Saturday, December 4, 2021

கனியுமோகாதல்_42

கனியுமோகாதல்_42

காஃபியை கையில் வாங்கிக் கொள்கிறார் சுந்தரம்.

'அம்மா இல்ல?  அம்மா கோபம் அடங்கித்தா இல்லையா?'

மெள்ள கேட்கிறார் மைதிலியிடம் சிரித்துக் கொண்டே.

'முண்டக கண்ணி அம்மன் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாப்பா.  வேற வேலையென்ன அம்மாக்கு.  எப்ப பார்த்தாலும் கல்யாணம் கல்யாணம் கல்யாணம்.'

'எப்ப பார்த்தாலும் ஆஃபீஸ் ஆஃபீஸுனு இருக்க.  ஆத்துக்கு வரும்போதுதான உன்னோட பேச முடியறது அம்மாவுக்கு.  ஒரு அலையன்ஸ் பார்த்திருக்கறதா அம்மா சொன்னாளில்லையோ.  அவா விடாம ஃபோன் பண்றா.  எவ்வளவு பொய்தான் அவா கிட்ட சொல்றது.  நல்ல வரன்.  விடவும் மனசு வரல.'

'அப்பா, இன்னும் கொஞ்ச நாளுல ஸ்ரீதர திரும்பி சார் கிட்டேயே வரப் போறான்.  அவன் வந்துட்டா நான் கொஞ்சம் ஃப்ரீயாயிடுவேன்.  அது வரைக்குமாவது பொறுத்துக்கோங்கோப்பா.'

'ஏண்டி, அவன்தான் தனியா ப்ராக்டீஸ் பண்றானே.  ஆஃபீஸ்லாம் தனியா ஆரம்பிச்சானே?'

'ஆமாம்பா.  அது பெரிய கதை.  ரெண்டு நாளா உங்க கிட்ட சொல்லணும் சொல்லணும்னு நெனைக்கறேன்.  முடியல.'

இப்படிச் சொல்லிவிட்டு பிக்‌ஷேஸ்வரன் மைதிலியை கூப்பிட்டு பேசியது, மீட்டிங் போட்டது என்று எல்லாவற்றையும் விவரிக்கிறாள்.

அதுவரை கேட்டுக் கொண்டிருந்தவர் முகத்தில் எட்டிப் பார்த்தது கோபம்.

'உனக்கு ஏன் இந்த மாதிரி எண்ணமெல்லாம் தோணறது.  வேண்டாம்னு போனவன எதுக்கு இழுக்கணும்?  பிக்‌ஷேஸ்வரன் சாருக்கு கூட விருப்பமில்ல.  நீ உண்டு உன் வேலை உண்டுனு இருக்கறத விட்டுட்டு ...  நீ செஞ்சது எனக்கு துளிக் கூட பிடிக்கல.'

'அது இல்லப்பா.  அவன் பாவம்பா.  நல்லவம்ப்பா.'

'நீ ஒண்ணும் ஸர்டிஃபிகேட் அவனுக்கு கொடுக்க வேண்டாம்.  தேங்காமூடி வக்கீலா இருக்கறவனுக்கு இவ்வளவு பரிவு நீ காட்ட வேண்டிய அவசியம் என்ன?  அது என்ன அவன் மேல மாத்திரம் உனக்கு அவ்வளவு அக்கறை?  ஏதோ ஒண்ணா படிச்சேள்.  ஃப்ரெண்ட்ஸா பழகினேள்.  அத்தோட நிறுத்திக்கணும்.  நீ செய்யறது சுத்தமா எனக்கு பிடிக்கல.  இது என்னவோ ஃப்ரெண்ட்ஷிப் தாண்டி எங்கேயோ போயிண்டிருக்கற மாதிரி எனக்கு தோணறது.  கௌரவமா வாழ்ந்துண்டிருக்கோம்.  அத கெடுத்துடாத.'

சில நேரங்களில் பாசங்களுக்கிடையே புரிதல் இல்லையேல் வார்த்தைகள் சிதைத்து விடும்.  மைதிலிக்கு கிட்டத்தட்ட புதைத்து விட்ட விருப்பம் மனதில்.  சுந்தரத்திற்கோ ஏற்கனவே புதைந்திருந்த சந்தேகம்.

'என்னப்பா இப்படியெல்லாம் பேசறேள்?  நம்மாத்து கௌரவத்துக்கு நான் என்னப்பா கெடுதி பண்ணினேன்?'

'வேற என்ன பண்ணனும்?  நீ கல்யாணத்த தள்ளிப்போடு தள்ளிப்போடுன்னு சொல்லும்போதே முழிச்சிண்டிருக்கணும்.  அந்த கொட்டாங்கச்சி காரன் நன்னா வர வரைக்கும் எங்கள ஏமாத்தலாம்னு பார்த்திருக்க.  அது நடக்கலைனு தெரிஞ்சு விட்டேத்தியா வரன் பார்க்க சம்மதிச்சிருக்க.  நாங்களும் வெகுளியா பார்க்க ஆரம்பிச்சோண்ண என்ன பண்றதுன்னு தெரியாம அவன உங்க ஆஃபீஸ்ல சேர்த்து நைஸா எங்க கிட்ட நைஸா பேச்ச ஆரம்பிக்கலாம்னு ப்ளான் பண்ற.  இதெல்லாம் கூட ஒரு பெத்த அப்பனால புரிஞ்சிக்க தெரியாதா என்ன?'

'அப்பாஆஆஆஆஆஆ.  மேற்கொண்டு ஒரு வார்த்தை நீங்க பேசினா....'

'என்ன மெரட்டறியா?  என்ன செய்வ எங்கள?  எடம் கொடுத்து எடம் கொடுத்துதான் இப்படி நிற்கறோம்.  உன்னோட அம்மா செல்லம் கொடுக்காதீங்கொடுக்காதீங்கோன்னு கதறுவா.  நான்தான் கேட்காம இப்படி ஏமாளி ஆயிட்டேன்.'

'அப்பா, உங்கள அதிர்ந்து கேள்வி கேட்டது தப்புதான்.  மன்னிச்சிக்கோங்கோ.  நான் அவனுக்கு உதவறத வெச்சிண்டு நீங்க எதையெதையோ முடிச்சு போட்டு குழப்பிக்கறேள்.'

'நானா குழப்பிக்கறேன்?  என் தலைல அடிச்சு சத்தியம் பண்ணு.  உங்க ரெண்டு பேருக்கும் மியர் ஃப்ரெண்ட்ஷிப்தான்னு.'

இப்படி அப்பா கேட்பார் என்று சிறிதும் நினைக்கவில்லை.  அப்படி தலையில் சத்தியம் செய்து சொல்லும் அளவிற்கு பதிலும் இல்லையே அவளிடம்?

'கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளுங்கோப்பா.'

'ஆக சத்தியம் பண்ண தயக்கம்.  இனிமே நீ சொல்றத நான் பொறுமையா கேட்டு உங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு நாள் குறிச்சிண்டு வரணும்.  அப்படித்தானே.'

'என்ன பேசவே விட மாட்டேங்கறேளே அப்பா.  நீங்க நெனக்கற மாதிரியெல்லாம் இல்லப்பா.  என்ன நம்புங்கோப்பா.  கொஞ்சம் அமைதியா...'

'போதும் மைதிலி.  நாங்க ஏமாந்தது போதும் மைதிலி.  நல்ல வேளை அந்த பையனாத்துல பொண் பார்க்க கூப்ட்டு சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் பண்ண வெச்சு அவன் கிட்டேயே நீ தத்து பித்துன்னு பேசி எங்கள அவமானப் படுத்தாம இருந்தியே.  ஏதோ எங்க நல்ல காலம்.  பொழச்சோம்.'

'நீங்களே என்னென்னவோ கற்பனை செஞ்சுண்டு தீர்ப்ப எழுதறேளே அப்பா.  என்ன பேசவே விட மாட்டேங்கறேளே.'

'ஓ.  நீ வக்கீல் இல்ல.  மறந்துட்டேன்.  கோர்ட்டுல வாதாட மாதிரி உனக்கு வாதாட ச்சான்ஸ் கொடுத்து அப்பா தீர்ப்பு எழுதணும்.  எப்ப நான் சொன்னோண்ண என் தலையில நீ மடார்னு அடிச்சு சத்தியம் பண்ணலையோ அப்பவே இந்த ஜட்ஜ் தோத்துட்டான்.  இனி நீ வாதம் பண்ணினா என்ன பண்ணாட்டி என்ன?  எல்லாம் எங்க ரெண்டு பேர் தலையெழுத்துப் படி நடக்கட்டும்.'

'இப்படியெல்லாம் பேசாதீங்கோப்பா.  மனசுக்கு கஷ்டமா இருக்கு.  உங்கள மீறி நான் எதுவும் செஞ்சதுமில்ல.  செய்யப் போறதும் இல்ல.  என்ன நம்புங்கோப்பா.  ப்ளீஸ்.'

'அந்த உருப்படாதவன் அப்பா ஹாஸ்பிடல்ல இருந்தபோது நீ வலிய வலிய போய் அந்த பிராமணனுக்கு சிக்ஷுஸ பண்ணும்போதே சந்தேகம் பட்டேன்.  அப்பாவும் புள்ளையும் சேர்ந்து என் குடிய கெடுக்கப் போறான்னு அப்ப எனக்கு தோணல.  உனக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு.  எல்லாத்துக்கும் நான் தான் காரணம்.'

'ஒண்ணுமே இல்லாத விஷயத்த இப்படி பேசிப் பேசி என்ன ரணமாக்கறேளேப்பா இப்படி?'

'நான் ரணமாக்கறேனா?  அப்பா அம்மாவோட கௌரவத்த கொஞ்சமாவது நெனச்சுப் பார்த்தியா?  மல போல உன்ன நம்பினவன் மேல இப்படி மண்ண அள்ளி போட்டுட்டு நான் ரணமாக்கறேனா உன்ன?  ஊர் உலகத்துல எப்படியெல்லாம் பேசுவாங்கறத யோசிச்சியா?  ஐயர் ஐயங்கார்... பேஷ்.  ரொம்ப நல்ல பொருத்தம்.  சொந்தக்காரா அத்தன பேரும் மொத்தமா வந்து எங்க ரெண்டு பேர் மொகத்துல கரிய பூசுவா.  வேடிக்க பாரு.'

'அப்பா, நான் இப்ப எது பேசினாலும் உங்களுக்கு தப்பாதான் தெரியும்.  அதனால மேல பேசறத நிறுத்திக்கறேன்.  நீங்க அமைதியா பொறுமையா எப்ப கேட்க விருப்ப படறேளோ அப்ப சொல்லுங்கோ நான் பேசறேன்.'

'நான் அமைதியா கேட்கணுமா?  இனிமே எங்க ரெண்டு பேருக்கும் அமைதி என்னிக்குமே வராது.'

முண்டக்கண்ணி அம்மனுக்கு விளக்கேற்றி விட்டு உள்ளே நுழைகிறாள் கௌரி.

'என்ன ஒரே சத்தம்?  வாசல் வரைக்கும் கேட்கறது?'

'வா கௌரி.  உன் பொண்ணே உனக்கு சொல்லுவா.  மனசு சரியில்ல.  நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்.'

'என்ன ஆச்சு?  நன்னாத்தானே பேசிண்டிருந்தேள் ரெண்டு பேரும்?'

பதில் சொல்லாமல் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார் சுந்தரம்.

'ஏண்டி நீயாவது சொல்லேன்.  என்ன ஆச்சு?  அப்பாக்கு என்ன கோபம்?

வார்த்தைகள் வரவில்லை.  ஆனால் பொல பொலவென்று கண்ணீர் மைதிலி கண்களிலிருந்து.

ஒன்றும் புரியாமல் கௌரி.

'இங்க வா.  கிட்டக்க வா.  நான் இருக்கேன்.  அப்பா கிட்ட சொல்லி புரிய வெக்கறேன் எதுவா இருந்தாலும்.  இந்தா அம்பாள் குங்குமத்த இட்டுக்கோ.  எல்லாம் சரியாயிடும்.'

தலை குனிந்து மைதிலியின் நெற்றி குங்குமத்தை ஏற்கிறது.  ஆனால் தலை சாய்ந்து அம்மாவின் தோளில் சாய்ந்து ஆறுதல் தேடுகிறது.

கௌரி அவள் தலையை தடவுகிறாள்.  முதுகைத் தடவிக் கொடுக்கிறாள்.  விசும்பல் சில நொடிகளில்.

'ஏண்டி, அந்த வரன் பிடிக்கலையா?  அவ்வளவுதானே.  அவன் இல்லாட்டி இன்னொருத்தன்.  வேற வரன் பார்த்தா போச்சு.'

தரையில் அமர்கிறாள் கௌரி.

'இங்க வா மைதிலி.  இப்பத்தான் அம்பாள் கிட்ட ஒரு அழுகை அழுதுட்டு வந்தேன்.  நல்லபடியா கொழந்தைக்கு அவ மனசுக்கேத்த மாதிரி கல்யாணம் ஆகணும்னு வேண்டிண்டு வந்தேன்.  ஏதோ இன்னிக்கு கிரஹ கோளாறு.  அப்பா உன் மேல உசுரையே வெச்சிருக்கார்னு நோக்கே தெரியுமே.  ஏதோ இன்னிக்கு மூடு சரியில்ல அவருக்கு.  அவ்வளவுதான்.  வாடி.  இங்க வாஆஆஆஆ.  அப்பா மேல கோபம்னா அம்மா என்ன பண்ணினா?  வா, கிட்டக்க வந்து உட்காரு.'

நின்று கொண்டிருந்த மைதிலியின் கையைப் பிடித்து இழுக்கிறாள் கௌரி.

எல் ஷேப்பில் அம்மா உட்கார்ந்திருக்க, தொடை மீது முகம் புதைத்து விசும்பி விசும்பி அழுகை.  இப்போது கௌரி அவளிடம் எதுவும் கேட்கவில்லை.  அழுது ஓய்ந்தால் மனம் சாந்தப்படும் என்று அனுபவசாலி அம்மாவிற்கு தெரியாதா என்ன?

அழுகை நிற்கும் வரை மைதிலியின் தலையை வருடிக் கொண்டே இருக்கிறாள் கௌரி.

தொடரும்...

No comments:

Post a Comment