🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 36 🌹🌹🌹
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இத்தலம் மட்டும் தான் "அம்பலம்" என்றழைக்கப்படுகிறது.
சிவபெருமான், செங்கமல நாச்சியார், ஆதிசேஷன் இத்தல இறைவனை வழிபட்டு இறைவனின் தரிசனம் பெற்ற தலம்.
திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்) .
மூலவர்: செங்கண்மால், ரங்கநாதர், லட்சுமி ரங்கர்
தாயார்: செங்கமலவல்லி
உற்சவர்: அரங்கநாதன்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: வேத விமானம்
தீர்த்தம்: சூரிய புட்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ செங்கண்மால் ஸ்வாமிநே நமஹ.
ஊர்: திருநாங்கூர்.
🌺🌺 தலவரலாறு:-
ஆதிமூர்த்தியான இறைவன் நாராயணன் கிடந்த கோலத்தில் எத்தனையோ திருத்தலத்தில் காட்சி தந்து அருள்கிறார். ஆனால், இத்திருத்தலத்தில் சிவந்த கண்களோடு செங்கண்மால் என்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இத்தலத்தின் பெருமை பற்றி பத்மபுராணத்தில் "லக்ஷ்மி வைபவம்" என்ற தலைப்பில், அகத்திய மாமுனிவர் வாசு என்ற அரசனுக்குக் கூறுவது போல அமைந்துள்ளது.
இத்தலத்திற்குத் திருத்தெற்றியம்பலம் எனப் பெயர் பெற்றதற்கான காரணம் தெளிவாகக் கிடைக்கப்பெறவில்லை. தில்லை திருச்சிற்றம்பலம் என்று போற்றப்படும் நடராஜப் பெருமான் திருத்தலத்தில் குடிகொண்டுள்ள சித்திரக்கூடத்து இறைவன் தேவாதிராஜனைப் போலவே இத்தலத்திலும் காட்சி தருவதால் திருத்தெற்றியம்பலம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
🌺🌺 செங்கண்மால் ரங்கநாதர் :-
இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைத் தூக்கிக் கொண்டு பாதாள உலகத்தில் வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியைக் காப்பதற்காக வராக அவதாரம் எடுக்கச் சம்மதித்தார்.
இதைக் கேட்ட மகாலட்சுமி, "பகவானே! நான்ஒரு நொடி கூட உங்களை விட்டுப் பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்கப் போவதாகக் கூறுகிறீர்கள். நான்எப்படித் தனியாக இருப்பது???" என வருத்தப்பட்டாள்.
இதேபோல் ஆதிசேஷனும் "பரந்தாமா! நீங்கள் பூமியைக் காக்க பாதாள உலகம் சென்றுவிட்டால் , என் கதி என்னாவது???" என வருத்தப்பட்டார்.
இதைக்கேட்ட பெருமாள், "பயப்படாதீர்கள். எல்லாம் நமக்கு நன்மை தான். நீங்கள் இருவரும் "பலாசவனம்" சென்று என்னை தியானம் செய்யப் புறப்படுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். ரேரான் இரண்யாட்சனை வதம் செய்துவிட்டு உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்" என்றார்.
அத்துடன் கலியுகத்தில் இத்தலம் "திருத்தெற்றியம்பலம்" என அழைக்கப்படும். என் தீவிர பக்தனான ஸ்ரீபாஷ்யகாரர், தீட்சை பெற்ற 108 வைஷ்ணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய இருக்கிறார்.
"நான் அங்கிருந்து உலகத்தை காத்து ரட்சிக்க போகிறேன். கலியுகம் முழுவதும் அங்கே நித்தியவாசம் செய்யப் போகிறேன்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.
வராக அவதாரம் எடுத்த விஷ்ணு பூமிக்குள் சென்று இரண்யாட்சனை அழித்துவிட்டு, பூமியை மீட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் மெல்லச் சுழலவிட்டார்.
இதையறிந்த மகாலட்சுமியும், ஆதிசேஷனும் பூமிக்கு வந்து மகாவிஷ்ணு குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர்.
மகாவிஷ்ணு தான் கொடுத்த வாக்குப்படி திருத்தெற்றியம்பலம் சென்று அங்கிருந்த சிவன், மகாலட்சுமி, ஆதிசேஷன் ஆகியோருக்கு அருள் புரிந்தார்.
பின் அங்கேயே போர் புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளி கொண்டார்.
இதனால், இத்தல பெருமான் "செங்கண்மால் ரங்கநாதர்" என்ற திருநாமம் பெற்றார்.
🌺🌺 சிறப்புகள் :-
இறைவன் செங்கண்மால் லட்சுமி நாராயணன் காட்சி தந்தருளும் திவ்யதேசம்.
திருமகள் தாயார் செங்கமலவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தந்தருளும் திவ்யதேசம்.
திருநாங்கூரில் நடைபெறும் புகழ் பெற்ற 11 திருத்தல கருடசேவைக்கு இத்தல பெருமாளும் எழுந்தருள்வார்.
திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 மங்களாசாசனம் :-
செங்கண்மாலை கூரணிந்த வேல்வலவன்
ஆலிநாடன் கொடிமாட
மங்கையர்கோன் குறையலாளி பாரணிந்த தொல்புகழோன்
கலியன் சொன்ன
பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார் சீரணிந்த
உலகத்து மன்னராகிச்
சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வார் தாமே!!"
🌺🌺 வழித்தடம் :-
சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். பள்ளி கொண்ட பெருமாள் என்று சொன்னால் மட்டுமே அனைவருக்கும் புரியும்.
அருள்மிகு செங்கண்மால் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு செங்கமலவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் - திருமணிக்கூடம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!"
No comments:
Post a Comment