🙏 நமஸ்காரம்
103. கோகுலம் (ஆய்ப்பாடி)
மூலவர் - நவமோகன கிருஷ்ணன், மனமோகன கிருஷ்ணன்
தாயார் - ருக்மணி, சத்யபாமா
விமானம் - ஹேமகூட விமானம்
தீர்த்தம் - யமுனை நதி
நாமாவளி - ஸ்ரீ ருக்மணீ ஸத்யபாமா நாயிகா ஸமேத ஸ்ரீ நவமோகனக்ருஷ்ணாயநமஹ:
வழித்தடம்:
மதுராவிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. யமுனை ஆற்றைக் கடந்து தான் இத்திருக்கோவிலுக்குச் செல்ல முடியும். மதுராவிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
பாசுரம்:
ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார் *
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று *
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே.
- பெரியாழ்வார் திருமொழி (14)
பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவராலும் 22 பாசுரங்களில் மங்களாசாசனம்.
பாசுரம் பதவுரை:
ஆய்ப்பாடி - திருவாய்ப்பாடியானது,
விழுவார் - (சேற்றிலே வழுக்கி) விழுவாரும்
உகந்து - உகப்புக்குப் போக்குவீடாக
ஆலிப்பார் - கோஷிப்பாரும்
நாடுவார் - (பிள்ளையைத்) தேடுவாரும்
நம் பிரான் - நமக்கு உபகாரகனான கண்ணன்
எங்கு தான் என்பார் - எங்கேதான் (இராநின்றான்) என்பாரும்
பாடுவார்களும் - பாடுவார்களும்
பல் பறை - பலவகை வாத்யங்கள்
கொட்ட - முழங்க
நின்று - அதற்குப் பொருந்த நின்று
ஆடுவார்களும் - கூத்தாடுவாருமாக
ஆயிற்று - ஆய்விட்டது.
பாசுரம் விளக்க உரை:
கோகுலத்திலுள்ளாரெல்லாரும் தங்கட்குத் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற ஆநந்தமடைந்து தாம் செய்வது இன்னதென்று தெரியாமல், சிலர் ஓடினார்கள்; சிலர் சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; சிலர் உரக்க கோஷம் செய்தார்கள்; சிலர் ‘நம் கண்மணி எங்கே?’ என்று குழந்தையைத் தேடினார்கள்; சிலர் பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதுக்குத் தகுதியாகக் கூத்தாடினார்கள்; ஆகவிப்படி பஞ்சலக்ஷம் குடியிலுள்ளாரெல்லாரும் சொல்ல முடியாத கோலாஹலமாயிருந்தார்கள்.
க்ருஷ்ணஜநநத்தால் திருவாப்பாடியில் விகாரமடையாதார் ஒருவருமில்லையென்பார் ஆய்ப்பாடியே ஓடுவாரும். . . . ஆடுவாருமாக ஆயிற்றென்றார். ‘எங்குற்றான்’ என்ற பாடமும் கொள்ளத்தக்கதே.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
ஸ்தல வரலாறு:
பகவான் கிருஷ்ணன் யசோதா அன்னையின் அரவணைப்பில் வளர்ந்து, லீலைகளும் மகிமைகளும் பலவாக புரிந்த பூமி "கோகுலம்". இதற்கு அக்காலத்தில் "ஆயர்பாடி" என்பது பெயர். ஆயர்கள் அதிகமாக வாழ்ந்த காரணத்தால் இவ்விடம் "ஆயர்பாடி" என்றாதாகக் கூறப்படுகிறது.
கண்ணன் பிள்ளைப் பருவ லீலைகள் அனைத்தும் நிகழ்த்தியது இத்தலத்தில் தான் என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். வெண்ணெய் திருடியது, உரலில் கட்டுண்டது, பூதனையை மாய்த்தது, சகடாசூரனை வதைத்தது, திருநாவத்தனை வதைத்தது, கோபியரோடு ஆடியது, நந்த கோபர் வீட்டுக்கு முன் இருந்த மரங்களை முறித்தது ஆகிய அனைத்து லீலைகளும் நிகழ்ந்தது ஆயர்பாடியில் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு:
சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்துக் கொண்டு வரப்படுகிறான். நந்த கோபன் குழந்தையை எடுத்துக் கொஞ்சி மகிழ்கிறான். ஆயர்கட்குப் பொன்னும் மணியும் பரிசலாக வாரி வழங்குகிறான். கண்ணன் வரவினால் கோகுலமே மகிழ்ச்சிப் பெருக்கில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் இந்த தினம் வந்தவுடன் கோகுலம் விழாக் கோலம் பூணுகிறது. இந்த நிகழ்ச்சியை நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின் மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம். வடநாட்டிலும், பிற முக்கிய ஸ்தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ண அவதாரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது இந்த ஆயர்பாடியினைப் பற்றி. "சீர் மல்கும் ஆயர்பாடி" என்று ஆண்டாள் நாச்சியார் அனுபவித்து பாடியுள்ளார்.
ஆழ்வார்களால் பாடல்பெற்ற "கோகுலம் திருத்தலம்" கால சூழ்நிலையால் அழிந்து போனதாகவும், தற்போது உள்ள இத்திருக்கோவில் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/ZgfquORLAo8
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://www.facebook.com/102047988262304/posts/141692957631140/?sfnsn=wiwspmo&extid=4M0rsDaS8u4XD7sJ
No comments:
Post a Comment