Sunday, December 5, 2021

ஹாஸ்பிடல்அனுபவங்கள்

 #ஹாஸ்பிடல்அனுபவங்கள்  

👆by Mr. Swaminathan Ramasubramanian in fb madhyamar group.

பொதுவாக நான் இந்த பதிவை அதிகம் மீள் செய்வதில்லை. நம் ஷங்கர் ராஜரத்தினம் சாருக்கு மிகவும் பிடித்த பதிவு இது. நிறைய பேருக்கு இதை படிக்க அவர் பரிந்துரைத்திருக்கிறார் 

வானப்ரஸ்தம் 

வரும்.... ஆனா.... வராது ...

என் பல கால இனிப்பான சக்கரை வாழ்க்கையில் அப்போதைக்கு ஏதேதோ பயமுறுத்தும். இன்சுலினே ஜீவாதாரமாக ஆகி போனதில் எல்லாம் நல்லா தானே போயிட்டிருந்துச்சு..

ஒண்ணரை வருடத்திற்கு பிறகு வழக்கமாய் ஒரு ‘டி எம் டி’ என சுருக்கமாக அழைக்கப்படும் ட்ரெட்மில் டெஸ்ட். எல்லா காலங்களிலுமே டெஸ்ட் நமக்கு ஒத்து வராது.பள்ளிகூட டெஸ்ட்கள் போல இதுவும் நெகடிவ் ஆக வரக்கூடாதா .. எப்போ தேவை இல்லையோ அப்போ தான் நம்ம பாசாவோம் போல.. பாசிடிவ் ....

ஆறு நிமிடத்திற்கு பிறகு நிறுத்த சொல்லிவிட்டேன். பீக்கிலும் . ரிகவரி என சொல்லப்படும் பீரியடிலும் அதிக டீவியேஷன்.. என் முன்னோர்கள் எவ்வளவோ சத் விஷயங்களை சொத்தாக கொடுத்திருந்தாலும், நான் பெற்றுக்கொண்டது என்னவோ சக்கரையையும் இதய அடைப்புகளையும் தான்.

ஒரு மாதத்திற்குள் கண்டிப்பாக ஆஞ்சியோகிராம் செய்து கொள் - குடும்ப கார்டியாலஜிஸ்ட்.

இஸ் இட் எ மஸ்ட் டாக்டர் ? நான் வேணா இன்னொருமுறை ட்ரெட்மில் ஒடட்டுமா ?

கார்டியாலஜிஸ்ட் மனதிற்குள் சிரித்திருக்க வேண்டும்.. எல்லாவற்றையும் விளக்கினார். பல வருட பழக்கம். என் அம்மாவின் டாக்டர்.

95க்கு பிறகு எங்கள் குடும்பத்தில் ஏதோ அடிபட்டால் வலித்தால் ஐயோ அம்மா என்று சொல்ல மாட்டோம் . 'குமார்' என்றே கூப்பிட்டு வழக்கமாகிவிட்டது. குழந்தைகள் இதய அறுவை சிகிச்சையில் இந்தியாவின் தலை சிறந்த நிபுணன். நெருங்கிய உறவினன்.

அமெரிக்க ஆஸ்பத்திரிகளால் ம் . ம் பூட்ட கேஸ் என்று கைவிடப்பட்ட பல குழந்தைகளுக்கு உயிர் கொடுத்ததை கூகுளும் மருத்துவ உலகமும் பறை சாற்றுகின்றன.. என்னை விட நான்கு வயது சிறியவன். அவன் சாதனைகளையும்,புகழையும் விட அவன் பணிவும் பண்பும் வணங்குதற்குரியவை

தள்ளி போட வேண்டாமே ராஜூ . இந்த வாரம் செவ்வாய் பண்ணிக்கலாமே. நான் ஊர்லேந்து வந்து விடுவேன்.

வீட்டு மற்றும் அலுவலக வேலைகள் பொருட்டு வரும் அம்மாவாசை அன்று செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஒரே கண்டிஷன் . குமார் . நீ ஊரில் இருக்க வேண்டும்.

சரி என்றான் .

இந்த வாரம் திங்கள் ஆபீஸ் போனேன். மதியத்திலிரிந்து ஏதோ போல் உணர நாலரை மணிக்கே கிளம்பி விட்டேன். முதல் தளத்தில் இருக்கும் என் வீட்டிற்கு வரவே சிறிது கஷ்டப்பட்டேன்.

மன பிராந்தியோ ? ஏதேதோ போட்டு கவலை கொள்கிறேனோ ?

இந்த மாதிரி நேரங்களில் சான்ஸ் எடுக்க கூடாது.. குமாரிடம் போய் விட வேண்டும் . அவனிடம் போய் எது நடந்தாலும் எனக்கு ஏற்புடையதே.

ஓலா டாக்சி சரியான நேரத்துக்கு வர ' கொஞ்சம் மெதுவாக பள்ளம் பார்த்து போப்பா'.. வழி நெடுக ட்ராபிக். ஏழரை மணிக்கு ஆஸ்பத்திரியை அடைந்து , ஈ. சீ.. ஜி நார்மல் ஆக இருந்தது.. பிரஷர் கொஞ்சம் கூட இருந்தது. தட்ஸ் ஓகே. இரவு எக்கோ முடித்தார்கள்.. கண்காணிப்பில் இருக்கட்டும் என்று அனுமதி செய்து மணிக்கு ஒரு முறை ஏதோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

பிரத்யேக உடை அணியப்பட்டு நான் ரிலாக்ஸ் ஆக இருக்க ஏதோ மருந்துகளும் செலுத்தப்பட்டு , காலையில் எட்டு மணி சுமாருக்கு ஆஞ்சியோ கிராம் என தீர்மானித்தார்கள்.

இரவுகள் நிசப்தமாக இருக்கின்றது. கேஸ் ஷீட், பிரஷர் பார்ப்பது, நோடுகள் உடலோடு ஒட்டப்பட்டு மானிட்டரில் ஏதேதோ எண்களும், க்ராப்ஃகளும் நோட்டமிட்டவாறு நர்சுகள் சுறு சுறுப்பாக இருந்தார்கள்.

அவர்களின் தினசரி வாழ்கையை ரசித்து கொண்டிருந்தேன். ஒரு நடுத்தர வயது நர்ஸ் தன்னை மறந்து பாடி கொண்டிருந்தாள் .

சிஸ்டர் .. நீங்க ரொம்ப நல்லா பாடறீங்க.

காலைல இறைவன் நாமத்தை பாடுவது ரொம்ப பிடிக்குங்க ..

நாலரை மணிக்கு அரக்கு வண்ண உடை அணிந்த ஒரு ஊழியர் என்னை எழுப்பி இரண்டு பிளேடுகள் கொண்டு ரோமங்கள் அனைத்தையும் அகற்றினார். சர்வாங்கம் ... ‘மழித்தலும் நீத்தலும் வேண்டா உலகம்.’...சீன டூத் பிரஷால் பல் துலக்கி ஒரு பேசினில் துப்ப சொன்னார்கள்.

ஒரு நர்ஸ் வெது வெதுப்பான நீரில் உடல் அனைத்தையும் துடைத்தாள்..

தூக்கு மேடை கைதியின் கடைசி நாள் போல் உணர்ந்தேன்...

'அந்த்ய கால தள்ளி சிந்தி சொஹங்கே….. நாராயண', புரந்தரதாசர் காதுகளில் ஒலித்தார்.

முன்னிரவே அண்ணனிடமும், மனைவியிடமும் எல்லா ஏ டி எம் பாஸ்வொர்ட்கள், போன் கீ ,முக்கியமான நபர்களின் பட்டியல், இன்சுரன்ஸ் ஏஜெண்ட் உள்பட தெரிவித்தேன் . எல்லா வங்கி கணக்குகளிலும் நாமினி போட்டிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன்..அஞ்ஞானம் பற்ற அசட்டுத்தனமான எண்ணங்கள் ச்.சே.....

மீண்டும் ஒரு நீல நிற உடைக்கு மாற்றப்பட்டு, ஸ்ட்ரெட்சரில் படுக்க வைத்து மேல் தளத்திலுள்ள ஆபரேஷன் தியேட்டர் முன்னம் உள்ள லவுஞ்சில் வைக்கப்பட்டேன் . ஒரு பக்கம் குழந்தைகளுக்கான கேத் லேப் .மறுபக்கம் என் போன்றவர்களுக்கான கேத் லேப். நடுவில் லவுஞ்… க்யூவில் .ஒவ்வொரு ப்ரோசீஜர் முடிந்ததும் ‘ஜரகண்டி’ தான்..

பக்கத்தில் ஒரு ஆறு மாத குழந்தை வீல் வீல் என்று அலறி கொண்டிருந்தது. நர்சுகள் அதை தோளில் தூக்கி மலையாளத்தில் ' வோண்டாண்டா ... அம்மை வரு' என்று ஆசுவாச படுத்தி கொண்டிருந்தார்கள் . இந்த பக்கத்தில் ஒரு ஆறு வயது தெலுங்கு சிறுமி 'அம்மகாரு' என்று அழுது கொண்டிருந்தது. கான்ஜிநிடல் ஹார்ட் ப்ராப்ளம்ஸ்.. ஐ சி யு மற்றும் ஆபரேஷன் தியேட்டர்களின் தாய் மொழி மலையாளம் தான். இருப்பினும் நானும் நர்சுகளுடன் சேர்ந்து தெரிந்த சுந்தர தெலுங்கில் தைரியம் சொன்னோம்.

'கருவோடு வந்தது தெருவோடு போனது ; மெய்யென்று மேனியை யார் சொன்னது'

சுவாமிநாதன் .... என் பெயர் அறிவிக்க பட்டது...

தியேட்டர் கடும் குளிராக இருந்தது. ஸ்ட்ரெட்சரில் மீண்டும் ப்ரோசீஜர் செய்யும் டேபுளுக்கு மாற்ற பட்டேன் .. உடைகள் களையப்பட்டன . இடுப்பிற்கு கீழ் ஜிலு ஜிலுவென ஒரு வழ வழ ஜெல் தடவப்பட்டது. சுறுசுறுப்பாய் இளவயது தாதியர்கள் இயங்கி கொண்டிருந்தார்கள்.

அனஸ்தீசியா டொக்டர் ஈ சமய வரு . காணிச்ச புறகு சர்ஜன் வரு .. இன்னும் இரண்டு நாட்கள் இருந்தால் நானே மலையாளத்தில் சம்சாரிச்சு விடுவேன் ...

தலைக்கு மேல ஒரு அமெரிக்க மிஷின் படம் எடுத்து கொண்டிருந்தது .

எதிரே தொண்ணுறு இன்ச்சுக்கும் குறையாமல் ஒரு பிளாஸ்மா டி வி .

குட் மார்னிங் ஜென்டில்மேன் . ஆர் யு ஓகே ? பிரபல சர்ஜன் வந்து விட்டார் .

ஐ அம் டூயிங் குட் டாக்டர்.

இடுப்பில் சின்னதாக ஒரு ஓட்டை போட போகிறோம். உங்களுக்கு வலிக்காது. அதன் வழியே ஒரு ட்யுபை செலுத்தி அதன் மூலம் ஒரு டை (Dye) அனுப்ப போகிறோம். அதன் பின்னூட்டத்தில் உங்கள் ரத்த குழாய்களில் அடைப்பு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்துவிடலாம்.

ரிலாக்ஸ் யங் மேன் ....இந்த டி வி யில் நீங்களே இதை பார்க்கலாம். 

உங்களுக்கு எவ்வளவு வயது ? என்ன பண்றீங்க போன்ற பேச்சுக்கள் கொடுத்து ஓட்டை போட ஆரம்பித்தார்.

‘காயமே இது பொய்யடா ; காற்றடைத்த பையடா’

அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சியை கண்டு பரவசமாய் இருந்தது. நானே என் சர்ஜரியை லைவ் ஆக பார்க்கிறேன்.மரகிளைகள் போன்று தோன்றிய ரத்த நாளங்கள்.

உங்கள் மனைவி அப்சட் ஆக இருக்கிறார்கள் . அவர்களை பார்த்து ஒரு ஹலோ சொல்லுங்கள் .

கண்ணாடி வழியாக என் மனைவி மற்றும் அண்ணாவை பார்த்து தம்ஸ் அப் சொன்னேன் ..தலைவர் ஸ்டைலில் 'கூல்' என்றேன் ..

சர்ஜனை சுற்றி துணை டாக்டர்கள். ம் .. ஃபோர்த் சேம்பர் பாருங்க .. ஒ கே.

இந்தியன் படமும் கிரேசி மோகனின் வசனமும் நினைவுக்கு வந்தன.

ஒட்டகம் வாயில்லா பிராணி; அது எப்படி கடிக்கும் டாக்டர் !!!!!

அட் ஹாக் பி டி சி எ .. ஒ எம் லேடில் (LAD) ஒரு 100% ப்ளாக் .. மெல்லிய குழாய் மீண்டும் நகர்ந்தது.

மற்றொரு 80-90% ப்ளாக்.. மேலும் ஒரு 50% ப்ளாக். கஷ்டப்பட்டு படிச்சபோதேல்லாம் ஒரு வாத்யார் கூட நூறு போடல.

இப்ப எல்லாரும் தொண்ணூறு , நூறு போட காத்துகிட்டு இருக்கேங்களேடா - என் மைண்ட் வாய்ஸ்.

குட். ட்ரிப்பிள் வெசல் இல்லை .. உங்களுக்கு ஒரு ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய போகிறோம் . இரண்டு ஓட்டைகளை அடைக்க மெடிகேடெட் ஸ்டன்ட் வைக்க போகிறோம். மற்ற ஓட்டைக்கு மாத்திரை போதுமானது..

அதே குழாயில் கதீடர் எனப்படும் மெல்லிய கம்பி. அதன் முனையில் ஒரு பலூன் ; அதற்குள்ளே ஸ்டன்ட். எந்த அடைப்புகளில் ரத்தம் பயணிக்கவில்லையோ அதற்கே சென்று பிரஷர் கொடுத்து பலூனை உப்பி விட அதனுள்ளே இருந்த ஸ்டன்ட் (ஃபைபர்களால் ஆன) சமர்த்தாக ஒட்டி கொண்டது .

மீண்டும் அதே பாணி வேறொரு அடைப்புக்கு. தம்பி அந்த அஞ்சுக்கு அஞ்சு ஸ்பானர் எடு என்று கூறும் மெகானிக் போல் சில நிமிட கலந்தாய்வுக்கு பிறகு நீளம், அகலம் எது சரியாய் வரும் 2.25 X 15 mm என்று அப்போதே முடிவெடுக்கிறார்கள்.

கொஞ்சம் கூட பிரஷர் கொடுப்பேன். நெஞ்சை அழுத்துவது போல் இருக்கும் பயப்படாதீங்க. அப்ப தான் ஸ்டன்ட் கடைசி வரை போகும்.

நோ ப்ராப்ளம் டாக்டர் .. ஐ ஆம் என்'ஜோ'யிங். ஆங் .நானும் மலையாளி ஆயிட்டேனே ..

ஆல் ஓவர் .. எல்லா அடைப்பு குழாய்களும் தடியாக தெரிகின்றன.. ரத்தம் சீராக செல்கின்றன..

ஜூடோ ரத்தினம் , விக்ரம் தர்மாவிற்கு இணையாக சுவாமிநாதன் ஸ்டென்ட் மாஸ்டர் ஆகிவிட்டார்.

சர்ஜன் கேட்டார் " ஆர் யு பீலிங் குட் ?".

சூப்பர் டாக்டர் .. சென்னையில் ஜஸ்(ட்) ஜூஸ், ஜஸ்(ட்) பராத்தா என்று வேடிக்கையாக கடைகளுக்கு பெயர் வைப்பது ட்ரெண்ட். இதில் இனி ஜஸ்(ட்) ஏஞ்சியோபிளாஸ்டி யும் சேர்க்க வேண்டும். அவ்வளவு எளிதாக்கி விட்டீர்கள். கூடிய விரைவில் ‘ஹாப்பி ஆஞ்சியோ பிளாஸ்டி’ கார்டுகள் கூட விற்பனைக்கு வந்துவிடும் என்றேன். நன்றி...

சிரித்தார்

பிறகு இரண்டு நாட்கள் சி சி யு வாசம் . மீண்டும் நோடுகள் மார்பு மற்றும் தோள்களோடு இணைக்கப்பட்டு மானிட்டரில் கண்காணிக்கிறார்கள். நல்ல வேளை தனிமை இல்லை . என்னை போன்றே சில மனிதர்கள். பல வயதானவர்கள். பீப் பீப் என்று மானிடர் சத்தம் போட்டு கொண்டே இருக்கும். முதல் நாள் நீராகாரம் தான். இரண்டாம் நாள் ராகி, ஓட்ஸ் கஞ்சி, பாசிபருப்பு பொங்கல், உப்பு ,புளிப்பு, காரம் இன்றி ஆனாலும் சுவையான உணவு கொடுக்கிறார்கள்.

இரண்டு பேருக்கு ஒரு நர்ஸ் என்ற விகிதத்தில் ஒவ்வொருவரும் ஆறு மணி நேர ஷிப்ட் பார்க்கிறார்கள். எல்லாருமே நான்கு வருடம் நர்சிங் கல்லூரியில் படித்து அப்போல்லோ போன்ற நிறுவனங்களில் அனுபவம் பெற்று மற்ற ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். எல்லாம் இருபது நான்கு வயதிற்குட்பட்ட இளைஞர்கள். முழு யூனிட்டின் கட்டுப்பாடு ஒரு சீப்ஃ நர்சிடம் வருகிறது, எல்லோருமே சிரித்த முகத்துடன் அர்பணிப்பு உணர்ச்சியுடனே காணப்படுகிறார்கள். அரை மணி முன்னதாகவே வந்து ஷிப்ட் டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள். ஆறு மணியில் நடந்த மாற்றங்கள், குறிப்புகள், கொடுக்க வேண்டிய மருந்துகள் இன்ன பிற.. அதே போல் சீப்ஃ நர்சும் தனது நிகழ்வுகளை ஒவ்வொரு நோயாளி படுக்கை அருகே வந்து கேஸ் ஷீட் வைத்து கொண்டு விவரிக்கிறார்.

அழகர் என்ற திறமை மிகுந்த இளைஞனும் அனூப் என்ற சிரித்த முகத்துடைய கேரளத்து இளைஞனும் என்னை பெரும்பான்மையான நேரங்களில் கண்காணித்து கொண்டனர். அழகர் கர்மவீரர் பிறந்த விருதுநகர் மாவட்டம். அதனால் தானோ என்னவோ கருணை இயற்கையாக வருகிறது. நடு விரல் அளவுக்கு நீண்ட ஒரு சிரிஞ்சை என் இடுப்பில் இருந்து கையால் அமுக்கி அமுக்கி ரத்தம் பீச்சிட அடுத்த நாள் எடுக்க வேண்டும் . அரை மணி அமுக்கி அமுக்கி அவன் என்னை தெம்பேற்றி எடுத்த விதம் என்னை இன்னமும் நெகிழ செய்கிறது .

திடீரென்று இரவு மூணு மணிக்கு ஒரு எமெர்ஜென்சி கேஸ் வரும். எல்லாம் ஓடுவார்கள் . பரபரப்பாக இயங்குவார்கள். அதே உற்சாகம். அதே அர்பணிப்பு.

முக்கால்வாசி பேருக்கு திரை மறைத்து பெட் பேன் வைத்து மூத்திரம் போக செய்ய வேண்டும். டப்பா வைத்து மலம் கழிக்க வைக்க வேண்டும். ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்.

நிர்வாணம் பேஷஜம் பிஷக்

இவர்கள் எல்லாமே காம க்ரோதாதியை வென்றவர்கள் போல் தோன்றுகிறது.

அவதூதர் சதாசிவ பிரமேந்திரர் ஒரு முறை நடந்து செல்கிறார். அவரது கையை ஒரு கிராதகன் வெட்டுகிறான் . ஒன்றுமே நடக்காதது போல் அவர் நடந்து போகிறார்,உடல் வேறு ஆன்மா வேறு என்று அறிந்த அந்த ஞானி . கையை வெட்டியவன் ஐயோ என்று அலறுகின்றான்.

இந்த நர்சுகளும் ஒரு விதமான ஞானியாகவே எனக்கு தோன்றினார்கள்.

என்ன அழகர் ? எங்க வேக வேகமாய் கிளம்பறீங்க ?

படம் போறேன் சார். என்ன படம் ?

காகா முட்ட

காலைல எப்ப வருவீங்க?

எட்டு மணி ஷிப்ட் சார் . நல்லா தூங்குங்க குட் நைட் சார் .

எதிர்த்த பெட் பாட்டிக்கு நாக்கு செத்து விட்டது.

ப்ரெட் வேண்டாம்பா. இந்த ராகி கஞ்சியை எடுத்துகிட்டு போயிடேன் . ஓட்ஸ் கஞ்சியே பரவாயில்லப்பா . அதையாவது கொடேன். இன்சுலின் வேற போட்டாச்சு . ஏதாவது சாப்பிடனும்பா .. சீக்கிரம் வேற ரூமுக்கு அனுப்புப்பா .

கவலைபடாதீங்க பாட்டி. சாயிங்காலம் பெரிய டாக்டர் பார்த்த பிறகு அனுப்பிடலாம், ஆதரவாய் அனூப் .

ஆமா.. இதையே தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க .

எனக்கு கஷ்டமாய் இருந்தது. எனக்கு வந்த ஓட்ஸ் கஞ்சியை பாட்டிக்கு கொடுக்க சொல்லி நான் ராகி கஞ்சியை சாப்பிட்டேன் .நன்றாக தான் இருந்தது .

கொடுக்கப்பட்ட ஒரு மணி நேர பார்வையாளர் நேரத்தில் ஓரிரு நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வந்து நலம் விசாரித்தனர்.

டேய்.. அமைதியாய் இருடா ..பேசிகிட்டே இருக்கியே ஆபரேஷன் பண்ணவன் மாதிரியா இருக்க ?..

என் மூச்ச நிறுத்தினாலும் பேச்ச நிறுத்த முடியாதுடா.

'எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குக்
கண்,கால், உடம்பில் கரக்கின்ற கைகளில்
புண் கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற
நன்பால் உடம்புதான் நால் உடம்பு ஆகுமே-- (திருமந்திரம்)'

டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வார ஒய்வு ..மீண்டும் நடை பயிற்சி நாளை முதல் மீண்டும் ஈ மெய்ல்கள், தினசரி கார்பரேட் வாழ்க்கை.

என் தினசரி பட்டியலில் கூடுதலாக ஐந்து மாத்திரைகள். நினைவு படுத்த பொறுப்பான வாழ்க்கை துணைவி

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றோம் . சிறிய உலகத்தின் சிறிய மனிதர்களிடம் பெரிய பாடம் கற்கின்றோம். பெரும் கடமைகள் மீதி இருப்பினும் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி மெதுவாக நகர்வது போல் தெரிகிறது.

'விசையுறு பந்தினை போல் உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் 
நசையறு மனம் கேட்டேன் ; நித்தம்
நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்

தசையினை தீ சுடினும் சிவ
சக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் 
அசைவுறு மதி கேட்டேன் இவை 
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ'..

பி. கு :  

ஜூன் 2019 வந்தால் நான்கு வருடம் பூர்த்தியாகிறது. சௌக்கியமாக இருக்கிறேன்.  Take Care.  உடம்பை பார்த்துக்கொள்ளவும் போன்ற கமெண்ட்களை தவிருங்கள்

No comments:

Post a Comment