Tuesday, October 27, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 30 திருவண் புருடோத்தமம்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 30 🌹🌹🌹


அருள்மிகு புருடோத்தமன் திருக்கோவில்:-

திருவண்புருடோத்தமம்.
மூலவர்: புருடோத்தமன்
தாயார்: புருடோத்தம நாயகி
உற்சவர்: புருடோத்தமன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சஞ்சீவி விக்ரக விமானம்
தீர்த்தம்: திருப்பாற்கடல் தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பூருஷோத்தம நாயகீ ஸமேத ஸ்ரீ புருஷோத்தமாய நமஹ
ஊர்: திருநாங்கூர்

🌺🌺 திருவண் புருடோத்தமம்:-

ஆதி நாதனான எம்பெருமான் மானிடராக அவதரித்து தர்மத்தை நிலை நாட்டிய ஓர் அற்புத அவதாரம் "இராமவதாரம்" ஆகும். அத்தகைய அவதாரப் புருஷராம் அருள்மிகு இராமபிரான் குடிகொண்டுள்ள தலமாதலால் இத்தலம் "திருவண் புருடோத்தமம்" எனப் பெயர் பெற்றது.

பிரம்மா முதலிய தேவாதி தேவர்களுக்கும் ஏற்படும் துன்பத்தைப் போக்கித் தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தைக் காக்கும் "புருடோத்தமன்" இவரே. வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட தன் அருளை வாரி வழங்குதலால் "வண்புருடோத்தமன்" என்ற திருநாமமும் இவருக்கு உண்டு.

🌺🌺 தலவரலாறு :-

வியாக்ரபாதர் என்ற முனிவர், தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோவிலின் நந்தவனத்தின் வாசலில் அமர வைத்து விட்டு பூப்பறிக்கச் செல்கிறார்.

குழந்தை தந்தையைக் காணாததால் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கே கேட்டது. உடனே, பரந்தாமனே நேரில் வந்து அழுகையை நிறுத்தியதோடு, இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி அமுது படைத்தாள். வியாக்ரபாதர் வரும் வரை அவனோடு பரந்தாமன் விளையாடியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

🌺🌺 மங்களாசாசனம் :-

திருமங்கையாழ்வார் அயோத்தி ராமராக மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம்.


"கம்பமாகடல் அடைத்து இலங்கைக்கு
மன்கதிர் முடியவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசுஅவன் தம்பிக்கு
அளித்தவன் உறை கோவில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி
சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாம் கமுக ஓங்கிய நாங்கூர்
வண்புரு டோத்தம மே!"

- திருமங்கையாழ்வார்.

🌺🌺 சிறப்புகள் :-

அயோத்ததி இராமராக எண்ணி ஆழ்வார் பாடியுள்ளதால் இத்தல இறைவன் "புருடோத்தமன்" என்ற திருநாமம் பெற்றார்.

திருமகள் தாயார் புருடோத்தம நாயகி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

திருநாங்கூரில் நடைபெறும் புகழ் பெற்ற 11 திருத்தல கருடசேவைக்கு இத்தல பெருமாளும் எழுந்தருள்வார்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

அருள்மிகு புருடோத்தமன் பெருமாள் திருவடிகளே சரணம்.

அருள்மிகு புருடோத்தம நாயகி திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு பேரருளாளன் திருக்கோவில் - திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்) திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:"

No comments:

Post a Comment