🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 26 🌹🌹🌹
இந்த திருத்தலத்தில் பெருமாளின் முகத்தை சந்திரனும், பாதத்தை சூரியனும், நாபிக்கமலத்தை பிரம்மாவும் பூஜிக்கிறார்கள்!!! இது கங்கையை விட காவிரி புனிதமானது என்று பெயர் பெற்ற ஸ்தலம்!!!
அருள்மிகு "பரிமளரங்கநாதர்" திருக்கோயில் :-
மூலவர்: பரிமளரங்கநாதர், சுகந்தவளநாதர்
தாயார்: பரிமளரங்கநாயகி, சந்திரசாபவிமோசனவல்லி
விமானம்: வேதசக்ர விமானம்
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி, இந்து புஷ்கரணி
ஊர்: திருஇந்தளூர்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
🌺🌺 பரிமள அரங்கநாதர்:-
பரிமளம் என்பதற்குப் பரிசுத்தம் என்பது பெயர். கங்கையையும், காவிரியையும் பரிசுத்தமாக்கிய இறைவன் என்பதால் இத்தல இறைவனுக்கு "பரிமள அரங்கநாதர்" என்று பெயர்.
பஞ்ச அரங்கத் தலங்களில் இத்தலம் "அந்திரங்கம்" என அழைக்கப்படுகிறது.
🌺🌺 மங்களாசாசனம்:-
முழுதும்நிலை நின்ற பின்னை வண்ணம்
கொண்டல் வண்ணம் வண்ணம்
எண்ணுங்கால் பொன்னின் வண்ணம்
மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே?!"
- "திருமங்கையாழ்வார்"
🌺🌺 பிரார்த்தனை :-
இத்தலம் "ஏகாதசி" விரதத்துக்கு உரிய தலம் என்பதால் "ஏகாதசி விரதம்" இருக்க நினைப்பவர்கள், இத்தலத்திற்கு வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. இந்த பெருமாள் கேட்டதையெல்லாம் கொடுக்கும் இறைவன் ஆவார்.
🌺🌺 தலபெருமை :-
திருஇந்தளூரில் உள்ள இத்திருக்கோவில் "ஏகாதசிவிரதம்" சிறப்பு பெறுவதற்கு காரணமாக இருந்த தலமாகும்.
இங்கு பெருமாள் "வீரசயனத்தில்" கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறார். இங்கு "சந்திரன்" வந்து தரிசித்துள்ளார்.
இங்கு உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடிதான் "சந்திரன்" தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றான்.
இங்கு பெருமாளின் முகத்தை சந்திரனும், பாதத்தை சூரியனும், நாபிக்கமலத்தை பிரம்மனும் பூஜிக்கிறார்கள்.
இத்தலத்தில் இறைவனுக்கு தலைமாட்டில் காவிரி தாயாரும், கால்மாட்டில் கங்கை தாயாரும் வழிபடுகிறார்கள்.
மேலும், எமதர்மராஜாவும், அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கின்றனர்.
இத்தலம் தான் கங்கையை விட "காவிரி" புனிதமானவள் எனப்பெயர் பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.
🌺 🌺 தலவரலாறு :-
ஒருசமயம் அம்பரீசன் என்ற மன்னன் நினைத்ததையெல்லாம் பெற்றுத்தரும் ஏகாதசிவிரதத்தை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தான்.
இவன் ஏகாதசியில் விரதமிருந்து மறுநாள் துவாதசி நல்லநேரத்தில் பிரசாதம் உண்டு விரதத்தை முடிப்பான்.
இவனுடைய நூறாவது விரதநாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அந்த நாட்டு மக்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.
ஆனால், தேவலோகத்திலோ அனைவரும் கலக்கமாக இருந்தனர். இந்த "அம்பரீசன்" நூறாவது விரதத்தை முடித்துவிட்டால் தேவலோகப் பதவிக்கூட கிடைத்துவிடும்.
ஒரு மானிடனுக்கு இப்பதவி கிடைத்துவிட்டால், தேவர்களின் மரியாதை குறைந்துவிடும் என்று பயந்தனர்.
இந்நிலையில் ஆலோசனைக்காகத் துர்வாசர் முனிவரிடம் சென்றனர். அவரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துவிட்டு, மன்னனின் விரதத்தை தடுப்பதற்காக பூலோகம் வந்தார்.
அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான. அவன் ஏகாதசி விரதம் முடித்திருந்தாலும், துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்திருக்கவேண்டும்.
அப்போது தான் ஏகாதசி விரதத்தின் முழுபலனும் அவனுக்கு கிடைக்கும். ஆனால், துவாதசி நேரம் முடிந்துவிட்டால் பலனில்லை.
அப்போது துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாராக இருந்தான். அதற்குள் "துர்வாசர்" வந்துவிட்டார்.
துர்வாசர் தன்னுடைய விரதத்தை தடுக்கதான் வந்துள்ளார் என்பதை அறியாமல், மன்னன் அவரை வரவேற்றான்.
இந்த அம்பரீசன் அவரிடம், "முனிவரே! தாங்களும் என்னுடன் உணவருந்தினால் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும்" என்றான்.
துர்வாசர் முனிவர் அம்பரீசனிடம் சரியென்று கூறி, நதியில் நீராடிவிட்டு வருகிறேன். அதற்கு பிறகு உணவருந்தலாம் எனக் கூறிச் சென்றார்.
இந்த துர்வாச முனிவரின் திட்டம் என்னவென்றால், தான் நீராடிவிட்டு தாமதமாக வந்தால், அதற்குள் "துவாதசி" நேரம் முடிந்துவிடும்.
அம்பரீசன் நமக்காக காத்திருந்தால், அவனது விரதம் தடைப்பட்டுவிடும் என்பதுதான் இவருடைய சூழ்ச்சியாக இருந்தன.
அந்த துவாதசி நேரம் முடிவதற்கு இன்னும் சில மணிநேரங்களே இருந்தது.
துர்வாசர் வர நேரமானதால் வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் ஆலோசனை கேட்டான்.
அதாவது துவாதசி நேரம் முடியவதற்கு இன்னும் சிலநிமிடங்களே உள்ளது. என்ன செய்யலாம்? என்பதை குறித்து அவர்களது கருத்தை கேட்டான்.
அம்பரீசனின் தலைமைப் பண்டிதர் கூறிய ஆலோசனைப்படி, "உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்றுமுறை குடித்து" தன் விரதத்தை பூர்த்திசெய்துவிட்டு முனிவருடன் சேர்ந்து உணவருந்துவதற்காக காத்திருந்தான் அம்பரீசன்.
இவனுடைய செயலை தன்னுடைய ஞானதிருஷ்டியால் அறிந்த துர்வாசர் மிகுந்த கோபமடைந்தார். உடனே, முனிவர் ஒரு பூதத்தை வரவைத்து, அம்பரீசனை கொல்லுமாறு ஆணையிட்டார்.
இந்த பூதத்தைக் கண்ட அந்த மன்னன் பயந்து பரிமளரங்கநாதரிடம் சென்று, "பெருமாளே! உனக்காக ஏகாதசி விரதம் இருக்கக்கூடாது என்பதற்காக ஏவப்பட்ட பூதத்திடம் இருந்து என்னை காப்பாற்று" என்று அவருடைய பாதத்தில் சரணடைந்தான்.
அவனுக்கு அருள்புரிய பெருமாள் எண்ணி, அந்த பூதத்தை கோபத்துடன் விரட்டினார்.
இதையறிந்த துர்வாசர் பெருமாளிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். அவரும் அந்த முனிவரை மன்னித்து, அவருடைய கர்வத்தை அடக்கினார். அப்போது பெருமாள் மன்னனிடம், "வேண்டியதை கேள்" என்றார்.
அதற்கு அம்பரீசன், "தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து வருகின்ற பக்தர்களின் குறையை கேட்டு அருள்புரியவேண்டும்" என்றான்.
பெருமாளும் அம்பரீசனின் விருப்பப்படி, இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
🌺🌺 வழித்தடம் :-
மயிலாடுதுறை நகரிலேயே அமைந்துள்ளது. மாயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு கோபால கிருஷ்ணன் திருக்கோவில் -
திருக்காவளம்பாடி திருக்கோவிலைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:"
No comments:
Post a Comment