அத்யாயம்: 21 .. செருவாமணி
Written by Baskar Sathya
'பாலு, வா. இவா ரெண்டு பேரும் மன்னார்குடியிலிருந்து வந்திருக்கா. இவர் பெண்ணுக்கு ஒன்ன கேட்டு.'
டாக்டர் மூர்த்தியின் அறிமுக வார்த்தைகள்.
அசந்து விட்டார் செருவாமணி. டாக்டர் பாலச்சந்தர் அப்படி ஒரு அழகு. நல்ல சிவப்பு. கழுத்திலிருந்த ஸ்டெதாஸ்கோப் டாக்டர் மிடுக்கை தூக்கிக் கொடுத்தது.
தெய்வீக களை. புன்சிரிப்பில் அழகு பூரணமானது. மூக்குக் கண்ணாடி, டக் செய்த ஷர்ட். கொஞ்சம் பரந்த மார்பு. இளைஞனுக்கே உண்டான கம்பீரம்.
'அப்பா, நான்தான் சொன்னேனே. அடுத்த வருஷம் MD படிப்பை முடிச்சிட்டு யோசிக்கலாம்னு.'
'அவா கொழந்தையும் பட்டப் படிப்பு அடுத்த வருஷம் முடிச்சுடுவா. சரியா இருக்கும் பாலு. இந்தா இவர் பொண்ணு படத்த பாரு.'
பார்த்தான். ஆனால் எதுவும் பேசாமல் அப்பாவிடமே கொடுத்துவிட்டான்.
'எப்ப பொண்ணு பார்க்க போகலாம்?'
'இப்ப என்னப்பா அவசரம்? எதுக்கும் உப்புமு கிட்ட பேசுங்கோ.'
சொல்லிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான்.
'உப்புமு!!?'. செருவாமணி யோசிக்கும்போது டாக்டர் மூர்த்தி தொடர்ந்தார்.
'உப்புமு என் பொண்ணு. கனடாவில் இருக்கா. ஆத்துல கூப்படற பேரு உப்புமு. பேர் மீரா. தையு போன முதல் வருஷம்தான் அவளுக்கு கல்யாணம் ஆச்சு.'
'உப்புமுன்னு கூப்பிடறதுல ஒரு கதை இருக்கு. சின்ன குழந்தையா இருக்கும்போது உப்புமாவை சரியா சொல்லத் தெரியாது. உப்புமு உப்புமுனுதான் சொல்லுவா. நாங்க அவள கிண்டல் பண்ணி பண்ணி அவ பேரையே உப்புமுன்னு வெச்சுட்டோம்.'
இப்படித்தான் அன்பு பெருகிவிட்டால் எந்த பெயரையும் மனசு ஏற்றுக் கொள்கிறது முதலில் கோபப்பட்டாலும்.
பிறகு உப்புமு கல்யாணத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். இடையிடையே கோபு வாத்யாரும் சேர்ந்து கொண்டார்.
'ஆத்துக்காரிகிட்ட நான் நீங்க பொண்ணு பார்க்க எப்ப வர்ரதா சொல்றது?'
'ரெண்டு மூணு நாள் டைம் கொடுங்கோ. கோபு மூலமா சொல்லிடறேன். ஞாயித்துக் கிழமைதானே சௌகர்யப்படும்?'
'அப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்.'
'ஃபார்மாலிடீஸ் எல்லாம் வேண்டாம். இங்கேயே சாப்பிடுங்கோளேன் எல்லாரும்.'
கோபு இடைமறித்தார். 'மாமா, ஆத்துக்காரிகிட்ட இவாளுக்கு சமைக்க சொல்லிட்டேன். அப்புறம் அதெல்லாம் வேஸ்ட் ஆயிடும்.'
விடை பெற்றுக் கொண்டு பானுமதி அக்ரஹாரம் வந்தார்கள் மூவரும்.
நெஞ்சமெல்லாம் செருவாமணிக்கு நிறைந்திருந்தாலும், உடனே பொண் பார்க்கும் தேதியை பெற முடியவில்லையேன்னு வருத்தம். அதை கோபு வாத்யாரிடம் பகிர்ந்து கொண்டார்.
'பொண் பார்க்க சம்மதிப்பாளோன்னோ?'
'என்ன சார், கல்யாண சம்மதமெல்லாம் நீங்க எதிர்பார்க்கிறமாதிரி சீக்கிரம் சீக்கிரமா நடந்துடுமா என்ன? அமைதியா இருங்கோ. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். இல்லாட்டி, சேது சார் என்ன சும்மா விட்டுடுவாரா என்ன? உங்களுக்கு பையன பிடிச்சிருக்கோன்னோ?'
'என் நந்துக்கு பொருத்தமா இருப்பான் மாமா. உங்களைத்தான் மலை போல நம்பிண்டிருக்கேன்.'
'பார்க்கிறேன் சார். பையன் தங்கமான பையன். சாயந்திரம் அவன்கிட்ட வைத்தியம் பார்த்துக்கற கூட்டத்தை பார்க்கணுமே. அவன் குணத்தை விசாரிக்கணும்னா, அங்க வர பேஷண்ட்ஸ் கிட்டேயே விசாரிச்சுக்கலாம். பாலு டாக்டர்தான் இந்த ஏரியாவில பிரபலம். நாங்கள்லாம் கூட அவன்கிட்டதான் வைத்தியம் பார்த்துப்போம்.'
குளிர்ந்து கொண்டே இருந்தார் செருவாமணி. மனதுக்குள் பிரார்த்தனைகள். ஆனந்த விநாயகர், சமையபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீரங்கம் பெருமாள், வயலூர் முருகன், எல்லோருமே வந்தார்கள். மனசிலேயே கூப்பாடுகள், கும்பிடுகள், ப்ரார்த்தனைகள். பக்தாளுக்கு மாத்திரம் இவைகள் ஈஸி. அதுவும் கண்ணுல ஏக்கம் இருக்கும்போது.
சாப்பிட்டார்கள். சிறிது ஓய்வு.
'ராத்திரி தானே ட்ரெயின் உங்களுக்கு? சாயரக்ஷை நாலு மணிக்கெல்லாம் கபாலீஸ்வரர் கோவில் தொறந்துடுவா. தரிசனம் பண்ணிட்டு பலகாரம் பண்ணிட்டு எக்மோர் கிளம்பினா சரியா இருக்கும்.'
கோபுவே சொல்லிட்டார் கற்பகாம்பாள் கைவிட மாட்டாள்னு. ஏற்கனவே உள்ள லிஸ்டுல இவளையும் சேர்த்துண்டா போச்சு.
'உங்களுக்குத் தான் ரொம்ப சிரமம் கொடுக்கறோம்.'
'நான் என்ன பெருசா செஞ்சுட்டேன். சேது சாருக்காக செய்யறதே பாக்கியம்.'
'மாமி கொழந்தைகள்லாம் அழச்சிண்டு மன்னார்குடி கண்டிப்பா வாங்கோ. ஆத்துக்காரி சந்தோஷப்படுவா.'
மாலை கபாலீஸ்வரர் கோவில் தரிசனம். உடம்பே ஜில்லுனு போகிற அளவு இதத்தை கொடுத்தது கற்பகாம்பாள் சந்நிதி. பச்சை கலர் மடிசார் புடவையில் வந்திருக்கும் பெண்களின் அழகுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தாள் கற்பகாம்பாள்.
'ட்ரெயின உட்டுடப் போரோம் மாப்ள' என்று ஒவ்வொரு சந்நிதியிலும் செருவாமணியை விரட்டும்வரை பிரார்த்தனைகள்.
செருவாமணியின் உள்ளுக்குள் அவரை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஜம்பு ஜோஸ்யர் பூகம்பத்திற்கு இங்கிருக்கும் சந்நிதிகள் ஒன்றாவது விடை கொடுக்காதா என்ற நப்பாசை இருக்காதா பின்னே?
'பேசாம கோபு வாத்தியார் கிட்டேயே கேட்டுட்டா என்ன?'
'ச்சே, ச்சே, அவரே பையனைப் பத்தி அவ்வளவு உயர்வா சொல்லும்போது.. இப்பப்போய் கெடுத்துக்க கூடாது.'
'நாம ஏதோ கேட்கப் போய், கோபு வாத்தியார் கோச்சுண்டு இந்த சம்பந்தத்திலிருந்து விலகிட்டா?'
'பொண் பார்த்துட்டு போகட்டும். நைஸா சித்தப்பா கிட்ட சொல்லி சந்தேகத்தை தீர்த்துக்கலாம்.'
'இப்ப இந்த பேச்ச ஆரம்பிச்சா, சாலி வேற வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பா.'
'சந்தேகத்த மனசுல வெச்சிண்டு சந்தோஷமா மன்னார்குடி போறதுதான் நல்லது.'
ட்ரெயின் ஏறியாச்சு. செல்லப் பெட்டிய திறந்தாச்சு.
தொடரும்...
No comments:
Post a Comment