Saturday, October 31, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 38 அண்ணன் கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 38 🌹🌹🌹

வைகுண்ட வாசனான இறைவன் நாராயணன் ஸ்ரீநிவாசனாக திருஅவதாரம் செய்த திருமலையைப் போலவே தென்னகத்திலும் இரண்டு ஆலயங்களில் குடிகொண்டுள்ளார்.

அவை திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் மற்றும் திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில்களாகும்.

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோவில்:-

திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்).
மூலவர்: அண்ணன் பெருமாள், ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன்
தாயார்: அலர்மேல் மங்கை
உற்சவர்: ஸ்ரீநிவாசன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: தத்வத்யோதக விமானம்
தீர்த்தம்: திருவெள்ளக்குளம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ கண்ணநாராயணாய நமஹ

ஊர்: அண்ணன் கோவில்

🌺🌺 அண்ணன்கோவில் பெயர்க் காரணம் :-

திவ்ய தேசங்களில் திருமங்கையாழ்வார் இரண்டு ஸ்தல பெருமாள்களை மட்டுமே அண்ணா என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.

ஒன்று திருப்பதியில் அருளும் பெருமாள், மற்றொன்று திருவெள்ளக்குளம் பெருமாள் ஆவர்.

திருமங்கையாழ்வார் இத்தல இறைவனைத் தான் முதலில் "அண்ணா" என்றழைத்தார். அதனால் தான் இத்தல இறைவனுக்கு "அண்ணா" என்ற திருநாமம் உண்டானது.

எனவே தான் இங்கு அருளும் பெருமாளை "அண்ணன் பெருமாள்", "அண்ணன் கோவில்" என்றும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

திருமலை போன்றே இங்குள்ள பெருமாளின் நாமம் ஸ்ரீநிவாசன், தாயார் - அலர்மேல்மங்கை எனும் திருநாமம் கொண்டு அருள்கின்றனர்.

இத்தலத்தைப் பற்றிப் பத்மபுராணத்திலும் குறிப்புகள் உள்ளன.

🌺🌺 தலச் சிறப்புகள் :-

இத்திருத்தலத்தைத் 'தென் திருப்பதி' என்றும் அழைப்பர். இங்கே திருப்பதி போல் தலைமுடி காணிக்கை செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இக்கோயிலில் கல்யாணமும் நடத்திக் கொள்கின்றனர். இங்கே மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகம் கொண்டு காட்சி தருகிறார்.

🌺🌺 தலபுராணம் :-

அக்காலத்தில் சூரிய வம்சத்தில் துந்துமாரன் என்ற மன்னனுக்குச் சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான்.

அவனுக்கு ஒன்பதாவது வயதில் "மரணகண்டம்" என்று சாஸ்திர வாதிகளால் அறிந்ததும், அதற்கு பிராயச்சித்தம் காண தன்குல குருவான வசிட்டரை அணுகினார் மன்னன்.

அரசன் தன் மகனைக் காப்பாற்ற வசிஷ்ட முனிவரிடம் வேண்டினார். அதற்கு முனிவர் பெருமாளை வேண்டி தவமிருந்தால், மூவுலகையும் காக்கும் "ஸ்ரீமந்நாராயணன்" தன்மகனையும் காத்தருள்வார் என்றார்.

வசிஷ்டர் கூறியபடி சுவேதன் இங்குள்ள புட்கரணியில் நீராடி தவமிருக்கும் முன்பு, மருத்த முனிவர் ஆசிரமம் சென்று ஆயுள் விருத்தி மந்திரத்தை பயிற்சி பெற்று இங்குக் கடுந்தவம் இயற்றினார்.

அவனது தவத்திற்கு மனமிறங்கிய "மகாவிஷ்ணு" சுவேதனுக்குக் காட்சி கொடுத்து மரண கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல் நீண்ட ஆயுளை நல்கினார். பின்பு, பேரின்பக் கடலான முக்தியையும் தந்தருளினார்.

வைணவத் தலங்களில் இத்தலம் "எமபயம் நீக்கும் தலம்" என்ற சிறப்பு பெற்றது.

இதனால் இத்தலத்தின் எதிர்புறம் அமைந்துள்ள "சுவேத புஷ்கரிணி", "திருவெள்ளக்குளம்" என்ற பெயர் பெற்றது.

🌺🌺 குமுதவல்லியை நீலன் சந்தித்தல் :-

இத்திருத்தலத்தின் சுவேத புஷ்கரிணியில் உள்ள குமுத மலர்களைப் பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த பொழுது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் "குமுத வல்லி" தேவலோகம் செல்லும் சக்தியை இழந்து விடுகிறாள்.

இதைக்கேள்வி பட்ட நீலன் என்று படை தளபதி ஆன திருமங்கை மன்னன் இவளை திருமணம் புரிய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் புரிய பல நிபந்தனைகளை கூறுகிறாள்.

நீலனும் அவற்றை எல்லாம் நிறைவேற்றி வந்தார். இறுதியில் 1000 வைணவ அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்தால் தான் தங்களைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தாள்.

இதனை அறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து "திரு" மந்திரத்தை உபதேசம் செய்து அவரை ஆழ்வராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வராக மாறியதால் " திருமங்கை ஆழ்வார் " என்று அழைக்கப்பட்டார்.

அவ்வாறு ஒரு சமயம் வந்த தேவகுலப்பெண்களில் மானிடப் பார்வைக்கு இலக்காகி இங்கேயே நின்று விட்ட குமுதவல்லியைத் தான் திருமங்கைழ்வாருக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டது. இங்கு குமுத வல்லிக்குத் திருமங்கையாழ்வாரோடு ஒரு தனிச் சந்நிதி உள்ளது.

🌺🌺 மங்களாசாசனம் :-

இத்திருத்தலத்தை திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் பாடியுள்ளார்.

"கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார்முனை வென்றி கொள்வார்
மன்னுநாங்கூர் திண்ணார் மதிள்சூழ்
திருவெள்ளக்குளத்துள் அண்ணா!
அடியேன் இடரைக் களையாயே!!!".


- திருமங்கையாழ்வார்.

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். சீர்காழியிலிருந்து ஆக்கூர், பொறையாறு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இவ்வூர் வழியாகவே செல்கின்றன.

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருவடிகளே சரணம்.

அருள்மிகு அலர்மேல் மங்கை தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில் - திருப்பார்த்தன்பள்ளி திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!

No comments:

Post a Comment