🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 23 🌹🌹
இங்கு மூலவர் "சாளகிராமத்தினால்" ஆனவர்!! கவிசக்கரவர்த்தி "கம்பன்" பிறந்த ஊர் இதுதான்!!!
🌺🌺 அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில்:-
தேரழுந்தூர்.
மூலவர்: தேவாதிராஜன்
உற்சவர்: ஆமருவியப்பன்
தாயார்: செங்கமலவல்லி
விமானம்: கருட விமானம்
தீர்த்தம்: தர்சனபுஷ்கரணி காவிரி
புராணபெயர்: திருவழுந்தூர்
ஊர்: தேரழுந்தூர்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மங்களாஸாசனம்: திருமங்கையாழ்வார்
🌺🌺 தேரெழுந்தூர் பெயர்க் காரணம்:-
இத்தலத்தில் மட்டும் தான் "திருமங்கையாழ்வார்" சுவாமியையும், தாயாரையும் சேர்த்து "மங்களாசாசனம்" செய்துள்ளார்.
இங்கு கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த "சிவபெருமான்" கோயில் உள்ளது.
அந்த கோயிலில் உள்ள மண்டபத்தில் தான் பெருமாளும், சிவபெருமானும் "சொக்கட்டான்" ஆடினார்கள். மேலும், "கவிச்சக்கரவர்த்தி கம்பன்" இத்தலத்தில் தான் பிறந்தார்.
இங்கு "உபரிசிரவசு" என்ற மன்னன் வானில் தேர் ஓட்டிக்கொண்டு வரும்போது, அதன் நிழல் எதின் மீதுபட்டாலும், அது கருகிவிடும்படி வரம் பெற்றிருந்தான். இவன் ஒருமுறை வானத்தில் சென்றப்போது, அதின் நிழல் "கண்ணன்"மீதும், அவர் மேய்த்துக்கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. இந்த "பசுக்கள்" இதனால் துன்பம் அடைந்தன, ஆகையால் இவனுடைய செருக்கை அடக்க விரும்பினார் இறைவன்.
அவனுடைய தேரின் நிழல் மீது தன்னுடைய திருவடியை வைத்து அழுத்தினார். அந்த மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனுடைய ஆணவமும் அழிந்தது. இதனால் தான் இவ்வூர் "தேரெழுந்தூர்" எனப்பெயர் ஆனது.
🌺🌺 கருட விமானம் :-
ஒருமுறை கருடாழ்வாரிடம் தேவேந்திரன் ஒரு விமானத்தையும், வைரமுடியையும் கொடுத்து,"108திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது உகந்ததோ அதை கொடுத்துவிடு" என்றார். அவர் அதன்படி "மைசூர்" அருகே "திருநாராயணபுரத்தில்" அமைந்திருக்கும் பெருமாளுக்கு "வைரமுடியை" கொடுத்துவிட்டு, "தேரெழுந்தூர்" என்ற ஊரில் உள்ள "ஆமருவியப்பன்"க்கு விமானத்தை "கருடாழ்வார்" கொடுத்தார்.
இந்த காரணத்தால் இத்தலத்தில் மூலவர் மேல் உள்ள விமானம் "கருடன்" விமானம் என்றழைக்கப்படுகிறது.
இவருக்கு பெருமாளின் அருகிலேயே இருக்கும் பாக்கியமும் கிடைத்தது.
பெரும்பாலான பெருமாள் கோயிலின் சன்னதியில் "கருடர்" பெருமாளுக்கு எதிரே இருப்பர். இந்த மாதரி அருகிலேயே இருக்கும் அமைப்பு ஒரு விசேஷமான அமைப்பு என்கின்றனர்.
🌺🌺 தலவரலாறு:-
ஒருமுறை பெருமாளும், சிவபெருமானும் "சொக்கட்டான்" விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த ஆட்டத்திற்கு பார்வதி தேவி நடுவராக இருந்தார். அப்போது காய் உருட்டும் போது ஒரு குழப்பம் வந்தது, நடுவராக பார்வதி தேவி பெருமாளுக்கு சாதகமாகக் கூறினார்.
இந்த பார்வதிதேவியின் செயலால் சிவபெருமானுக்குக் கோபம் வந்து அன்னையை "பசுவாக" மாறும்படி சாபமிட்டார். இவருடைய சாபத்தினால் பசுவாக மாறிய பார்வதி தேவி துணைக்கு சரஸ்வதியையும், மகாலெட்சுமியையும் "பசுவாக" மாற்றி "பூலோகத்திற்கு" அழைத்து வந்தார்.
இவர்களை மேய்ப்பவராகப் பெருமாளே இருப்பதால் "ஆ"மருவியப்பன்" என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் ஆட்சி செய்கிறார்.
🌺🌺 தரிசனம் பெற்றவர்கள் :-
இங்கு மூலவர் "தேவராஜன்" 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர்.
மார்கண்டேயர் முனிவர் பிறவா வரம்பெற "ஆமருவியப்பனை" வணங்கினார். அதனால், இவரை "ஆமருவியப்பன்" தன் அருகிலேயே வைத்துக்கொண்டார்.
இங்கு "பக்தபிரகலாதன்" மூலஸ்தானத்தில் இருக்கிறார். இங்கு மூலஸ்தானத்தில் "மூலவர்", "உற்சவர்", "தாயார்" ஆகிய மூவரும் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
"காவிரி, கருடன், தர்மதேவதை, அகத்தியர், உபரிசிரவசு" ஆகியோர் இத்தலத்தின் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.
🌺 மங்களாசாசனம் :-
"செம்பொன்மதின் சூழ் தென்னிலங்கைக்கு
இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் உம்பர்
வாளிக்கு இலக்காக உதிர்த்த வுரவோன்
ஊர்போலும் கொம்பிலார்ந்த மாதவிமேல்
கோதிமேய்ந்த வண்டினங்கள் அம்பராவும்
கண்மடவார் ஐம்பாலணையும் அழுந்தூரே"!
"திருமங்கையாழ்வார்"
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு கிருபா சமுத்திரப் பெருமாள் திருக்கோவில் - திருச்சிறுபுலியூர் திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.
" ஓம் நமோ நாராயணாய நம:"
No comments:
Post a Comment