, 2022

வீல்

வீல்

சிறு வயதில் பள்ளி விடுமுறைக்கு கும்பகோணத்தில்  பழைய பாலக்கரை பக்கத்தில் உள்ள மாமா வீட்டிற்கு செல்வோம்.  ஏதோ எங்களுக்கு அது USA போகிற மாதிரி.

என் அக்காக்களும் தங்கையும் மாமா பெண்களோடு பல்லாங்குழி, தாயம் விளையாட நானும் என் அண்ணனும் தெரு பசங்களுடன் வெயில் வீணாக போகாமல் ஊர் சுற்றுவோம்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளி எங்களை விட இரண்டு அல்லது மூன்று வயது பெரியவன்.  பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருப்பவன்.  எங்களை சற்று அலட்சியமாக பார்ப்பான்.  மனதில் ஹீரோ என்று நினைப்பு. எப்போதும் வெற்றிலை, சீவல் புகையிலை போட்டு வாயை சிவப்பாக வைத்திருப்பான். கொஞ்சம் அசட்டு தைரியம் ஜாஸ்தி.

ஒரு மாலை வேலையில் எல்லோரும் தெருவில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் ஒரு மந்தகாசமான புன்னகையை தவழ விட்டு மைதிலி எங்களை கடந்து சென்றாள்.  அவள் எல்லோரையும் பார்த்து பொதுவாக புன்னகைத்த மாதிரிதான் இருந்தது.  ஆனால் முரளியோ தன்னைப் பார்த்து புன்னகைத்தாள் என்று ஒரே அலட்டல்.

"யாருடா அது? இவ்வளவு சேப்பா இருக்காளே"

'"அவள் கோபால அய்யங்கரோட பொண்ணு..அய்யங்கார் பொண்ணு எல்லோரும் சேப்பாதான் இருப்பா.. எட்டாவது படிக்கிறா" என்றான் முரளி.

மாலையில் நாங்கள் கூடி நின்று பேசும் போது மைதிலி புன்னகையை தவழ விட்டவாறே எங்களை கடந்து செல்வது வாடிக்கை ஆகி விட்டது.  முரளியின் நடை, உடை பாவனைகளே மாறி விட்டது.

திடீரென்று ஒரு இரண்டு நாட்களாக அவளை காணவில்லை.  முரளி நிலை கொள்ளாமல் தவித்தான்.

"இப்ப என்னடா பண்றது"?

"அவ வீட்டுக்கு வேணா போய் பாரேன்...மத்தியான வேளையில் போ..அவ அப்பா, அம்மா தூங்கிண்டு இருப்பா..இவ குமுதம் படிச்சிண்டு இருப்பா" என்று ஒருவன் யோசனை சொன்னதும் உடனே அதை செயலாற்ற முனைந்தான் முரளி.

அடுத்த நாள் நல்ல மத்தியான வேளையில் மைதிலி வீட்டு சுவரேறி குதித்தான்..நாங்கள் எல்லோரும் வீட்டுக்கு வெளியே காத்திருந்தோம்.  அவன் குதித்த போது இலை சருகுகள் மீது பட்டு சத்தம் போட வீட்டின் உள்ளே இருந்து யாரோ பார்த்து விட்டு "வீல்" என்று அலற, தூக்கத்தில் இருந்து எழுந்த மைதிலியின் அப்பா கையில் கிடைத்த கம்பை சுழற்றிக் கொண்டு சிலம்பாட்ட வீரர் மாதிரி வந்து "யாருடா அது"? என்று கர்ஜித்தார்.  முரளி அசகாய சூரன்.  சட்டென்று அவருக்கு தெரியாமல் அருகில் உள்ள மாமரத்தில் நிமிடங்களில் ஏறி மறைந்து கொண்டான்.

யாரையும் காணாமல் "எல்லாம் வானரங்கள்" என்று கத்தியவாறே வீட்டுக்குள் சென்றார்.  முரளி மரத்தில் இருந்து இன்னும் இறங்கவில்லை.  "அப்பா போய்ட்டா கீழே இறங்கு" என்று மைதிலி அவனை இறங்க வைத்து ஏதோ பேசி அனுப்பினாள்.

முரளி முகத்தில் சந்தோஷ களை தாண்டவமாடியது.

"என்னடா சொன்னா"?

"எதுவா இருந்தாலும் என்கிட்டே நேரடியா கேட்க வேண்டியது தானே...இப்படி திருட்டுத்தனம் பண்ணுவது எனக்கு பிடிக்காது...நாளைக்கு சாயங்காலம் 6 மணிக்கு பாலக்கரை வா..நான் கோயிலுக்கு போவேன்" என்று சொல்றாடா.. ஆமாம் அய்யங்கார் ஸ்மார்தாவோட சம்பந்தம் வெச்சுக்குவாளா என்றான் திடீரென்று.

"அடுத்த நாள் முழுவதும் நிலை கொள்ளாமல் தவித்தான் முரளி.  முழுக்கை சட்டையும், பேன்டும் போட்டு தலையில் ஏதோ கண்றாவி கிரீம் தடவி முடியின் முன்னால் பந்து போல அலங்கரித்து தெலுங்கு பட நாயகன் போல தெரிந்தான்..

அவன் அருகில் வரும் போதே ஏதோ நாற்றம் குடலை புடுங்கியது.  

"என்ன முரளி உன்கிட்டே ஒரு வித வாசனை"?

"பாரின்ல இருந்து என் மாமா அத்தர் கொண்டு வந்து கொடுத்தார்..அதோட வாசனைதான் இது.  நல்லா இருக்கா"? என்றான்.

அத்தரை மொத்தமாக பூசி இருப்பான் போல..அந்த நாற்றம் அவனை மட்டும் அல்ல கும்பகோணத்தையே தாக்கியது.

ஒரு வழியாக சரியாக ஆறு மணிக்கு பாலக்கரை அருகில் காத்திருந்தான்.  நாங்கள் எல்லாம் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தோம்.

மைதிலியும் வந்து விட்டாள்.  நேரே அவனிடம் போய் ஏதோ பேசி விட்டு ஒரு மஞ்சள் பையை அவன் கையில் திணித்து விட்டு கிளம்பி விட்டாள்.

எங்களை நோக்கி வந்த முரளி முகத்தில் சுரத்தே இல்லை.

"என்னடா சொன்னா"?

"அதேதான்....திருட்டுத்தனமாக செய்வது அவளுக்கு பிடிக்காதான்...இதுக்குதானே எங்கள் வீட்டு சுவர் ஏறி குதிச்சே.. எதுவா இருந்தாலும் நேரிடையாக கேளு என்று சொல்லி இதை கொடுத்துட்டு போனா"

என்று அழாக்குறையாக சொல்லி மஞ்ச பையில் கை விட்டு அதை எடுத்தான்.

பச்சை பசேலென்று நன்கு முற்றிய கிளி மூக்கு மாங்காய் அவன் கையில் பிரகாசித்தது.

No comments:

Post a Comment