Sunday, October 4, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 15 சாரநாதன் திருக்கோவில்

 🌺🌺 108 திவ்யதேசங்கள் - பதிவு 15 🌺🌺


தைப்பூசம் நடக்கும் ஒரே வைணவக் கோவில். மார்க்கண்டேயர் முக்தியடைந்த திருத்தலம். 108 வைணவத் தலங்களில் தனக்கு மிகவும் பிடித்தமான கோவில் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. இத்திருக்கோவிலை இன்று தரிசிக்கலாம்.


அருள்மிகு சாரநாதன் திருக்கோவில் :-
மூலவர்: சாரநாதன்
உற்சவர்: சாரநாயகி, பஞ்ச லட்சுமி
உற்சவர்: மாமதலை பிரான்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சார விமானம்
தீர்த்தம்: சார தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ சாரநாயகீ ஸமேத ஸ்ரீ சாரநாதாய நமஹ


🌺🌺 தலவரலாறு :-

ஆதிசேசன் குடையின் கீழ் ஆனந்தமாக பாற்கடலில் படுத்துறங்கும் பரந்தாமனால் படைக்கப்பட்ட பிரம்மதேவர் ஒருமுறை பிரளய காலம் வந்த போது பூலோகம் வந்து அனைத்து உயிர்களின் உயிரணுக்களையும் ஒரு குடத்தில் இட்டு சேகரிக்க எண்ணினார். 

இதற்காக பல புனித தலங்களில் மண் எடுத்து குடம் செய்தார். குடம் முடிவு பெறாத நிலையில், இறுதியாக திருச்சேறை தீர்த்தத்தில் நீராடி, மண் எடுத்து குடமாக்கி பாதுகாத்ததாக தலவரலாறு கூறுகிறது. 

இந்த தலத்தின் மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. அதனால் தான் இந்த தலத்தின் பெருமாள் "சாரநாதன்" என்றழைக்கப்பட்டார். தலத்தின் பெயரும் "திருச்சாரம்" என்று வழங்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் மருவி "திருச்சேறை" என்றானது.

🌺🌺 சார புஷ்கரணி :-

ஒருமுறை காவிரித்தாய் இத்தலத்து இறைவனிடம், "அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்" என்று கேட்டு இங்கு அமைந்துள்ள சாரபுஷ்கரணியில் தவம் இருந்தாள். 

இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். "தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது" என காவிரி கூறியவுடன், பெருமாள் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, "வேண்டும் வரம் கேள்" என்றார். 

அதற்கு காவிரி, "தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்" என்றாள். பெருமாளும் அப்படியே அருளினார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.

🌺🌺 ஐந்து தேவியர் உள்ள தலம் :-

முற்காலத்தில் வராகமாய் அவதரித்து உலகை எடுத்துக் காத்த பெருமாளே, திருச்சேறையில் சாரநாதப் பெருமாளாகவும் அவதரித்துள்ளார் என்கிறது "பிரபந்தம்".

இத்தல இறைவனுக்கு "சாரநாதன்" என்பது திருநாமம். பூலோக வைகுண்டமான "திருவரங்கம்" திருத்தலத்திற்கு அடுத்தபடியாக சாரநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியர்களுடன் காட்சி தந்து அருளும் சிறப்பு வாய்ந்த திருத்தலம்.

🌺🌺 தைப்பூசத் திருவிழா :-

10 நாட்கள் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இங்கு முக்கியமானதாகும். 10ம் நாளன்று தேரோட்டம் நடைபெறும். அன்று காவிரித் தாய்க்குக் காட்சியளித்த நிகழ்வு என்பதால் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரத்தில், "சாரநாதப் பெருமாள்" ஐந்து தேவியருடன் தரிசனம் தருகிறார். இதைக்காண்பது மகாமகப் புண்ணியத்திற்கு ஒப்பாகும். இந்த தரிசனம் கண்டு, சார புஷ்கரணியில் புனித நீராடுவது மிகவும் புண்ணியத்தை அளிக்கும்.


🌺🌺 மங்களாசாசனம் :-


பைவிரியும் வரியரவில் படுகடலுள் 
துயிலமர்ந்த பண்பா என்றும்,
மைவிரியும் மணிவரைபோல் 
மாயவனே என்றென்றும், வண்டார் 
நீலம் செய்விரியும் தண்சேறை யெம்
பெருமான் திருவடியை சிந்தித் தேற்கு, 
என் ஐயறிவும் கொண்டானுக் 
காளானார்க் காளாமென் அன்பு தானே!


- திருமங்கையாழ்வார்

🌺🌺 சிறப்புகள் :-

சாரநாதன் சுவாமி ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கும் திருத்தலம்.திருமகள் தாயார் சாரநாயகி எனும் திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

திருமங்கையாழ்வார் 13 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம். முடிகொண்டான் ஆற்றிற்கும், குடமுருட்டி ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ள திருத்தலம்.

தைப்பூசம் நடக்கும் ஒரே வைணவக் கோவில் இதுதான்.

🌺🌺 வழித்தடம் :-

கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ தென் கிழக்கிலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலையில் திருச்சேறை உள்ளது.

அருள்மிகு சாரநாதன் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு சாரநாயகி தாயார் திருவடிகளே சரணம். 

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் - திருக்கண்ணமங்கை திருத்தலத்தை தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:".

No comments:

Post a Comment