🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 21 🌹🌹
சிவபெருமானின் வாகனமான "நந்திதேவர்" பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தரும் திவ்யதேசம். சந்திரனுக்கு தோஷம் விலகிய தலம். பெருமாள் மேற்கு திசை நோக்கி காட்சி தரும் திவ்யதேசம்.
திருநாதன் கோவில் என்ற திருநந்திபுர விண்ணகரம்.
மூலவர்: ஜெகந்நாதன், நாதநாதன், விண்ணகரப் பெருமாள், யோக சீனிவாசன்
தாயார்: செண்பகவல்லி
உற்சவர்: ஜெகந்நாதன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: மந்தார விமானம்
தீர்த்தம்: நந்தி தீர்த்த புட்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ செண்பகவல்லீ ஸமேத ஸ்ரீ விண்ணகரஜகந்நாதா ய நமஹ
ஊர்: நாதன்கோவில்
🌺🌺 மகாலட்சுமியின் ஆசை:-
திருப்பாற்கடலில் எப்பொழுதும் மகாலட்சுமி, மஹாவிஷ்ணுவின் பாதத்தின் அருகே அமர்ந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென மஹாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசைவந்தது.
எனவே "செண்பகாரண்யம்" என்கிற இத்தலத்திற்கு வந்து தவத்தை இயற்றினார். பெருமாள் மகாலட்சுமியின் பிரிவை தாங்காமல், ஐப்பசி மாதம் வளர்பிறையில் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் திருமகளை தன்னுடைய "திருமார்பில்" ஏற்றுக்கொண்டார் என்பது ஐதீகம்.
இத்தல பெருமாள் கையில் வாள், வில், சங்கு, சக்கரம் மற்றும் தண்டாயுதம் முதலான ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்தார்.
பின்னர் மகாலட்சுமியை மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.
🌺🌺 சைவ, வைணவ ஒற்றுமை :-
சைவ,வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் மூலஸ்தான கோபுரத்தில் நந்திதேவரும், பிரம்மனும் வணங்கிய நிலையில் உள்ளனர்.
இத்திருக்கோவில் சோழர்களால் கட்டப்பட்ட திருத்தலமாகும். இங்கு பெருமாள் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
🌺🌺 தலபெருமை
🌺🌺 பெயர்க் காரணம் :-
இத்திருக்கோவிலில் பெருமாள் கிழக்கு நோக்கி தவமியற்றிய திருமகளாகிய மகாலட்சுமியை ஏற்றுக் கொண்டதால், இங்குள்ள பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
அந்தக் காலத்தில் செண்பகாரண்யம் என்ற இந்தத் தலத்தில் மகாலட்சுமி தவம் புரிந்ததால், இத்தல தாயாரின் திருநாமம் "செண்பகவல்லி" என்று ஆனது.
இங்குள்ள பெருமாளின் திருநாமம் "ஜெகந்நாதன்". இவரின் திருநாமத்திலேயே இவ்வூர் "நாதன்கோயில்" என்றானது.
🌺🌺 நந்தியின் சாபம் :-
ஒருசமயம் சிவபெருமானின் வாகனமான நந்திதேவர் பெருமாளை தரிசிக்க"வைகுண்டம்" சென்றிருந்தார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, யாரையும் கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால், அவர்கள் கோபம் கொண்டு, "எங்களை அவமதித்தால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்" என்று சாபமிட்டனர்.
இவர் உடனே நடந்த விஷயத்தை சிவபெருமானிடம் கூறினார். அதற்கு அவர், "பூமியில் திருமகள் தவம் புரிந்து கொண்டு இருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து, உன்னுடைய சாபவிமோசனம் பெறுவாய்" என்று கூறினார்.
அவரும் அந்த இடத்திற்கு வந்து தவம் இயற்றினார், இவருடைய தவத்தினால் மனம் மகிழ்ந்த பெருமாள், நந்திதேவருக்கு சாபவிமோசனம் தந்தார்.
ஜகந்நாதப் பெருமாள் நந்தியிடம், தன்னை காணும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியாகிய உன்னுடைய பெயராலே "நந்திபுரவிண்ணகரம்" என்று தன்னுடைய இத்திருத்தலம் அழைக்கப்படும் என்று அருள்பாலித்தார்.
🌺🌺 சந்திர தோஷம் :-
ஒருசமயம் விஜயரங்கச் சொக்கப்ப நாயக்கர் என்ற மன்னனின் தாயார் சந்திர தோஷத்தினால் தீராத நோயினால் அவதிப்பட்டார். அவர் எல்லா கோவில்களுக்குச் சென்றும் பலன் அளிக்காததால், இந்த திருத்தலம் வந்து இறைவனை வேண்டினார்.
இந்த ஜகந்நாதப் பெருமாளின் அருளால் தன்னுடைய அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கோயிலுக்கு கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தான்.
இதனால், பெருமாளின் நவக்கிரகத் தலங்களில் சந்திரன் தலமாக விளங்கும் திவ்யதேசம் இத்திருத்தலமாகும்.
🌺🌺 மங்களாசாசனம் :-
- திருமங்கையாழ்வார்.
அருள்மிகு ஜெகந்நாதப் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு செண்பகவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு கோலவில்லிராமர் திருக்கோவில் - திருவெள்ளியங்குடி திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:".
No comments:
Post a Comment