Tuesday, October 27, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 29 அரிமேய விண்ணகரம்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 29 🌹🌹🌹

அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோவில் :-

திருஅரிமேய விண்ணகரம்.

மூலவர்: குடமாடு கூத்தன்

தாயார்: அம்ருத கடவல்லி
உற்சவர்: கோபாலன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: உச்சஸ்ருங்க விமானம்
தீர்த்தம்: கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அமிர்த கடவல்லி ஸமேத ஸ்ரீ குடமாடு கூத்தன் சுவாமியே நமஹ
ஊர்: திருநாங்கூர்

🌺🌺 அரிமேய விண்ணகரம்:-

பரந்தாமனாகிய இறைவன் நாராயணனின் பெருமைகளைக் கூறுகின்ற புராணங்கள் ஏராளம். அதில் ஒன்றான பத்ம புராணத்தில் இத்தலத்தின் பெருமையை அகத்திய மாமுனிவர், "உபரிசரவசு" மன்னனுக்கு எடுத்துரைப்பது போன்று அமைந்துள்ளது.

அதில் விண்ணுலகத்து தேவர்களும் அறிய முடியாத வகையில் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவிலைப் பற்றி அகத்தியர் குறிப்பிடுகிறார்.

இதன் காரணமாகவே "அரிமேய விண்ணகரம்" எனும் திருநாமம் இத்தலத்திற்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

🌺🌺 மூலவர் :-

மூலவர் குடமாடுகூத்தன் வீற்றிருந்த திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார். அவரது காலடியில் ஒரு பானை! வெண்ணெய்ப் பானை. மூலவர் சுதைச் சிற்பம் என்பதால் அபிஷேகம் கிடையாது. தைலக்காப்பு மட்டும் தான்.


🌺🌺 தலவரலாறு :-

அக்காலத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளாகத் தமிழைப் பிரித்தனர். அதில் நாடகத்தை மையமாகக் கொண்ட நடனக்கலை சிறப்பான முறையில் வளர்க்கப்பட்டு வந்தது.

பகவான் கண்ணன் அவதரித்த ஆயர்பாடியில் குடங்கள் வைத்து நடனமாடும் "குடமாடும் கூத்து நடனம்" மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

உதங்கர் என்ற முனிவர் வைதர் என்பவரை குருவாக ஏற்று வேதங்களைக் கற்றார்.

வேதங்களைக் கற்ற பின் குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பிய உதங்கர், குருவிடம் தங்களுக்கு தான் தட்சணை அளிக்க விரும்புவதாகக் கூறினார்.

குருவினுடைய மனைவி உதங்கரிடம் தனக்கு அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணியும் குண்டலம் வேண்டும் என்று கூறினார்.

உதங்கரும் மகாராணியிடம் சென்று "குருவின் மனைவிக்கு தாங்கள் அணிந்திருக்கும் குண்டலங்கள் வேண்டும்" என்று கேட்க, மகாராணியும் உதங்கரை நம்பி தன்னுடைய குண்டலங்களைக் கொடுத்தார்.

வரும் வழியில் பசியும், தாகமும் அதிகமானது. அப்போது சிறுவனான இடையன் ஒருவன் தலையில் வைத்திருந்த குடத்துடன் ஆடிக்கொண்டும், பாடிக் கொண்டும் தென்பட்டான்.

உதங்கர் குடத்தில் வெண்ணையோ, தயிரோ இருக்கும் என்று நினைத்து, எனக்குக் கொஞ்சம் குடத்திலிருப்பதைக் கொடு எனறு கேட்டார். அதற்கு இடையன், குடத்தில் மாட்டுச்சாணமும் கோமியமும்தான் இருக்கிறது என்றான்.

வரும் வழியில் ஒரு குருகுலத்துலே இருந்த குருவுக்கும் இதைக் கொடுத்ததாகவும், அவர் இதை அருவருப்பில்லாமல் உண்டதாகவும் கூறினான்.

குருவே உண்டார் எனில், இது குரு பிரசாதம் தான் எனக்குக் கொடு, நான் சாப்பிடுகிறேன் என்று இடையனிடம் கேட்டு வாங்கி சாப்பிட்டார் உதங்கர்.

சாப்பிடும் போது குண்டலத்தை கீழே வைக்க, தட்சன் ஒருவன் அதை எடுத்துக் கொண்டு, புற்றிற்குள் ஒளிந்து கொண்டான்.

உதங்கரும் எப்படிக் குண்டலத்தை மீட்கலாம் என்று இடையனிடம் கேட்க, அதோ அங்கே குதிரையில் வரும் நபரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று கூறுகிறான்.

குதிரைக்காரரிடம் விசயத்தைச் சொல்லி, தட்சன் ஒளிந்திருக்கும் புற்றைக் காட்டினர். குதிரை கனைத்ததும் அதன் வாயில் இருந்து தீ புறப்பட்டு புற்றுக்குள் பரவியது. அனல் தாங்காத தக்ஷகன் வெளியே வந்து கமண்டலத்தைத் திருப்பித்தந்தான்.

இடையனுக்கும், குதிரைக்காரருக்கும் நன்றி சொல்லிட்டு, குருகுலத்துக்கு வந்து சேர்ந்த உதங்கர் குருபத்னியிடம், குண்டலங்களை சமர்ப்பிக்கிறார். குருவிடம் நடந்த கதைகளைச் சொல்கிறார்.

உன்னை சோதிக்கவே இதெல்லாம் நடந்தது. குடத்துடன் ஆடிப்பாடி வந்தவன் "சாக்ஷாத் பரம்பொருள், ஆபத்பாந்தவன், எம்பெருமான் இறைவனே". குடத்தில் இருந்தது சாணியும் இல்லை, கோமியமும் இல்லை, அது அமிர்தம்.

இதை நீ சாப்பிட்டதால் தான் அந்தப் பகுதியின் விஷக் காற்றில் இருந்தும், தீயின் உஷ்ணத்தில் இருந்தும் தப்ப முடிந்தது.

குதிரைக்காரனாக வந்தவன் இந்திரன். குதிரையா வந்தது அக்னி. உன்னுடைய குருபக்தியைக் கண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சி என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார். இதே உதங்கர், பிரபை என்னும் மங்கையை மணந்து தர்மம் அனுசரித்து வாழ்ந்துவந்தார்.

🌺🌺 மங்களாசாசனம் :-

"திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத்

தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம்-பெரும் புகழ் வேதியர் வாழ்-
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே."

- திருமங்கையாழ்வார்.

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அருள்மிகு குடமாடும் கூத்தன் திருவடிகளே சரணம்.

அருள்மிகு அம்ருத கடவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு புருடோத்தமன் திருக்கோவில் - திருவண்புருடோத்தமம் திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:"

No comments:

Post a Comment