Wednesday, October 28, 2020

திருத்தண்கால் திவ்யதேசம்

 திருத்தண்கால் திவ்யதேசம்

100வது திவ்யதேசம் - திருத்தண்கால் (திருதண்காலூர்)

ஶ்ரீ நின்ற நாராயணன்

தாயார்-

ஶ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்தநாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)

ஶ்ரீமந் நாராயணன் பாற்கடலில் சயனித்திருந்தபோது, அருகில் இருந்த ஶ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது.

ஶ்ரீதேவியின் தோழிகள், "இவளே உயர்ந்தவள், இவளே அதிர்ஷ்ட தேவதை! இவளே மஹாலக்ஷ்மி(ஶ்ரீ) என்று அழைக்கப்படுபவள்! இந்திரன் இவளால்தான் பலம் பெறுகிறான்! வேதங்கள் இவளை திருமகள் என்று போற்றுகின்றன! பெருமாளுக்கு இவரிடம்தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஶ்ரீநிவாசன், ஶ்ரீபதி, ஶ்ரீநிகேதன் என்ற திருநாமங்கள் உண்டு! பெருமாள் இவளை தன் வலது மார்பினில் தாங்குகிறார்" என்று புகழ்பாடினர்!! 

பூமாதேவியின் தோழியரோ "இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூதேவியே! அவள் மிகவும் சாந்தமானவள், பொறுமை மிகுந்தவள்! இவளை காக்கவே பெருமாள் வராஹ அவதாரம் எடுத்தார்" என்று வாதாடினர்!!

நீளாதேவியின் தோழிகள் "எங்கள் நீளாதேவி தண்ணீர் தேவதையாக இருக்கிறாள்! தண்ணீரை நாரம் என்பர். இதனால் தான் பெருமாளுக்கு நாராயணன் என்ற சிறப்பு திருநாமம் உள்ளது! உலகிலுள்ள எல்லோரும் உச்சரிக்கும் நாமம் நாராயண நாமமே! தண்ணீரைப் பாலாக்கி அதில் ஆதிசேஷனை மிதக்கச் செய்து, தாங்குபவள் எங்கள் நீளாதேவி! எனவே இவளே உயர்ந்தவள்" என்றனர்!!

விவாதம் வளர்ந்ததே தவிர முடிந்தபாடில்லை. எனவே ஶ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க இந்த தங்காலமலை என்னும் திருத்தங்களுக்கு வந்து செங்கமல நாச்சியார் என்ற பெயரில் கடுந்தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்று, நின்ற நாராயணப் பெருமாளாக இத்திவ்யதேசத்தில் அருள்பாலித்து வருகிறார்!!

திருமகள் தங்கியதால் இத்தலம் திருத்தங்கல் ஆயிற்று!!

"தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை-தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிகுட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக்கிடம்"

-பூதத்தாழ்வார் 

(2ம் திருவந்தாதி)

-அடியவர்களின் உள்ளமானது, தஞ்சை மாமணிக் கோயில், தலைசிறந்ததாகத் திகழ்கின்ற திருவரங்கம், திருத்தண்கால் ஆகிய திருத்தலங்கள், அடியார்கள் உகக்கின்ற திருமலை, திருப்பாற்கடல், திருக்கடல்மல்லை, திருக்கோவலூர், மதிள்கள் நிறைந்த திருக்குடந்தை ஆகிய திருத்தலங்களில், அம்பு எய்வதில் வல்லமை மிக்கவரான எந்தைபிரானாகிய ஶ்ரீ இராமபிரான் திருக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றான்!



No comments:

Post a Comment