சொக்க வைக்கும் ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பு..
’நாக்கே செத்துப்போச்சுப்பா’ என்று அவ்வைசண்முகி படத்தில் மணிவண்ணன் சொல்வார். ‘செத்துப்போச்சுன்னா அடக்கம் பண்ணுங்க முதலியார்’ என்பார் கமல்.
அப்படியெல்லாம் செய்யத்தேவையில்லை. வத்தக்குழம்பு வைத்து சுடச்சுடச் சாப்பிட்டாலே போதும். போன உயிரும் திரும்பி வந்துவிடும் என்கிறார்கள் வத்தக்குழம்புப் பிரியர்கள்.
வத்தக்குழம்பு என்று மொத்தமாகச் சொல்லி, சுருக்கிவிடமுடியாது. வத்தக்குழம்பில் பலவகை உண்டு.
சின்னவெங்காயம் போட்டு வத்தக்குழம்பு செய்யும் போது, அதுவொரு சுவையில் நம்மை சொக்கவைக்கும். பூண்டு சேர்த்து செய்யும்போது அது வேறொரு கிக்கைக்கொடுக்கும். சுண்டவத்தல் போட்டு செய்கிற வத்தக்குழம்பு என்றால், நாலுகவளம் கூடுதலாக உள்ளே போகும்.
எந்த வத்தக்குழம்பாக இருந்தாலும், சாதத்துடன் வத்தக்குழம்பு சேர்த்து சாப்பிட்டுவிட்டு, பிறகு மோர் சாதம் சாப்பிடும்போது வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, புறக்கணித்துவிட்டு, வத்தக்குழம்பைத் தொட்டுக்கொண்டு, ஊற்றிக்கொண்டு சாப்பிடுவார்கள். அது, அமிர்தம்... அமிர்தம்... என்று கொண்டாடித்தீர்த்துவிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
சுண்டக்காய் - 1 கப்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
புளி - 75 கிராம் (நன்றாகச் சாறு எடுத்துக் கொள்ளவும்) சின்ன வெங்காயம் - 10
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, சிறிது உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
இப்படித்தான் செய்யணும்...
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தைப் போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில், அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுத்து இறக்கிவைத்துக்கொள்ளுங்கள்.
அதைக் குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு நன்றாகப் பொன்னிறமாக வரும்வரை வதக்கி, பிறகு சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து நன்றாகக் கிளறுங்கள்.
அதன் பிறகு, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்குங்கள்.
பிறகென்ன... மணக்க மணக்க, சுவைக்கச் சுவைக்க, ருசிக்க ருசிக்க, ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு தயார்!
நன்றி - பெண்மை . காம் .
----------------------------------------------------------------------------------------------------------------
வத்தக் குழம்பு புராணம்
வத்தக் குழம்பு செத்த நாக்கையும் உயிர்ப்பிக்கும் என்பார் அறுசுவை ஆறுமுகக் கவிராயர்..
உணவே மருந்து மருந்தே உணவு என்னும் தமிழரின் பாரம்பரியச் சமையலின் தலைமை மருத்துவ குணம் கொண்ட குழம்பு தான் இந்த வத்தக் குழம்பு.. சுவையிலும் தனித்துவத்தில் இருப்பது இதன் பெரும் சிறப்பு.!
வத்தக்குழம்பின் மகாத்மியங்களை சொல்லத்தான் இப்பதிவே.!
#சுண்டைக்காய்வத்தல்குழம்பு, #மணத்தக்காளி, #பிரண்டை, #பூண்டு, #வெண்டை, #எண்ணெய்_கத்திரிக்காய், #கொத்தவரங்காய் போன்ற வகைகள் வத்தக்குழம்பிற்கு மிகச் சிறந்த வகைகள்..
வெற்றிலை போட்டு வைக்கும் வத்தல் குழம்பும் உண்டு.. இதில் #டாப்1இடம்சுண்டைக்காய்வத்தக்குழம்புதான்.! சிவாஜி - பத்மினி போல பர்ஃபெக்ட் ஜோடி.!
முதலில் வத்தக் குழம்பிற்கு வைக்கும் சாதம் முக்கியம்.! குழையவேக்கூடாது..
MN நம்பியார்போல மிக விறைப்பாகவும் அதே நேரம்
SV ரங்காராவ்போல கொஞ்சம் பதமாகவும் இருக்கவேண்டும்!
குழம்பை சொத சொதன்னு சோற்றில் ஊற்றாமல் பிரட்டுவதுபோல பட்டும் படாமல் பிசைவது மிகச்சிறந்த முறை ஆகும்.
அதிலும் சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிறகு..வத்தக் குழம்பை விட்டு பிசைந்து சாப்பிட்டால்!ஆஹஹாஹா! வத்தக்குழம்பு எவ்வளவு கெட்டியாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.. என் பாட்டி வீட்டில் வைக்கும் வத்தக் குழம்பு எல்லாம் அம்மியில் அரைத்த துவையல் போல ஐஸ்க்ரீமின் ஒரு ஸ்கூப் போல மிக கெட்டியாக இருக்கும்..
இதற்கு தொட்டுக் கொள்ள வெறும் சுட்ட அப்பளமே தேவாமிர்தமாக இருக்கும்.!
பூசணிக்காய் பால்கூட்டு, தயிர் பச்சடி, புடலங்காய் பருப்பு கூட்டு, வாழைத்தண்டு பருப்பு கூட்டு, இப்படி பருப்பு சேர்த்து செய்யும் எல்லா கூட்டும் வத்தக் குழம்பிற்கு பெஸ்ட் காம்போ.. அவியலும் பிரமாதமாக இருக்கும்..
வேலி பிரண்டையை உரசி என் அம்மா வைக்கும் வத்தக் குழம்பு அருமையான மருத்துவ குணம் கொண்ட ஆரோக்கியமான உணவாகும்.. அதே போல.. மணத்தக்காளி போட்டும் வைப்பார்கள் வயிற்று கோளாறுகள் ஒரே நாளில் காணாமல் போய்விடும்..
அல்சர் இருப்பவர்கள் வாரத்தில் இரு முறை சாப்பிடலாம்.. ஒரு முறை கோவை வந்திருந்த போது என் பழைய எம்.டி. சுவாமிநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது கொங்கு ஸ்டைல் வதங்கல் கத்திரி வத்தக்குழம்பு சாப்பிடும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்! அடர் வயலட்டில் மேனியெங்கும் எண்ணெய் மினுமினுங்க நன்கு எண்ணெயில் வதங்கிய முழு கத்திரிக்காய்கள்.. குலாப் ஜாமூன் போல புளிக்குழம்பில் மூழ்கியிருக்க.. கூடவே சுண்டைக்காய் வத்தலும் போட்டு நான் சொன்ன துவையல் பதத்தில் மேடை(சை)க்கு வந்தது..
சாம்பாருக்கு பிறகு 4முறை வத்தக்குழம்பையே சந்திரமுகி ரஜினி போல ரிபீட்டு கேட்டு கேட்டு வாங்கினேன்.!
அடுத்து வெங்காய வத்தக்குழம்பு.. இதுவும் மருத்துவ குணம் மிக்க அஜீரணத்தை கட்டுப்படுத்தும் குழம்பு இதற்கு வடகம், பொரித்த அப்பளம், சில நேரங்களில் மாங்காய் தொக்கு என பல காம்போக்கள் உண்டு..
பாகற்காய் வத்தக்குழம்பு எனது விருப்ப உணவுகளில் ஒன்று.. கொஞ்சம் இனிப்புள்ள பரங்கிப் பூசணி, கொத்தவரங்காய், அவரை, செள செள, காய் கூட்டுகள் இதற்கு..பக்கா பொருத்தமாக இருக்கும்..
எந்த வத்தக்குழம்பாக இருந்தாலும் என்ன காய் போட்டாலும் சுண்டைக்காய் சேர்த்து போடுதல் வத்தக்குழம்பிற்கான லட்சணங்களில் ஒன்று..
இந்த வத்தக்குழம்பில் எல்லாம் இன்னொரு வசதி.. தயிர் சாதத்திற்கு இதைத் தொட்டுக் கொள்ள பிரமாதமாக இருக்கும்.. ஒரே ஒரு முறை அதை சுவைத்துவிட்டால் எப்போதும் விடமாட்டீர்கள்.!
கால மாற்றங்களில் ஓட்டல்களில் செக்கச் செவேலென இன்று ஒரு கிண்ணத்தில் வைத்து தரப்படுவதெல்லாம் வத்தக் குழம்பே அல்ல..
சீகைக்காயை அந்த காலத்தில் கரைப்பார்களே அந்தக் கலரில் இருப்பதே அக்மார்க் வத்தக்குழம்பு.
சூடான சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் 1ஸ்பூன் விட்டு.. பிசைந்து அதை சுட்ட அப்பளத்துடன் சாப்பிடும் சுகமே சுகம்.!
இன்னூன்னு சொல்ல மறந்துட்டேனே..!
முதல்நாள்செய்தவத்தக்குழம்பைபத்துநாள்வச்சுவச்சுசாப்பிட்டால்_பரமசுகம்...
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்..!!!
அப்போ நாளைக்கு உங்க வீட்டில் வத்தக் குழம்பு தானே.
Forwarded post
No comments:
Post a Comment