🌺🌺 108 திவ்யதேசங்கள் - பதிவு 19 🌺🌺
அருள்மிகு சௌந்தர்யராஜப் பெருமாள் திருக்கோவில் :-
திருநாகை என்ற நாகப்பட்டினம்.
மூலவர்: நீலமேகப் பெருமாள்
தாயார்: சௌந்தர்யவல்லி
உற்சவர்: சௌந்தர்யராஜன்
கோலம்: நின்ற திருக்கோலம்
விமானம்: சௌந்தர்ய விமானம்
தீர்த்தம்: சார புட்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ சௌந்தர்யவல்லீ ஸமேத ஸ்ரீ சௌந்தர்யராஜாய நமஹ
🌺🌺 திருநாகை & நாகப்பட்டினம் பெயர்க்காரணம் :-
சகல சௌபாக்கியங்களையும் அருளும் இறைவன் நாராயணன், சௌந்தர்யராசனாக அருளும் இத்திருத்தலத்தின் பெருமைகள், பிரம்மாண்ட புராணத்தில் "சௌந்தர்ய ஆரண்யம்" என்ற பெயரில் பத்து அத்தியாயங்களில் பதிவாகியுள்ளது.
கிருதயுகத்தில் நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இறைவனுக்கு படுக்கையாக ஆவல் கொண்டு இங்குள்ள கடற்கரையில் பெருமாளைக் குறித்து தவம் செய்தார்.
அதற்கு மனம் மகிழ்ந்த பெருமாள் தனது படுக்கையாக ஏற்றுக் கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். திருமாலை நாகம் ஆராதித்ததால் "திருநாகை" எனப் பெயர் பெற்றது.
அக்காலத்தில் கடற்கரை அருகேயுள்ள நகரங்களை "பட்டினம்" என்று வழங்குவது மரபு. இத்தலமும் கடற்கரைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால் இவ்வூர் "நாகப்பட்டினம்" என்று அழைக்கப்படுகிறது.
🌺🌺 மயங்கிய ஆழ்வார் :-
இத்தல இறைவனின் வடிவழகில் தன்னையே பறிகொடுத்த, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார், ஆண்மை நிலையிலிருந்து, பெண்மை நிலை எய்தி பரகால நாயகியாக மாறி, இறைவனின் அழகை தோழியிடம் விளக்குவதைப் போல பாடியுள்ளார்.
முதல் ஒன்பது பாசுரங்களில் திருநாகை திருத்தலத்தின் பெயரைக் குறிப்பிடாமல் "அச்சோ ஒருவர் அழகியவா!" என்று பாடியுள்ளார்.
இறுதியான பத்தாவது பாசுரத்தில் மட்டுமே "நாகையழகியாரே" என்று இத்தலத்தைக் குறிப்பிடுகிறார். அந்த பாசுரம் பின்வருமாறு
ஆதியை நாகை அழகியாரை".
🌺🌺 அச்சோ அழகிய வா :-
பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின் இவர் வாயில் நல் வேத மோதும்
வேதியர் வானவ ராவர் தோழி
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி
ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன்
அச்சோ அழகிய வா?
பொன் போன்ற மேனியும், பொங்கி வழியும் ஒளியுடைய மரகதத்தை இடையினில் ஆரமாக அணிந்து வாயினால் நல்ல வேதத்தை நவிலும் தேவரான இவர், என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.
என் அல்குலைப் பார்க்கிறார். என் திரண்ட கொங்கையையும் விடாது பார்க்கிறார். இப்படிப் பார்க்கின்றாரே இவர், "இது எனது தாய்க்குத் தெரிந்தால், அவள் என்னை எப்படிப் பார்ப்பாளோ?, என்ன சொல்வாளோ?" என்று எனக்குப் பயமாக இருக்கிறது! என்று தன்னை நாயகியாகப் பாவித்துக் கொண்டு திருநாகையில் எழுந்தருளியுள்ள சௌந்தர்ராஜ பெருமானிடம் மையல் கொண்டு நிற்கிறார் திருமங்கையாழ்வார்.
🌺🌺 சிறப்புகள் :-
பெருமாள் நீலமணி வண்ணனாக "நீலமேகப் பெருமாள்" என்ற திருநாமத்தில் அருளும் திவ்யதேசம். பெருமாள் மூன்று கோலத்தில் காட்சி தந்து அருளும் அற்புத திவ்யதேசம்.
திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க் கண்டேயனும் பகவானைக் குறித்து தவமிருந்த திருத்தலம்.
எட்டு கரங்களுடன் அட்டபுயக்கர நரசிம்மர் குடிகொண்டுள்ள திவ்யதேசம். திருமகழ் தாயார் "சௌந்தர்யவல்லி" என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம். திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 வழித்தடம் :-
நாகப்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினம் இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சௌந்தர்யராஜப் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு சௌந்தர்யவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோவில் - திருத்தஞ்சை மாமணிக்கோவில் திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:".
No comments:
Post a Comment