Wednesday, October 28, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 35 திருத்தேவனார்த்தொகை (திருநாங்கூர்)

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 35🌹🌹🌹


அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில்:-

திருத்தேவனார்த்தொகை (திருநாங்கூர்)

மூலவர்: தெய்வநாயகன்
தாயார்: கடல்மகள் நாச்சியார், மாதவ நாயகி
உற்சவர்: மாதவப் பெருமாள்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சோபன விமானம்
தீர்த்தம்: சோபன புட்கரணி, தேவசபா புட்கரணி
நாமாவளி: ஸ்ரீ கடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

ஊர்: கீழச்சாலை

🌺🌺 தலவரலாறு:-

துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்குக் கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி, அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய்.

எனவே, லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும்!! என்று சாபம் கொடுத்ததைக் கேட்டு அதிர்ந்து போனான் இந்திரன்.

ஐராவதம் யானையும் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன்.

துர்வாசரும், இந்திரனே "இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான்". "இறைவனது பிரசாதப்பொருட்களை அவமதிக்கக் கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா?". நீ உன் குருவிடமே சாப விமோசனம் கேள்", எனக் கூறிச் சென்றுவிட்டார்.

கங்கைக் கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என்று கூறி அனுப்பி விட்டார்.

பிரம்மனோ! இது பெருமாள் காரியம்! தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகாவிஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடுவாயாக, அவர் உனக்கு அருள் புரிவார் என்றார்.

பெருமாளிடம் மகாவிஷ்ணு தனது தவறுக்கு வருந்தி சாப விமோசனம் நீங்குவதற்கு வழி கேட்டபோது, பெருமாள் கூறுவது :-

"இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும், என் மனைவியும் தங்க மாட்டோம். நீ தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம்வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாயாக" என்று கூறி ஆசி வழங்கினார்.

பாற்கடலைக் கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதைத் தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.

🌺🌺 திருத்தேவனார்த்தொகை பெயர்க் காரணம் :-

பரமபதநாதனாம் இறைவன் நாராயணன் குடிகொண்டுள்ள பாற்கடலை ஒரு முறை அமுதம் வேண்டிக் கடையும் போது, அதிலிருந்து திருமகள் தாயார் வெளிப்பட்டாள்.

பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட திருமகள் தாயாரை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். அத்தகைய திருமணக் கோலத்தில் இறைவன் இத்திருக்கோவிலில் காட்சி தருவதாகத் தலவரலாறு கூறுகிறது.

திருமகளைத், தேவனார் (பெருமாள்) மணமுடிக்கும் காட்சியைக் காண தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த திருத்தலத்திற்கு "திருத்தேவனார்த்தொகை" எனப்பெயர் வந்தது. இதைத் திருமங்கையாழ்வாரும் உறுதி செய்கிறார்.

"இந்திரனும் இமையவரும்
முனிவர்களும் எழில் அமைந்த
சந்த மலர்ச் சதுமுகனும்
கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என
நின்றருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நல்பொழில் புடை சூழ்
திருத்தேவனார்த்தொகையே!!!"

என்று திருமங்கையாழ்வார் பாசுரத்தால் பாடுகிறார்.

🌺🌺 அமர்ந்த நாயகன் :-

இத்தலத்தைப் பற்றி மேலும் திருமங்கையாழ்வார் """இத்தல இறைவன் அமர்ந்து காட்சி தருவதாகப் பாடுகிறார்"""". ஆனால், இறைவன் நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள்கிறார்.

""யாவரும் ஆய் யாவையும் ஆய் எழில்
வேதப் பொருள்களும் ஆய்
மூவரும் ஆய் முதல் ஆய மூர்த்தி
அமர்ந்து உறையும் இடம்"".

என்று பாசுரம் செய்கிறார். இதன் பொருள் என்னவென்றால்??

இதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். இறைவன் பூமியில் வந்து இருந்த இடம் என்ற பொருளின் அடிப்படையில் குறிப்பிட்டிருக்கலாம்.

காவிரியின் கிளை நதியான மண்ணியாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆழ்வார் காலத்தில் அமைந்திருந்த ஆலயம் சிதைந்து, பின்னாளில் இவ்வாலயம் உருவாகி இருக்கலாம்.

இதன் காரணமாக முதல் மூர்த்தி அமர்ந்த கோலத்திலும்,

இன்றைய மூர்த்தி நின்ற கோலத்திலும் குடிகொண்டிருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

🌺🌺 சிறப்புகள் :-

தேவர்களே தொகையாக வந்து தரிசித்த திருத்தலம் இந்த திருத்தலம்.

திருமகள் தாயார் கடல்மகள் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

கல்யாண வரம் அருளும் திருத்தலம்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளிய திருத்தலம்.

திருநாங்கூரில் நடைபெறும் புகழ் பெற்ற 11 திருத்தல கருடசேவைக்கு இத்தல பெருமாளும் எழுந்தருள்வார்.

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி - திருவெண்காடு சாலையில் திருவாலியில் இறங்கி 1 கி.மீ செல்ல வேண்டும். சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அருள்மிகு தெய்வநாயகன் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு கடல்மகள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு செங்கண்மால் திருக்கோவில் - திருத்தெற்றியம்பலம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நமஹ!"

No comments:

Post a Comment