Tuesday, October 27, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 32 திருமணிமாடக்கோவில் (திருநாங்கூர்).

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 32 🌹🌹🌹

ஒரே கருவரையில் மூன்று பெருமாள்கள் தரிசனம் கொடுக்கும் அற்புதத் திவ்யதேசம்.

ஆண்டு முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது விழும் அற்புதத் திவ்யதேசம்.

11 கருட சேவை நடைபெறும் அற்புத் திவ்யதேசம்.

திருமங்கையாழ்வார் கருட சேவைக்கு முதல் நாள் திருநாங்கூர் பகுதியைச் சுற்றியுள்ள வயல்வெளிகள் மூலம் பிரவேசிக்கும் அற்புதத் திவ்யதேசம்.

அருள்மிகு பத்ரி நாராயணர் திருக்கோவில் :-

திருமணிமாடக்கோவில் (திருநாங்கூர்).
மூலவர்: நாராயணர், நந்தாவிளக்கு
தாயார்: புண்டரீகவல்லித் தாயார்
உற்சவர்: அளத்தற்கரியான்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: பிரணவ விமானம்
தீர்த்தம்: ருத்ர புட்கரணி, இந்திர புட்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ புண்டரீகவல்லீ ஸமேத ஸ்ரீ நந்தாவிளக்கு ஸ்வாமிநே நமஹ

ஊர்: திருநாங்கூர்

🌺🌺 தலவரலாறு :-

வைகுண்ட வாசனின் மூல வடிவ திருநாமமான, மூல மந்திரமான "ஓம் நமோ நாராயணாய" என்ற திருநாமத்தை சிந்தை குளிர அனுபவிக்கும், அதே திருநாமத்துடன் கோவில் கொண்டருளும் அற்புதத் திவ்யதேசம் "திருமணிமாடக்கோவில்". இத்திருத்தலத்தின் எதிரில் உள்ள பந்தலில் 11 மூர்த்திகளும் ஒருங்கே தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

🌺🌺 மூலவர் பத்ரிநாராயணன் :-

மூலவர் கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில்

தாமரை மலர் மீது கால் வைத்தபடி அருள்பாலிக்கிறார்.

வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளையில் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இது மிகவும் அபூர்வமானதாகும்.

இத்திருக்கோயிலில் உள்ள மூலவருக்கு
அபிஷேகம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே
சாத்தப்படுகிறது. அருகில் பிரயோக சக்கரத்துடன்
நின்ற கோலத்தில் இருக்கும் உற்சவர் “நரநாராயணர்’
எனவும், அமர்ந்த கோலத்தில் இருக்கும் உற்சவர்
‘அளத்தற்கரியன்’ எனவும் அழைக்கின்றனர்.

ஒரே கருவறையில் மூன்று கோலங்களில் பெருமாள்

இருப்பது விசேஷம்.

🌺🌺 திருநாங்கூர் திவ்யதேசம் :-

சோழ நாட்டுத் திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டுமே ஆறு திவ்யதேசங்கள் உள்ளது. இவ்வூரைச் சுற்றி சுமார் 02 கி.மீ தொலைவில் உள்ள 5 திவ்யதேசங்களையும் சேர்த்து திருநாங்கூர் பதினோரு திவ்யதேசம் என்றே வழங்கப்படுகிறது.

🌺🌺 11 திருப்பதிகள் விபரம் :-

1. திருக்காவளம்பாடி
2. திருஅரிமேய விண்ணகரம்
3. திருவண்புருடோத்தமம்
4. திருச்செம்பொன் செய்கோவில்
5. திருமணிமாடக் கோவில்
6. திருவைகுந்த விண்ணகரம்
7. திருத்தேவனார்த் தொகை
8. திருத்தெற்றியம்பலம்
9. திருமணிக்கூடம்
10. திருவெள்ளக்குளம்
11. திருப்பார்த்தன் பள்ளி


🌺🌺 அற்புதக் காட்சி :-

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இந்த 11 பெருமாள்களும் திருமணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் கோவிலில் எழுந்தருள்வர்.

இந்த 11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் ஒருவர் பின் ஒருவராக மங்களாசாசனம் செய்வார்.

அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வார். இந்த கண் கொள்ளா காட்சியைக் காண்பதற்கு இந்தியா முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஏராளமாகக் கூடுவர்.

🌺🌺 ஆழ்வார் வருகை :-

ஆண்டுதோறும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை.

திருநாங்கூர் சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருட சேவைக்கு முதல்நாள் நள்ளிரவில் காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று ஆடினால் அந்த சத்தத்தைக் கேட்டவுடன் திருமங்கையாழ்வார் பிரவேசித்து விட்டதாக பக்தர்கள் கூத்தாடுவர்.

திருமங்கையாழ்வாரால் மிதக்கப்பட்ட வயல்வெளிகளில் மிகுந்த நெல் விளையும் என்பது இப்பகுதியில் நிலவும் நம்பிக்கையாகும்.

🌺🌺 மங்களாசாசனம் :-

நந்தா விளக்கே அளத்தற் கரியாய்
நரநா ரணனே கருமா முகில்போல்
எந்தாய் எமக்கே யருளாய் என நின்று
இமையோர் பரவுமிடம், எத்திசையும்
கந்தாரமந் தேனிசைபா டமாடே
களிவண் டுமிழற் றநிழல் துதைந்து
மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே

- திருமங்கையாழ்வார்.

🌺🌺 சிறப்புகள் :-

நந்தா விளக்கே என்று திருமங்கையாழ்வார் பாடியதற்கேற்ப ஆண்டு முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது விழும் அற்புதத் திவ்யதேசம்.

திருமகள் தாயார் புண்டரீகவல்லீ என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

திருநாங்கூரில் நடைபெறும் புகழ் பெற்ற 11 திருத்தல கருட சேவை நிகழும் திருத்தலம்.

திருமங்கையாழ்வார் 12 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 08 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திவ்யதேசம்.

அருள்மிகு நாராயணன் திருவடிகளே சரணம்.

அருள்மிகு புண்டரீகவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோவில் - திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்) திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!"

No comments:

Post a Comment