🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 22 🌹🌹
கருடாழ்வார் சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் திருத்தலம். மண்டோதரியின் தந்தை மயன் வழிபட்ட தலம். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான் வழிபட்ட தலம்.
திருவெள்ளியங்குடி.
மூலவர்: கோலவில்லிராமர்
தாயார்: மரகதவல்லி
கோலம்: ஸ்ருங்கார சுந்தரன்
திசை: கிழக்கு
விமானம்: புஷ்கலாவர்தக விமானம்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், பரசுராம தீர்த்தம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ கோலவில்லிராமாய நமஹ.
ஊர்: திருவெள்ளியங்குடி
🌺🌺 திருவெள்ளியங்குடி
கண் தோஷத்தை போக்கும் திருவெள்ளியங்குடி:-
திருமால் தமது வாமன அவதாரத்தில், மகாபலியிடம் 3 அடி தானம் கேட்டார் அல்லவா? அப்போது மகாபலியின் குருவான சுக்கிரர், தானம் கேட்பது திருமால் என்பதையும் அவரது நோக்கம் என்ன என்பதையும் அறிந்து கொண்டார்.
எனவே, தானம் கொடுக்க வேண்டாம் என்று மகாபலியை எச்சரித்தார். ஆனால், மகாபலி அவர் பேச்சைக் கேட்கவில்லை. நீர் வார்த்து தானம் செய்ய முற்பட்டார்.
உடனே, சுக்கிராச்சாரியார் வண்டாக உருவம் கொண்டு பலியின் கமண்டலத்துக்குள் புகுந்து நீர் வரும் பாதையை அடைத்துக் கொண்டார். வாமனன் சும்மா விடுவாரா? ஒரு தர்ப்பையை எடுத்து கமண்டலத்தின் நீர் வரும் பாதையைக் குத்தினார்;
சுக்கிரருக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனது. அந்தக் கண்ணில் பார்வை திரும்ப, திருமாலையே வேண்டித் தொழுதார் சுக்கிரன். பிறகு, சுவாமியின் கட்டளைப்படி அவர் வழிபட்டு கண்பார்வை பெற்ற திருத்தலம்தான் திருவெள்ளியங்குடி.
இந்தக் கோவிலின் கருவறையில், சுக்கிர பகவானுக்கு கொடுக்கப்பட்ட ஒளி, அணையா நேத்ர தீபமாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
பிரம்மா, இந்திரன், பூதேவி, சுக்கிரன், மயன், மார்க்கண்டேயர் ஆகியோருக்கு திருமால் இந்தத் திருத்தலத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தந்தருளினார்.
எனவே, திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட, இனிய இல்வாழ்க்கை கிடைக்கும் என்கிறார்கள். சுக்கிர தோஷம், பார்வை குறைபாடு நீக்கும் தலமாகவும் இத்தலம் திகழ்கிறது.
நவக்கிரகங்களில் "வெள்ளி" எனப்படும் "சுக்கிர பகவான்", இத்தல இறைவனை தவமிருந்து வழிபட்டமையால் இவ்வூர் "வெள்ளியங்குடி" எனப் பெயர் பெற்றது. மேலும், இவ்வூர் "சுக்ரபுரி" என்றும் அழைக்கப்படுகிறது.
🌺🌺 கோலவில்லிராமர் :-
எம்பெருமான் இராம அவதாரத்தில் சித்திரக் கூடத்தில் சீதா பிராட்டியுடன் வாழ்ந்து வரும் போது, இராமபிரான் சீதா பிராட்டியின் மடிமீது தலை வைத்து பள்ளி கொண்டிருந்தபோது, சீதாபிராட்டி மெய் மறந்து இருந்தார்.
அப்போது, இந்திரன் மகனான "சயந்தன்" காக்கை வடிவில் வந்து தன் கூர்மையான மூக்கினால் சீதா பிராட்டியின் அங்கத்தைத் தீண்டவே இரத்தம் பெருகியது.
அப்போது உறக்கம் கலைந்த இராமபிரான் அருகில் இருந்த தர்ப்பைப்புல்லை பிரம்மாஸ்திரம் ஆக்கி, கை விரல்களையே வில்லாக்கி சயந்தன் மீது விடுத்தார்.
அந்த அஸ்திரம் எல்லா உலகங்களிலும் சயந்தனைத் துரத்திச் சென்று இறுதியில் சீதா பிராட்டியின் காலடியில் சரணடையச் செய்தது.
கை விரல்களையே வில்லாக்கியதால் எம்பெருமான் "கோலவில்லிராமர்" என்று பெயர் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
🌺🌺 தலவரலாறு :-
இராவணனின் மனைவியான மண்டோதரியின் தந்தை "மயன்" இங்கு வந்து திருமாலை வேண்டி தவமிருந்தான். அப்போது அவன் தவத்திற்கு மனமிறங்கிய திருமால் சங்கு, சக்கராதாரியாக கருட வாகனத்தில் காட்சி தந்தார்.
அப்போது, மயன் சித்திரக்கூடத்தில் கூடத்தில் சயனித்திருந்த கோலவில்லிராமர் கோலத்தைக் காண வேண்டினான். அப்போது பரமாத்மா சங்கு, சக்கரங்களை கருடாழ்வாரிடம் ஒப்படைத்து விட்டு கோலவில்லிராமராக புஜங்கசயனத்தில் காட்சி தந்தார்.
அதேபோல் இன்றும் சயனக்கோலத்தில் வண்ணநிறமாகக் காட்சியளிக்கிறார்.
🌺🌺 மெய்மறந்த ஆழ்வார் :-
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் கோலவில்லிராமனைத் தரிசித்து விட்டு, அடுத்த நாள் இந்தளூர் பரிமள அரங்கநாதர் சுவாமியைச் சேவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.
கோவில் படியிடை மாடத்துத் தூண்களில் பதிந்திருந்த மணிகளின் ஒளியால் பகல், இரவு தெரியாமலும் பொழுது சாய்ந்தது தெரியாமலும், ஆழ்வார் மெய்மறந்து போனார்.
நினைவு திரும்பியதும் மீண்டும் ஒருமுறை மங்களாசாசனம் செய்து விட்டு அவ்வூரை விட்டு புறப்பட்டார் ஆழ்வார். இவ்வாறு இருமுறை பாசுரம் பாடியருளிய அற்புதத்தலம் இதுவாகும்.
இந்நிகழ்வை ஆழ்வார் தாம் பாடிய பாசுரங்களில் அழகாக குறிப்பிட்டுள்ளார்.
முடியுடையமரர்க்கு இடர்செய்யும்
அறியாய் மடியிடைவைத்து
மார்வைமுன்கீண்ட
மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடைத்
தூணில்
பதித்த பன் மணிகளின் ஒளியால்
விடிபகல் இரவென்று அறிவரிதாய
திருவெள்ளியங்குடியதுவே.
- திருமங்கையாழ்வார்.
🌺🌺 சிறப்புகள் :-
மூலவர் கோலவில்லிராமர் வண்ணத் திருமேனியாக காட்சி தந்து அருளும் திவ்யதேசம். கருடாழ்வார் சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் திவ்யதேசம். நவகிரகங்களில் ஒருவரான சந்திர பகவான் வழிபட்ட திருத்தலம்.
திருமகள் தாயார் மரகதவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம். திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 வழித்தடம் :-
கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் பேருந்தில் செங்கனூரில் இறங்கி அங்கிருந்து 1 கி.மீ நடந்து சென்று திருத்தலத்தை அடையலாம். அல்லது
அணைக்கரை செல்லும் பேருந்தில் சோழபுரம் இறங்கி, அங்கிருந்து வெள்ளியங்குடி பேருந்தில் செல்ல வேண்டும். சோழபுரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உண்டு.
அருள்மிகு கோலவில்லிராமர் திருவடிகளே சரணம்.
அருள்மிகு மரகதவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு ஆமருவியப்பன் திருக்கோவில் - திருவழுந்தூர் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:".
No comments:
Post a Comment