வைஷ்ணவ தேவி பகுதி 6
கட்ராவிலிருந்து நாம் தொடங்கிய நடைப்பயணத்தில் பாதி தொலைவு வந்து விட்டோம். இந்த இடம் சுமார் 4800 அடி உயரம். இடத்திற்குப் பெயர் என்ன தெரியுமா? அத்குவாரி – வைஷ்ணவ தேவி தரிசன வழியில் மிக முக்கியமான இடமாகக் கருதப்படுவது இந்த இடம். இந்த இடம் நெருங்க நெருங்க, பக்தர்களுக்கான அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒலியை நீங்கள் அதிகமாகக் கேட்கமுடியும்.
அத்குவாரி எனும் சொல் “ஆதி குமாரி” எனும் சொல்லிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது.
பைரோன் நாத்திடமிருந்து தப்பிக்க ஓடிவந்த வைஷ்ணவ தேவி கர்ப்பப்பை போன்ற வடிவிலிருந்த சிறிய குகையினுள் அடைக்கலம் புகுந்தாள். அங்கே எந்த வித தொந்தரவும் இன்றி தனது தவத்தினைத் தொடங்கலாம் என்று முடிவு செய்து தனது தவத்தினைத் தொடங்கினாள். அப்படி அங்கே தவமிருந்தது சுமார் ஒன்பது மாத காலம் – அதாவது குழந்தை தனது தாயின் வயிற்றினுள் இருக்கும் காலம். இப்படி தவமிருந்த அந்த குகைக்குள் சென்று தேவி தவமிருந்த இடத்தில் பிரார்த்தனை செய்தால் தமது பாபங்கள் அனைத்தும் தீரும் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை. இவ்விடத்தினை [g]கர்[b]ப்ஜூன் என்றும் அழைப்பதுண்டு.
இந்த குகைக்குள் பயணித்து வெளியே வருவது நிச்சயம் அவள் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம். உள்ளே செல்லும் வழி நன்கு அகலமாக இருந்தாலும், உள்ளேப் போகப் போக குறுகிய பாதையாக மாறி, தவழ்ந்து தான் வெளியே வரவேண்டியிருக்கும். குழந்தை கர்பத்திலிருந்து வெளியே வருவதைப் போல, அந்த குகைக்குள் இருந்து வெளியே வரவேண்டியிருக்கும்.
அன்னையின் கருணையை நினைத்தபடியும், நமக்குப் பின்னால் தரிசனத்திற்காகக் காத்திருக்கும் மக்களின் உந்துதலினாலும் அந்த குறுகிய வழியாக நீங்கள் வெளியே வந்து விடுவீர்கள். உள்ளே இருக்கும்போது சற்றே கடினமாகத் தோன்றியிருந்தாலும், வெளியே வந்தபின் “அப்படி ஒன்றும் கடினமாக இல்லை” என்று தான் தோன்றும்!
நாங்கள் இப்பயணத்தில் அத்குவாரியில் தேவியைத் தரிசனம் செய்யாது நேராக மலைக்கு, அன்னையின் இருப்பிடத்திற்குச் சென்று விட்டோம் காரணம் இந்த இடத்தில் எப்போதும் அதீதமான அளவில் பக்தர்களின் எண்ணிக்கை இருப்பதால் தான் – குறுகிய வழி என்பதால் இங்கே தரிசனம் செய்ய ஆகும் நேரமும் அதிகம். காத்திருந்து தரிசனம் செய்யும் பொறுமை எனக்கோ நண்பர்களுக்கோ இல்லாத காரணத்தினாலும் இரவு 12 மணி நெருங்கி விட்டதாலும் நாங்கள் எங்கள் நடைப்பயணத்தினை மேலும் தொடர்ந்தோம்.
கட்ராவிலிருந்து நடக்க முடியாதவர்கள் போனி [அ] டோலி மூலம் வருவார்கள் என்று சொன்னேன் அல்லவா? அவர்களும் இந்த பாதி வரை வந்து பின்னர் மேலும் பயணிக்க மீண்டும் வேறு போனிவாலாக்களையோ அல்லது டோலி வாலாக்களையோ நியமிக்க வேண்டியிருக்கும். சிலர் கீழிருந்து மேல் வரை அதாவது கட்ராவிலிருந்து [b]பவன் வரை பேசிக்கொள்வார்கள்.
ஆறு கிலோ மீட்டர் தொலைவு நடந்து வந்து விட்டோம். பயணக்களைப்பு உங்களுக்கு இந்தப் பயணக்கட்டுரை படிக்கும்போது இருந்திருக்காது என்று நம்புகிறேன்!
No comments:
Post a Comment