ஓம் நமோ நாராயணாய 🙏🏻🙏🏻
மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி
தாயார் - ராஜகோபாலர்
உற்சவர்- செங்கமலத்தாயார் (ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி, படி தாண்டாப் பத்தினி)
தீர்த்தம் - ஹரித்ராந்தி நதி தவிர துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம்
ஸ்தல வரலாறு:
குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக வாஹி முனி என்னும் முனிவர் இருந்தார்.அவரு ’கோபிளர்,’ ‘கோபிரளயர்’ என இரு புதல்வர்கள். இருவரும் ஸ்ரீமன் நாரயணணை நோக்கி கடுமையான தவமியற்றி வந்தனர். அவர்களுக்கு காட்சியளித்த பெருமாள், அவர்கள் துவாரகைக்கு சென்று கண்ணபிரானை தரிசித்தால் அவர்கள் விரும்பும் மோட்சம் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். அவ்ர்களும் அதன்படியே ஒவ்வொரு புண்ணிய நதிகளிலும் நீராடியவாறு துவாரகை நோக்கி பயணித்தனர். அப்படி செல்கையில் வழியில் நாரதரை சந்தித்தனர். இவர்களது பயண நோக்கத்தை அறிந்த நாரதர், துவாரகையில் கண்ணபிரான் தான் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு மீண்டும் விண்ணுலகம் சென்றுவிட்டதாக கூறியதைக் கேட்ட இரு சகோதரர்களும் மூர்ச்சையடைந்தனர். அவர்களது பக்தியை கண்டு பெருமகிழ்ச்சியடைந்த நாரதர், அவர்களை செண்பகாரண்யம் சென்று அங்கு ஹரித்ராநதியில் நீராடி தவம் செய்தால் கண்ணபிரானை தரிசித்து மோட்சமும் அடையலாம் என்றார். இதை கேட்டு ஆனந்தமடைந்த இருவரும் அவர் சொல்படி செண்பகாரண்யம் சென்று தவமிருந்தனர். அவர்களுக்கு கிருஷ்ணராக காட்சியளித்த கண்ணபிரானிடம் அவர் துவாரகையில் நடத்திய கிருஷ்ணலீலைகளை நடத்தி காட்ட சொல்லி வேண்டினர். அதனால் கிருஷ்ணாவதாரதில் தொடங்கி, கீதோபதேசம் வரையிலான 32 லீலைகளையும் நடத்திக் காட்டினார் கண்ணபிரான்.
நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ‘ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்’ என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதால் ‘சென்பகாரண்யா ஷேத்திரம்’ எனவும், முதலாம் குலோத்துங்க சோழன் இக்கோவிலை அமைத்த காரணத்தால் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் கொண்டிருப்பதால் ’ராஜமன்னார்குடி’ என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோவில் கட்டியதால் ‘மன்னார்கோவில்’ என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ராஜகோபால சுவாமி, கிருஷ்ணரின் வடிவமாக அறியப்படுகிறது. குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்று அழைக்கிறார்கள்.
சிறப்பு:
உற்சவர் ராஜகோபால சுவாமி, இந்த ஆலயத்தில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து, அதையே தலைப்பாகையாக சுருட்டி வைத்துள்ளார். வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தைகள் அணியும் அணிகலன்களை அணிந்திருக்கிறார். அவரோடு ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.
இத்தல இறைவனின் திருவுருவம் 12 அடி உயரம் கொண்டது. ஆலயத்தின் வளாகமானது, 16 கோபுரங்களுடன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் கொண்டு திகழ்கிறது. இத்தல உற்சவர் சிலை வெண்கலத்தால் ஆனது. இது சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஆலயத்தில் காணப்படும் ஒரு குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இதனை ‘ஹரித் திராந்தி’ என்று அழைக்கிறார்கள். ஹரித்ராந்தி நதி தவிர துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.
கிருஷ்ண, பலராமரை அழிக்க கம்சன் குவலயாபீடம் என்னும் யானையை ஏவிவிட்டான். கிருஷ்ணன், யானையின் தந்தத்தை ஒடித்து அதனை அடக்கினார். இதன் அடிப்படையில் இவர் இடது கையில் தந்தமும் இருக்கிறது.
ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி! போட்டி துவங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் தாடங்கத்தை (காதணி) எடுத்து அணிந்து கொண்டார். கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார்.
இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர். மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
பங்குனியில் 18 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. கிருஷ்ணருக்காக அமைந்த கோயில் என்பதால் 18க்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா நடத்தப்படுகிறது (குருக்ஷேத்ர யுத்தம் நடந்த நாட்கள் மற்றும் கீதையின் அத்தியாயம் 18). இவ்விழாவை, "பார் புகழும் பங்குனி பிரம்மோற்ஸவம்' என்று குறிப்பிடுகிறார்கள். இவ்விழா நடக்கும் நாட்களில் கிருஷ்ணனின் 32 லீலைகளில், சுவாமியை அலங்காரம் செய்வது விசேஷம். பிரம்மோற்ஸவத்தின் 16ம் நாளில் "வெண்ணெய் தாழி' உற்சவம் நடக்கிறது. அப்போது சுவாமியை தவழ்ந்த கோலத்தில், கையில் வெண்ணெய்ப்பானையுடன் வீதியுலா செல்கிறார். அந்நேரத்தில் சுவாமிக்கு வெண்ணெயை பிரதான நைவேத்யமாக படைக்கின்றனர். அலங்காரம் முடிந்து இவர், ஊருக்குள் உள்ள மண்டபத்திற்கு செல்கிறார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் இவர் மீது வெண்ணெயை வீசுகிறார்கள். அன்று மாலையில் இவர் குதிரை வாகனத்தில் அங்கிருந்து சன்னதிக்கு திரும்புகிறார். இவ்விழாவில் ஆண்டாள் கோலத்திலும், இரண்டு முகமுடைய "கண்டபேரண்ட பட்சி' என்னும் பறவை வாகனம், பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனத்தில் மரவுரி தரித்த ராமர் வேடத்தில் எழுந்தருளுவது விசேஷம்.
இந்தக் கோவில் குலோத்துங்கச் சோழனால், சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கி.பி. 1070-1125-ல் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டா டப்பட்டு வருகிறது. ஆலயத்தின் 18 நாள் உற்சவமாக பங்குனி உத்திர விழாவும், 12 நாள் உற்சவமான விடை யாற்றி விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் விடையாற்றி உற்சவம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறும். இந்த ஆலயத்தின் ஆண்டு தோறும் ஆடிப்பூரம் அன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருள்வார். இந்த தேரோட்டத் திற்காக 1892-ம் ஆண்டு தேர் உருவாக் கப்பட்டது. பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.26½ லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டது.
இது பெருமாள் தலமாயினும், கண்ணனுக்குரியது என்பதால் அவருக்கு முன்பிறந்த "மாயா', "துர்க்கை' என்னும் பெயரில் அருளுகிறாள். இவள், வாசுதேவப்பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் இருக்கிறாள். ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை, வழிபாடு நடக்கிறது. புத்திர பாக்கியத்திற்காக இவளிடம் தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.
கோவில் பாதி குளம் பாதி என்றழைக்கப்படும் மன்னார்குடியில் தான் இந்தியாவின் மிகப்பெரிய தெப்பக்குளமான ஹரித்ராநதி அமைந்துள்ளது. 1158 அடி நீளமும், 847 அடி அகலமும், 22.516 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இக்குளம் மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றாகும். மன்னார்குடியில் அமைந்துள்ள புண்ணிய நீர்நிலைகளில் ஹரித்ராநதியும் ஒன்று. கோபியருடன் கோபாலன் ஜலக்கிரீடை செய்தருளிய போது, கோபியர் உடலில் பூசியிருந்த மஞ்சள் (ஹரித்ரா) இக்குளத்தில் கலந்ததால் ஹரித்ராநதி என்ற பெயரைப் பெற்றது. காவிரியின் மகள் எனவும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்றிணைந்தது எனவும் ஹரித்ராநதியை கூறுவர். இது.ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத் திருவிழா நடக்கிறது.
திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக ஊரின் பெருமை.
வழித்தடம்:
திருவாரூரில் இருந்து 28 கி.மீ., தூரத்தில் உள்ள மன்னார்குடி நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment