#SERUVAAMANI
Written by Baskar Sathya
#Seruvaamani_1
அத்யாயம்:1 .. செருவாமணி
அழகிய கிராமம் செருவாமணி. நீடாமங்கலத்திலிருந்து நாற்பது கிலோ மீட்டர். திருவாரூர் மாவட்டத்தில் தற்போது.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஜனத் தொகையை உள்ளடக்கிய அறுநூறு குடும்பங்கள் தற்போது இருக்கலாம். சுமார் முன்னூறு ஹெக்டேர் பரப்பளவில் ஒரு சிறிய மற்றும் அழகிய கிராமம்.
மூர்த்தி சிறிதானாலும், இந்த கிராமத்திற்கு ஒரு தனித்துவம் உண்டு. பாடல் பெற்ற சிவ ஸ்தலம் என்ற கர்வம் உண்டு. திருநெல்லிக்கா நெல்லிவன நாதர் இந்த கிராமத்தில் ஆட்சி புரிகிறார், அம்பாள் மங்கள நாயகி.
அது என்ன திருநெல்லிக்கா. அதுவா, செருவாமணி கிராமத்தின் மற்றொரு பெயர்.
இந்த ஸ்தலம் தேவாரத்தில் 234 வது பாடல் பெற்ற ஸ்தலம். நெஞ்சுருக பிரார்த்தித்தால் குஷ்டங்களை நிவர்த்தி செய்யும் வல்லமை பெற்றவர். காவிரி தென் பகுதியில் இருக்கும் ஸ்தலம்.
தற்போது உள்ள ஜனத்தொகையே இரண்டாயிரம்தான் என்றால் இந்த கதை துவங்கும் எழுபது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்.
வயல் பகுதி மிகுந்தும் வீடுகள் சுமார் நூற்றைம்பது மட்டும் இருந்திருக்கலாம்.
அந்த கால கட்டத்திலும் இங்கு பிராமண குடும்பங்களை உள்ளடக்கிய அக்ரஹாரம் உண்டு.
அப்படி ஒரு குடும்பம் ராஜப்பையர் குடும்பம். பத்து வேலி நிலச் சுவான்தார் இவர். இரு போக விளைச்சல். நெல் விற்ற பணத்தில் குடும்ப செலவு போக மீதிப்பணத்தில் லேவாதேவி். அதாவது வட்டிக்கு கடன் வியாபாரம்.
குறைந்த வட்டிக்கு கடன் கொடுப்பதால் இவருக்கு மவுசு அதிகம். பக்கத்து கிராமங்களில் இருந்தும் படையெடுப்பார்கள்.
கடன் கொடுக்கும் வரை சாமர்த்திய பசு. வாயொழுக பேச்சு. வசூலிப்பதில் பாயும் சிங்கம். தவணைகள் கொடுத்தும் திருப்பி தரவில்லை என்றால் தயை தாட்சண்யம் இல்லாமல் சொத்துக்கள் லபக்.
இரண்டு வேலி மூதாதையர் சொத்து. அதை ஐந்து மடங்காக்கியது இவரின் உழைப்பு, சாமர்த்தியம், சிக்கனம் மற்றும் லேவாதேவி.
அண்டா, குண்டா, தொங்கட்டான், தோடு எல்லாம் ஏற்கப் படும். சொந்தமே கைமாத்து என்றாலும் சொத்தைக் கேட்பார்.
கைத்தடியோடு ஒரு அடியாளுடனே ஊருக்குள் வலம். சொத்தை இவரிடம் இழந்தவர்கள் சீற்றம் கண்டு விட்டால் என்ற தற்காப்பு உணர்வு எப்போதும்.
மனைவி தர்மாம்பாள், ஐயோ பாவம் பரதேவதை டைப். அடியே என்ற அவரின் குரலுக்கு குலை நடுக்கம். காதல் வார்த்தைகளை விட வசவு வார்த்தைகளை இவள் கேட்டதே அதிகம். 'வாக்கப் பட்டாச்சு, எப்படியோ வாழ்க்கைய ஓட்டிபுடணும்' என்ற தனக்குத் தானே வைத்துக் கொண்ட தத்துவத்தில் ஒரு உயிரோட்டம் தர்மாம்பாளுக்கு.
சத்தங்களுக்கு இடையில் சத்தமில்லாமல் பெத்தது ஒண்ணு. வாரிசின் பெயர் பாலு. இந்த வாலு ஒன்றே தர்மாம்பாளின் ஆறுதல். ஆனாலும் அவன் அழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், சத்தம் போடாமல் அவன் விளையாட வேண்டும். இல்லையென்றால் எந்த ராக்கெட்டும் இவள் மேல் விழும் ராஜப்பையரிடமிருந்து.
ஒரு கணக்குப் பிள்ளை டெஸ்க், நாலைந்து லெட்ஜர் நோட்டு, பேனா, பென்ஸில், ரப்பர், ஸ்கேல், கூட ஒரு ஸேஃப் சகிதம் இவர் திண்ணையில் உட்கார்ந்தால் ஸெல்ஃப் ஆடிட் நடக்குதுன்னு அர்த்தம். கூடவே, எவனுக்கோ அஷ்மத்துல சனி என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர் சதாசர்வ காலம் காசுகளை எண்ணுவதை பார்த்துக் கொண்டே இருந்ததால் பாலுவுக்கு படிப்பில் நாட்டமில்லை, காசின் மேல் தான் விருப்பம். அடி உதைக்கு பயந்து ஆறாம் க்ளாஸ். அது கூட வாத்தியார்களின் உபகாரத்தால். பையன் உசுரு அப்பன் கிட்ட போயிடுமோங்கற கவலை அவங்களுக்கு.
பாஸ் போட்டு விட்டு அவரிடம் பத்த வைக்காமலும் இல்லை. 'உங்க பையனுக்கு படிப்பு ஏறாது. அவனை உங்க நிர்வாகத்துல பழக்கப் படுத்துங்கோ. அதான் நல்லது'.
ராஜப்பையரும் யோசிக்கமால் இல்லை. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு பயம். எதிரிகளால் ஆபத்து? ஒரே வாரிசாச்சே!
ஒரு வழியாக அவர் இவன் படிப்பை நிறுத்தியது இவனுக்கு சந்தோஷம்.
ஆனா, ஆவன்னா, க, கா, கி, கீ தெரியும். நாலு எழுத்து கூட்டி படிக்க தெரியும். பதினாறாம் வாய்ப்பாடு வரை ஓரளவு மனப்பாடம். போதாதா பின்னே லேவாதேவிக்கு. இழுத்து விட்டு விட்டார்.
'என்னண்ணா, கொழந்த படிப்பு?' தர்மாம்பாளின் குரல்.
'எல்லாம் எனக்கு தெரியும். ஒன் வேல அடுக்களைய பார்க்கறது தான், என்ன?'
புள்ள பூச்சி அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது. இந்த கேள்வியே அசாத்ய தைரியத்தை வரவழைத்துக் கொண்டுதான்.
தொடரும்.....
No comments:
Post a Comment