Monday, October 12, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 18 திருக்கண்ணங்குடி

 🌺🌺 108 திவ்யதேசங்கள் - பதிவு 18 🌺🌺


பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஐந்தாவது தலம். பெருமாள் விபூதி அணிந்து காட்சி தரும் திருத்தலம்.

அருள்மிகு லோகநாதப் பெருமாள் திருக்கோவில் :-

திருக்கண்ணங்குடி

மூலவர்: லோகநாதன், சியாமளமேனிப் பெருமாள்

தாயார்: லோகநாயகி

உற்சவர்: தாமோதர நாராயணன்

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: உத்பல விமானம்

தீர்த்தம்: சிரவர புட்கரணி, நித்ய புட்கரணி

தலவிருட்சம்: மகிழமரம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ அரவிந்தவல்லீ ஸமேத ஸ்ரீ சியாமளமேனி ஸ்வாமிநே நமஹ

🌺🌺 தலச்சிறப்பு:-

இத்தலத்தின் பெயரைக் கேட்டாலே சகலபாவங்களும் விலகிவிடும் சிறப்பை பெற்றது. இங்கு பெருமாளின் நட்சத்திரம் "திருவோணம்".

தாயார் "லோகநாயகி" முகமும் உற்சவர் "அரவிந்தநாயகி" முகமும் ஒரே மாதிரியிருப்பது சிறப்பாகும்.

பெருமாள் கோயில்களில் பொதுவாக "கருடாழ்வார்" கைகளை குவித்து வணங்குகிற நிலையில் இருப்பார். ஆனால், இங்கு இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு "வைகுண்டத்தில்" எழுந்தருளியிருப்பதைப்போல் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்திற்கு "ஊராக்கிறு", "உறங்காபுளி", "தேராவழக்கு","திருக்கண்ணங்குடி" என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.

🌺🌺 தலவரலாறு :-

விண்ணுலகம் முதல் மண்ணுலகம் வரை அனைத்து உயிர்களையும் காத்து நலமளிக்கும் இறைவன் நாராயணன் எடுத்ததோ பத்து அவதாரம். அதில் கண்ணனாக அவதரித்து மாயங்கள் செய்ததை, மனதால் எண்ணி மகிழ்ந்தவர்களுள் ஒருவர் விசிஷ்டர்.

அவர் ஒருநாள் கண்ணனின் திருக்கோலத்தைக் காண வேண்டி மிகுந்த ஆவல் கொண்டார். வசிஷ்டரை "கிருஷ்ணாபிரேமை வசிஷ்டாய நமோ" என்று சொல்வார்கள். ஒருமுறை "வசிஷ்டர்" தானே வெண்ணையில் "கிருஷ்ணன்" விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகிவிடாமல் வைத்து பூஜை செய்துவந்தார்.

இந்த பக்தியைக்கண்ட "கண்ணன்" சிறு குழந்தையில் உருவம் கொண்டு வசிஷ்டரிடம் "கோபாலனாக" சென்றார். அங்கு "வசிஷ்டர்" பூஜையை செய்து கொண்டிருக்கும்போது, அந்த "வெண்ணெய் கண்ணனை" அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கிவிட்டார். அங்கு இருந்த "வசிஷ்டர்" இதைக்கண்டு, அந்த குழந்தை வடிவமான பகவானை, "அடே!அடே! என்று விரட்டிச்சென்றார்.

அங்கு "மகிழ" மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்துக்கொண்டு இருந்தார்கள். இந்த வசிஷ்டரால் விரட்டப்பட்ட "கண்ணன்" இப்பகுதிக்கு ஓடிவந்தான். கண்ணன் வருவதை தங்களுடைய ஞானதிருஷ்டியால் அறிந்த ரிஷிகள் பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர்.

இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட "கண்ணன்" அவர்களிடம், "வசிஷ்டன் விரட்டி வருகிறான், நீங்கள் வேண்டியதை சீக்கிரம் கேட்டு பெறுங்கள்" என்றார். அந்த ரிஷிகள் அதற்கு, "கண்ணா! நீர் எங்களுக்கு தரிசனம் தந்ததைப்போல், இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்து அருளவேண்டும்" என வேண்டினார்கள். இவர்களது வேண்டுதலுக்கிணங்க "கண்ணன்" இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனைப் பற்றிக் கொண்டார்.

அங்கு உடனே, கோபுரங்களும் விமானங்களும் உண்டாகிவிட்டன. இந்த விபரத்தைக் கேள்விப்பட்ட பிரம்மனும், தேவர்களும் உடனே வந்து பிரம்மோற்சவம் நடத்தினர்.

லோகமெல்லாம் நிறைந்துள்ள இறைவன் தனக்காக இறங்கி வந்தமையால், வசிஷ்டர் "லோகநாதன்" என்ற திருநாமம் கொண்டு அழைத்தார். திருமால் கண்ணனாக வந்து கட்டுண்டு நின்றபடியால், இத்தலம் "திருக்கண்ணங்குடி" எனப்பெயர் பெற்றது. இத்தல இறைவிக்கு "லோகநாயகி" என்பது திருநாமம் ஆகும்.

🌺🌺 மங்களாசாசனம் :-

இங்கு 10 பாசுரங்கள் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.

"வங்கமா முந்நீர் வரிநிற்ப

பெரிய வாளரவி னனை மேவிச் சங்கமா
ரங்கைத்தடம் லருந்திச் சாம மாமேனி என்
தலைவன் அங்கமாறைந்து வேள்வி நால் வேத
மருங்கலை பயின்றெரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில்
மனத்தோர் திருக்கண்ணங் குடியுள் நின்றானே"!

- "திருமங்கையாழ்வார்"

🌺🌺 திருநீரணி விழா-

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் "திருநீரணிவிழா" என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின்போது பெருமாள் "விபூதி" அணிந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சி "மூன்றே முக்கால் நாழிகை" நடைபெறும். இந்த விழாவிற்கு அனைவரும் "விபூதி" அணிந்தே வருவார்களாம், இந்த விழா "உபரிசரவசு" மன்னனுக்காக எடுக்கப்பட்டது. இந்த விழா "சைவ,வைணவ" ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இத்தலத்து இறைவனை பிரம்மா, கவுதமர், உபரிசரவசு, வசிஷ்டர், பிருகு, மாடரர் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் தரிசித்துள்ளனர்.

🌺🌺 வழித்தடம் :-

நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் சிக்கலுக்கும், கூவலூருக்கும் இடையில் உள்ள ஆழியூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து 1 கி.மீ நடந்து செல்ல வேண்டும். கீவளூர் இரயில்வே நிலையத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

அருள்மிகு லோகநாதப் பெருமாள் திருவடிகளே சரணம்.

அருள்மிகு லோகநாயகி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு சௌந்தர்யராஜப் பெருமாள் திருக்கோவில் - திருநாகை என்ற நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:".

No comments:

Post a Comment