Tuesday, October 27, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 31 திருச்செம்பொன்செய் கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 31 🌹🌹🌹


அருள்மிகு பேரருளாளன் திருக்கோவில்:-

திருச்செம்பொன்செய் கோவில்


மூலவர்: செம்பொன்னரங்கர், பேரருளாளன்
தாயார்: அல்லிமாமலர் நாச்சியார்
உற்சவர்: ஹேமரங்கர், பொன்னரங்கர்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: கனக விமானம்
தீர்த்தம்: நித்ய புஷ்கரணி, கனக தீர்த்தம்
நாமாவளி: ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார் ஸமேத ஸ்ரீ பேரருளாள ஸ்வாமிநே நமஹ
ஊர்: திருநாங்கூர்


மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

🌺🌺 தலவரலாறு:-

பரமபத நாதனான இறைவன் நாராயணன் பூவுலகில் அரங்கனாக அவதரித்து அனைவரையும் காக்கின்றார். அருள்மிகு அரங்கநாத பெருமான் இத்தலத்தில் செம்பொன் மேனியனாக காட்சி தந்து அருள்கிறார்.

அத்தகைய செம்பொன்னரங்கர் பாலகனாக காட்சி தந்து அருள்வதால் இத்தலத்திற்கு "செம்பொன்செய்கோவில்" என்பது பெயராகும்.

பிற்காலத்தில் அப்பெயர் மருவி செம்பொன்செய் என்று ஆனது. அவதாரப் புருஷனான அருள்மிகு இராமபிரான் இத்தலத்தில் வாசம் செய்ததாகத் தலவரலாறு கூறுகிறது.

🌺🌺 செம்பொன்செய் திருக்கோவில் :-

ராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். ராவணனை வதம் செய்த ப்ரஹ்மஹத்தி தோஷம் விலக முனிவரின் ஆலோசனை படி பொன்னால் செய்த ஒரு பசுவின் சிலை செய்து, தவம் புரிந்து பூஜை செய்து பிறகு அந்த சிலையை ஒரு அந்தணருக்கு தானமாக கொடுத்தார். இப்படி செய்ததால் ராமனின் தோஷம் நீங்கியது. பிறகு அந்த அந்தணர் அந்த பசுவின் சிலையை விற்று இந்த கோவிலை கட்டியதால், இந்த திவ்ய தேசம் " செம்பொன்செய் கோவில் " என அழைக்கப்படுகிறது.

🌺🌺 சிறப்புகள் :-

108 திவ்ய தேசங்களில் பெருமாள் தன் கோவிலை கட்ட தானே உதவிய தலம் இத்திருத்தலம் ஆகும்.

பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் "அருளாளன்" என்று வணங்கப்படுகிறார். அவரே இத்தலத்தில் நம்மோடு இருப்பதால் "பேரருளாளன்" என்ற சிறப்பான திருநாமம் பெற்றார்.

இறைவன் பொன் போன்ற அழகிய மேனியாக செம்பொன்னரங்கர் திருநாமத்தில் அருளும் திவ்யதேசம்.

திருநாங்கூரில் நடைபெறும் புகழ் பெற்ற 11 திருத்தல கருடசேவைக்கு இத்தல பெருமாளும் எழுந்தருள்வார்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 08 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம்.

அருள்மிகு செம்பொன்னரங்கர் திருவடிகளே சரணம்.

அருள்மிகு அல்லிமாமலர் நாயகி திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு பத்ரி நாராயணர் திருக்கோவில் - திருமணிமாடக்கோவில் (திருநாங்கூர்) திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!"

No comments:

Post a Comment