Wednesday, October 28, 2020

திருத்துவாரகை

 🙏  நமஸ்காரம்    

104. திருத்துவாரகை

மூலவர் - கல்யாண நாராயணர், துவாரகா தீசன், துவாரகா நாத்ஜி
தாயார் - கல்யாண நாச்சியார், ருக்மணி
விமானம் - ஹேமகூட விமானம்
தீர்த்தம் - கோமதி ஆறு, சமுத்ர சங்கமம்
நாமாவளி - ஸ்ரீ கல்யாண நாச்சியார் ஸமேத ஸ்ரீ கல்யாணநாராயணாய நமஹ:

வழித்தடம்:

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள திவ்யதேசம். குஜராத்தின் தலைநகரான அகமதாபாத்திலிருந்து ராஜ்கோட், ஜாம்நகர் வழியாக ஒகா செல்லும் இரயில் பாதையில் துவாரகை இரயில் நிலையம் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் கோமுகி கடலோடு கலக்கும் இடத்தில் துவாரகை அமைந்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து துவாரகைக்குப் பேருந்துகள் செல்கின்றன.

பாசுரம்:

காலை யெழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்மை கொலோ
சோலைமலைப் பெருமாள் துவாரா பதி யெம்பெருமாள்
ஆலினிலைப் பெருமாள் அவன் வார்த்தை யுரைக்கின்றதே 

- நாச்சியார் திருமொழி (594)

பாசுரம் பதவுரை:


கரிய குருவி கணங்கள் - கரியகுருவிக் கூட்டங்கள்
காலை - விடியற்காலத்திலே
எழுந்திருந்து - எழுந்து,
சோலைமலை பெருமான் - திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனாயும்
துவராவதி எம்பெருமான் - த்வாரகர் புரிக்குத் தலைவனாயும்
ஆலின் இலை பெருமான் அவன் - ஆலிலையில்வளர்ந்த பெருமானுயுமுள்ள அந்தஸர் வேச்வரனுடைய
வார்த்தை - வார்த்தைகளை
உரைக்கின்ற - சொல்லாநின்றன. (இப்படி)
மாலின் - எம்பெருமானுடைய
வரவு - வருகையை
சொல்லி - சொல்லிக்கொண்டு
மருள் பாடுதல் - மருளென்கிற பண்ணைப்பாடுவதானது
மெய்ம்மை கொல் - மெய்யாகத் தலைக்கட்டுமா

பாசுரம் விளக்க உரை:

ஆண்டாள் பிறந்தவூரில் திர்யக்குக்களுங் கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே மிக்கிருக்கு மாதலால் சில கருங்குருவிகள் காலை யெழுந்திருந்து கூட்டங் கூட்டமாக இருந்து எம்பெருமானுடைய வரவை ஸூசிப்பித்துச் சொல்லுவதுமா யிருக்கவே, அதுகண்ட ஆண்டாள் இது மெய்யாய்த் தலைக்கட்டுமோ பொய்யாய்விடுமோவென்று சிந்திக்கிறாளாய்த்து.

மெய்ம்மை கொலோ? என்றதற்கு இரண்டு வகையாகக் கருத்தாகலாம். நம்முடைய சித்தவிப்ரமத்தால் இவை பாடுகின்றனவாகத் தோற்றுகின்றதா? அல்லது மெய்கவே பாடுகின்றனவா? என்பது ஒரு கருத்து; இக்கரிய குருவிக்கணங்கள் இதற்கு முந்தியும் பலகால், மாலின் வரவுசொல்லி மருள்பாடியும் அவ்வெம்பெருமான் வரக்காணாமையினாலே இதுவரையில் இவற்றின் பாட்டு பொய்யாயொழிந்தது, இப்போதாவது அங்ஙனன்றி மெய்யாகத் தலைக்கட்டுமா; என்பது மற்றொரு கருத்து.

பாட்டின் இறுதியிலுள்ள உரைக்கின்ற என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல் பெயரெச்சமாகக் கொண்டு, . . . “அவன் வார்த்தை யுரைக்கின்ற கரிய குருவிக்கணங்கள் கலையெழுந்திருந்து மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ? என்று ஏகவாக்யமாக யோஜிப்பதும் ஒருவாறு பொருந்தும்.

துவராவதி - ‘தவாரவதீ‘ என்ற வடசொல்விகாரம். வார்த்தை - ஸமாசாரம்.

- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு:

கிருஷ்ணரின் தாய்மாமன் கம்சன் அவருடைய மாமனாராகிய ஜராசந்தன் தன் மருமகனைக் கொன்ற கண்ணனைக் கொல்வதற்காக மதுராபுரி மீது படையெடுத்தான். ஆனால் கண்ணனை நெருங்க முடியவில்லை. இருந்தாலும் 18 தடவைகள் படையெடுத்து சோர்ந்து போனான். ஜராசந்தன் படையெடுப்பால் யாதவகுல மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அதனால் கடலில் இருந்த ஒரு பெரிய தீவில் அழகிய நகரை நிர்மாணம் செய்தார் பகவான் கிருஷ்ணர். அங்கே யாதவர்களை குடியமர்த்தினார். அந்த நகரம்தான் துவாரகை என்று பெயர் பெற்றது.

கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திலிருந்த துவாரகா இப்போது இல்லை. அதை கி.பி. 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பாளர்கள் அழித்துவிட்டனர். பின்னாளில் 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் குஜ்ராத்தை ஆண்ட சாளுக்கிய அரச பரம்பரையினர் கட்டியதுதான் இப்போதுள்ள கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த துவாரகா கிருஷ்ணர் கோவில், சோமநாதர் கோவில் பாணியில் அமைந்திருப்பதை அதற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பல படிக்கட்டுகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும். இக்கோவில் கோபுர உயரம் 51.8 மீட்டர். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின் மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமானது. கருவறையில் துவாரகாதீஷ் (ஸ்ரீகிருஷ்ணன்) சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.

கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக் கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.  இந்துத் தொன்மங்களின்படி கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு:

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை துவாரகாதீசன் என்று தான் அழைப்பார்கள். இன்றும் துவாரகையின் புராண மிச்சங்கள் கடலுக்கடியில் இருப்பதை ஆராய்ச்சி செய்துள்ளனர்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொடர்புடைய இடங்களாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன. இதை பஞ்ச துவாரகைகள் என்கின்றனர். பிற்காலத்தில் ரிஷிகளின் சாபத்தினால் யாதவர்களின் வம்சமே அழிவுற்றது. துவாரகாவின் பெரும் பகுதி கடலின் எழுச்சியால் மூழ்கியது. தற்போது புனித யாத்ரீகத் தலமாக போற்றப்படும் ஆதி துவாரகையின் நிழலாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன.

மோட்ச துவாரகை

பஞ்ச துவாரகையில் முதலாவது மோட்ச துவார கையே. இதனை வைகுண்டம் செல்ல நுழைவாயில் என்கிறார்கள். குஜராத் மாநிலத்திலுள்ள ஓசா துறைமுகத்திற்கு அருகே கோமதி புண்ணிய நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இங்குள்ள கிருஷ்ணரை துவாரகநாத்ஜி என்றும் கல்யாண நாராயணர் என்றும் போற்றுகிறார்கள். இங்குள்ள மூலவர் சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களோடு சேவை சாதிக்கிறார். காலையில் திருப்பள்ளியெழுச்சி முதல் சயனம் வரை இங்கு சகல நிகழ்ச்சிகளும் நடைபெறும். மணிக்கொருமுறை அலங்காரம் செய்வார்கள். பாமா, ருக்மிணி, ராதைக்கும் சந்நதிகள் உண்டு. புராணத்தில் இத்தலத்தை சுதாமபுரி என்றழைத்தார்கள். இங்கு சுதாமா என்கிற குசேலருக்கும் தனிக் கோயில் உள்ளது. இது ஐந்து மாடிகளைக் கொண்டது. அறுபது அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இந்த மாடிகளைத் தாங்குகின்றன. இந்தியாவின் ஏழு தொன்மையான நகரங்களில் இதுவும் ஒன்று.

பேட் துவாரகை

துவாரகையிலிருந்து 32 கி.மீ. தொலைவிலுள்ளது. இது தனித் தீவாக அமைந்துள்ளது. ராமந்த்விப தீவு என்றழைக்கின்றனர். இங்கே கிருஷ்ணர் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார் என்று சொல்கிறார்கள். பாமா, ருக்மிணி, ராதைக்கு இங்கு தனித்தனியாக அறைகள் இருந்தன. கோபிதுலாப் என்கிற இடத்தில் புண்ணிய தீர்த்தமாடும் படித்துறை உள்ளது. இங்கு கிருஷ்ணர் பல கோபிகைகளுக்கு மோட்சம் அளித்தார். இங்கு மண் கோபி சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் ருக்மிணி கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணரும் துவாரகாநாத்ஜி தான். இங்கு கிருஷ்ணர் சங்கு சக்கரங்களுடன், சதுர்புஜனாக கருமை நிறத்தில் காட்சி தருகிறார். தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தைபோலவும், அரசனைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறும். ருக்மிணி தேவிதான் உற்சவர். இங்கு ஐந்து கோயில்களும், சங்க தீர்த்தம் என்ற புகழ்பெற்ற தீர்த்தமும் உள்ளன.  

ஸ்ரீநாத் துவாரகை

குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. பால கிருஷ்ணராக இங்கு கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். இவர், ஸ்ரீவல்ல பாச்சார்யார் எனும் மகானின் பூஜைக்குரிய மூர்த்தியாவார். இங்கு தினமும் எட்டு வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. கரும்புப் பளிங்குக் கல்லில் அர்ச்சாவதாரமாக அருள்கிறார். இந்திரனால் ஏவப்பட்ட மழையிலிருந்து காப்பதற்காக கோவர்த்தன கிரியை தூக்கிப் பிடித்தபடி நிற்கும் கோலம். ஸ்ரீநாத்ஜி என்றழைக்கின்றனர். இக்கோலத்தையே வல்லபர் எல்லோரையும் வணங்கச் செய்தார்.

கன்க்ரோலி துவாரகை

ராஜஸ்தானிலுள்ள இத்தலம் உதய்பூர் நகரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது. ராஜஸ்மந்த் எனும் ஏரி அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணர், துவாரகாதீஷ் என்று அழைக்கப்படுகிறார். வல்லபாச்சார்யாரை பின்பற்றுவோருக்கு இக்கோயில் மிக முக்கியமானதாகும். மதுராவிலிருந்து இந்த மூர்த்தி கொண்டு வரப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.

மூலத் துவாரகை

குஜராத் மாநிலம் போர்பந்தரிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள கொஷனார் எனும் ஊருக்கு அருகேயுள்ளது. இங்கு பகவான் கருடக் கொடி கோட்டையில் பறக்க, அரசாண்டார்.  மேலும் ஸ்ரீகிருஷ்ணர், ஜரா எனும் வேடுவனால் அம்பு எய்யப்பட்டு வைகுண்டம் எய்தினார் என்றும் அதன் பிறகே கடலில் இத்தலம் மூழ்கியது என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்கட்கு இங்கிருந்து கொண்டு மோட்சம் கொடுப்பதால் மோட்சத்திற்கு துவாரமாக இந்த ஸ்தலம் கருதப்படுகிறது. இதனாலும் துவாரகை என்று பெயர் வந்தது என்பர்.

ஜகத் மந்திர் எனப்படும் துவாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது பட்டத்தரசிகளுக்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 7 1/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது. அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன. பிறகு செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர். துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும். சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது.

துர்வாச முனிவரின் கமண்டல நீரை ருக்மணி தேவி பருகியதால் துர்வாச முனிவர் இங்குள்ள  பூமி உப்பாகும் என்றும் கடல்நீர் வற்றும் என சாபமிட்டார். பின்னர் துவாரகை வந்த கிருஷ்ணரை மண முடித்த பின் துர்வாச முனிவருக்கு கிருஷ்ணர் விருந்து படைத்தார். இதில் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர் சாபத்தை நீக்கி, ஊர் செழிப்புறவும், கிருஷ்ணர் 100 ஆண்டுகள் ஆட்சி புரியவும் ஆசி வழங்கினார். இக்கோவில் கோபுரத்தின் உச்சியில் முக்கோண வடிவிலான- சிவப்புப் பட்டுத் துணியாலான சூரிய- சந்திர உருவங்கள் பதித்த 82 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய கொடி தினமும் மூன்று முறை ஏற்றி இறக்கப்படுகிறது. கொடியை ஏற்றியவுடன் கோபுர உச்சியிலேயே உள்ள வட்டமான இடத்தில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. காலையில் பாலகிருஷ்ணனாகவும் பகலில் மகாராஜாவைப்போலவும் மாலையில் பூஜிக்கத்தக்க அலங்காரத்துடனும் துவாரகாதீஷ் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். துவாரகாவிலிருந்து சற்று தூரத்தில் துவாரகா தீவு உள்ளது. படகில்தான் அங்கு செல்ல வேண்டும். முதலில் ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த துவாரகா கடலில் மூழ்கிய சமயம், அவர் விருப்பப்படி கடலில் மூழ்காமல் எஞ்சியிருந்த பகுதிதான் இது. இங்கே அவரது அரண்மனை அப்படியே உள்ளது. இங்கும் ஒரு துவாரகாநாத் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். மேலும் இங்கு அவரது மற்ற மனைவியர்களின் (ருக்மிணி தவிர) கோவில்கள், தாய் தேவகி கோவில், கல்யாணராமர், திரிவிக்கிரமமூர்த்தி, லக்ஷ்மி நாராயணர் கோவில்கள் உள்ளன. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சங்க தீர்த்தம் உள்ளது. இந்த தீவு துவாரகையிலேயே ருக்மிணிக்குத் தனிக்கோவில் உள்ளது. சிரித்த முகத்துடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் ருக்மிணி.

ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் இங்கு தனிக்கோவில். பட்ட மகிஷி அல்லவா ருக்மணி ஊருக்கு வெளியே இருந்தாலும் ராஜகளை ஜொலிக்க வீற்றிருக்கிறாள்.

ஒருநாள் ராதை துவாரகை வந்தாள். ருக்மணி வரவேற்று பாலும், தேனும் கொடுத்தாள். இருவரும் மிக்க அன்போடு பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றிரவு கண்ணன் படுக்கையறைக்கு வந்ததும் ருக்மணி கண்ணனுக்குப் பாத பூஜை செய்தாள். கண்ணனின் பாதங்களில் சிறு கொப்புளங்கள் உண்டாயிருந்தன. இதைக் கண்டு திடுக்கிட்ட ருக்மணி பெருமானே, இந்தக் கொப்புளங்கள் எப்படி வந்தன என்று கேட்டாள். ருக்மணி நீ இன்று ராதைக்குப் பால் கொடுத்தாயல்லவா அது சூடாக இருந்தது. அதை அவள் பருகியபோது எப்போதும் அவள் தனது இதய கமலங்களில் வைத்திருக்கும் எனது பாதங்களில் சூடுபட்டு இந்தக் கொப்புளங்கள் வந்துவிட்டதென்றான். ஆனால் பால் சூடாக இருந்தது என்று ராதை கூறவில்லையே என்றாள் ருக்மணி. நீ பிரியமாக கொடுத்ததால் சூடு உள்ளது என்று உன்னிடம் சொல்லாமலேயே குடித்துவிட்டாள். ஆகா, உம் பாதங்கள் கோமளமானவை அதைவிடக் கோமளமானதன்றோ ராதையின் இதயம் என்றாள் ருக்மணி. என்னே அன்பு கலந்து நிகழ்ச்சியைக் கூட்டி விட்டான் இந்த துவாரகையில். காதலியோ (மனைவியோ) நெஞ்சிருக்கும் தன் மணாளரைச் சுட்டுவிடும் என்று சூடான பதார்த்தங்களை உண்பதை மறுத்துக் கூறியதில்லையா.

இங்கிருந்து திரும்பும்போது (அதாவது பேட்துவாரகையைச் சேவித்துவிட்டு) விராவல் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கினால் பிரசித்தி பெற்ற சோமநாதர் ஆலயம் செல்லலாம். இதற்கு அருகாமையில் அமைந்துள்ள பாலகா என்ற இடத்தில் ஒரு கிருஷ்ணன் ஆலயம் உள்ளது. கிருஷ்ணன் வைகுண்டம் போவதற்கு முன் இங்குள்ள அரசமரத்தடியில் சயன திருக்கோலத்தில் இருந்ததாக ஐதீஹம். இன்றும் இந்த இடத்தில் கிருஷ்ணரின் அரசரடி சயன திருக்கோலத்தைக் காணலாம். கிருஷ்ணன் சயனத் திருக்கோலத்தில் இருப்பது அநேகமாக 108 திவ்ய தேசங்களில் இந்த ஒரு இடத்தில் என்று மட்டுமே கூறலாம். துவாரகா புரியை மட்டுமே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருப்பினும் நிகழ்ச்சிகளால் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து கிடக்கும் இங்குள்ள ஸ்தலங்கள் யாவற்றையும் மங்களாசாசனம் செய்வதாக கொள்ளலாம்.

இத்தலத்தின் தனி சிறப்பு. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார்.

துவாரகையிலிருந்து ஒகா துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 3 மைல் தூரத்தில் உள்ள ருக்மணி தேவியின் சன்னதியில் தான் ஸ்ரீகிருஷ்ணபகவான் ருக்மணி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீஹம்.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/U6cShiC9HK8

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/141992757601160/?sfnsn=wiwspmo

No comments:

Post a Comment