Monday, October 12, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 20 தஞ்சை மாமணிக்கோவில்

 🌺🌺 108 திவ்யதேசங்கள் - பதிவு 20 🌺🌺


மூன்று திருத்தலங்களை ஒருங்கே கொண்டுள்ள திவ்யதேசம் திருத்தஞ்சை மாமணிக்கோவிலாகும்.


🌺🌺 முதல் தலம்:-

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோவில்: -

திருத்தஞ்சை மாமணிக்கோவில்
மூலவர்: நீலமேகப் பெருமாள்
தாயார்: செங்கமலவல்லி
உற்சவர்: ஸ்ரீமன் நாராயணன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சௌந்தர்ய விமானம்
தீர்த்தம்: அம்ருத தீர்த்தம், வெண்ணாறு, கன்னிகா புட்கரணி

மங்களாசாசனம்: பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ நீலமேக ஸ்வாமிநே நமஹ

ஊர்: தஞ்சாவூர்

🌺🌺 அமைப்பு:-

இங்கு மூன்று திருக்கோவில்களும் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இம்மூன்று திருக்கோவில்களுக்கும் அர்ச்சகர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஒரு கோவிலுக்குச் சென்று அங்கிருந்து அர்ச்சகரை அழைத்துச் சென்று தான் மற்ற இரு தலங்களையும் சேவிக்க வேண்டும்.

இத்தலத்தில் இரண்டு பிராட்டியார்களோடும், பராசர முனிவரோடும் மிகப்பெரிய திருமேனியாகக் காட்சி தந்து அருள்கிறார். மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்யதேசம்.

🌺🌺 மங்களாசாசனம் :-

மூன்று ஆழ்வார்களில் காலத்தால் முன் தோன்றியவரான பூதத்தாழ்வார் தஞ்சை என்ற பெயரில் மங்களாசாசனம் செய்கிறார்.

"தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளும் தண்பொருப்பு வேலை - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே
ஏவல்ல வெந்தைக் கிடம்!".

🌺🌺 மணிக்குன்றம் :-

மூன்று கோவில்களைக் கொண்ட திவ்யதேசத்தின் இரண்டாவது தலம் "மணிக்குன்றம்".

மூலவர்: மணிக்குன்றப் பெருமாள்

தாயார்: அம்புஜவல்லி
உற்சவர்: ஸ்ரீமன் நாராயணன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: மணிக்கூட விமானம்
தீர்த்தம்: ஸ்ரீராம தீர்த்தம்

மங்களாசாசனம்: பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீசெங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ நீலமேக ஸ்வாமிநே நமஹ

ஊர்: தஞ்சாவூர்

🌺🌺 மங்களாசாசனம் :-

இத்தல இறைவனுக்கு "மணிக்குன்றப் பெருமாள்" என்பது திருநாமம். இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.

மாசறு சோதி என்செய்ய வாய்
மணிக்குன்றத்தை
இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆசறு சீலனை ஆதிமூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்தெனை நாளையம்?
ஏசறு மூரவர்கவ்வை தோழீ! என்செய்யுமே?


🌺🌺 தஞ்சையாளி நகர் :-

மூன்று திருக்கோவிலைக் கொண்டுள்ள இந்த திவ்யதேசத்தில் மூன்றாவது தலம் "தஞ்சையாளி நகர்".


மூலவர்: நரசிம்மன்
தாயார்: தஞ்சை நாயகி
உற்சவர்: ஸ்ரீமன் நாராயணன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: வேதசுந்தர விமானம்
தீர்த்தம்: ஸ்ரீராம தீர்த்தம், சூரியபுட்கரணி

மங்களாசாசனம்: பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்

நாமாவளி: ஸ்ரீசெங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ நீலமேக ஸ்வாமிநே நமஹ

ஊர்: தஞ்சாவூர்

🌺🌺 அமைப்பு :-

இம்மூன்று தலங்களின் மூலவர் மூர்த்தியும், தஞ்சை மாநகரத்தை பார்த்தவாறு காட்சி தந்து அருளுவதால் "தஞ்சையைக் காத்தருளும் தெய்வம்" எனப் போற்றப்படுன்றனர்.


🌺🌺 மங்களாசாசனம் :-

இங்கு இறுதியாக வந்த திருமங்கையாழ்வார், தஞ்சையாளி நகர், மணிக்குன்றம் ஆகிய இரு தலங்களையும் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.

என்செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு
என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்த்
தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்
அன்று இடந்தவனை தழலே புரை
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக்குன்றினை
அன்று என் மனம் போற்றி என்னாதே!.


🌺🌺 தலவரலாறு :-

எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம்
எனக்கர சென்னுடை வானாள்
அம்பினா லரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுந்தவெம் மண்ணல்
வம்புலாஞ் சோலைமாமதில் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்!.


- திருமங்கையாழ்வார்.

வம்புலாஞ் சோலை மாமதில் சூழ், தஞ்சை மாமணிக் கோயிலில் உள்ள எம்பிரான் தான் எனக்குத் தந்தை. அவனே, என்னுடைய சுற்றம், எனக்கு அரசு, என்னுடைய வாழ்நாளும் அவன்தான்.

அரக்க குலத்தை அம்பால் அறுத்துக் குவித்த என் அண்ணலாகிய எம்பிரானின் நாமமாகிய "நாராயணா" என்னும் நாமமே நான் கடைத்தேறக் கண்டு கொண்ட நாமம் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம். தஞ்சை நகரைத் தாண்டியதும் அமைந்துள்ள "வெண்ணாற்றங்கரை" மீது அமைந்துள்ளது.

🌺🌺 தஞ்சாவூர் பெயர்க் காரணம் :-

இத்தலம் பற்றியும், இந்நகர் பற்றியும் "பிரம்மாண்ட புராணம்" விளக்குகிறது.

திரேதாயுகத்தில் மது என்னும் அரசனது மரபில் "தஞ்சகன், தண்டகன், கஜமுகன்" என்னும் அசுரர் மூவர் பிறந்து சிவ பெருமானைக் குறித்துக் கடுந்தவம் செய்ய, சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி என்ன வரவேண்டுமெனக் கேட்க அதற்கு மூவரும் சாகா வரம் வேண்டுமென்று கேட்டனர்.

சாகா வரமளிக்கும் வல்லமை "திருமால்" ஒருவருக்கே உண்டு என்றும், என்னால் உங்கள் மூவருக்கும் மரணமில்லை என்றும் சிவபெருமான் அருளி மறைந்தார்.

இதனால், இம்மூவரும் மிகவும் செருக்குற்று இந்திரலோகத்தையும் அச்சுறுத்தி, முனிவர்களின் தவத்தையும் சிதைத்து கொடுமைகள் புரிந்துவந்தனர்.

அப்போது "பராசுரர்" என்னும் முனிவர் இவ்விடத்தில் தவம் செய்து வந்தார். அப்போது நாடெங்கும் கடும் பஞ்சம் உண்டாகி குடிப்பதற்கும் நீரின்றிப் போனது. ஆனால், பராசர முனிவர் தவமிருக்கும் இடத்திற்கு அருகில் மட்டும் ஒரு சுனையில் "நன்னீர்" இருந்தது. இம்மூவரும் வந்து அந்த தண்ணீரைப் பருகிக் கொண்டு அவ்வனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் பராசரரின் தவத்தைக் கண்டதும் அவரைத் துன்புறுத்தி அழிக்கலாயினர்.

பராசரர் ஹரி, ஹரி என்று அரியை அழைக்க, பக்தருக்கு இரங்கும் பரந்தாமன் தனது வாகனமான கருடனை அனுப்ப அம்மூவருக்குத் துணை நின்ற அரக்கர்களையெல்லாம் கருடன் அழித்துவிட அம்மூவர் மட்டும் எஞ்சி நின்றனர்.

இந்நிலையைக் கண்ட எம்பெருமான் தானே நேரில் வந்து "தஞ்சகன்" என்னும் அரக்கனை தனது சக்ராயுதத்தால் தலையைச் சீவினார்.

தவறுணர்ந்த தஞ்சகன் தன்னை மன்னிக்குமாறு வேண்டி தன் பெயரிலேயே இந்நகரம் திகழவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான். எனவே, தஞ்சகனூராகி, பின்பு தஞ்சகூராகி, இறுதியில் "தஞ்சாவூர்" என்றானது.

🌺 தஞ்சையாளி பெயர்க் காரணம்:-

தஞ்சகனின் மரணத்தைக் கண்ட "கஜமுகன்" என்னும் அரக்கன் யானை வடிவம் கொண்டு திருமாலைத் தாக்க அவர் நரசிம்ம ரூபமெடுத்து அவனைக் கொல்ல இறக்கும் தருவாயில் தனக்குத் திருநாடு வேண்டுமெனக் கேட்க அவனுக்கும் திருநாடருளினார்.

பெருமாள் இந்த தஞ்சையில் யாளியாகிய நரசிம்ம ரூபத்தில் நின்றதால் "தஞ்சையாளி" என்றே பெயராயிற்று.

🌺🌺 தாண்டகாரண்யம் :-

தன்னுடைய இரண்டு சகோதரர்களும் மாண்டுவிட்டதைக் கண்ட "தண்டகாசுரன்" மிக்க சினத்துடன் திருமாலுடன் மோதி பாதாளத்திற்குள் புகுந்து மறைந்து கொண்டான்.

திருமால் உடனே, வராக உருவங்கொண்டு பூமியைக் கீண்டு அவனைப் பின் தொடர்ந்து சென்று தன் முகக் கோட்டால் அவனது தலையைக் கிழித்து எறிந்தார்.

அவனும் தனது இறுதிக் காலம் வந்து விட்டதை எண்ணி எம்பெருமானின் பாதங்களில் வீழ்ந்து இவ்விடமும் தன் பெயரால் வழங்கப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்ள அவ்வனம் “தண்டகாரண்யம்” ஆயிற்று.

அதன் நடுவே திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) என்னும் திவ்ய ஷேத்திரத்தில் நிலத்தினின்று எழுந்த வண்ணம் "ஸ்ரீபூவராகப் பெருமாள்" சுயம்பு வடிவாய் காட்சி தந்தார்.

இந்த வெண்ணாற்றங்கரையில் இப்போது மூன்று கோவில்கள் உள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமாள்கள் எழுந்தருளியுள்ளனர்.

🌺🌺 வழித்தடம் :-

தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 3 கி.மீ தொலைவில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருவடிகளே சரணம்.

அருள்மிகு செங்கமவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
அருள்மிகு மணிக்குன்றப் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு அம்புஜவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
அருள்மிகு நரசிம்மப் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு தஞ்சைநாயகி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோவில் - திருநாதன் கோவில் என்ற திருநந்திபுர விண்ணகரம் திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:"

No comments:

Post a Comment