🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 28 🌹🌹🌹
சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக "திருஞானசம்பந்தர் தன் வேல் ஒன்றினைத் திருமங்கையாழ்வாருக்குப் பரிசளித்த தலம்"!!!.
திருமகள் தாயார் திரிவிக்கிரமனரை மார்பில் தாங்கி காட்சியளிக்கும் அற்புதத் திருத்தலம்!!!!!
அருள்மிகு திருவிக்கிரம நாராராயணன் திருக்கோவில் :-
சீர்காழி என்ற காழிச்சீராம விண்ணகரம்.
மூலவர்: திருவிக்கிரமன், தாடாளன்
தாயார்: லோகநாயகி, மட்டவில்குழலி
உற்சவர்: திருவிக்கிரம நாராயணன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: புட்கலாவர்த்த விமானம்
தீர்த்தம்: சங்க தீர்த்தம், சக்கர புஷ்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ மட்டவிழுங்குழலி ஸமேத ஸ்ரீ தாடாளன் ஸ்வாமிநே நமஹ.
ஊர்: சீர்காழி
🌺🌺 காழிச் சீராம விண்ணகரம் :-
உலகனைத்தும் நிறைந்துள்ள ஒப்பற்ற பரம்பொருளாம் இறைவன் நாராயணன் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம். மகாபலியின் கர்வத்தை அடக்க உலகம் முழுவதையும் ஈரடியால் அளந்தார் அந்த அனந்த மூர்த்தியான இறைவன்.
அத்தகைய விண்ணளக்கும் மூர்த்தி சீர்காழி என்னும் பதியில் கோவில் கொண்டருள்வதால், இத்தலத்திற்கு "காழிச்சீராம விண்ணகரம்" என்னும் பெயர் உண்டானது.
🌺🌺 தலவரலாறு :-
பிரம்மனுக்குத் தன் ஆயுளைப்பற்றிக் கர்வம் இருந்ததாகவும், அதனை அடக்க உரோமசர் என்னும் முனிவர் மகாவிஷ்ணுவால் தான் இந்த கர்வத்தை அடக்க முடியும் என எண்ணிணார்.
திருமாலின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தவர் "உரோமச முனிவர்". ஒருநாள் உரோமச முனிவருக்கு வைகுண்ட வாசன் வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத் தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய திருக்கோலத்தைக் காண வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதனால், சுவாமியை வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார்.
உரோமச முனிவரின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு "உன் உடம்பில் உள்ள (தலையில் உள்ள) ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின் ஆயுளில் ஒருவருடம் குறையும்" என்று கூறி, இன்னும் வேறு என்ன வரம் வேண்டும் கேள்!!! என்றார் உரோமச முனிவரிடம்.
எம்பெருமான் எடுத்த திரிவிக்ரம அதாரத்தை இவ்விடத்தே எனக்கு காட்டியருளவேண்டுமென்று வேண்ட, அவ்வண்ணமே அவருக்கு காட்சி தந்த இறைவன் தன் இடக்காலைத் தூக்கி திருவிக்கிர அவதாரத்தைக் காட்டி அருளினார்.
இதனால், இத்தல இறைவனுக்கு விண்ணளந்த பெருமாள், பிற்காலத்தில் "தாடாளன்" என்ற திருநாமமும் உண்டானது.
உரோமச முனிவர், பிரம்மனை நோக்கி “உன் ஆயுளும் என் ஒரு ரோமும் சரி” என்று கூறி அவனது கர்வத்தை அடக்கியதாகவும் இத்திருக்கோவிலின் தலவரலாறு கூறுகிறது.
🌺🌺 சிதம்பரம் படையாச்சி :-
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வூர் மன்னன் ஆற்காடு நவாப்பின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. அப்போது இறைவன் தாடாளன் உற்சவர் திருமேனியை தன் மகளுக்கு பரிசாக கொடுக்க நவாப் எண்ணிய நிலையில், அதைத் தடுக்கும் பொருட்டு சிதம்பரம் படையாச்சி என்பவர் யாரும் அறியாத வண்ணம் தானே எடுத்துச் சென்று காப்பாற்றியதாக கர்ண பரம்பரை வழிச் செய்திகள் தெரிவிக்கிறது.
இதை நினைவு கூறும் விதமாக இத்தலத்தில் சிதம்பரம் படையாச்சி வம்சத்தாருக்கு தனிமரியாதை செய்யப்படுகிறது.
🌺🌺 தவிட்டு பானை தாடாளன் :-
இத்திருத்தலப் ஒருமுறை சிதைந்து போன தருவாயில் ஒரு மூதாட்டி உற்சவர் திருமேனியை தவிட்டு பானைக்குள் வைத்து பாதுகாத்ததாகவும், திருமங்கையாழ்வார் இத்தலம் வந்த போது அவரிடம் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இத்தல உற்சவருக்கு "தவிட்டு பானை தாடாளன்" என்ற திருநாமம் உண்டானது.
🌺🌺 மங்களாசாசனம் :-
""நான்முகன் நாள் மிகைத்தருக்கை இருக்கு வாய்மை
ஊன்முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை
ஒளிமலர்ச் சேவடியணைவீர் உழுசேயோடச்
சூல்முகமார் வளையனைவாய் உகுத்த முத்தைத்
தொல் குருகு சினையென்னச் சூழ்ந்தியங்க - எங்கும்
தேன்முகமார் கமலவயல் சேல் பாய் காழிச்
சீராம விண்ணகரே சேர்மினீரே""
- திருமங்கையாழ்வார்.
🌺🌺 சிறப்புகள் :-
திருஞானசம்பந்தர் திருமங்கையாழ்வாரைப் பாராட்டி தமது வேல் ஆயுதத்தைப் பரிசாக அளித்த தலம்.
திருமகள் தாயார் லோகநாயகி என்னும் திருநாமத்தில் காட்கி கொடுக்கும் தலம்.
லோகநாயகி தாயார் திருவிக்கிரமரை மார்பில் தாங்கி காட்சியளிக்கும் தலம்.
திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளியுள்ள திருத்தலம்.
🌺🌺 வழித்தடம் :-
சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியாகவே செல்கின்றன. சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 01 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருவிக்கிரமன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு லோகநாயகி தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோவில் - திருஅரிமேய விண்ணகரம் திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:"
No comments:
Post a Comment