கனியுமோகாதல்_40
மைதிலி இருந்த அறையில் நுழைகிறார் ஆராவமுதன்.
'வாங்கோ மாமா. எப்படி இருக்கேள்?'
'அப்பாடி! ஞாபகம் இருக்கு உனக்கு. எங்க மறந்து போயிருப்பியோன்னு நெனச்சேன்.'
'இதானே வேண்டாங்கறது. போன மாசம் தான உங்காத்துக்கு வந்தேன். கொஞ்சம் பிஸி மாமா. இல்லாட்டி அடிக்கடி வந்து போயிண்டிருப்பேன். ஜெயஸ்ரீ, சார்தான் ஸ்ரீதரோட அப்பா.'
'ஓ. சேவிச்சுக்கறேன் சார்.'
'ரொம்ப சந்தோஷம்மா. நீ தான் ராமானுஜ மாமா பொண்ணா. அழகா லக்ஷணமா இருக்கியே. உங்க அப்பா வந்திருந்தார் ஆத்துக்கு ஒரு நாள். கொஞ்ச நேரம் பேசிண்டிருந்தார்.'
'சொன்னார் மாமா. அவரும் ஆத்துக்கு வந்து உங்கள பத்தி ரொம்ப பெருமையா பேசினா.'
'அதப் பத்தி அப்பறம் பேசுவோம். மைதிலி, உங்க பிக்ஷேஸ்வரன் சார் எப்படி இருக்கார்?'
'பரவாயில்ல மாமா. ஆனா முந்தி மாதிரி ஆக்டிவா இருக்க முடியல. சிங்கப்பூர் அவர அழச்சிண்டு போய் ட்ரீட்மெண்ட் கொடுக்கப் போறா போல இருக்கு.'
'அட ராமா.'
'சரி மாமா. ஒரு வார்த்த கூட சொல்லாம திடும்னு வந்திருக்கேளே. ஏதாவது விசேஷமா?'
கொஞ்சம் தயக்கம் அவரிடம். ஜெயஸ்ரீயை சில நொடிகள் பார்த்துவிட்டு தொடர்கிறார்.
'ஒண்ணுமில்ல. உன் கிட்ட தனியா ரெண்டு வார்த்த பேசிட்டு போகலாம்னு வந்தேன். ரொம்ப டைம் எடுத்துக்க மாட்டேன்.'
ஜெயஸ்ரீ புரிந்து கொண்டு, 'மைதிலி, நான் அந்த ப்ளெயிண்டை ரெடி பண்றேன். யூ கன்டின்யூ.'
அவள் அறையை விட்டு வெளியேறியவுடன் ஆராவமுதன் தொடர்கிறார்.
'மைதிலி, உன் கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு? ஸ்ரீதர நெனச்சு நெனச்சு ரொம்ப கவலையா இருக்கு. நாளுக்கு நாள் சோர்ந்து போறான். சரியா சாப்டறதில்ல தூங்கறது இல்ல. எவ்வளவோ சொல்றேன். அவன் போக்கு படிதான் அவன் இருக்கான்.'
'ஏன் மாமா, புது கேஸ்கள் வந்துண்டிருக்கோன்னோ?'
'அத ஏன் கேட்கற. இங்கேந்து போனதுக்கப்பறம் ஒரு கேஸ் கூட அவனால புடிக்க முடியல. ரொம்ப சோர்ந்து போறான். எப்படி அவன தேத்தி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல. அவன் சங்கடத்த பார்த்து நானும் டெய்லி கவலப் பட்டுண்டு இருக்கேன்.'
'எல்லாம் சரியாயுடும் மாமா. தைரியமா இருங்கோ. ஸ்ரீ ஏற்கனவே அடிக்கடி அப்ஸட் ஆறவன்தான். நாலு கேஸுகள் சுயமா கெடச்சிடுத்துன்னா ப்ரைட் ஆயிடுவான்.'
'உன்ன மாதிரி அவன் bபோல்டா இருந்துட்டா ஒரு பிரச்சனை இல்லையே.'
'அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா. அவாவாளுக்கு பிரச்சனைனு வந்துட்டா பலம் இழக்கறது நேச்சுரல் தான். சரியாயிடுவான்.'
'முந்தியெல்லாம் நீ அவன அடிக்கடி பார்த்து புத்திமதி சொல்லுவ. இப்ப ஏதோ அனாதை மாதிரி ஃபீல் பண்றான்.'
'ஏன் மாமா பெரிய வார்த்தையெல்லாம் சொல்றேள் அனாதை அது இதுன்னு. உங்களுக்கு தெரியாதா, இந்த உலகத்துல யாருமே அனாதையெல்லாம் கெடையாது. ஏதோ ஒண்ண புடிச்சிண்டு முயற்சி எடுத்துண்டிருந்தா சிரமங்கள்லேந்து வந்துடலாம் மாமா. ஸ்ரீ நல்ல கெட்டிக்காரன் தான். நன்னா வந்துடுவான்.'
'நீ ஒரு தடவ எப்படியாவது அவனப் பாத்து பேசிட்டா சரியாயிடும்.'
'பார்க்கத்தான் போறேன் சீக்கிரம். அவன திரும்பவும் இங்க கூட்டுக்கலாமான்னு சார் கிட்ட கேட்டேன். சரின்னு சொல்லியிருக்கார். இது விஷயமா அவன் கிட்ட டீடெய்லா பேசணும். கொஞ்சம் ஃப்ரீ பண்ணிண்டு நானே அவன இந்த வாரத்துக்குள்ள பார்த்துடுவேன்.'
'அப்படியா. அவன் மேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? உன்ன மாதிரி ஒரு பொண்ணு அவனுக்கு ஆத்துக்காரியாயும் வந்துட்டா அவனப் பத்திய கவலைய விட்டுடுவேன்.'
'கிடைப்பா மாமா. மெதல்ல அவன் உத்யோகத்துல கால ஊணட்டும் நன்னா. அதுக்கப்பறம் பாருங்கோ. எல்லாம் ஒவ்வொண்ணா நல்ல படியா நடக்கும்.'
'உன்ன மாதிரின்னு நான் சொன்னது உன்ன நெனச்சுதான் மைதிலி. உனக்கும் அவன பிடிச்சிருக்கே. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிண்டா அதவிட சந்தோஷம் எனக்கு என்ன இருக்கு. அவனுக்கும் உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டம் போலத்தான் தோணறது.'
இப்படிச் சொல்லி விட்டு கண் கலங்குகிறார். மைதிலிக்கு அவரை எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று சிந்தனை.
'மாமா, நாம நெனைக்கறதெல்லாம் நடந்துடறதா எப்பையுமே. சில விஷயங்கள் மனசுக்குள்ள இருக்கறதுதான் பெட்டர். ரொம்ப மனச போட்டு அலட்டிக்காம இருங்கோ. ஒண்ணு மட்டும் சொல்றேன். உங்காத்துக்கு ஏத்த மாட்டுப்பொண் கண்டிப்பா வருவா சீக்கிரமா பாருங்கோ.'
'நீங்க ரெண்டு பேரும் பழகறத மொதல்ல பார்த்துட்டு பரவாயில்லையே நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்காளேன்னு நெனச்சேன். அப்புறம் இந்த பொண்ணு ஐயங்காரா இருக்கக் கூடாதான்னு நெனச்சேன். அப்பறம் ஐயரா இருந்தா என்ன மனசுதான முக்கியம்னு எனக்கு நானே தீர்மானம் பண்ணிண்டேன். இப்ப நாளுக்கு நாள் எப்படியாவது உனக்கு அவன கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தோணிண்டே இருக்கு. உன் கிட்டேயும் மறைமுகமா என்னோட அபிலாஷைய சொன்னேன் நான் ஆஸ்பத்திரியில இருந்தப்ப. உனக்கு வரன் பார்த்துண்டிருக்கான்னு கேள்விப் பட்டோண்ண மனசு கேழ்க்கல. நேரேய உன்ன பார்த்து கேட்டுட்டு போகலாம்னுதான் ஓடி வந்தேன்.'
'எனக்கு வரன் பார்த்துண்டுருக்கான்னு யார் சொன்னது உங்க கிட்ட?'
'ஸ்ரீதர்தான் சொன்னான். அவனும் இத கேள்வி பட்டதுலேந்து பித்து பிடிச்சவன் மாதிரி இருக்கான் ரெண்டு நாளா. சரியா சாப்டறதில்ல. தூங்கறதில்ல. அவன் உன்ன ரொம்ப மிஸ் பண்றான் மைதிலி. எங்க ரெண்டு பேராலையும் முடியல மைதிலி. கொஞ்சம் எங்க மேல கருணை காட்டு. ப்ளீஸ். அடுத்த கட்டமா உங்க அப்பா அம்மா கிட்ட கையில காலுல விழுந்தாவது சம்மதம் வாங்க முயற்சி செய்யறேன்.'
'என்ன மாமா இது. ஏன் இப்படியெல்லாம் பேசறேள். எனக்கு ஸ்ரீயை பிடிச்சிருக்கு. இல்லைனு சொல்லல. உங்க கிட்ட மறைக்கவும் விரும்பல. யோசிச்சு பாருங்கோ. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. ஐயர் ஐயங்கார் வேற. இந்த உலகத்துலேயே எங்க அப்பா அம்மா மேல அவ்வளவு பிரியம் வெச்சிருக்கேன். என் மேல அசாத்ய நம்பிக்கை வெச்சிருக்கா. அவா மனசெல்லாம் ரணமாக்கி சம்மதம் வாங்கி அவா சாபத்தெல்லாம் வாங்கிண்டு கல்யாணம் பண்ணி என்ன சாதிக்கப் போறேன். நானும் எவ்வளவோ ஆங்கிள்ல யோசிச்சு பார்த்துதான் இது மனசோட பூட்டி வைக்கற விஷயம்னு முடிவுக்கே வந்துட்டேன்.'
'என் பையனுக்கு சரியா சம்பாத்யம் இல்லைனு வேண்டாங்கறயா? உனக்கு ஒரு கவலை இல்லாம நாங்க ரெண்டு பேருமே பார்த்துப்போம். என்ன நம்பு. மனசுக்கு பிடிச்சவனோட வாழறதுதான் சந்தோஷத்த கொடுக்கும். உனக்கு புத்தி சொல்ற அளவுக்கு எனக்கோ என் பையனுக்கோ தகுதி கண்டிப்பா இல்லைங்கறது தெரியும். அப்பா அம்மா கிட்ட பேசிப்பாரு. நீயே உன் மனசுல பூட்டி வெச்சு சித்ரவதைய அனுபவிக்காத. சின்ன பொண்ணு நீ. பெரியவன் நான் சொல்றேன். அப்பா அம்மா கிட்ட பேசு. உனக்கு சங்கோஜமா இருந்தா நான் வந்து பேசறேன்.'
'என் மேல இவ்வளவு பிரியமும் நம்பிக்கையும் வெச்சு நீங்க பேசறது ரொம்ப பெருமையா இருக்கு. என்னோட முழு கவலையெல்லாம் ஸ்ரீயை எப்படி தூக்கி விடணுங்கறதுதான். வேற எதுவுமே எனக்கு தோணல. ரொம்ப நல்லவன் மாமா அவன். அவன் இந்த ப்ரொஃபஷன்ல தோக்க கூடாது.'
'வாஸ்தவம்தான். நீ அவனுக்கு பக்கபலமா இருப்பேங்கறதுல எனக்கு துளி கூட சந்தேகம் இல்ல. ஆனா உன் மேல அவன் அசாத்ய ப்ரியம் வெச்சிருக்கான். அதுக்கு என்ன பண்ணுவ.'
'அத நான் அவனுக்கு பக்குவமா சொல்லி புரிய வைக்கப் பார்க்கிறேன். என் கிட்ட அத விட்டுடுங்கோ.'
'மொத்தத்துல இந்த வயசானவனையும் ஏமாத்திட்ட. நான் ரொம்ப ஆசையா வந்தேன். உன் சம்மதத்த தெரிஞ்சிண்டு நேரா உங்காத்துக்கு போகலாம்னு. ஐ அம் டிஸப்பாயிண்டட்.'
'எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும் மாமா நீங்க. எங்க அப்பா அம்மா கிட்ட நீங்களா போய் ஏதாவது ஏடா கூடமா பேசி அவாள கவலப் பட வைக்க கூடாது. அப்புறம் ஸ்ரீ கிட்ட நானே நேருல பார்த்து பேசி புரிய வெச்சுப்பேன். நீங்க பேச வேண்டாம்.'
'என்னவோ செய்யுடி அம்மா. ரொம்ப ஆசையா வந்தேன் நீ ஒத்துப்பேன்னு. ரொம்ப கஷ்டமா இருக்கு. ரங்கன் கூட என்ன கைவிட்டுட்டான் இந்த விஷயத்துல. எதுக்குமே ஒரு கொடுப்பினை வேணும் இல்லையா?'
மீண்டும் ஒரு கலக்கம் அவரிடத்தில். அவரது கண்ணீர் உணர்த்தியது அவளுக்கு.
'எதுக்குமே ஒரு கொடுப்பினை வேணும் இல்லையா?'
அவர் சொன்ன அதே வார்த்தைகளை தனக்குத் தானே இவளும் கேட்டுக் கொண்டாள்.
தொடரும்....
No comments:
Post a Comment