Tuesday, October 27, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 33 திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 33 🌹🌹🌹


"வைகுண்டத்திற்கு இணையான பரமபத காட்சியை இறைவன் தந்தருளும் திவ்யதேசம்"!!

"இட்சுவாகு, அவரது மனைவி தமயந்தி, ஐராவதேஸ்வரர், உதங்க முனிவராகிய நால்வருக்கும் காட்சி தந்தருளிய திவ்யதேசம்"!!!

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்:-

திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
மூலவர்: வைகுண்ட நாதன், தாமரைக்கண்ணுடைய பிரான்
தாயார்: வைகுண்டவல்லி
உற்சவர்: வைகுண்டநாதன், தாமரைக்கண்ணுடைய பிரான்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: ஆனந்த சத்ய வர்த்தக விமானம்
தீர்த்தம்: விரஜா தீர்த்தம், லட்சுமி புட்கரணி, உதங்க புட்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ வைகுந்தநாதாய நமஹ
ஊர்: திருநாங்கூர்

🌺🌺 தலவரலாறு:-

வைகுண்ட நாதனான இறைவன் அருள்மிகு நாராயணன், மண்ணுலகிலும் கோவில் கொண்டு அருளுவதால் இத்தலத்திற்கு வைகுண்ட விண்ணகரம் என்பது பெயர்.

இத்தலத்தைப் பற்றிய வரலாறு பத்மபுராணத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

🌺🌺 இட்சுவாகு மன்னனும் அவன் மனைவியும் :-

திரேதாயுகத்தில் இட்சுவாகு என்ற குலத்தில் அவதரித்த, சுவேதகேது என்ற ஓர் மன்னன் மிகுந்த திருமால் பக்தனாக விளங்கி வந்தான். நீதி நெறி தவறாதவன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவன். தெய்வ பக்தி கொண்டவன். உலக நாடுகள் பலவற்றை ஆண்டு வந்தான்.

இட்சுவாகு மன்னனுக்கும், அவனது மனைவிக்கும் மகா விஷ்ணுவை அவர் வசிக்கும் இடமான வைகுண்டத்திற்கு சென்று தரிசிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது.

சுவேதகேது அரசனானதால் தனது ஆட்சிக் கடமைகளை முடித்து விட்டு மனைவி தமயந்தியுடன் தவம் செய்ய முடிவு செய்தான். சுற்றிலும் தீ வளர்த்து, சூரியனைப் பார்த்தபடி தீயின் நடுவில் நின்று இருவரும் மகா விஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்தார்கள்.

🌺🌺 நாரதரைக் காணுதல் :-

நீண்ட நாள் இப்படி தவம் இருந்து தங்களது பூதவுடலை துறந்து வைகுண்டம் சென்றார்கள். ஆனால், அங்கு யாரை தரிசிக்க தவம் இருந்தார்களோ அந்த வைகுண்ட வாசனைக் காணவில்லை. இவர்கள் வருத்தத்துடன் இருந்தபோது அங்கு வந்த நாரதரின் பாதங்களில் விழுந்து இருவரும் வணங்கினார்கள்.

வைகுண்டத்தில் விஷ்ணுவைத் தரிசிக்க இயலாமல் போனதற்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு நாரதர், "நீங்கள் இருவரும் கடுமையாகத் தவம் இருந்தாலும், பூமியில் தான தர்மங்கள் செய்யவில்லை. அத்துடன் இறைவனுக்காக சாதாரண ஹோமம் கூட செய்யவில்லை.

எனவே தான் வைகுண்டத்தில் விஷ்ணுவின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு பிராயச்சித்தமாக "பூமியில் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள ஐராவதேஸ்வரரை வணங்கி, முறையிட்டால் அவர் அனுக்கிரகத்துடன் வைகுண்ட பெருமாளின் தரிசனம் கிடைக்கும்," என்றார்.

🌺🌺 ஐராவதேஸ்வரரை வழிபடல் :-

சுவேதகேதுவும், தமயந்தியும் ஐராவதேஸ்வரரை வழிபட்டு பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டினர். இவர்களது பக்திக்கு மகிழ்ந்த சிவபெருமான் "நானும் பெருமாளின் தரிசனத்திற்கு காத்திருக்கிறேன். மூவரும் மகாவிஷ்ணுவின் தரிசனத்திற்கு தவம் இருப்போம்" என்றார். இவர்களுடன் உதங்க முனிவரும் சேர்ந்து தவம் இருந்தார்.

🌺🌺 பெருமாள் காட்சி கொடுத்தல் :-

நீண்ட காலத்திற்கு பின் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நால்வருக்கும் காட்சி தந்தார். அப்போது ஐராவதேஸ்வரர், பெருமாளிடம், "பெருமாளே! நீங்கள் காட்சி கொடுத்த இந்த இடம் இன்று முதல் வைகுண்ட விண்ணகரம் எனவும், உங்கள் திருநாமம் வைகுண்டநாதர் எனவும் அழைக்கப்பட வேண்டும்"' என வேண்டுகோள் விடுத்தார். அதன்படியே, வைகுண்டநாதன் என்ற திருநாமத்துடன் இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

🌺🌺 பரமபதநாதன் :-

சிவனின் ருத்ரதாண்டவத்தை நிறுத்தப் பரமபத நாதன் புறப்பட்டு வர அவனைப் பின்பற்றிப் பத்துப் பெருமாள்களும் இவ்விடத்துக்கு (திருநாங்கூர்) வந்தனர்.

பரமபதத்தில் இருந்து வந்ததால் அங்கு எவ்விதம் நித்ய சூரிகட்குக் காட்சி கொடுக்கின்றாரோ அதை போல் இங்கும் எழுந்தருளியுள்ளார்.

பரமபதத்திற்குச் சமமான திருத்தலம் இத்தலம். பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு விரஜை தீர்த்தமாக உள்ளது. திருநாங்கூரில் தை அமாவசை மறுநாள் நடைபெறும் கருட சேவைக்கு இத்தல இறைவனும் எழுந்தருளுவார்.

🌺🌺 மங்களாசாசனம் :-

திருமங்கையாழ்வார் இத்தலத்தைப் பற்றி 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

""இங்கு உண்மை மிகு நல்ல கலைகள் நிறை பொறைகள் வண்மை மிகு மறையவர்கள் மலிந்திருக்கிறார்கள். மறையவர்கள் சூழத் திருநாங்கூரில் இருக்கின்ற வைகுந்த விண்ணகரப் பெருமானை வணங்கு நெஞ்சே"" என்று திருமங்கையாழ்வார் இத்தல இறைவன் மீது பாசுரம் பாடியுள்ளார்.

""சலங்கொண்ட இரணியனது அகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டு கந்தகாளை நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவியுறை கோவில்
சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகை ஒண்செருந்தி சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலினூடை
நாங்கூர் வைகுந்த விண்ணகர் வணங்கு மடநெஞ்சே!!""

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

அருள்மிகு வைகுண்டநாதன் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு வைகுண்டவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு அழகியசிங்கர், வயலாளி மணவாளன் திருக்கோவில் - திருவாலி திருநகரி என்ற இரண்டு தலங்களைக் கொண்ட திவ்யதேசத்தை நாளை தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment