Sunday, October 4, 2020

108 திவ்யதேசம் - பதிவு 17 சௌரிராஜ பெருமாள் திருக்கோவில்

 🌺🌺 108 திவ்யதேசம் - பதிவு 17 🌺🌺


அருள்மிகு சௌரிராஜ பெருமாள் திருக்கோவில் :-
திருக்கண்ணபுரம்
மூலவர்: நீலமேக பெருமாள்
தாயார்: கண்ணபுரநாயகி 
உற்சவர்: சௌரிராஜன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: உத்பலாவதாக விமானம்
தீர்த்தம்: நித்ய புட்கரணி
மங்களாசாசனம்: நம்மாழ்வார் 11, குலசேகராழ்வார் 11, பெரியாழ்வார் 1, ஆண்டாள் 1, திருமங்கையாழ்வார் 105 பாசுரம் என 129 பாசுரம் பாடப்பட்டுள்ளது.


நாமாவளி: ஸ்ரீ கண்ணபுரநாயகீ ஸமேத ஸ்ரீசௌரிராஜாய நமஹ

ஊர்: திருக்கண்ணபுரம்

🌺🌺 தலவரலாறு :-

🌺🌺 நீலமேகப் பெருமாள் :-

நலமனைத்தும் வழங்கும் நாதனாம் இறைவன் நாராயணனின் அருள் பெற வேண்டி புனித தீர்த்தக் கரையில் ஏராளமான முனிவர்கள் தவமியற்றுவது வழக்கம். 

அவ்வகையில் முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் நித்திய புட்கரணி தீர்த்தக் கரையான இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர்.

"சோழ நாடு சோறுடைத்து" என்பது சான்றோர் வாக்கு. அன்றைய காலத்தில் எங்கு பார்த்தாலும் நச்சைப் பட்டாடை விரித்திருந்தாள் சோழ நாட்டின் கழனிப் பெண்ணாள். எனவே சாப்பாடு, தூக்கம் என எதையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் நெற்கதிர்களை பெருமாள் ஆட்கொண்டதையும் அறியவில்லை.

ஒருசமயம் உபரிசிரவசு என்னும் மன்னன் தன் படையுடன் இவ்வழியாக வந்து கொண்டிருந்தான். இங்கு விளைந்து கொண்டிருந்த கதிர்களைக் கண்டு ஆச்சரியம் அடைந்து அந்த நெல்மணிகளில் சிறிதளவை பறிக்க முற்பட்டான். அப்போது ஒரு சிறுவன் பயிர்களைத் தான் பாதுகாப்பதாகவும், எவரும் அதை பறிக்க அனுமதி இல்லை என்று எச்சரித்தான். 

அவன் பயிரைக் காக்கும் சிறுவனல்ல, புவனம் காக்கும் இறைவன், என்பதை அப்போது அவன் அறியவில்லை. உபரிசிரவசு ஒரு சிறுவன் மன்னனை எதிர்ப்பது முறையாகாது என்ற ஆணவத்தால் போர்புரிந்தான். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றறிந்த அட்டாசர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அப்போது சிறுவன் வான் நோக்கி சென்று மேகத்தில் மறைந்தான். இதைக் கண்ட மன்னன் அதிர்ந்து போனான்.

தவமியற்றிய முனிவர்கள் தனது ஞானத்தால் அறிந்து, தவம் கலைத்து மன்னனிடம் வந்தவர் "வைகுண்ட வாசன்" என்பதைக் கூறினார். தனது தவம் காத்த இறைவனை மனமுருகி வணங்கினர். அப்போது இறைவன் மறைந்த மேகத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி தந்து அருளினார். 

நீலமேகத்திலிருந்து உதித்தவர் என்பதால் இத்தல இறைவனுக்கு "நீலமேகப் பெருமாள்" என்பது திருநாமம். பிறகு மன்னன் உபரிசிரவசு இவ்விடத்திலேயே பிரம்மாண்டமான ஆலயம் ஒன்றை அமைத்து வழிபட்டான்.

🌺🌺 சௌரிராஜப் பெருமாள் :-

இவர் சௌரிராஜன் எழைக்கப்படுவதற்கு ஒரு சுவையான கதை உண்டு. ஒருசமயம் இக்கோவில் அர்ச்சகர் பக்தி வயத்தால் பித்தானார். சுவாமிக்கு சாற்றிய மாலையை கன்னிகைக்கு சூடி பெருமாளே நேரில் வந்ததாக எண்ணி மகிழ்வார். 

ஒருநாள் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த மன்னருக்கு மரியாதை செய்ய மாலை இல்லை. எனவே, தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு அணிவித்தார். 

அதில் பெண்கூந்தல் மயிர் இருப்பதைக் கண்ட மன்னர், அதன் காரணத்தை அர்ச்சகரிடம் கேட்டார். அர்ச்சகர், கன்னிகையின் வடிவில் பெருமாளைக் கண்டதால், பெருமாளின் தலையில் இருந்த மயிர் தான் என்றார். 

அதற்கு அர்ச்சகர் நாளை அமாவாசையன்று கோவிலுக்கு வந்தால் முடியுடன் தரிசிக்கலாம் என்று கூறினார். அதற்கு பின்னர் சுவாமிக்கு மயிர் இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்து விட்டுச் சென்றார். 

கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கிய நிலையில் மயங்கினார். மறுநாள் வந்த மன்னருக்கு இறைவன் திருமுடியுடனே காட்சி கொடுத்தார். ஆனால், மன்னன் நம்பவில்லை.

பெருமாளின் முடியை மன்னனுடன் வந்தவர்கள் சோதித்தனர் முடியை தலையிலிருந்து இழுத்தனர். தலையிலிருந்து இரத்தம் கொட்டியது. மன்னன் அதன் பின் தனது தவறுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்.

பக்தனைக் காப்பாற்ற தானும் கஷ்டப்பட்டுக் கொண்ட இறைவனை நாம் என்னவென்று சொல்வது. அதனால் தான் இத்தல பெருமாள் "சௌரிமுடியுடன்" சேவை சாதிக்கிறார்.

🌺🌺 கருட சேவை :-

இனி கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்க காரணம் என்னவென்று பார்க்கலாமா? 

தன் தாயை, சிற்றன்னையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவ லோகம் சென்று இந்திரனை தோற்கடித்து அமுதம் கவர்ந்து வந்தார். இவ்வாறு தேவர்களைத் தவிர யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தேவர்களை வென்று கொண்டு வருவதை எண்ணி கருடன் மனம் கர்வம் கொண்டது. 

கர்வத்துடன் அவர் சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது பெருமாளை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாக ஏற்றுக்கொண்டார். 

ஆகவே, இன்றும் பெருமாளை வணங்கிய நிலையில் பெருமாளுக்கு இடப்பக்கத்தில் கர்வம் தீர்ந்த கருடனை நாம் சேவிக்கலாம். வலப்பக்கத்தில் தண்டக மஹரிஷியை சேவிக்கலாம். மாசி மகத்தன்று கடற்கரைக்கு எழுந்தருள்வது கருட பர்வதத்தை பார்வையிட என்று கூறுவாறும் உண்டு. 

சௌரிராஜப்பெருமாள் தங்க கருட வாகனத்தில் திருமலைராயன் பட்டினம் என்னும் மீனவ கிராமத்திற்கு எழுந்தருளி சேவை சாதிப்பது இந்த திவ்யதேசத்திற்கே ஆன ஒரு சிறப்பு ஆகும். .

🌺🌺 விபீஷணனுக்கு நடையழகு :-

விபீஷணுக்கு சேவை சாதித்த தலம் இது.. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நின்ற அழகையும் நடையழகையும் காண வேண்டும் என்று வீபிஷணர் வேண்ட, “கண்ணபுரத்தில் காட்டுவோம் வா” என்று வீபீஷணணுக்கு நடையழகு காட்டி அருளினார் பெருமாள்!. 

இன்றும் ஒவ்வொரு அமாவாசையிலும் மதியம் சௌரி முடியுடன் கைத்தல சேவையில் நாம் நடையழகைக் காணலாம்! இத்திருத்தலத்தில் விபீஷணனுக்கு தனி சன்னதி உள்ளது. 

🌺🌺 மும்மூர்த்திகள் :-

இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் திருநாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரைக்கு மத்தியில் படைப்பு நிலையில் பிரம்மாவாகவும், விடியற்காலையில் வெள்ளை சாத்தி ஒரு முகூர்த்த நேரம் அழிக்கும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்யதேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு! இப்பிரமோற்சவத்தின் 4ம் திருநாள் இரவு கருடசேவை தந்தருளுகின்றார் சௌரிராஜப்பெருமாள். 8ம் திருநாள் பத்மினித்தாயாருடன் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.

🌺🌺 வழித்தடம் :-

நாகப்பட்டினம் - நன்னிலம் செல்லும் சாலையில் உள்ள திருப்புகலூர் என்னுமிடத்தில் இறங்கி 2 கி.மீ செல்ல வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து சன்னாநல்லூர் வழியாகவும் திருப்புகலூர் செல்லலாம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு லோகநாதப் பெருமாள் - திருக்கண்ணங்குடி திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:".

No comments:

Post a Comment