🌺🌺 108 திவ்யதேசங்கள் - பதிவு 12 🌺🌺
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவில்:-
திருக்குடந்தை (கும்பகோணம்):
108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இத்திருக்கோவில் போற்றப்படுகிறது.
மூலவர்: ஆராவமுதன்
உற்சவர்: சாரங்கபாணி, அபர்யாப்தாம்ருதன், உத்தாநசாயீ
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: வைதிக விமானம்
தீர்த்தம்: ஹேம புட்கரணி
மங்களாசாசனம்: பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார்.
நாமாவளி: ஸ்ரீ கோமளவல்லி ஸமேத ஸ்ரீ சாரங்கபாணியே நமஹ.
ஊர்: கும்பகோணம்.
🌺🌺 குடந்தை :-
அக்காலத்தில் இந்த ஊர் குடந்தை எனவும், குடமூக்கு எனவும் பெயர் பெற்று விளங்கியது. மேலும், மரங்கள் நிறைந்து வனமாகவும் இருந்துள்ளது. எனவே, குடந்தை வனம் என்ற சொல்லே "கும்பகோணம்" என்றானது.
🌺🌺 ஆராவமுதன் :-
திருக்குடந்தை திருத்தலத்தில் உறையும் உற்சவரான இறைவன், சங்கு, சக்கரத்துடன், சாரங்கம் என்ற வில்லை ஏநேதியவாறு காட்சி தருகிறார். பாணி என்றால் "கையில் ஏந்தியவன்" என்று பொருள். இதன் காரணமாகவே இத்தல இறைவன் "சாரங்கபாணி" என்ற திருநாமம் பெற்றார்.
மேலும், இருக்கு "ஆராவமுதன்" என்ற திருநாமமும் உண்டு. "ஆராவமுதன்" என்பதற்கு "திகட்டாத அமுதம் போன்றவன்" என்று பொருள்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தாம் பாடியை திருவாய்மொழி பகுதியில் 10 பாசுரங்களில் "ஆராவமுதன்" என்ற திருநாமத்தைக் கூறியே "மங்களாசாசனம்" செய்கிறார்.
இத்திருக்கோவில் நாலாயிரத் திவ்யபிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படுகிறது.
🌺🌺 தாயார் பிறந்த தலம் :-
இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும். இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லித் தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். பின்னரே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.
🌺🌺 வைகுண்டத்தையே வெகுண்டவர் :-
ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை.
"உங்கள் மார்பில் ஐக்கியமான என் மீது பிற ஆணின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே" என கோபப்பட்ட மகாலட்சுமி கணவரைப் பிரிந்தாள்.
இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் எவரையும் காலால் உதைப்பது பாவம் என்கிறார்கள். ஏனெனில், உதைப்பட்டவர்களிடம் உள்ள திருமகள் கடாட்சம் அவரை விட்டு நீங்கும் என்பது ஐதீகம்.
தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தாயாரை நோக்கி தனக்கு மகாலட்சுமி மகளாக அவதரிக்க வேண்டும் என தவமிருந்தார்.
அதற்கு மனமிறங்கிய மகாலட்சுமி தாயார் இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் அவதரித்தாள். அவளுக்கு "கோமளவல்லி" என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சாரங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், சாரங்கபாணி எனப்பட்டார். இவ்வூரைத் தாயாரின் "அவதார ஸ்தலம்" என்கிறார்கள்.
🌺🌺 ஆணையிட்ட ஆழ்வார் :-
காஞ்யில் திருவெஃகா திருத்தல இறைவனை பாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு பின்னால் வரும்படி கட்டளையிட்ட திருமழிசை ஆழ்வார், படுத்துறங்கும் பெருமானை எழுந்து வந்து பேசு என்று ஆணையிட்டார். அப்பாசுரம் "திருச்சந்தவிருத்தம்" பகுதியில் இடம் பெற்றுள்ளது.
நடுங்கு ஞாலம் ஏனமாய்
விலங்கு மால் வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்
கரைக் குடந்தையுள்
கிடந்த வாறெ எழுந்திருந்து
பேசு வாழி கேசனே.
விளக்கம் :-
இராமவதாரத்தில், காடு, மலை, மேடுகளிலெல்லாம் நடந்து நடந்து கால்கள் நொந்தனவோ! அதனால் தான் சயனித்திருக்கிறீர்களோ! வராக அவதாரத்தில், பாதாள லோகம் சென்று பூமித்தாயை மீட்டுத் தாங்கி வந்தீர்களே! அதனால் களைப்போ! "பெருமாளே, ஏன் கிடக்கின்றீர்கள்? எழுந்து வந்து என்னோடு பேசுங்கள்" என்று மிகுந்த பணிவுடன் கேட்கிறார்.
அதனால், சகல லோகங்களும் அதிர "சாரங்கபாணி" சற்று எழுந்தார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை "உத்தான சயனம்" என்பர். இங்கு "உத்தான சயன" கோலத்தில் தான் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.
🌺🌺 சிறப்புகள் :-
கோவில் மூலவர் சன்னதியே பரமபதவாசல் சேவையாக அமைந்துள்ள திவ்யதேசம். ஆராவமுதன் திருமார்பில் அணிந்துள்ள மாலை மீது ஆசை கொண்டவள் ஆண்டாள் நாச்சியார்.
பெரியாழ்வார் தன்னை அன்னையாக உருவகம் செய்து கொண்டு இத்தல இறைவனை கண்ணனாக பாடியுள்ளார்.
மூலவர் சன்னிதி தேர் அமைப்பில் அமைந்துள்ள திவ்யதேசம். மூலவர், உற்சவர் இருவருக்கும் சம அளவில் அனைத்து பூஜைகளும் நடைபெறும் தலம்.
🌺🌺 வழித்தடம் :-
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் நகரின் மத்தியில் அமைந்துள்ளது.கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஆராவமுதன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு கோமளவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு ஒப்பிலியப்பன் கோவில் - திருவிண்ணகர் திருக்கோவிலைத் தரிசனம் பண்ணலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:"
No comments:
Post a Comment