Wednesday, October 28, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 34 திருவாலி திருநகரி

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 34 🌹🌹🌹

அருள்மிகு அழகியசிங்கர், வயலாளி மணவாளன் திருக்கோவில்:-

திருவாலி திருநகரி.

இரண்டு தலங்களைக் கொண்ட திவ்யதேசம் இதுவாகும்.திருவாலி தனியாகவும், திருநகரி தனியாகவும் 04 கி.மீ தொலைவில் இருந்தாலும் ஒரே திவ்யதேசமாகக் கருதப்படுகிறது.

🌺🌺 திருவாலி - முதல் தலம்:-

மூலவர்: லட்சுமி நரசிம்மர், அழகிய சிங்கர்.
தாயார்: பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
உற்சவர்: திருவாலி திருநகராளன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: அட்டாச்சர விமானம்
தீர்த்தம்: இலாட்சன புட்கரணி
மங்களாசாசனம்: குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அம்ருத கடவல்லீ ஸமேத வயலாளி மணவாளன் ஸ்வாமிநே நமஹ!!!

ஊர்: திருவாலி திருநகரி

🌺🌺 அழகியசிங்கர் பெயர்க் காரணம் :-

நாளும் நலமளிக்கும் நாதனான இறைவன் நாராயணன் வையகத்தை வாழ்விக்க பத்து அவதாரங்களை எடுத்தார்.

அத்தகைய பத்து அவதாரங்களில் தன்னகரில்லா தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் அவதாரம் "நரசிம்ம அவதாரம்".

சாந்த சொரூபியயயாகத் திகழும் இறைவன் உக்கிர மூர்த்தியாக அவதரித்து அவனி(உலககம்)யையே நடுநடுங்கச் செய்தார்.

அத்தகைய நரசிம்மர் சுவாமியைப் பாடாத ஆழ்வார்களே இல்லை என்றே கூறலாம். அத்தகைய நரசிம்ம மூர்த்தி சாதாரண ஒரு மனிதரையும் ஆழ்வாராக உருவாக்கி அழகு சேர்த்தவர் என்பதால் இத்தல இறைவனுக்கு "அழகியசிங்கர்" என்பது திருநாமம்.

பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, இரண்யனை வதம்செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இந்த சீற்றத்தைக் கண்ட தேவர்களும், ரிஷிகளும் பயந்து பூலோகம் மேலும் அழியாமல் இருக்க காக்கப்படவேண்டும் என்று லட்சுமிதேவியை வேண்டினர்.

இவர்களது வேண்டுதலை ஏற்ற தாயார் பெருமாளின் வலதுதொடையில் வந்தமர்ந்தாள். அப்போது பெருமாள் தேவியை ஆலிங்கனம் செய்துக்கொண்டார். எனவே, இவ்வூர் "திருஆலிங்கனம்" எனப்பெயர் பெற்றது.

திரு ஆகிய லட்சுமி தேவியை ஆலிங்கனம் செய்தலால் திருவாலி என்றானது. இத்தலத்தின் பெருமாளை "குலசேகராழ்வார்" வந்து மங்களாசாசனம் செய்துள்ளார்.

இந்த பகுதியில் ஆலிநாடு "திருமங்கையாழ்வார்" குறுநில மன்னனாகத் திகழ்ந்தார். எனவே, அவருக்கு "ஆலிநாடன்" என்ற பெயர் ஏற்பட்டது.

🌺🌺 திருமங்கையாழ்வார் :-

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் திருஅவதாரத் திருத்தலம் இதுவாகும். திருமங்கை மன்னர், ஆலிநாட்டைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டிற்கு கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர், என்று கூறப்படுகிறது.

இதனால், இவருக்கு "ஆலிநாடன்" என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இருப்பினும் திருவாலி முதல் அவர் பிறந்த குறையலூர் வரை திருமங்கை மன்னர் பிறந்து வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சுவடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும், ஆழ்வார் காரணமாகவே திருவாலி எனப் பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

திருமங்கையாழ்வாருக்கு இறைவன் காட்சி தந்த தலமாகக் கூறப்படுகிறது.

🌺🌺 தலபெருமை :-

இந்த திருத்தலம் பத்ரிகாசிரமத்திற்கு திருத்தலத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்தயிடமானதால், இத்தலம் "பத்ரி"க்கு இணையானது.

இங்கு லட்சுமி தேவி தாயாருடன் நம் பெருமாள் நரசிம்மர் கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "நரசிம்மஷேத்திரம்" என்கிற பெயருண்டு. இந்த திருவாலியைத் தரிசிப்பதால் இங்கே "பஞ்சநரசிம்ம" தலங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

🌺🌺 வேடுபறி உற்சவம் :-

திருமங்கையாழ்வார்க்கு விரைவில் அருள்பாலிக்கவேண்டும் என்று லட்சுமிதேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். இந்த நரசிம்மர் அருளியப்படி லகட்சுமி தேவி இத்தலத்திற்கு வந்து தவம் செய்து கொண்டிருக்கும் பூர்ணமகரிஷியின் மகளாக பிறந்தாள். இந்த பெண் பெருமாளை திருமணம் செய்து, திருவாலி அருகே "தேவராஜபுரம்" என்ற இடத்திற்கு வரும்போது திருமங்கைமன்னன் வழிமறித்து, வழிப்பறி செய்ய நரசிம்மர் திருமங்கைமன்னனின் காதில் "அஷ்டாட்சரம்" மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.

திருமங்கையாழ்வார் வரலாற்றை நினைவு கூறும் விதமாக, இன்றளவும் இத்தலத்தில் வேடுபறி உற்சவம் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

பங்குனி உத்திரத்திற்கு முதல்நாள் வயலாளி மணவாளப் பெருமாள், தாயாருடன் திருநகரியிலிருந்து புறப்பட்டு வந்து திருவாலியில் எழுந்தருள்வார்.

அன்று திருக்கல்யாணம் நடைபெறும். இரவு திருமங்கை மன்னன் வேடுபறி, பெருமாள் உபதேசம் ஆகியவை நடைபெறும். பின்பு ஆழ்வார் பெருமாளோடு திருவீதியுலா வருவார்.

இந்த திருத்தலத்தில் திருமங்கை மன்னன் வழிப்பறி செய்த மண்டபத்தை இன்றும் காணலாம்.


🌹🌹 அருள்மிகு வயலாளி மணவாளன் திருக்கோவில் :-

மூலவர்: தேவராஜன்
தாயார்: அம்ருதகடவல்லி
உற்சவர்: வயலாளி மணவாளன், கல்யாண ரங்கநாதர்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: அட்டாச்சர விமானம்
தீர்த்தம்: இலாட்சன புட்கரணி
மங்களாசாசனம்: குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அம்ருதகடவல்லீ ஸமேத ஸ்ரீ வயலாளி மணவாளன் ஸ்வாமிநே நமஹ

ஊர்: திருநகரி


🌺🌺 தலவரலாறு :-

உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரம்மாவை நாபியின் வழியாக படைத்த இறைவன் நாராயணனின் திருவடியை அடைந்த ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.

அத்தகைய ஆழ்வார்களில் ஒருவரான திருஅவதாரம் செய்த திருத்தலம் இதுவாகும்.

அத்தகைய ஆழ்வார் முற்பிறவியில் செய்தை புண்ணியப்பலன் காரணமாக இத்தலம் உருவானதாக தலவரலாறு கூறுகிறது.

பிரம்மாவின் புத்திரனான கர்த்தம பிரஜாபதி என்பவர் பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடுந்தவம் செய்தான்.

அவனது தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் காட்சி தந்து அருளினார். அப்போது, தான் யுகந்தோறும் பிறக்க விரும்புவதாகவும்,

இறைவன் பெயரால் பல நற்காரியங்களைச் செய்ய முற்படுவதாகவும் வரம் பெற்றார்.

இதன் காரணமாகவே, திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவசு மன்னனாகப் பிறந்தான்.

கலியுகத்தில் நீலன் என்ற பெயரில்ஒரு படைத்தலைவனின் மகனாகப் பிறந்தான். அவனே திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்து கொண்ட திருமங்கையாழ்வார் ஆவார்.

🌺🌺 சிறப்புகள் :-

இரண்டு தலங்களைக் கொண்ட திவ்யதேசம்.

திருமங்கையாழ்வாருக்காக இறைவன் திருமந்திரத்தைத் தானே உபதேசம் செய்த தலம்.

திருமங்கையாழ்வார் திருஅவதாரத் திருத்தலம்.

திருமங்கையாழ்வார் - 41, குலசேகராழ்வார் - 1, என மொத்தம் 42 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

திருவாலி திவ்யதேசம் சீர்காழி - பூம்புகார் சாலையில் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருவடிகளே சரணம்.

அருள்மிகு பூரணவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

அருள்மிகு வயலாளி மணவாளன் திருவடிகளே சரணம்.

அருள்மிகு அமிர்தவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோவில் - திருத்தேவனார்த் தொகை (திருநாங்கூர்) திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!

No comments:

Post a Comment