Wednesday, October 28, 2020

திருச்சிங்கவேள் குன்றம் (அகோபிலம்)

 🙏  நமஸ்காரம்    

105. திருச்சிங்கவேள் குன்றம் (அகோபிலம்)

மூலவர் - பிரகலாத வரதர், லஷ்மி நரசிம்மர்
தாயார் - அம்ருதவல்லி, செஞ்சுலட்சுமி
உற்சவர் - மாலோல நரசிம்மர்
விமானம் - குகை விமானம்
தீர்த்தம் - இந்திர தீர்த்தம், பாப விநாச தீர்த்தம், கஜ, பார்கவ தீர்த்தம்
நாமாவளி - ஸ்ரீ லக்ஷ்மீநாச்சியார் ஸமேத ஸ்ரீ நரசிம்ஹாய நமஹ:

வழித்தடம்:

ஆந்திர மாநிலத்தின் நந்தியால் - கடப்பா நெடுஞ்சாலையில்,நந்தியாலில் இருந்து 40 கி.மீ தொலைவில் அர்லகட்டா என்ற இடம் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அகோபிலம் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து மும்பை வழியாகச் செல்லும் இரயில்கள் கடப்பா வழியாகவே செல்கின்றன.

பாசுரம்:

அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் * அவுணன் 
பொங்கஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம் * 
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச் 
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே.

- பெரிய திருமொழி (1008)

பாசுரம் பதவுரை:

அங்கு - (‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே
அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய் - அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு)
அவுணன் பொங்க - இரணியன் கிளர்ந்த வளவிலே,
ஆகம் - அவனது உடலை
வள் உகிரால் - கூர்மையான நகங்களாலே
போழ்ந்த - இருபிளவாகப் பிளந்த
புனிதன் இடம் - பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;-
செம் கண் ஆளி - (சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை
பை கண் ஆனை கொம்பு கொண்டு - பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து
பத்திமையால் - பக்தியினாலே
அடி கீழ் - (பகவானுடைய) திருவடிகளிலே
இட்டு - ஸமர்ப்பித்து
இறைஞ்சும் - ஆச்ரயிக்கப்பெற்ற
சிங்கவேள் குன்றம் - அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம்.

ஸ்தல வரலாறு:

கருடனுக்கு எம்பெருமானின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாக அவ்வவதாரத்தை தரிசிக்க இந்த மலைகளடங்கிய காட்டுப் பகுதியில் வந்து கடுந்தவமியற்றி வர, கருடனின் தவத்தை மெச்சிய எம்பெருமான் இந்த அஹோபிலம் மலையில் மீளவும் நரசிம்ம அவதாரம் செய்து காட்டினார். தூணிலிருந்து வெளிப்பட்டது. இரணியனைப் பிடித்து, கூர்நகங்களால் குடலை வகிண்டு எடுத்து. ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது. பிரகலாதனின் வேண்டுகோளுக் கிசைந்து சாந்த நரசிம்மனாக அமர்ந்தது போன்ற நரசிம்ம அவதாரத்தின் 9 தத்துவங்களை அர்ச்சா ரூபமாக 9 திருக்கோலங்களில் இங்கு காட்டி கொடுத்ததாக ஐதீகம். கருடன் தவமிருந்ததால் இந்த மலைக்கு கருடாசலம் என்றும் கருடாத்ரி என்றும் பெயருண்டு. சேஷாத்திரியாக உயர்ந்திருப்பது வேங்கடமென்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபிலமாகும்.

சிறப்பு:

இங்கு மொத்தம் 9 நரசிம்மர் கோவில்கள் உள்ளன. எனவே இதனை நவநரசிம்ம சேத்திரங்கள் என்றும் வழங்குவர். மலையடிவாரத்திலும், மலையின் மேலுமாக மொத்தம் 9 நரசிம்மர்கள்.

     1. அஹோபில நரசிம்மன்

     2. வராக நரசிம்மன்

     3. பாவந நரசிம்மன்

     4. காரஞ்ச நரசிம்மன் 

     5. சக்ரவட நரசிம்மன்

     6. பார்க்கவ நரசிம்மன்

     7. ஜ்வாலா நரசிம்மன்

     8. மாலோலா நரசிம்மன்

     9. யோகாநந்த நரசிம்மன்

1. பார்கவ நரசிம்மர்

பார்கவ தீர்த்தம் என்னும் புண்ணிய தீர்த்தத்தின் கரையில் கோவில் கொண்டு அருள்வதால் இத்தல இறைவனுக்கு பார்கவ நரசிம்மர்" என்பது திருநாமமாகும். இரண்டு கரங்களுடன் இரணியனை வதம் செய்த நிலையில் சேவை சாதிக்கிறார். அகோபிலம் பிரகலாத வரதர் தலத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில்அமைந்துள்ளது.

2. யோ நந்த நரசிம்மர்

பிரகாலாதனுக்காக யோக சாஸ்திரங்களை உபதேசித்ததால் இத்தல இறைவனுக்கு "யோகா நந்த நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். இத்தலத்தில் நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்த திருத்தலம். அகோபிலம் பிரகலாத வரதர் திருத்தலத்திலிருந்து தென்கிழக்கே மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

3. சத்ரவட நரசிம்மர்

"சத்ரவடம்" என்ற ஆலமரத்தின் அடியில் நரசிம்மப் பெருமாள் சேவை சாதிப்பதால் இத்தல இறைவனுக்கு "சத்ரவட நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். அகோபிலம் பிரகலாத வரதர் தலத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் மலையின் மேற்கில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

4. அகோபில நரசிம்மர்

மலை மேல் இராஜகோபுரத்துடன் கூடிய பெரிய திருக்கோவிலில் குடி கொண்டுள்ள மூர்த்தி இந்த "அகோபில நரசிம்ம பெருமாளே" ஆவார். இத்தலத்தில் மட்டுமே தாயார் "செஞ்சு லட்சுமி" என்ற திருநாமத்தில் காட்சி தந்துஅருள்கிறார்.

5. வராக நரசிம்மர்

வராக தீர்த்தம் என்னும் புண்ணிய தீர்த்தத்தின் கரையில் கோவில் கொண்டு அருள்வதால் இத்தல இறைவனுக்கு "வராக நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். அகோபிலம் நரசிம்மர் திருக்கோவிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில்அமைந்துள்ளது.

6. காரஞ்ச நரசிம்மர் 

காரஞ்ச மரத்தின் கீழ் இப்பெருமான் சன்னதி கொண்டு அருள்வதால் இத்தல இறைவனுக்கு "காரஞ்ச நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். அகோபிலம் நரசிம்மர் தலத்திலிருந்து 1/2 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

7. மாலோல நரசிம்மர் 

மரைச்சரிவில், அதாவது மலை ஓரத்தில் சன்னதி கொண்டு அருளுவதால் இத்தல இறைவனுக்கு "மலையோர நரசிம்மர்" என்பது திருநாமம். பிற்காலத்தில் மாலோல நரசிம்மர் என்ற திருநாமத்தில் வணங்கப்படுகிறார். அகோபிலம் நரசிம்மர் தலத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் மலைச்சரிவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

8. சுவாலா நரசிம்மர் 

உக்கிர கோலமாக, ஒளி பிளம்பாக இரணியன் உடலைப் பிளக்கும் விதமாக காட்சி தந்து அருள்வதால் இத்தல இறைவனுக்கு "சுவாலா நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். அகோபிலம் நரசிம்மர் தலத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் வனங்கள் நிறைந்த அடர்ந்த மலைப்பகுதியில் சுமார் 3000 அடி உயரத்தில் இச்சன்னதி அமைந்துள்ளது. கல்லும், முள்ளும் நிறைந்த ஒத்தையடி பாதையாகும் இத்திருத்தலம். மிகவும் சிரமப்பட்டு ஏறினால் மட்டுமே இத்திருத்தலத்தை அடையமுடியும்.

9. பாவந நரசிம்மர்

பாவநீ என்னும் புண்ணிய நதியின் கரையில் கோவில் கொண்டு அருளுவதால் இத்தல இறைவனுக்கு "பாவந நரசிம்மர்" என்பது திருநாமம் ஆகும். அகோபிலம் நரசிம்மர் தலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு நரசிம்மன் வேடுவனாக வந்து லட்சுமி தேவியை மணந்ததாக ஐதீஹம். (அதாவது கருடனுக்கு காட்சி கொடுக்கப் பெருமாள் வைகுண்டத்தை விட்டதும் பிராட்டியும் இவ்விடம் புக்கு வேடுவர் குலமகளாய் அவதாரம் செய்தனரென்பர்) லட்சுமி தேவி இங்கு செஞ்சுலட்சுமி என்ற பெயரில் வளர்ந்து வர பெருமாள் வேடனாக வந்து திருமணம் புரிந்தார். வைகுண்டம் விடுத்து இங்கு வந்து பிராட்டியும் அவதரித்ததை முன்னிட்டு செஞ்சுலட்சுமியைத் திருமணம் செய்யும் வரை இங்கேயே தங்கிவிட்டதாக ஐதீகம். பெருமாள் இங்கு வேடர்களுடன் வேடராய் ஆகிவிட்டார் என்றும் சொல்வர்.

அழகிய சிங்கர் என்ற பெயரில் இங்குள்ள நரசிம்மனைச் சேவிக்க ஒரு இளைஞர் வந்தார். அப்போது பெருமாளே ஒரு சந்நியாசி ரூபத்தில் வந்து அவருக்கு காட்சி கொடுத்து மந்திர உபதேசம் செய்து அவரைத் துறவறத்தில் சேர்த்து இங்குள்ள ராமானுஜர் சன்னதியிலிருந்து துறவாடையினையும் திரி தண்டத்தையும் கொடுத்து ஸ்ரீசடகோபஜீயர் என்ற திருநாமத்தையிட்டு ஒரு வைணவ ஸ்தாபனத்தை நிறுவுமாறு அருளியதாக ஐதீஹம். அப்போது இந்த ஜீயருக்கு வயது 17. பெருமாளால் ஜீயர் சுவாமிகட்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்திற்கு பிரேஷ மந்திரம் என்று பெயர். தான் எந்த உற்சவ மூர்த்தியை வைத்துக் கொண்டு திருவாராதனத்தில் ஈடுபடுவதென்று ஜீயர் பெருமானிடம் வேண்ட பெருமாள் இங்குள்ள உற்சவமூர்த்தியான மாலோல நரசிம்மனை ஜீயரின் கரங்களில் ஒப்படைத்தார் அன்று முதல் தொடர்ந்து வரும் அனைத்து ஜீயர்களும் இந்த மூர்த்தியைத் தான் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எழுந்தருளப் பண்ணி, ஆராதனை செய்து வருகின்றார்கள். 

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/T6uPr11w1rs

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/142384600895309/?sfnsn=wiwspmo

No comments:

Post a Comment