Sunday, October 4, 2020

108 திவ்யதேசம் - பதிவு 16 பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் திருக்கண்ணமங்கை

 🌺🌺 108 திவ்யதேசம் - பதிவு 16 🌺🌺

முப்பத்து முக்கோடி தேவர்களும், பெருமாள் மற்றும் தாயாரின் திருமணத்தைக் காண வருகை புரிந்த தலம்.

அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் :-

திருக்கண்ணமங்கை
மூலவர்: பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள்
தாயார்: அபிசேகவல்லி
உற்சவர்: பெரும் புறக்கடல்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: உத்பல விமானம்
தீர்த்தம்: தர்சன புட்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அபிஷேகவல்லீ ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலாய நமஹ
ஊர்: திருக்கண்ணமங்கை


🌺🌺 திருக்கண்ணமங்கை :-

பாற்கடலில் வீற்றிருக்கும் இறைவன் நாராயணன், திருமகளாம் இறைவி லட்சுமி பிராட்டியை, இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. திருமாலாம் கண்ணபரமாத்மா, மங்கையாம் திருமகளை மணந்து கொண்ட தலமாதலால் இத்தலத்திற்கு "திருக்கண்ணமங்கை" என்பது பெயர். மேலும், இத்தலத்திற்கு லட்சுமிவனம் என்ற பெயரும் உள்ளது.

🌺🌺 தலவரலாறு :-

பாற்கடலைக் கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள்.

அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார்.

பின்னர், மஹாலக்ஷ்மிக்கு காட்சி தந்து பிறகு முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ, "மஹாலக்ஷ்மி"யை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்" என்கிற திருநாமம் ஏற்பட்டது. இங்கு "மஹாலக்ஷ்மி" தவம் புரிந்ததால் இத்தலத்திற்கு "லக்ஷ்மிவனம்" என்ற பெயரும் உண்டு.

தேவர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களின் வேண்டுதளுக்கிணங்கி மகாலக்ஷ்மியை மணம் புரிந்தார். பக்தியின் அடையாளமாக வாசம் செய்த இறைவனாதலால், இத்தல இறைவனுக்குப் "பக்தவத்சலப் பெருமாள்" என்பது திருநாமம்.

🌺🌺 திருக்கண்ணமங்கை ஆண்டான் :-

இவ்வூரில் பிறந்து பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர் திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற பக்தர் ஆவார். அவர் இக்கோவிலை சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஆழ்வார் பெருமக்கள் பாடிய அமுத மொழியான நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு, பின்னாளில் சீடர் ஆனார்.

தொண்டுள்ளத்தோடும், மிகுந்த பக்தியோடும் இருந்த அவர், ஒருநாள் இத்தல இறைவனுடன் கலந்தார். இதை நினைவு கூறும் விதமாக, இன்றும் ஆனி திருவோண நட்சத்திரம் இவரின் திரு அவதார நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்திலேயே வாழ்ந்ததால் இத்தலப் பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.

🌺🌺 சிறப்புகள் :-

திவ்யப் பிரபந்தத்தை தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் "திருக்கண்ணமங்கை ஆண்டான்" வாழ்ந்த திவ்யதேசம். திருமகள் கண்ணமங்கை நாயகி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

🌺🌺 மங்களாசாசனம் :-

திருமங்கையாழ்வாரால் 14 பாசுரங்கள் பாடப்பட்ட திவ்யதேசம் இது.

பண்ணினைப் பண்ணில் நின்றதோர்

பான்மையைப் பாலுள் நெய்யினை
மாலுருவாய் நின்ற விண்ணினை
விளங்கும் சுடர்ச் சோதியை
வேள்வியை விளக்கினொளி தன்னை
மண்ணினை மலையை யலை
நீரினை மாலை மாமதியை
மறையோர் தங்கள் கண்ணினைக்
கண்களாரளவும் நின்று கண்ண
மங்கையுள் கண்டு கொண்டேன்.

- திருமங்கையாழ்வார்.

🌺🌺 தலபெருமை:-

ஒரு ஸ்தலம் பெற்றிருக்கவேண்டிய "விமானம்", "ஆரண்யம்", "மண்டபம்","தீர்த்தம்", "ஷேத்திரம்", "நதி", "நகரம்" ஆகிய "ஏழுலட்சணங்களும்" அமைய பெற்றதால், இத்தலம் "ஸப்தபுண்ணியஷேத்திரம்" அதாவது "ஸப்தாம்ருதஷேத்ரம்" எனப்பெயர் பெற்றது.

இத்தலத்தில் நடந்த "திருமால்,திருமகள்" திருமணத்தைக்காண "தேவர்கள்" கூட்டம்கூட்டமாய் வந்து குவிந்ததோடு, எப்போதும் இத்திருக்கோலத்தை கண்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள்.

அதனால் "தேன் ஈக்கள்" வடிவெடுத்து கூடுக்கட்டி அதில் இருந்துக்கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள். இந்த தேன்கூட்டில் ஒன்று இன்னும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் இருக்கிறது.

இது எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது, இந்த "தேன் ஈக்கள்" பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. இங்கு "மோட்சம்" வேண்டுபவர்கள் ஓர் இரவு மட்டும் தங்கினால் போதும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இத்தல இறைவன் பக்தர்களுக்கு ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், இது பக்தர் ஆவியென்றாகி "பத்தராவி" என பெருமாள் பெயர் பெற்றார்.

"சிவன்" நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். இந்த "விஷ்வக்சேனர்" பொதுவாக நான்கு திருக்கரங்களுடன் இருப்பார், ஆனால் பெருமாளின் சார்பாக "மஹாலக்ஷ்மி"யை சந்திக்க சென்றதால், இங்கு இரண்டு கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.

அந்த காலத்தில் "மஹாவிஷ்ணு" ஒரு மன்னனின் அகந்தையை அழிக்க "வாமன"அவதாரம் எடுத்தப்போது, அவர் வானத்தை அளந்த காலை "பிரம்மன்" தன்னுடைய "கமண்டல" நீரால் அபிஷேகம் செய்தார், அதிலிருந்து தெரித்து விழுந்த ஒருதுளியானது இத்தலத்தில் விழுந்தது, அதுவே "தர்ஷனபுஷ்கரணி" ஆனது.

ஒருசமயம் "இந்திரன்" தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது, இந்த "புஷ்கரணி"யை கண்டார், இதை பார்த்த உடனேயே அவனது சாபம் நீங்கியது. எனவே தான் இதற்கு "தர்ஷனபுஷ்கரணி" என்ற பெயர் ஏற்பட்டது (அதாவது தரிசித்த மாத்திரத்தில் பயன்தர வல்லது).

🌺🌺 வழித்தடம் :-

திருவாரூர் - கும்பகோணம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் திருவடிகளே சரணம்.

அருள்மிகு அபிசேகவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு சௌரிராஜப் பெருமாள் திருக்கோவில் - திருக்கண்ணபுரம் திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment