🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 39 🌹🌹🌹
அர்ஜீனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் பெருமாளின் தரிசனம் பெற்ற திருத்தலம்.
அதிசயத்திலும் அதிசயமான பார்த்தன்பள்ளியில் குடிகொண்டருளும் "ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சி தரும் திருத்தலம்!!!".
அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில் :-
மூலவர்: தாமரையாள் கேள்வன்
தாயார்: தாமரை நாயகி
உற்சவர்: பார்த்தசாரதி
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: நாராயணா விமானம்
தீர்த்தம்: சங்கராஸ் தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ தாமரை நாயகீ ஸமேத ஸ்ரீ தாமரையாள் கேள்வன் ஸ்வாமிநே நமஹ.
ஊர்: திருநாங்கூர்.
🌺🌺 திருப்பார்த்தன்பள்ளி :-
திருவருள் புரியும் இறைவன் நாராயணன் பாற்கடலை விட்டு பார்த்தனான அர்ஜீனனுக்காக காட்சி தந்து அருளியதால் இத்தலத்திற்கு திருப்பார்த்தன்பள்ளி என்பது பெயர்.
இங்குள்ள உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும்.
🌺🌺 இரண்டு தேவியர்களுடன் ராமன் :-
தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணர் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்கப் போகிறார் என்பது இவருக்குத் தெரிந்தது.
தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள நாராயணரை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி, தான் எப்படி இருப்பேன் என்பதை தசதரருக்குக் காட்டினார்.
இரு தேவியரும் இராமாயண காலத்தில் வாழ முடியாது என்பதால், தங்கள் கண் குளிர இராமரைத் தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சி தருவது அதிசயத்திலும் அதிசயம்.
🌺🌺 தலவரலாறு:-
கவுரவர்களிடம் நாடிழந்து வனவாசம் சென்ற போது, அர்ஜீனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அழைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானம் இருப்பதைப் பார்த்தான்.
தியானம் முடிந்து கண் திறக்கும் நேரம் வரை தன்னால் தாகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால், அகத்தியரின் தியானத்தைக் கலைத்து தனக்குத் தண்ணீர் தருமாறு கேட்டான்.
அவரின் அனுமதியுடன் கமண்டலத்தைத் திறந்தான். அதில் ஒரு சொட்டுக் கூட தண்ணீர் இல்லை. கேள்விக்குறியுடன் அகத்தியரின் முகத்தைப் பார்க்க அகத்தியர் அர்ஜீனனிடம்,
"அர்ஜீனா! நீ எப்போது எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணரிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்!" என்றார்.
தன் தவறை உணர்ந்த அர்ஜீனன், "கிருஷ்ணா! கிருஷ்ணா!" என்றழைத்தான். கிருஷ்ணரும் அவன் முன்பு தோன்றி கத்தியைக் கொடுத்து, "இந்தக் கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் கீறினாலும் தண்ணீர் வரும்" என்று கூறி மறைந்தார்.
அர்ஜீனனும் இந்தக் கத்தியால் தரையைக் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தைத் தணித்துக் கொண்டான். இந்த நிகழ்வு நடந்த இடம் "திருப்பார்த்தன்பள்ளி" என்று தலவரலாறு கூறுகிறது.
இத்தலத்தில் பார்த்தனாகிய அர்ஜீனனுக்குத் தனிச் சன்னதி உள்ளது.
🌺🌺 மங்களாசாசனம் :-
திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தை 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
கண்ணனென்றும் காமருசீர்க்
குவளைமேக மன்னமேனி
கொண்டகோனென் னானையென்றும்
தவளமாட நீடுநாங்கைத்
தாமரையாள் கேள்வனென்றும்
பவளவாயா ளென்மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே!!!".
விளக்கம் :-
குவலயாபீடம் என்ற மத யானையின் தந்தங்களை முறித்த கண்ணன். காண்போரைக் கவரும் அழகும் குணமும் உடைய சீராளன். குவளை மலர் போன்றும், மேகம் போன்றும் வண்ணம் கொண்டவன் என் மன்னன் அவன். அவன் யானையைப் போன்றவன், வெண்மையான உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருநாங்கூர் திவ்ய தேசத்தில் அவன் தாமரையாள் கணவன் என்றும், பவழம் போல் சிவந்த வாயை உடைய என்னுடையப் பெண், பார்த்தன்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பாடுவாள்! என்று பாசுரம் பாடியருளியுள்ளார்.
கூடுதல் விளக்கம் :-
திருமங்கை ஆழ்வார், தன்னையே தாயாகவும் மகளாகவும் பாவித்துக் கொண்டு, தன் மகள் பார்த்தன்பள்ளி பெருமானுடைய அருமை பெருமைகளைப் பாடுவதாக அமைந்த பாசுரம்.
பார்த்தன் பள்ளி திவ்ய தேசத்தின் மூலவர் திருநாமம் 'தாமரையாள் கேள்வன்' என்பது சிறப்பு.
🌺🌺 வழித்தடம் :-
சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். திருவெண்காட்டிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் என இரு ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ள அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில் - திருசிதம்பரம் (திருசித்ரகூடம்) திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment