Wednesday, February 28, 2024

நவ பிருந்தாவனம் --7

 நவ பிருந்தாவனம் --7

By Ramesh 

நவபிருந்தா வனத்தில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்

இனி நவபிருந்தாவனத்தை தரிசனம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளைக் காணலாமா?

1. நவ பிருந்தாவனம் தீவு பகுதிக்குள் உணவு, தின்பண்டப் பொருள்களை கொண்டு சென்று உண்ணக் கூடாது.

2. இந்த தீவைச் சுற்றியுள்ள நீரில் வாய் கொப்பளிப்பது, முகம் கழுவுவது கூடாது.

3 எக்காரணம் கொண்டும் குளிக்காமல் நவபிருந்தாவனம் வளாகத்திற்குள் நுழையக்கூடாது.

4. லுங்கி, பேண்ட அணிந்து கொண்டு உள்ளே செல்வது கூடாது. வேஷ்டி, துண்டு அணிந்து செல்வது சிறந்தது.

5. பெண்கள், குளித்தபின், தலையை விரித்த நிலையில் உள்ளே செல்லக் கூடாது.

6. நவபிருந்தாவனத்தைச் சுற்றி போடப்பட்டிருக்கும் மஞ்சள் கோட்டைத் தாண்டி உள்ளே செல்லக் கூடாது.

7. நவபிருந்தாவனங்களை எந்தக் காரணம் கொண்டும் தொட்டு வணங்கக் கூடாது.

8. 11 விளக்குகளை அரங்கநாதர் சன்னதியில் ஏற்றி வழிபட்டு 11 முறை நவபிருந்தா வனங்களை வலம் வரலாம்.

9. அங்க ப்ரதக்ஷணம் செய்யக்கூடாது.

10. உப்பு, மிளகு முதலியவற்றை பிருந்தா வனங்களின் முன்பு சமர்பிக்கக்கூடாது. கற்பூரமும் ஏற்றக் கூடாது.

 ஏனென்றால் இம்மகான்கள் எல்லாம் பரம வைராக்கிய புருஷர்கள், ஆச்சார அனுஷ் டானங்களில் மிகவும் கண்டிப் பானவர்கள், 

எனவே அங்குள்ள தெய்வீக நிலை பாதிக்கப்படாமல் அமைதியுடன் வழிபட்டு வருவது பக்தர்களாகிய நமது கடமையாகும் 

 நாம் நவபிருந்தா வனம் செல்வது நமது துன்பங்களை தொலைத்து நன்மை பெற தானே ஒழிய , நாம் செய்யக் கூடாத செயல் களை செய்து மேலும் பாவங்களை நாம் அதிகப்படுத்திக்கொள்ளகூடாது என்பதற்காகவே இந்த விதிமுறைகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். 

 எந்த விதத்ததிலும் ஆழ்ந்த தியானத்தில் சமாதியில் தவமிருக்கும்   மகான்களின் தியானத்திற்கு எந்த விதமான பங்கமும் வராதவாறு தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.

இனி நவபிருந்தா வனங்களின் அமைப்பைப் பார்ப்போமா, 

அவதாரத்ரய அனுமனின் ஆலயத்திற்கு நேர் எதிரே நடு நாயகமாக ஸ்ரீ வியாஸராஜரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. 

 ஏனென்றால் இந்த இடத்தில்தான் ஸ்ரீபிரஹலாதன் தவம் செய்திருக் கின்றார்.

இவருக்கு வலப் புறம் இவரது சீடர்கள் மற்றும் இவருக்குப்பின் பிருந்தாவன ஸ்தரானவர்கள் பிருந்தாவனங்கள் உள்ளன. 

இவருக்கு இடப்புறம் இவருக்கு முன் பிருந்தாவனஸ்தர் ஆனவர்களின் பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. 

இந்த பிருந்தா வனங்களில் வியாஸராஜரின் பிருந்தாவனத்தின் முன் நான்கு தூண்கள் உள்ளன. அவரது பிருந்தா வனத்தின் நான்கு பக்கங்களிலும், சீதாராமர், லக்ஷ்மணன், அனுமன் வியாஸராஜர் சிற்பங்கள் உள்ளன. பீடத்தில் யாணை சிற்பங்கள் உள்ளன.

இரண்டாவது பிருந்தாவனத்தில் ஒரு போர் வீரனும் சந்நியாசியும் சிற்பமாக உள்ளனர். ஸ்ரீஜய தீர்த்தர் தோண்டுபந்த் என்று வீரனாகவும், சந்நியாசியாகவும் உள்ளதை இது குறிக்கின்றது என்பார் ஒரு சாரார். 

இல்லை ஸ்ரீரகு வீர்யரை ஒரு சமயம் ஒரு மிலேச்சன் துரத்தி வந்ததை இது குறிக்கின்றது என்பது இன்னொரு சாரார் வாதம். 

ஒன்பதாவது பிருந்தாவனமான கோவிந்த ஒடையரின் பிருந்தாவனம் பத்மநாப தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கு பக்கத்தில் உருவில் மிக சிறிய பிருந்தா வனமாக விளங்குகின்றது. 

இவரது பிருந்தா வனத்தில் சன்னியாசி, அனுமன், வீரன் சிற்பங்கள் உள்ளன. நவ பிருந்தா வனத்திற்கு செல்லும் அன்பர்கள் பூஜைக்கு வேண்டிய விளக்கு நெய், திரி முதலியவற்றை தாங்களே எடுத்து செல்லவேண்டும் அங்கு கிடைக்காது.

எல்லோரும் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்திவிட்டு வரும் வரை அங்கே அமர்ந்து மகான்களில் அருள் மழையில் நனைந்து மிகவும் நிறைவான மனதுடன் இன்னும் பலமுறை தங்கள் அனைவரையும் சேவிக்கும் பாக்கியம் அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டே வெளியில் வந்து படகில் ஏறி துங்கபத்ரையை கடந்து ஆனேகுந்தி வந்து சேரலாம்.

ஆனேகுந்தி திரும்பி வந்து நீங்கள் போகும் போது சொல்லிவிட்டு சென்ற *HOOVA CAFÉ* வந்தால் உணவு சுடச்சுட தயாராக இருக்கும். 

உணவு வீட்டுச் சாப்பாடுதான், இனிப்பு, பாயசம், அப்பளம் ஊறுகாய் என்று தேவா மிர்தமாக இருக்கும். 

 அங்கே  தமிழில் பேசும் ஒரு இளைஞர் எல்லா உதவிகளும் செய்வார்  , அவர்  ஒரு வழிகாட்டி ( Guide ) அவர் பெயர் மஞ்சுநாத்.*  உதவிக்கு  அவரது செல் போன் எண் 09449284490, 09480567616 ... முன்கூட்டியே போன் செய்தால் வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருவார் .

தானத்தில் எல்லாம் சிறந்தது அன்ன தானம் அல்லவா? அதனால்தான் ஔவையாரும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறுகிறார். 

மதிய உணவிற்கு பிறகு  மடத்திற்கு அன்னதானத நன்கொடை  ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவன மடத்திற்கு வழங்குங்கள், 

நன்கொடையை பெற்றுக்கொண்டு இரசீது கொடுத்து, ஹரிவாயு குருவிற்கு ஆரத்தி காட்டி தரிசனம் செய்து வைத்து நிறைய பிரசாதமும், அங்கவஸ்திர மரியாதையும் கொடுத்து நம்மை ஆச்சிரிய படுத்துவார்கள்.

ஆனேகுந்தி இராகவேந்திரர் பிருந்தாவனத்தில் நீங்கள்  மேலே படித்த விதி முறைகள் எல்லாம் இங்கு அனைவரும் காணும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளன

இந்த மிருத்திகா பிருந்தாவனம் மந்தராலய மடாதீசர் ஸ்ரீஸ்ரீ ஸுஷமீந்த்ர தீர்த்தரால் 2001 ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

 முதல் நாள் சாயுங்காலமே ஆனேகுந்தி செல்பவர்கள் இங்கு இரவு தங்கிக் கொள்ளலாம், உணவு ஏற்பாடு களும் முன் கூட்டியே சொன்னால் செய்து தருகிறார்கள்

 நம்முடைய பொருட்களையும் இங்கே வைத்து விட்டு செல்ல வசதிகள் உள்ளன.

 காலையில் பட்டர் நவபிருந்தாவனம் செல்லும் போது அவருடன் கூடவே சென்று அபிஷேகம் பார்க்கலாம்.

ஆனேகுந்தி ராகவேந்திர மடத்தின் மேலாளர் 

👇👇👇

 M.S.Ramesh  09480305874 , 

 மடத்தின் தொலைபேசி எண்:👇👇 08533-267733.

மேலும் சொல்கிறேன்......

நவ பிருந்தாவனம் -6

நவ பிருந்தாவனம் -6👆👇

By Ramesh 

மேலே படத்தில் உள்ள போர்டில் தமிழில் எழுதி உள்ளனர்....

இந்த 9 மகான்களும் உயிருடன் இன்றும் சமாதியில் உள்ளனர் என்பதற்கு இதுவே அத்தாட்சி... 

நவபிருந்தா வனங்கள்

(பெயர்களுடன் படத்தை பெரிதாக்கிப் பார்க்கவும்)

நவபிருந்தா வனத்தில் நாங்கள் முதலில் சேவிக்க வேண்டிய சன்னதி அரங்க நாதர் சன்னதி ஆகும். 

அரங்கநாதர் சன்னதியும், ஜாக்ரதை அனுமன் சன்னதியும் சிறிது உயரமாக அமைந்து ள்ளதால் நாம் உள்ளே நுழைந்த வுடன் வலப்பக்கம் உள்ள இச் சன்னதிக்கு படியேறி செல்ல வேண்டும். 

உள்ளே சென்றால் பாம்பணையில் யோக நித்திரையில் உள்ள அரங்க நாதரை சேவிக்கலாம்.

இம்மூர்த்தத்தின் ஒரு தனி சிறப்பு பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. 

 இங்கு நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது என்பதால் ஒன்பது நெய் விளக்கு ஏற்றவும்.

பல சமயம் அங்கு பூஜை சாமான்கள் எதுவும் கிட்டாது நாமே எடுத்து செல்வது நல்லது.

பூலோக வைகுண்ட மாம் திருவரங் கத்தில் கங்கை யினும் புனிதமான காவேரியின் நடுவில் உள்ள அரங்கத்தில் பெருமாள் இதே விதமாக ஆதி சேஷனில் யோக நித்திரையில் சேவை சாதிக்கின்றார். 

இங்கே இந்த துங்கபத்ரையின் அரங்கத்திலும் பெருமாள் அரங்கநாதனாகவே சேவை சாதிக்கின்றார். 

அங்கே தாயார் , பிரம்மன் எதுவும் இல்லாத யோக சயனம் இங்கே பெரிய பிராட்டியுடன் கூடிய போக சயனம்.

இச்சன்னதியின் அருகே ஜாக்ரதை அனுமனின் சன்னதி உள்ளது. இச் சன்னதியில் அனுமன் தனது இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். 

இவரது சன்னதியிலும் விளக்க்கேற்றவும். இங்கு ஒரு பத்து நிமிடம் அமர்ந்து வாயு குமாரனை மனதில் இருத்தி தியானம் செய்து பாருங்கள். அவரின் அதிர்வலைகளை தாங்கள் நிச்சயமா உணரலாம். 

இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது ஏகாந்தமாக இங்கு உட்கார்ந்து நவ பிருந்தாவன நாயகர்களை நினைத்து தியானம் செய்ய ஏற்ற இடம்.

பின்னர் அரங்க நாதர் ஆலயத்தின் முன்னுள்ள படிகளில் இறங்கி நவ பிருந்தா வனத்தை சுற்றி இடப்பட்டுள்ள மஞ்சள் கோட்டிற்கு வெளியே வலம் வந்து அவதாரத்ரய ஹனுமான் சன்னதி சென்று அவரை.....

அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வத ராம தூத கிருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ........

என்று சொல்லி வணங்கவும். அங்கே ஒரு பட்டர் இருக்கின்றார் அவர் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து அட்சதையால் ஆசிர்வாதமும் செய்கிறார். . 

அவர் ஆனே குந்தியில் உள்ள ராகவேந்திரர் மடத்திலிருந்து தினம் வந்து , காலை நவ பிருந்தாவனங் களுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்து பின்னர் மாலை திரும்பி செல்கிறார். 

மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தா வனம் செல்வது சிரமமாம் அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி       காட்டுகின்றனர்.

அது என்ன அவதாரத்ரய ஆஞ்சநேயர் என்ற நாமம் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? 

மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். 

ஸ்ரீ வாயு பகவான் த்ரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக ஸ்ரீ அனுமனாகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய் வதற்காக ஸ்ரீ பீமனாகவும், இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய ஸ்ரீமத்வ ராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங் களும் ஒன்றாக இனைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான். 

ஹனுமன் முகமும், பீமனை குறிக்கும் புஜங்களும், மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். 

இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸ ராஜர் பிரதிஷ்டை செய்தார்.

குருஷேத்திரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் போது அதை தேர்க் கொடியில் இருந்த வாயு புத்திரன் அனுமனும் செவி மடுத்தார். அப்போது கேட்டு, பீமனாக உணர்ந்ததை மத்வராக அவதரித்தபோது கீதா பாஷ்யம், கீதா தாத்பர்யம் என்று இரு கிரந்தங்களை இயற்றினார் ... 

அவதாரத்ரய ஹனுமனை திவ்யமாக சேவித்து பின்னர் பூமி அதிராமல் மெல்ல மெல்ல தம் கோரிக்கைகளை மனதில் கொண்டு நவபிருந்தா வனங்களை ஒன்பது முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

பத்மநாபம் ஜெய முனீம் கவீந்த்ரம் ச வாகீசம் வ்யாஸ ராஜஹம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் த்தைவ ச ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம்

நவ பிருந்தாவனம் பஜே ! நவ பிருந்தா வனம் பஜே!

பத்மநாபம் கவீந்த்ரம் ச வாகீசம் வ்யாஸராஜஹம்
ரகுவர்யம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் 
ததைவ ச
ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம்
நவ பிருந்தாவனம் பஜே ! நவ பிருந்தாவனம் பஜே!

என்ற 👆 இந்த இரண்டு தியான ஸ்லோகங்களை ஜபித்துக்கொண்டுவலம் வருவது மிகவும் உத்தமம். முடிந்தவர்கள் ஒவ்வொரு மகானுக்கும் தனித்தனியாக உள்ள ஸ்லோகங் களை சொல்லியும் வலம் வரலாம். 

இந்த பிருந்தா வனங்கள் சுமார் 300 ஆண்டு காலமாக தோன்றின. முதல் பிருந்தாவனம் 1324ம் ஆண்டும், ஒன்பதாவது பிருந்தாவனமான ஸ்ரீஸுதீந்திரரின் பிருந்தாவனம் 1623 கால கட்டத்தில் தோன்றியது. 

மத்வாச்சார்யர் வியாசருக்கு சேவை செய்ய பத்ரிகாச் சிரமம் சென்று விட்டதால் மத்வ மகான்களின் முதல் பிருந்தாவனம் ஸ்ரீபத்மநாபதீர்த்தருடையதுதான்.

மகான்களை தரி்சித்து விட்டு சிறிது நேர தியானம் செய்யுங்கள்

மனமுருக மகான்களை வணங்கி அந்த பக்கம் வெளியே சென்று அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் ஏறி நின்று பறவைப் பார்வையாக முழு பிருந்தாவனத் தையும் தரிசனம் செய்யுங்கள். 

அந்த பக்கம் சென்று அப்பக்கம் பாயும் துங்கபத்ரை நதியையும் சோலையும் காணுங்கள். 

பின்னர் திரும்பி வந்து அரங்கநாதர் கோவிலின் அருகில் உள்ள குகையில் அமர்ந்து தியானம் செய்து இன்னொரு முறை எல்லா சன்னதிகளையும் சென்று சேவியுங்கள். 

முக்கியமாக தங்களை வந்து தரிசனம் செய்ய அனுமதித்த அவர்களுக்கு அனந்த கோடி நன்றிகளை தெரிவியுங்கள்.

இனி இந்த நவபிருந்தா வனங்களை வணங்கும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

மேலும் தொடரும்....

நவ பிருந்தாவனம் - 5

 நவ பிருந்தாவனம் - 5👇

By Ramesh 

இனி நவபிருந்தாவனம் மற்றும் மந்திராலயம் அமைந்துள்ள புனித துங்கபத்ரை நதியின் சிறப்பைப் பற்றிக் காண்போமா? 

ஹிரண்ய கசிபுவின் சகோதரன் ஹிரண்யாட்சகன் ஒரு சமயம் பூமியை கடலுக்கடியில் கொண்டு ஒளித்து வைத்த போது பகவான் வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை மாய்த்து பூமி தேவியை மேலே கொண்டு வந்தார். 

இப்படி வந்த போது அவர் சற்றே இளைப்பாறுவதற்காக ஒரு மலையின் உச்சியில் சென்று அமர்ந்தார். அந்த மலை இப்போது வராஹ மலை அல்லது வராஹ பர்வதம் என்று அழைக்கப் படுகின்றது.

 இது தற்போதய ’ஸஹ்யாத்ரி’ பகுதி இது. சிருங்கேரிக்கு தெற்கே உள்ளது இப்பகுதி. 

 அப்போது பகவானின் இடது பற்களில் ஒன்று உடைந்து அதிலிருந்து வெளிபட்ட நீர் கிழக்கு நோக்கி நதியாகப் பாய்ந்தது இதுதான் பத்ரா நதி.

 வலது புற கோரைப்பல் உடைந்து மேற்கு நோக்கிப் பாய்ந்த நீர் துங்கா நதியாகப் பாய்ந்தது. இவை இரண்டும் தான் தற்போது ஷிமோகா அருகே இனைந்து துங்க பத்ரா நதியாக பாய்கின்றது.

இந்த கூடலில்தான் பிரஹலாதர் பெருமாளின் வக்ஷ ஸ்தலத்திலிருந்து எடுத்துத் தந்த சாலக்ராமத்தால் ஆன சிந்தாமணி நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார். 

 சங்கு கர்ண தேவதையின் முதல் ஜென்மத்தில் 

ஸ்ரீ பிரஹலாத அவதாரத்திலும், இரண்டாவது ஜென்மத்தில் 

ஸ்ரீ வியாஸராஜ அவதாரத்திலும், மூன்றாவது ஜென்மத்தில் 

ஸ்ரீ ராகவேந்த்ர அவதாரத்திலும் துங்க பத்ரையில் அமைந்த நவ பிருந்தாவனப்பகுதி இவர்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது. 

இத்தனை சிறப்புடையது இந்த பகுதி. இதுவரை நவபிருந்தாவன மகான்களைப் பற்றியும், நவ பிருந்தாவனப் பகுதியின் மற்றும் துங்கபத்ரா நதியின் மகிமைகளைப் பற்றியும் கண்டோம் 

வாருங்கள் இனி யாத்திரைக்கு செல்வோமா?

ஹாஸ்பெட் புகை வண்டி நிலையத் திலிருந்து செல்லும் பாதையின் இருமருங்கும் ஹோட்டல்களாக இருப்பதை பார்க்கலாம். 

ஹோஸ்பெட் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது. சீனாவிற்கு தற்போது அதிகம் எற்றுமதி செய்யப் படும் இரும்புத்தாது (Iron Ore) இப் பகுதியில் கிடைக்கின்றது என்பதாலும், உருக்கு ஆலை(Steel plant) உள்ளதாலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதல் அனைத்து ரகமான தங்கும் விடுதிகளும் உள்ளன.

ஒரு காலத்தில் இந்த நகரம் விஜய நகர சாம்ராஜ் ஜியத்தின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது. 

இந்நகரை கிருஷ்ண தேவ ராயர் தமது அன்னையின் நினைவாக நாகலாபுரம் என்று அமைத்தார் ஆயினும் கன்னடத்தில் புதிய நகரம் என்று பொருள் படும் ஹோஸ்பெடெ என்ற பெயர் நிலைத்துவிட்டது.

 புகை வண்டி நிலையத்தின் மிக அருகிலேயே தங்கும் விடுதி ஒன்று இருக்கு.👇

SLV YATRI NIVAS, OPP To Rotary Club, Station Road, Hospet- 583201 என்ற விடுதியில் தங்கலாம். விடுதியின் தொலைப்பேசி எண் (08394-221525/26, சுரேஷ் பிரபு – 9448576148 அவர்களையும் தொடர்பு கொள்ளலாம் ) . 

இவர்களிடம் வண்டி சொல்லிவிட்டால் அவர்கள் அங்குள்ள பகுதிகள் அனைத்தையும் சுற்றி காண்பிக்க வண்டியையும் டிரைவரையும் அனுப்பி விடுவர்.

அவர்களே local guide ஆக உங்களுக்கு வழி காட்டி விடுவார்கள்..

அந்த விடுதி யிலேயே காலை உணவை முடித்துக் கொள்ளலாம். 

நவபிருந்தாவனம் செல்லும் முன் துங்கபத்ரை நதியில் குளிக்கலாம் என்பதால் அதற்குரிய துண்டு, மாற்று துணி, பூஜை சாமான்கள், புத்தகங்கள் ஆகியவற்றை மட்டும் ஒரு சிறு பையில் கொண்டு கொண்டு செல்ல வேண்டும்....

ஆனே குந்திக்கு வண்டியில் . செல்லும் வழியில் நீண்ட துங்கபத்ரை அணையை பார்க்கலாம். 

அதன் அடி வாரத்தில் ஜப்பானிய பாணியில் ஒரு அருமையான தோட்டம் உள்ளது. எப்போதும் தண்ணீர் பாயும் பூமி என்பதால் இரு மருங்கும் வாழை, தென்னை, நெல் வயல்கள் செழிப்பாக இருக்கும்... 

வாய்க்கால்கள் சாலையின் குறுக்காக ஓடுவதை பார்க்கலாம். 

கங்காவதி என்ற ஊரைக் கடந்த போது பழங்கால பாலம் ஒன்றையும் அழிந்து போன விஜயநகர சாம்ராஜ்ய நகரான ஹம்பியின் அழிவுகளையும் காணலாம். 

சுமார் ஒரு மணி நேரம் பயணத்தில் ஆனேகுந்தியை அடையலாம்.

ஒரு காலத்தில் இந்த ஆனேகுந்தி அரசனை முகமது பின் துக்ளக் தோற்கடித்து அரசனையும், அவன் குடும்பத்தாரையும் கோட்டையிலே சிறை வைத்தி ருந்தான். 

ஶ்ருங்கேரி பீடாதிபதி  ஶ்ரீ வித்யாரண்யர் வழிகாட்டுதலின் பேரில் ஹரிஹரன், புக்கராயன் என்னும் சகோதரர்கள் தந்திரத்தால் கோட்டைக்குள் நுழைந்து துக்ளக்கின் படைகளை தோற்கடித்து அரசனை விடுவித்து இந்த நகரை கைப்பற்றி, விஜய நகர சாம்ராஜ்யத்திற்க்கு வித்திட்ட இடம் இதுதான். 

விஜயநகர சாம்ராஜ்ஜியத் திற்கு அஸ்திவாரம் ஆனேகுந்திதான்.

இது என்ன ஆனேகுந்தி என்று மனதில் தோன்றுகின்றதா? 

விஜயநகர ஆட்சி காலத்தில் யானைகள் ( ஆன என்றால் கன்னடத்தில் யானை )  கட்டிய இடம் என்பதால் ஆனே கோந்தி என்பது மருவி இப்போது ஆனே குந்தி ஆகிவிட்டது. 

நவபிருந்தாவனம் தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் சமயம் மதியம் ஆகி விடும் என்பதால் இங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டால் அருகில் உள்ள சிந்தாமணி, அஞ்சனாத்திரி, பம்பா சரோவர் ஆகிய தலங்களை தரிசித்துக் கொண்டு பின்னர் ஹம்பி செல்லலாம் . 

எனவே அருகில் உள்ள HOOVA CAFÉ என்னும் விடுதியில் ( வீடு தான், சொல்லி விட்டு சென்றால் சமையல் செய்து வைக்கின்றனர்) மதிய சாப்பாட்டிற்கு சொல்லி விட்டு சென்றால் உணவு தயாராக இருக்கும்.

துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆனேகுந்தி சுமார் 25 சிறு வீடுகள்தான் உள்ளன. அதிக அரசு பஸ் வசதி யில்லை ஹோஸ் பெட்டிலிருந்து அவரவர்கள் வண்டிகளில் வருவது உத்தமம். 

குக்கிராமத்தைப் போல ஆடுகள் அங்கங்கே மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.

மற்றபடி , அங்குள்ள விவசாயிகள் மாடுகளை ஓட்டிக் கொண்டு சென்று இருப்பதை காணலாம். மற்றபடி சத்தம், கூட்ட நெரிசல் ஏதும் இல்லை. 

அங்கே துங்க பத்ரா நதியை ஒட்டி உள்ள படித்துறையை நெருங்கும் பொது இடப்பக்கம் கருங்கல்லாலான ஒரு மண்டபத்தைப் பார்க்கலாம். 

அதில்  தான் ஒரு காலத்தில் யானைகளை கட்டி இருந்தார்கள்.... இப்போது வைக்கோற் போராக மாறி இருக்கிறது.

படித்துறையை அடைந்தால்  நவ பிருந்தாவன் ஹோகுத்தாரா? என்ற ஒரு குரல் கேட்கும், மோட்டார் படகுடன்  நின்று கொண்டு வருபவர்களை அழைத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். 

பரிசல் பயணம் செய்ய முடிய வில்லையே என்றால் இதில் சீக்கிரம் செல்லலாம் என்பதால் மோட்டார் படகில் செல்லலாம்.. 

ஆனால் படகு நிரம்பினால் தான் டீசல் எஞ்சின் , படகு நகரும்.

அமைதியான துங்கபத்ராவில் படகில் அமர்ந்து கொண்டே அதிக வேகம் இல்லாமல் சாந்தமாக பாயும் துங்கபத்ராவின் நீரோடத்தில் கையை வைத்து தண்ணீரை வாரி இரைத்துக் கொண்டே ஆனந்தமாக பயணம் செய்யலாம். 

அங்கு வட்டமிடும் நீர்க்காக்கைகளை பார்க்கலாம் வந்த இப்பயணத்தை மறந்துவிடக்கூடாது என்பதற்காக நீங்கள் ஃபோட்டோ எடுத்து கொள்ளலாம் 

படகில் போகும் வழியில் அறுபத்து நான்கு கால் மண்டபத்தையும்,   சிந்தாமணி என்ற  ராமர் வாலியை வதம் செய்த இடத்தையும் காணலாம்.

எதிரே, குழந்தை உருவாக்கியது போல பாறையின் மேல் பாறை அடுக்கி மலையாக உள்ளதே இது இத்தனை வருட காலம் எவ்வாறு சரிந்து விழாமல் இருக்கின்றது காலத்தின் கோலத்தினால் பெரிய பாறைகள் இவ்வாறு வெளுப் புறமாக வெடித்து இவ்வாறு உருமாறி விட்டனவா? என்று வியக்காதீர்கள். அது தான் அஞ்சனாத்ரி...

சுமார் பத்து நிமிடங்கள் பயணம் செய்து நவபிருந்தாவனத்தீவின் கரையை அடையலாம். 

நவபிருந்தாவனத் திற்கு செல்வதற்கு முன் துங்கபத்ரையில் குளிக்க வேண்டும்...... 

தூய உடைகளை அணிந்து கொண்டு தூய உள்ளத்துடன் மகான்களை தரிசிக்க செல்லவும்.

இங்கு துங்க பத்ரையானவள் சாந்தமாக ஆர்ப் பாட்டமில்லாமல் அமைதியாக ஓடுகின்றாள் அதிக ஆழமில்லை ஆனால் பாறைகள் வழுக்கும் என்பதால் கவனமாக குளிப்பது நல்லது. 

துங்கபத்ரையில் குளித்து விட்டு நவபிருந்தாவனங்களை தரிசிக்க செல்ல வேண்டும் 

இங்கே மணல் பாதை தான்..... சூரியன் உச்சிக்கு வருவதால் மணல் கொதிக்கும்.

முதலில் கண்ணில் படுவது மதில் சுவர்தான். நடுவிலே ஒரு வாயில், வாயிலின் சுவற்றிலே நவபிருந்தா வனங்களை தொடக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகம் மேலே தமிழிலும், கீழே கன்னடத்திலும் இருக்கும். 

சப்தம் செய்யாமல் அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்து மகான்களின் அருள் மழையில் தரிசனம் செய்ய வேண்டும். 

உள்ளே நுழைந்தவுடன் அற்புதமான அதிர்வலை, மனம் ஆனந்தத்தில் துள்ளுவதும், ஒரு இனம் புரியாத அமைதி மனதில் குடி கொள்ளும். 

நவபிருந்தாவனத்தின் தரிசனம் அடுத்த பதிவில் தொடரும்........

நவ பிருந்தாவனம் - 4

 நவ பிருந்தாவனம் - 4👇

By Ramesh 

சற்றே புராணம் நோக்கி செல்வோமா ???

பிரம்மாவின் அவையில் அங்கம் வகித்தர்களுள் ஒருவர் சங்குகர்ண தேவதை. இவர் ஸ்ரீமந் நாராயணனின் அர்ச்சனைக்காகவும்,அலங்காரத்திற்க் காகவும் நாள் தோறும் வாசனை மிகுந்த பல விதமான மலர்களை கொண்டு வரும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தார். 

இதற்காக இவர் பிரம்ம லோகத் திலிருந்து பூலோகம் வருவது வழக்கம். இப்படி அவர் வரும் போது அவரை கவர்ந்த ஒரு சில இடங்களில் அப்படியே லயித்து விடுவார். 

இவ்வாறு ஒரு சமயம் காலம் போவது தெரியாமல் காலம் தாழ்த்தி பூக்களை கொண்டு சென்றார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன் பூலோகத்தில் மனம் லயித்து நின்ற நீ அந்த பூலோகத்தில் பிறவியெடுக்கக் கடவாய் அதுவும் அரக்கர் கூட்டத்தில் பிறக்கக் கடவாய் என்று சாபம் தந்தார். 

இவ்வாறு பிரம்ம தேவரின் சாபம் பெற்ற சங்கு கர்ண தேவதை, பிரம்ம தேவனை நோக்கி கடும் தவம் செய்து தன்னை யாராலும் அழியாதபடிக்கு பலமான வரத்தை வாங்கிக்கொண்டு தேவர்கள் உட்பட்ட அனைவரையும் துன்புறுத்தி வந்த ஹிரண்யகசிபுவின் மனைவி லீலா வதியின் கர்பத்தில் ஸ்ரீ பிரஹலாதராக ஜனித்தார், 

இவருக்காக ஸ்ரீஹரி ந்ருஸிம் ஹராக அந்தியம் போதில் அரியுருவாய் அவதரித்து அவனது மார்பை தனது வள்ளுகிரால் கீறி ஹிரண்யகசிபுவை அழித்தார். 

தன் தந்தை கொல்லப்பட தானே காரணமாக இருந்ததை எண்ணி வேதனைப்பட்ட பிரஹலாதர் ஸ்ரீந்ருஸிம்ஹரை வேண்ட அவரும் மனத்தை ஒரு நிலைப் படுத்தும் யோகத்தை, யோகானந்த ந்ருஸிம்ஹராகி போதித்து தன் வக்ஷத்தலத்தி லிருந்து சாலக் ராமத்தை எடுத்துத் தந்து “புண்ய க்ஷேத்ரங்களுக்கும், புனித தீர்த்தங் களுக்கும் சென்று பூஜை தவம் செய்ய தந்தை மாண்டதற்குக் காரணமான பாவம் விலகும், மனதும் சாந்தமடையும் என்று அருளினார்.

தங்கத்தேரில் பிரஹலாதன் அந்த சாலக் ராமத்தை எடுத்து கொண்டு வந்து கிருத யுகத்தில் பிரஹலாதர் தவம் செய்த இடம்தான் இந்த நவ பிருந்தாவனப் பகுதி.

 இந்த சங்குகர்ண தேவதையே பின் வரும் பிறவிகளில்   ஸ்ரீவியாஸ ராஜ ராகவும், ஸ்ரீராகவேந்திரராகவும் அவதாரம் செய்து நவ பிருந்தாவனப் பகுதியை புனிதப் படுத்தியுள்ளனர்.

 இங்கு தவம் செய்த போது அவரது மனதில் சாந்தம் பொங்கியது பாபம் விலகியது. இதனால்தான் இன்றும் நவ பிருந்தாவனத்திற்கு செல்பவர்களின் மனதில் உள்ள கவலைகள் விலகும், முன் ஜென்ம வினை தீர்கின்றது.

கிஷ்கிந்தா மலைத்தொடர்

நவ பிருந்தாவனம் இராமருடனும் தொடர்புடையது. இராமசந்திர பிரபு சிற்றன்னை சொல் கேட்டு வனவாசம் வந்த காலத்தில் சீதையை பிரிந்த பின்பு கிஷ்கிந்தை நோக்கி வருகிறார் வந்த காகுத்தன் சொல்லின் செல்வனாம் ஹனுமனின் மூலம் வானர அரசன் சுக்ரீவனுடன் நட்புக்கொண்டு வாலியை வதம் செய்கிறான் 

பின்பு சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகின்றது பதவியின் மோகத்தில் சுக்ரீவன் ராமனிடம் கொடுத்த வார்த்தையை மறக்கின்றான் பின்பு லக்ஷ்மணனின் கோபம் கண்டு தன் பரிவாரங்களை எட்டு திக்கும் அனுப்புகின்றான் இவை நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான், 

இவ்வாறு வன வாசத்தில் இருந்த இராமபிரான் நாடுகளின் எல்லையில் வசிக்க வேண்டுமே தவிர நாடுகளின் உள்ளே பிரவேசிக்க கூடாது என்பது நியமம் அதன் பிரகாரம் ராமன் கிஷ் கிந்தைக்கு வெளியே ஒரு குகையில் வாழுகின்றான் 

 வானரங்களின் வாழ்விடம் என்பதால் தன் சந்தியாவந்தன சமயத்தில் அந்த குகையின் அருகில் இருக்கும் துங்கபத்ரா நதியின் நடுவில் தீவு போன்ற அந்த பகுதிக்கு சென்று சூரிய பகவானை வழிபடுவது வழக்கம்.

ராமசந்திர பிரபு கண்டேன் சீதையை என்று காகுத்தனிடம் சுந்தரன் அனுமன்* கூறிய இடம்தான் அக்கால கிஷ் கிந்தை இன்றைய ஆனேகுந்தி ஹம்பி பகுதி.

 இவ்வாறு இராம பிரானாலும், இளைய பெருமாளாலும் , வாயு புத்ரன் அனுமனாலும் புனிதப்பட்ட அந்த புண்ணிய பூமியில் தான் பின்னர் பக்த பிரகலாதன் ஸ்ரீமந் நாராயணை நினைத்து தவம் இயற்றினார்

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த புண்ணிய பூமி என்பதால்தான் பிருந்தாவனத்தில் அமர்ந்தனர் புனித மத்வாசாரிய மகான்கள். 

 நவபிருந்தா வனங்களில் நடு நாயகமாக அமைந்துள்ள வியாஸராஜரின் பிருந்தாவனம் பிரஹலாதர் தவம் செய்த அதே இடமாகும் .

இனி அடுத்த பதிவில் இந்த நவ பிருந்தாவனம் அமைந்துள்ள துங்கபத்ரா நதியின் சிறப்பை பற்றி சொல்கிறேன்.

மேலும் சொல்கிறேன்.....

வெந்தய ஊறுகாய்

 வெந்தயத்தில் இப்படி ஒரு ரெசிபி இருக்கா? பெண்களுக்கு ரொம்ப நல்லது.

சுவையான வெந்தய ஊறுகாய் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். வெந்தயம் பொதுவாகவே வயிறு வலி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு சாப்பிடுவோம். இந்த வெந்தய ஊறுகாய் தாய்மை அடைந்த பெண்களுக்கு மிகவும் நல்லது என்று கூறப்பட்டுள்ளது. தாய்மை அடைந்த பெண்களுக்கு அவ்வப்போது வாந்தி, வாய் கசப்பு தன்மை ஏற்படும். அப்போது இந்த ஊறுகாய் சாப்பிட உதவியாக இருக்கும். 

தேவையான பொருட்கள் 

முளைவிட்ட வெந்தயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 6 (நறுக்கியது) 
எலுமிச்சம் பழம் – 1
கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – ½ டீஸ்பூன்
தாளிக்க தேவையான அளவு 

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
பெருங்காயப் தூள்– ½ டீஸ்பூன்

செய்முறை

முதலில் வெந்தயத்தை தண்ணீர் தெளித்து முளைகட்டி வடித்து பின்  ஈரம் போக காய வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து கல் உப்பு வறுத்து பொடிக்கவும். இப்போது அதே கடாயை சுத்தம் செய்து வெந்தயம், நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வறுக்கவும். அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்து மஞ்சள் தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளறவும். அடுத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்களை தாளித்து இதில் நன்கு கலந்து விடவும். அவ்வளவு தான் ஆரோக்கியமான வெந்தய ஊறுகாய் ரெடி.

Tuesday, February 27, 2024

நவ பிருந்தாவனம் -3

  நவ பிருந்தாவனம் -3

By Ramesh 

"அவர்கள் அனுமதித்தால் மட்டுமே அவர்களை நாம் தரிசனம் செய்ய முடியும் ..."

ஒன்பது மத்வ மஹநீயர்கள் ஒரே இடத்தில் வெவ் வேறு கால கட்டத்தில் ஜீவ பிருந்தாவனத்தில் அமர்ந்து அவர வர்களின் பிருந்தா வனத்தை தேர்ந்தெடுத்து நடுவில் வியாச ராஜர் ப்ருந்தா வனஸ்தராகி அருள் பாலித்து கொண்டிருக்கும் இடம் தான் நவ பிருந்தாவனம்

 ..கர்நாடக மாநிலத்தில் கொப்பல் மாவட்டத்தில்,கங்காவதி தாலுகாவில் அமைந்து இருக்கும் மிக அமைதியான கிராமமான ஆனேகுந்தியில் நாற்புறமும் துங்கபத்திரா நதி சூழ நடுவில் ஒரு தீபகற்பத்தில் இருக்கிறார்கள் ஒன்பது மத்வ மஹநீயர்கள் 

வெட்ட வெளியில் மேற் கூரைகள் ஏதுமின்றி ப்ருந்தா வனஸ்தர்களாக இருக்கிறார்கள் .

.அவர்களின் நடுவில் ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயரின் குல குருவாக இருந்த ஸ்ரீ வியாசராஜர் நடுநிலையில் ப்ருந்தாவனஸ்தராக இருக்கிறார் 

அவரை சுற்றிலும் 8 மத்வ மஹான்கள் ஜீவ பிருந்தா வனத்தில் அமர்ந்து உள்ளார்கள் .

.ஸ்ரீ ஹனுமான் அவர்களுக்கு எதிரே ஒரு புஸ்தகத்தை படித்து கொண்டு அமர்ந்த கோலத்திலும் , ஸ்ரீ ரங்கநாதர் சயன கோலத்தில் மற்றோரு புறமும் , இன்னொரு இடத்தில் ஸ்ரீ ஹனுமான் சனீஸ்வரனை காலில் மிதித்து கொண்டு தனி சன்னதியில் இருக்கிறார் .

..சரி எப்படி செல்வது நவ ப்ருந்தாவனத் திற்கு ?

பெரும்பாலான இணைய தளங்களில் சொல்வது எல்லாம் ஹோஸ்பேட் ரயில் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டும் என்று தான் கூறுவார்கள் .

.அதுவும் சரிதான் ஆனால் எளிதாக எப்படி செல்ல வேண்டும் ?

1)திருப்பதியிலிருந்து தினமும் கோல்ஹாப்பூர் வரை செல்லும் ஹரி பிரியா எக்ஸ்பிரஸில் இரவு 9 மணிக்கு கிளம்பினால்  மறுநாள் காலை 5 மணிக்கு ஹோஸ் பெட் ரயில் நிலையத்தில் அடைந்து விடலாம் 

..2) இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் ஆந்திர மாநில குண்டக்கல் ரயில் நிலையத்திற்கு பல ரயில்கள் இருக்கின்றன ..

அவற்றில் தினமும் ஹோஸ்பெட் செல்லும் ரயில்கள்  அமராவதி எக்ஸ் பிரஸ்  5.50 மணிக்கும் மற்றும் ஹம்பி எக்ஸ்பிரஸ்  காலை 4.50 மணிக்கும் குண்டக்கல் வழியாக ஹோஸ் பெட் செல்கின்றன

இவற்றிற்கு ஏற்றபடி உங்கள் பயண திட்டத்தை அமைத்து இந்த ரயில்களில் நீங்கள் ஹோஸ் பெட் செல்லலாம்  

சிறிது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் ரயில் நிலைய தங்கும்  அறையில் , பின்னர் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தால் தமிழர் திரு கணேஷ் என்பவர் வைத்திருக்கும் கணேஷ் பேக்கரியில் நல்ல காபியும் , டீ யும்   கிடைக்கிறது ..

சாப்பிட்டு விட்டு ஒரு ஆட்டோவில் ரூ 50 கொடுத்தால் ஹோஸ் பெட் பேருந்து நிலையத்தில் விடுவார்கள்

 ..அங்கிருந்து ஹுலிகே  என்னும் இடத்திற்கு பேருந்து செல்கிறது 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிடைக்கிறது

 ..கட்டணம்  ரூ 30- தூரம் நேரம் 30 நிமிடம் ..ஹுலிகே  சென்ற பின் தவறில்லை வயிற்றிற்கு சிறிய உணவிடுங்கள் காலையில்.பின்னர் ஹுலிகேயிலிருந்து  ஆனேகுந்தி வரை ஒரு பேருந்தில் மாறி செல்ல வேண்டும் 35 கி.மீ தூரம் , பயண நேரம் 45 நிமிடம் .

.அருமையான கிராம பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள தார் ரோட்டில் பயணம் .

.காலை நேர காற்றினை நுகர்ந்து செல்லலாம் 

..நீங்கள் ஆனே குந்தியில் இறங்கியவுடன் 5 நிமிட நடையில் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தினை  சென்றடையலாம்

 ..அங்கு தங்குவதற்கு 10 அறைகள்  இருக்கின்றன ..

அதற்கு எதிர் புறம் துளசி கார்டன்-ல் தமிழ் அறிந்த ஒரு பிராமணர் தங்கும்  வசதிகளையும் உணவு வசதி களையும் சேர்த்து அளிக்கின்றார்.

நீங்கள் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் பூஜை கட்டண விபரங்களை அறிந்து கொள்ளலாம் 

காலை 6.30 மணிக்குள் பூஜைக்குரிய கட்டணங்களை செலுத்திவிட வேண்டும் ஏனெனில் காலை 7 மணிக்கு பூஜைக்கு பூஜாரிகள் கிளம்பி விடுவார்கள் .

. அவர்கள் தமிழ் பேசுகிறார்கள் உங்களது சந்தேகங்களை தமிழிலேயே தீர்ப்பார்கள்

ஸ்ரீ ராகவேந்திரா மடத்திலிருந்து 5 நிமிட  தூரத்தில் படகு துறை உள்ளது மோட்டார் படகில் 15 நபர் வரை ஒரு முறை செல்ல முடியும்... 10 நிமிட பயணம் ரூ 30 கட்டணமாக வசூலிக்க படுகின்றது .

. ஒரு தீவின் கரையில் இறக்கி விடுவார்கள் அங்கு கடைகள் ஏதும் இருக்காது ...எனவே நீங்கள் பூஜைக்கு வேண்டிய சாமான்களை துளசி கார்டானிலோ அல்லது அருகில் அமைந்துள்ள கடைகளிலோ தான் வாங்கி கொள்ள வேண்டும் ....

..படகில் தீவினை அடைந்த நீங்கள் அங்கு பயணிக்கும் துங்கபத்ரா நதியில் குளிக்க வேண்டும் .

.அதன் பின்னர் உங்கள் ஈர துணிகளை அருகில் உள்ள பாறைகளில் காய போடலாம்

 ..நவ பிருந்தா வனத்திற்குள் நுழையும் போது  ஆண்கள் மேலாடையை  அணியக்கூடாது

 பெண்கள் புடவை அல்லது நமது பாரம்பரிய உடைகளை அணிந்து வருவது நல்லது

 ..அமைதியாக இருக்கவேண்டிய இடம் ..

ஏனெனில் மாத்வ மஹான்கள் பிருந்தா வனத்தில் ஜீவனுடன் யோகத்தில் இருக்கும் இடம்

 ...பூஜாரிகள் அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகளை தினமும் கடை பிடிக்கிறார்கள் சுமார் 2 மணி நேரம் ஆகும்......

காண கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவே மனதை அலைய விடாமல் அமைதியாக உங்களது பிரார்த்தனைகளை சொல்லுங்கள் மனதில் ..

11 முறை மஞ்சள் கோட்டை தாண்டாமல்  பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் 

11 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும் ..

அருமையான அருள் பாலிக்கும் தலம்  தரிசனம் செய்து வாருங்கள் நவ பிருந்தாவனத்தில் ..

குறைந்த பட்சம் 60 நாட்களுக்கு முன்னரே உங்களது ரயில் டிக்கெட்டு க்களை பதிவு செய்வது நலம் ..

மேலும் சொல்கிறேன் ......4

நவ பிருந்தாவனம்- 2

 நவ பிருந்தாவனம்- 2

By Ramesh 

 ஆனேகுந்தி .👇

ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர்   பயணம் செய்து நவபிருந்தாவனம் இருக்கும் ஆனே குந்தி (anegondi) பகுதிக்கு செல்ல வேண்டும்.

அதன்பின் படகு பயணம். துங்க பத்திரா நதிக் கரையின் நடுவே ஒரு ரம்யமான தீவை போல் காட்சியளிக்கும் அழகும், தெய்வீகமும் நிறைந்த பகுதியாக இந்த நவ பிருந்தாவனம் பகுதி இருக்கிறது.

 இந்த பகுதியில் உள்ள மலைகளை துண்டு துண்டு களாக நம் ஆஞ்ச நேயர் சிறு வயதில் தன் கதையால் அடித்து அடித்து விளையாடி மலைக்கு மலை தாவி விளையாடிய இடம் இது ..

ஆதலால் மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சி அளிக்கின்றன. 

துங்கபத்ரா நதி அதிக ஆழம் கொண்டுள்ளதால்  தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ள காரணத்தால்  படகில்தான் நவ பிருந்தாவனம் செல்லமுடியும்.

 துங்கபத்திரா நதியின் நடுவே அமைந்திருக்கும் இந்த மணற்திட்டு சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கார்பன் டேட்டிங் ஆய்வுகள் சொல்கிறது.

அதாவது 30 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

 அதீத அதிர் வலைகளை தன்னகத்தே கொண்ட ராகவேந்திரரின் 9 குருமார்களது ஜீவசமாதிகளை அங்கே நாம் தரிசிக்கலாம்.

ராகவேந்திர சுவாமியை நமக்கு தந்தருளிய ஸ்ரீ ராகவேந்திரரின் குரு சுதீந்திர தீர்த்தர் முதலான 9 மகான்கள் துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள்.

 துங்கபத்திரா வின் நடுவே👇

1] பள்ளிகொண்ட அரங்கநாதர்

2] ஹனுமார் கோவில்

ஆகிய இரண்டு கோவில்கள் 

மற்றும் ஒன்பது மகான்களின் ஜீவசமாதிகள்

1] ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் 
2] ஸ்ரீ ஜெய தீர்த்தர் 
3] ஸ்ரீ கவீந்திர தீர்த்தர் 
41 ஸ்ரீ வாகீச தீர்த்தர் 
5] ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் 
6] ஸ்ரீ ஸ்ரீனிவாச தீர்த்தர் 
7] ஸ்ரீ ராம தீர்த்தர்
8] ஸ்ரீ சுசீந்திர தீர்த்தர்
9] ஸ்ரீ கோவிந்த தீர்த்தர் உள்ளன.

 துங்கபத்திரை நதியில் மிக ஜாக்கிரதையாக நீராடியும் நாம் தரிசனத்தை ஆரம்பிக்கலாம்.

நவபிருந்தாவனத்தில்  முதன்மையாக ஸ்ரீ அரங்கநாதர் அருள்பாலிக்கிறார். 

அரங்கநாதர் சன்னதியும், ஜாக்ரதை அனுமன் சன்னதியும் சிறிது உயரமாக அமைந்துள்ளதால் படியேறி சென்றால்

பாம்பணையில் யோக நித்திரையில் உள்ள அரங்க நாதரை சேவிக்கலாம்.

இம்மூர்த்தத்தின் ஒரு தனி சிறப்பு பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது.

இச்சன்னதியின் அருகே ஜாக்ரதை அனுமனின் சன்னதி உள்ளது. 

இச்சன்னதியில் அனுமன்  இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது

இந்தக் குகையில் அமர்ந்து நாம் தியானம் செய்யலாம்

பின்னர் மகான்களை 11 தடவை வலம் வந்து நமஸ்காரம் செய்யவேண்டும். 

 வியாச ராஜ தீர்த்தருக்கு எதிர் பக்கம் இருந்து நமஸ்காரம் செய்தல் வேண்டும்.

நவ பிருந்தா வனத்தை சுற்றி இடப்பட்டுள்ள மஞ்சள் கோட்டிற்கு வெளியே வலம் வர வேண்டும்.

பின்னர் அவதார த்ரய ஹனுமான் சன்னதி சென்று அவரை வணங்க வேண்டும்.

 அவதாரத்ரய ஹனுமான்👇 

மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். ஸ்ரீ வாயு பகவான் த்ரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக ஸ்ரீ அனுமனாகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய் வதற்காக ஸ்ரீ பீமனாகவும், இக்கலியுகத்தில் 

ஸ்ரீ வியாச சேவை செய்ய ஸ்ரீமத்வ ராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங் களும் ஒன்றாக இனைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான். 

ஹனுமன் முகமும், பீமனை குறிக்கும் புஜங்களும், மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். 

இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸ ராஜர் பிரதிஷ்டை செய்தார்.

பட்டர் ஒருவர் அங்கே காலை முதல் மாலை வரை இருக்கிறார்.தினமும்  பட்டர் நவபிருந்தா வனத்தில் நவ பிருந்தாவனங் களுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்து பின்னர் மாலை திரும்பி செல்வார்.

 மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தா வனத்திற்கு பட்டர் செல்ல முடியாது அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.

பட்டர் பக்தர்களுக்காக இறைவனுக்கு சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து அட்சதையால் ஆசிர்வாதமும்  செய்கிறார்.

மேலும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.....2

அய்யங்கார் ஆத்து சக்கரை பொங்கல்

 அய்யங்கார் ஆத்து சக்கரை பொங்கல்👇

 தேவையான பொருட்கள்: 

பச்சரிசி - 1/2 கப்   
பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் * 
கொதிக்க வைத்த பால் - 1 கப் * 
தண்ணீர் - 1 1/2 கப்  வெல்லம் - ஒரு கப் (பொடியாக தட்டியது) 
தண்ணீர் - 1/2 கப் (வெல்லத்தை பாகுவாக்க)  
நெய் - 2-3 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - சிறிது  ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 
பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை 
தேங்காய் பால் - அரை கப்

 செய்முறை:

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாசிப் பருப்பைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளவும். 

பின் அதில் பச்சரிசியை சேர்த்து, மீண்டும் ஒரு நிமிடம் வறுத்து, இறக்கிக் கொள்ளவும். 

பின்பு அதை நீரில் நன்றாக அலம்பி கொள்ளவும். 

பின்பு அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, அலம்பின அரிசியுடன் பால் மற்றும் நீரைவிட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி, குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும். 

விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் அரிசி மற்றும் பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும். 

பின் அதில் கொதிக்க வைத்துள்ள பால் அல்லது நீரை வேண்டுமானால் சிறிது ஊற்றி நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ளவும். 

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, நீரை விட்டு, பாகு தயாரித்துக் கொள்ளவும். 

பின் அந்த பாகுவை குக்கரில் உள்ள அரிசியில் வடிகட்டி அதில் விட்டு அடுப்பில் வைக்கவும். 

பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், இந்நிலையில் சூடான பால் அல்லது நீரை ஊற்றி, அடி பிடிக்காமல் இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும். 

பொங்கல் மிகவும் கெட்டியாக இல்லாமல், ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போதே, அடுப்பில் இருந்து குக்கரை இறக்கி விடுங்கள். 

இப்போது ஒரு சிறிய வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியைப் போட்டு வறுத்து, பொங்கலுடன் சேர்த்து , அதன் மேல் சிறிது ஏலக்காய் பவுடர், பச்சை கற்பூரம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் , தேங்காய் பால் விட்டு கிளறினால், சுவையான ஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் ரெடி - 👆👆👍

பாண்டி பயணங்கள்:

 பாண்டி பயணங்கள்:

 காலையில் 👇

மணக்குள விநாயகர், 

வேதபுரீஸ்வரர், 

வரதராஜபெருமாள் கோவில் தரிசனம் 

 மாலையில் 👇

நேரு வீதியிலுள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான பெருமாள் தரிசனம். 

காமாக்ஷியம்மன்,  

அன்னை ஆஸ்ரமம் 

சிறிய ஊர், அருமையான சாலைகள், கூட்டமில்லாத கடைத்தெரு, கோவில்கள், தியேட்டர்கள். *கடற்கரை நடை,* *காந்தி பீச்* போன்றவை மனதுக்கு இதம்.

கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் 

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், 

வரதராஜப் பெருமாள் கோவில் மற்றும் காசியை விட வீசம் அதிகம் உள்ள 

திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலும் சிறப்பானவைகள். 

 மன சாந்திக்கு மணக்குள விநாயகரும் ஆத்ம திருப்திக்கு அன்னை ஆஸ்ரமமும் அமைந்த ஊர்.

 ஆரோவில் என்ற இடத்தில் "மாத்ரி மந்திர்" விசேஷம் . 

இந்த ஊரில் பிரெஞ்சு கலாச்சாரம், தமிழ் கலாச்சாரம் இணைந்த மக்கள் இருக்கிறார்கள். 

அரவிந்தரால் ஈர்க்கப்பட்ட அன்னையைப் போல், பெங்காலி மக்களும் இந்த ஊரில் வசிக்கி ன்றனர்.

மேலும் உயரமான வடிவங்களில் ஆன பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர், ப்ரத்யங்கிரா தேவி, வினாயகர் மற்றும் நவக்கிரகங்கள் கோவில்களும் பிரசித்தம்.

இத்தகைய பெருமை வாய்ந்த ஊர் அனை வருக்கும் பிடித்தமான ஊர்தான்.

பாண்டிச்சேரியை கிட்டத்தட்ட கடல் தான் பாதி இடங்களை ஆக்ரமித்துள்ளது....

  ❣ *ராக் பீச்- இங்கு வாக்கிங் போகலாம் . தற்போது கடல் கொஞ்சம் உள் வாங்கியதால் மக்களை கீழே இறங்க அனுமதிக் கின்றனர்.  

எதிர்புறத்தில் ஆளுநர் மாளிகை உள்ளது. எல்லா விதமான பொருட்களும் கிடைக்கிறது. 

சாப்பாடு முதல் நமக்கு தேவையான தோடு , மணி வகைகள், பூஜை பாத்திரங்கள்; வால்ஹேங்கிங் என .... *கொஞ்சம் விலை அதிகம்..

சிறிது தூரம் நடந்தால் சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. 

❣ பாண்டிச்சேரி மெரினா பீச்:

         இங்கும் அனைத்தும் கிடைக்கும். பொருட் காட்சியில் என்னென்ன விளையாட்டு அம்சங்கள் உண்டோ அத்தனையும் இங்கும் உண்டு- 

குதிரை சவாரி, ஓட்டகச்சவாரி என சகலமும். கொஞ்சம் காஸ்ட்லியான பகுதி... ஒரு நாள் செல்லலாம்...

❣ *பேட்(bad ) பீச்: பாறைகள் சிறு வித்தியாசமாக இருக்கும். நாற்காலியை போன்று... " அலைகள் ஆக்ரோஷமாக இங்கு இருக்கும்.. 

நம் மேல் கிட்ட தட்ட 10 நிமிடம் நின்றால் 100 அலைகள் அடிக்கும்... 

இங்கு தான் மீனவர்கள் குடியிருப்பு பகுதி உள்ளது.  

கரையோரத்தில் சிறிது தூரத்தில் செங்கழுநீர் அம்மன் எனும் கோவில் உள்ளது. மீனவர் களுகான கோவில். யார் வேண்டு மானாலும் சென்று வரலாம்...  

ஆடி மாதத்தில் பண்டிகை போடுவார்கள். பள்ளி- கல்லூரி களுக்கு விடுமுறை அளித்து விடுவார்கள். *இங்கு இருந்து ஆரோவில் மிக பக்கம்.....

❣ அரியாங்குப்பம்:

       முதலில் ஆறில் பயணம் செய்து தீவை அடைவோம்... சைவ உணவிற்கு தான் கொஞ்சம் சிரமம்..  

குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டு திடல். அனைத்து வர்க்கத்தினரும் உபயோகமாக இருக்கும்......

❣ தமிழ்நாட்டில் திருச்சி " சென்டர் ஆஃப் தி ஸ்டேட் " போல பாண்டிச்சேரி " சென்டர் ஆஃப் தி ஓஷன்ஸ்".

நவ பிருந்தாவனம் பாகம் 1

நவ பிருந்தாவனம் 1

By Ramesh 

 நினைப்பது நடக்கும்

கர்நாடக மாநிலம், ஆனேகுந்திக்கு அருகில் உள்ள துங்க பத்ரா நதிக்கரையில், ‘நவபிருந்தாவனம்’ என்று போற்றப் படும் ஒன்பது மாத்வ ஆச்சார்யர்களின் ஜீவசமாதி ( .              9 மாத்வ சன்யாசிகள் உயிருடன் சமாதி ஆன தெய்வீக சக்தி உள்ள இடம் ) அமைந்துள்ளது. 

இங்கே பிரார்த்தனை செய்பவர்களுக்கு தான் நினைத்தது நடக்கிறது !!!

துங்கபத்ரா நதியின் மத்தியில் அமைந்துள்ள எழில் மிகு குட்டித் தீவு இது. மகத்தான சித்திகளையும், மந்திர சக்தி களையும் பெற்ற ஒன்பது மத்வ சித்தாந்த புருஷர்கள், தங்கள் ஆயுட்காலம் முடிந்த பின்பும் மக்களுக்கு அருள்செய விரும்பி, சூட்சும உடலில் தங்கி, இந்த பிருந்தாவனத்தில் இன்றும் அருள் புரிகிறார்கள்.

இந்த நவபிருந்தா வனத்தில், ஸ்ரீபத்ம நாப தீர்த்தர், ஸ்ரீகவீந்திர தீர்த்தர், ஸ்ரீவாகீச தீர்த்தர், ஸ்ரீவியாஸராஜ தீர்த்தர், ஸ்ரீரகுவர்ய தீர்த்தர், ஸ்ரீஸ்ரீ னிவாச தீர்த்தர், ஸ்ரீராம தீர்த்தர், ஸ்ரீசுதீந்திர தீர்த்தர், ஸ்ரீகோவிந்த உடையரு என ஒன்பது மகான்கள் அருள்புரிகின்றனர். 

இந்த ஒன்பது ஜீவ பிருந்தாவனங்கள் தவிர, அழகிய ஸ்ரீஆஞ்சனேயரின் சன்னிதி ஒன்றும் இங்கு உள்ளது. *இந்த ராமபக்த அனுமன் மிகவும் சக்தி வாந்தவர்.

 ஸ்ரீஆஞ்சனேயரின் சன்னிதிக்கு எதிரில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபடு கின்றனர். இந்த ஆஞ்ச னேயரை சன்னிதியில் குனிந்து சென்று தான் வணங்க வேண்டும். 

மிகவும் விசாலமான திருக்கண்களோடு, வாயில் செந்தூரம் துலங்க, சேவை சாதிக்கிறார். *இவர் மிகவும் வரப்ரசாதி என்று பக்தர்கள் கூறுகின்றனர்.* *வழிபட்ட குறுகிய காலத்திலேயே, தீராத வியாதி களைத் தீர்த்தும், நடக்காத காரியங்களை நடத்திக் காட்டியும் அருள்புரிவதில் வல்லவர்.

 அதற்குத் தேவை உண்மையான பக்தி, தூமையான பணிவு, அன்பு கனிந்த மனம் மட்டுமே.

 நவபிருந்தாவன தரிசனம் செய்ய, நவ கிரக தோஷங்கள் நீங்குகின்றன.

பிராரப்த கர்மாக்களின் தீய பலன்கள் நீங்கி நமது கோரிக் கைகள், விருப்பங்கள் நிறைவேறுகின்றன.

 துளசி செடிகள் வளர்ந்துள்ள இந்த பிருந்தாவனத்துள் உறையும் மகான்கள், அபரிமித சக்தியுடன் சூட்சும உருவில் அருள்பாலிப்பதால், பிருந்தா வனங்களைக் கைகளால் தொடாமல் தரிசனம் செய்ய வேண்டும்.

மேலும், நம்மால் முடிந்த பிரதட்சிண நமஸ்காரம் செய்யலாம். நவ பிருந்தாவனத்தை நேரில் தரிசனம் செய்யும் வாப்பு கிடைப்பவர்கள்,👇

பத்மநாபம் ஜெயமுனீம் கவீந்த்ரம் ச வாகீசம் வ்யாஸ ராஜம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் ததைவ ச  ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம் நவ பிருந்தாவனம் பஜே!’......

 எனும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட, மிகுந்த பலன் கிடைக்கும்.

நேரில் தரிசிக்க முடியாதவர்கள் நவபிருந்தாவனம் படத்தை வணங்கி, மேற்கண்ட ஸ்லோகத்தைக் கூறி வந்தாலும் பலன் கிடைக்கும்.

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் ம்ருத்திகா பிருந்தா வனமும் இங்கு அருகிலேயே அமைந்துள்ளது.

 செல்லும் வழி:

பெல்லாரி மாவட்டம், ஹாஸ்பெட் என்ற ஊரிலிருந்து, ஹம்பி வழியாக 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஆனே குந்தி. இங்கிருந்து படகு மூலம் நவ பிருந்தாவனம் செல்லலாம்.

மல்லிகைப் பூ இட்லி செய்ய

 மல்லிகைப் பூ இட்லி செய்ய இப்படி ட்ரை பண்ணுங்க

நம்முடைய பாரம்பரிய உணவுகளில் ஒன்றுதான் இட்லி. ஆனால் ஒரு சிலர் வீட்டில் மெதுமெது இட்லியைப் பார்த்தால் இன்னும் இரண்டு சேர்த்து சாப்பிடலாம் என தோன்றும். இதே போல நம் வீட்டிலும் ஏன் செய்வதில்லை என்று இட்லியினால் பிரச்சனைகள் வந்த வீடுகளும் உண்டு. எப்படி செய்வது இந்த மல்லிகை பூ போன்ற மெதுமெது  இட்லிகள்? இதோ இதுபோல செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்கள் கைகளுக்கும் பரிசாக தங்க வளையல் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

தேவையானவை:

புழுங்கல் இட்லி அரிசி -4 டம்ளர் வெந்தயம்-  2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்
அவல்- 2 ஸ்பூன்
உப்பு. - ஒரு கைப்பிடி

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி மூழ்கும் அளவு நீரூற்றி மூன்று மணிநேரம் ஊற விடுங்கள். உளுந்தையும் வெந்தயத் தையும்  சேர்த்துக் கழுவி சுமார் அரை மணி நேரம் ஊற வையுங்கள். அவலைக் கழுவி நீரை வடித்து வையுங்கள். இப்போது கிரைண்டர் முதலில் ஊறிய உளுந்து வெந்தயத்தைப் போட்டு நிறைய நீர் சேர்க்காமல் அவ்வப்போது நீர் தெளித்து புசுபுசவென நைசாக ஆகும் வரை ஆட்டி ஒரு பாத்திரத்தில் வழியுங்கள். பின் நன்கு ஊறிய அரிசியையும் போட்டு ஆட்டி எடுக்கும்போது ஊறிய அவலையும் போட்டு நைசாக அரைத்து ஒரு டம்ளர் உரல் கழுவிய நீர் மட்டும் சேர்த்து உளுந்து மாவுடன் தேவையான உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து மூடி வைக்கவும்.

சுமார் எட்டு மணி நேரம் ஆனதும் எடுத்து பிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் எடுத்துப் பார்த்தால் மேலே உப்பி வந்திருக்கும். மீண்டும் கரண்டி விட்டு நன்கு கலக்கி இட்லிப்பாத்திரத்தில் துணி போட்ட இட்லித் தட்டுகளில் ஊற்றி ஏழு அல்லது பத்து நிமிடங்கள் கழித்து நீர் தெளித்து எடுத்தால் பூப்போன்ற இட்லிகள் தயார்.

குறிப்பு- ஒரு சிலர் கைகளுக்கு இட்லி மாவு விரைவில் புளித்து விடும். அரைக்கும்போது நீருக்குப் பதில் ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கலாம். அதிக நேரம் உளுந்தை அரைக்கக்கூடாது. அரிசியை மிகவும் நைசாக அரைக்கக்கூடாது. அவ்வப்போது பிரிட்ஜில் உள்ள மாவை தேவைக்கு மட்டும் எடுத்து பயன்படுத்தவும். மொத்த மாவையும் எடுத்து நீர் விட்டுக் கரைத்தால் இட்லி சரியாக வராது. தோசைக்கு ஓகே. உளுந்தின் அளவுக்கு முக்கால் அளவு போடும் வெந்தயமும் அவலும் உடலுக்கும் நல்லது. இட்லியின் மிருதுத்தன்மைக்கும் நல்லது. முக்கியமாக மாவு ஆட்டும்போது சரியான நேரத்தில் சரியான பதத்தில் எடுக்கவேண்டும்.

வைரவன் பட்டி பைரவர் கோயில்

 வைரவன் பட்டி பைரவர் கோயில்


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது வைரவன்பட்டி பைரவர் கோயில்.பைரவன் பட்டி தான் வைரவன் பட்டியாக மாறியுள்ளது....

அழகான திருக் குளத்துடன் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரத்துடன் காட்சி தருகிறது

பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்து செட்டி மார்கள் போற்றிப் பரவும் 9 ஆலயங் களில் முதன்மை யானது என்கிறார்கள் செட்டிநாட்டு மக்கள். 

இந்தக் கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீபைரவ தரிசனம். அம்மையப்பனுக்கு அடுத்த பிரதான தெய்வமாக இவரே இங்கு வழிபடப் படுகிறார்.

பிணி தீர்க்கும் பைரவ தீர்த்தம் !

ஸ்ரீபைரவர் மட்டுமல்ல, அவருக்கான வழிபாடுகளும் இங்கே விசேஷம் தான் ! 

 இந்தத் திருத்தலத் துக்குச் சென்று ஸ்ரீபைரவர் சந்நிதிக்கு எதிரே உள்ள பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் .

சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவு வதற்காக ஸ்ரீ பைரவர் உருவாக்கிய தீர்த்தம் இது என்கின்றன புராணங்கள். 

இதை, அஷ்ட வயிரவ சூல தீர்த்தக் குளம் என்றும் போற்று கின்றார்கள்.

ஸ்ரீபைரவர் சந்நிதியின் 12 தூண்களும் 12 ராசிகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. இவையனைத் தையும் கட்டுப் படுத்தும் மூலவராக ஸ்ரீபைரவர் அருள்கிறார் என்பது ஐதீகம்.

 தொடர்ந்து 3 புதன் கிழமை (அ) சனிக் கிழமைகள் இந்தக் கோயிலுக்குச் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க, குழந்தை வரம் கிடைக்கும்; இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம்

இந்த மரத்துக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதன் இறந்ததும் மீண்டும் இறைவனால் ஆட்கொள்ளப் படுகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, ஏறு அழிஞ்சில் மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக் கொள்கின்றனவாம். 

மேலும், மாசி மாதத்தில் இந்த மரத்தில் பூக்கும் சூரிய வெண்மை கொண்ட பூக்களைக் காண்பதே புனிதம்

ஸ்ரீபைரவருக்குப் பிடித்தமான உளுந்து, வெல்லம், பச்சரிசி ஆகிய வற்றைத் துலா பாரம் செலுத்தி வழிபடுவதால், அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி, சனி தசை நடைபெறும் அன்பர்கள் சனிக் கிரக பாதிப்புகள் யாவும் நீங்கி நலம் பெறுவர் .*

மேலும், கல்வியில் மந்தமாக உள்ள பிள்ளைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து வழிபடச் செய்தால், விரைவில் அவர்களின் கல்வியறிவு மேம்படும்; பாலாரிஷ்ட தோஷம் முதலானவை நீங்கும்* 

 *காரைக்குடி பக்கம் வந்தால் மறக்காமல் வைரவர் பட்டி போக மறக்காதீங்க*👆

Monday, February 26, 2024

ஸ்ரீகாகபுஜண்டரின் சித்தவாசம்

 ஸ்ரீகாகபுஜண்டரின் சித்தவாசம் இருக்கும் இடங்கள்

மதுரை திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி ஒரு விநாயகர் சன்னதிக்கு கீழே அமைந்திருக்கிறது; இந்த விநாயகரை ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் பல யுகங்களாக வழிபட்டு வந்திருக்கிறார். 

மதுரையைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் ஸ்ரீகாகபுஜண்டரின் சித்தவாசம் இருந்திருக்கிறது. அந்த இடங்களிலும் இதே போல முயற்சி செய்து பார்க்கலாம்:

1. சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் வட்டத்தில் இருக்கும் ஆச்சாள்புரம். இங்கே திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்திருக்கிறது. இங்கே இன்னும் ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.

2.  சிதம்பரத்திலிருந்து  கடலூர் சாலையில்  அமைந்திருக்கும் ஆலப்பாக்கத்தில் ஸ்ரீபுஜண்டலிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கே புஜண்டர் பலருக்கு ஞான உபதேசம் அளித்திருக்கிறார்.

3. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கல் கூட்ரோட்டிலிருந்து புதுப்பாளையம் செல்லும் பாதையில் சோதியம்பாக்கம் இருக்கிறது.இங்கே சிவாகமவிதிப்படி ஸ்ரீகாகபுஜண்டரின் ஆலயம் அமைந்திருக்கிறது.

4. விழுப்புரம் அருகில் சின்னச்சேலம் அருகில் இருக்கும் ஊர் தென்பொன்பரப்பி. இங்கு காகபுஜண்டர் கோவில் இருக்கிறது.ஜீவசமாதி அடையாத ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர்தான்!!!

5. நாகப்பட்டிணம் மாநகரத்திலிருந்து சுனாமிப் பாலம் வழியாகச் சென்றால் வருவது கோரக்க சித்தரின் ஜீவசமாதி ஆகும். இங்கிருந்து வேளாண்கன்னிக்குச் செல்லும் பாதையில் சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்குப் பயணித்தால் சாலையின் மேற்கே ரயில்வே கேட் தாண்டித் தெரிவது ஸ்ரீபால்மொழி அம்மன்கோவில் ஆகும்.இங்கே ஸ்ரீகாகபுஜண்டர் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக (யுகங்களாக) தவம் செய்திருக்கிறார். இங்கே தான் உலகம், உயிர்கள், பிரபஞ்சம் என்று அனைத்தையும் படைத்த ஆதி பரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி என்ற வாலைப்பெண்ணைத் தரிசித்தார் ஸ்ரீகாகபுஜண்டர்.

6. ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது திருவழுக்குப்பாறை ஆகும். வனத்துறை அனுமதியோடு மலை மேலே பத்து கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும். இங்கே அமுதகலசத்துடன் வாலைத் தெய்வம் அருள்புரிந்து வருகிறார். இங்கேயும் ஸ்ரீகாகபுஜண்டர் பல காலமாக தவம் செய்திருக்கிறார்.

7. திருப்பரங்குன்றம் மலைக்குப் பெயரே புசுண்டர் மலையே. இங்கே ஏராளமான சித்தர்கள்/துறவிகளின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன. இங்கேயும் பல காலமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.

8. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இங்கே மனிதகாலடித் தடம் படாத இடங்கள் இருக்கின்றன. இந்த வனத்தினுள் காகபுஜண்டர் குகை இருக்கிறது

9. இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் ஸ்ரீகாகபுஜண்டர் பலகாலம் தவமிருந்து ஜோதி வடிவாக சிவனுடன் ஐக்கியமாகியிருக்கிறார்.

10. புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் இருக்கும் திருமலைராயன் பட்டிணத்தில் இருக்கும் ஆயிரங்காளியம்மன் கோவிலில் பல யுகங்களாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.

11. சிவகெங்கை மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூர். இவ்வூருக்கு அருகில் இருக்கும் வைரவன்பட்டி. பூமி படைக்கப்பட்டதிலிருந்து ஸ்ரீகாலபைரவர் இங்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவராக அருள்பாலித்து வருகிறார். இங்கே தவம் செய்யாத சித்தர்களே கிடையாது. ஸ்ரீகாகபுஜண்டரின் தவ ஆற்றல் இன்னும் இங்கே பரவிக்கிடக்கிறது.

12. அண்ணாமலைக்கு அருகில் காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) செல்லும் வழியில் 13 வது கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது காகா ஆஸ்ரமம். ஸ்ரீகொல்லிமலைச் சித்தர் காகபுஜண்டரின் சீடர் தருமலிங்க சுவாமிகளின் ஆசிரமம் இது.இங்கே காகபுஜண்டரின் ஆலயம் மிக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது.

13. கோயம்புத்தூரில் இருக்கும் மாஸ்திக்கவுண்டன்பதி என்ற ஊரில் பாலரிஷி ஆஸ்ரமம் அமைந்திருக்கிறது. இங்கே ஸ்ரீகாகபுஜண்டரை உபாசனை செய்யும் பெண் சித்தர் ஸ்ரீவிஸ்வசிராஸினி ஒரு நாளுக்கு 20 மணி நேரம் ஜெபதவத்தில் ஈடுபட்டு வருகிறார். இங்கே சென்று சிவமந்திரம் ஜபித்து வர, ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.

14. கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலையில் தகுந்த குருவின் துணையோடு தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து சிவமந்திரம் ஜபிக்க, வெகு விரைவாகவே ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.

15. சீர்காழி சட்டநாதர் திருக்கோவிலில் அஷ்ட பைரவர்கள் வாழ்ந்து வருகிறார்.இங்கே இன்னமும் சூட்சுமமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.

வசந்த காலம் வருமோ?-122

 வசந்த காலம் வருமோ?-122

By N Krishnamurthy 

இந்த கதை போன பதிவோடு  முடிந்துவிட்டது என்றே கூறலாம். இந்த கதையே வேறு மாதிரி கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்த என்னை, பல வாசகர்கள் ம்ருதுளாவையும்,சங்கர க்ருஷ்ணனையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டிருந்ததால் நான் அதற்கேற்ப கதையை நடத்திச்செல்ல வேண்டியவனானேன்.

கதை மாந்தர்களுக்கு பிற்காலத்தில் என்ன நடந்தது என்று அறிய பலருக்கும் ஆவலாக இருக்கும். இதற்கான பதில் கீழே.

ஒரு வருடம் கழித்து வசுமதிக்கு வர்ஷணி பிறந்தாள்.

திருமணமாகிய 20 வது மாதத்தில் சங்கர க்ருஷ்ணன், ம்ருதுளா தம்பதிகளுக்கு அமிர்தா பிறந்தாள்.

அமிர்தா பிறந்த மூன்று வருடம் கழித்து அவர்களுக்கு அபிஷேக் பிறந்தான்.

முதலில் ம்ருதுளாவிற்கு பெண் குழந்தை பிறந்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்ட வசுமதி, அமிர்தா தான் என் மாட்டு பெண் என்று கூறிக் கொண்டிருந்தாள்.

ரகுநந்தனுக்கு ஒரு நல்ல இடத்தில் ஒரு வருடம் கழித்து திருமணம் நடந்தது.

மார்க்கபந்து ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பித்தார். அதில் அக்கவுண்ட் செக்ஷனை மேனேஜ் பண்ண பத்மநாபனை அப்பாயின்மென்ட் செய்தார். எனவே பத்மநாபனும், ரங்கநாயகியும் மதுரை விட்டு கிளம்பி சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள்.

ரங்கநாயகி வாரத்துக்கு இரண்டு முறையாவது ராஜேஸ்வரியை வந்து பார்த்து பேசிவிட்டுப்போவாள்.

மைதிலியும், சாரங்கனும் அடிக்கடி அமிர்தா உடனும், அபிஷேக்குடனும் பொழுதை கழித்தார்கள்.

இப்பதெல்லாம் ராஜேஸ்வரிக்கு அமிர்தாவையையும், அபிஷேக்கயையும் கவனிக்கவே நேரம் போத வில்லை. இந்த அழகில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவளும் மார்கபந்துவும் கிளம்பி ராஜராஜபுரம் சென்று ஜெகன், சீதா மற்றும் சிதம்பரம், சாரதா அவர்களுடன் இரண்டு நாட்கள் இருந்து விட்டு வருவார்கள்.சில சமயம் அவர்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு செல்வார்கள்.

ம்ருதுளா அடுத்த நான்கு ஆண்டுகளில் சங்கீத வானில் கொடி கட்டி பறந்தாள். 

சங்கர க்ருஷ்ணன் சென்னை ஐ.ஐ.டியில் பி.ஹெச்.டி முடித்துவிட்டு தனியாக ஒரு கன்சல்டன்சி கம்பெனி ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தான். அவனுக்கும்  பல கச்சேரி வாய்ப்புகள் குவிந்து வண்ணம் இருந்தன.

அமிர்தா மூன்று வயதிலிருந்தே அம்மாவிடம் பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். 

வெகு காலம் குழந்தை பாக்யமில்லாமலிருந்த ராதிகா,கண்ணன் தம்பதிகள்,செயற்கை கருத்தரிப்பு முறையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள்.

பத்மநாபன் தம்பி ரகுவிற்கும் சென்னை மாற்றலானது. ஸ்ரீவத்சன் பெருமுயற்சி எடுத்ததின் விளைவாக, சென்னையில் கோபதி நாராயணசாமி(செட்டி) சாலையில் உள்ள BHEL ஆபிசுக்கு மாற்றல் செய்து கொண்டு,குடும்பத்துடன் சென்னைக்கு வந்து சேர்ந்தான்.

எல்லா பந்துமித்ரர்களும் மாதம் இருமுறை ராஜேஸ்வரியின் வீட்டிலோ அல்லது சாரங்கன் வீட்டிலோ குழுமி ஒரு நாள் முழுவதும் கூடிக்களிப்பார்கள். இதையெல்லாம் ரங்கநாயகிதான் எடுத்துப்போட்டுக்கொண்டு அரேன்ஜ் செய்வாள்.

ராஜேஸ்வரிக்கு கல்யாணசெலவு அறுபத்தி ஐந்து லக்ஷத்தை எட்டியதாக கேள்வி. ம்ருதுளா என்ற பத்தரை மாற்று தங்கத்தின் முன் அறுபத்தி ஐந்து லக்ஷம் ஒன்றுமேயில்லை என ராஜேஸ்வரி நினைத்தாள்.

இப்படியாக சங்கர க்ருஷ்ணன், ம்ருதுளா  வாழ்க்கை ஒரு அருமையான சங்கீதம் போல சுகமாக, விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்தது.

முடிக்கு முன் வழக்கம் போல உங்களிடம் ஒரு கேள்வி.

 உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது? எதனால் அந்த பாத்திரம் உங்களை கவர்ந்தது?

இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று பார்க்கும் பொழுது ராஜேஸ்வரியையும், ம்ருதுளா, சங்கர க்ருஷ்ணனையும் விட்டு விட்டு பிரியப் போகிறோமே என்ற துக்கம் என் தொண்டையை அடைகிறது. என்ன செய்வது?

All good things should come to an end  என்பது தானே  விதி.

வசந்த காலம் வருமோ?- 121

 வசந்த காலம் வருமோ?- 121

By N Krishnamurthy 

போகும் வழியில் ஈச்சனாரி விநாயகர் கோவிலில் ஐந்து நிமிடம் நிறுத்த வேண்டும் என்று ட்ரைவரிடம் கேட்டுக் கொண்டார் சிதம்பரம். கோவிலை  அடைந்ததும் சிதம்பரம் கையில் உள்ள மட்டை  உறித்த தேங்காய்களை எடுத்துக்கொண்டு போய் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்தார்.சிலர்  ஆலயத்தின்  உள்ளே போய் விநாயகரை வேண்டிக்கொண்டு திரும்பி பஸ்சுக்கு வந்தார்கள். 

ஒன்றரை மணிக்கு பஸ் கோயம்புத்தூர் ஸ்டேஷனை  அடைந்து, பின்புறத்தில் நின்றது. எல்லோரும் இறங்கி, லக்கேஜுகளை எடுத்துக்கொண்டு, முதல் வகுப்பு வெயிட்டிங் ரூமுக்கு சென்றார்கள். ராஜேஸ்வரியும், மார்க பந்துவும், பஸ்சுக்கு ஆன பணத்தில் அட்வான்ஸை கழித்துக்கொண்டு மீதியை  டிரைவரிடம் கொடுத்தனர். அவருக்கு மறக்காமல் ஒரு தாம்பூலப்பையையும், அத்துடன் இரு நூறு ரூபாயையும் சேர்த்து  கொடுத்தார்கள்.

வெயிட்டிங் ரூமில், கொண்டு வந்திருந்த கட்டு சாதத்தை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

சரியாக மூன்று  மணிக்கு ட்ரெயின் கோவையை விட்டு கிளம்பியது. எல்லோருக்கும் ஒரே கம்பார்ட்மெண்டில்  இடம் கிடைத்தது தான் அதிசயம் .  ராஜேஸ்வரி மாமி மிகவும் புத்திசாலி. இல்லாவிட்டால்  சென்னையிலிருந்து கோவை செல்லும் போது சங்கர க்ருஷ்ணனுக்கும், ம்ருதுளாவுக்கும் வேறு வேறு சீட்டிற்கு புக் செய்தவள் , திரும்பி வரும்போது இருவருக்கும் அடுத்தடுத்த   இருக்குமாறு டிக்கெட் புக் பண்ணியிருப்பாளா?

ரங்கநாயகி, பத்மநாபன் மற்றும் சிதம்பரம் அடுத்தடுத்து  மூன்று பேர் சீட்டில்  அமர்ந்து இருந்தார்கள். ட்ரெயின் கிளம்பியவுடன், ஒரு வார அலைச்சலால் தூங்க ஆரம்பித்த ராஜேஸ்வரி ஜோலர்பேட்டை வரும் வரை அசந்து தூங்கினாள்.

காட்பாடி தாண்டியதும் வசுமதி,வந்தனா மற்றும் ம்ருதுளா கட்டு சாத கூடையை பிரித்து எல்லோருக்கும்,பாக்கு மட்டை தட்டில், புளியோதரையும்,மிளாகாய் பொடி தடவிய இட்லிகளையும் போட்டு வினியோகித்தார்கள். விருப்பப்பட்டவர்கள் ட்ரையினில் கிடைத்த டீ (வென்னீரை) யை பருகினார்கள்.

வழக்கமாக டாக்ஸி புக் செய்யும் ட்ராவல்ஸ் நிறுவனித்திடம் 20 பேர் பிடிக்கக்கூடிய மூன்று வேன்களை இரவு பத்து மணிக்கே சென்ட்ரலுக்கு வந்து காத்திருக்குமாறு முதலிலேயே ஏற்பாடு செய்திருந்தாள் ராஜேஸ்வரி. அரக்கோணம் தாண்டியதும் ட்ராவல்ஸ் ஓனரை  போனில் தொடர்பு கொண்ட ராஜேஸ்வரி சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வேன்கள் வந்தாகி விட்டதை உறுதி செய்து கொண்டாள். 

சென்னையை ட்ரெயின் அடையும் போது மணி பத்து இருபத்தைந்து  ஆகிவிட்டிருந்தது.   சாமான்களை பத்திரமாக  இறக்கி, அவற்றைப் போர்ட்டர்கள் உதவியுடன் தள்ளு வண்டியில் ஏற்றி ஸ்டேஷனுக்கு வெளியே நின்றிருந்த வேனில் ஏற்றினார்கள்.

முதல் வேனில் சாரங்கன் தம்பதிகள், சக்ரவர்த்தி தம்பதிகள்,ருக்மணி,அவர் கணவர்,வசுமதி,ஸ்ரீவத்சன்,அவனது பெற்றோர்கள்,ரங்கநாயகி,பத்மநாபன்,மஹாலக்ஷ்மி குடும்பம்,ரகு குடும்பம், கருணாகரச்சாரியார், அவருடன் வந்தவர்கள் அமர்ந்ததும் வேன் கிளம்பி சாரங்கன் வீட்டை அடைந்தது.

ராஜேஸ்வரி,மார்கபந்து,சபேச அய்யர், மரகதம்,சந்தானம் குடும்பம், லலிதா, ஸ்ரீதரன்,வினோத், சிதம்பரம்,வைத்யநாத சாஸ்திரிகள்,அவருடன் இருந்த இரண்டு வைதீகர்கள் இரண்டாவது வேனில் அமர,வேன் ராஜேஸ்வரியின் வீட்டை அடைந்தது

மூன்றாவது வேனில் பயணித்த சுப்பு லக்ஷ்மி குடும்பம்(அத்தை,அத்திம்பேர், ராமகிருஷ்ணன் அவர் மனைவி உட்பட)சுப்பு லக்ஷ்மியின் வீட்டை அடைந்தது.

ம்ருதுளாவிற்கு வெளியில் சென்று விட்டு திரும்பி வழக்கமாக மீண்டும் தன் வீட்டிற்கு போகாமல் தன் புகுந்த வீட்டிற்கு போவதை வித்யாசமாக உணர்ந்தாள்.  ராஜேஸ்வரி  சென்ட்ரலிலேய அவளிடம் " உனக்கு எங்காத்துக்கு வரது ஒரு மாதிரி இருந்தா, நீ ஒன்னோடு ஆத்துக்கு ராத்திரி போய்ட்டு,  அம்மாவோட தங்கிட்டு, நாளைக்கு கார்த்தால  வந்துக்கலாம்" என்று சொன்னாள். அதற்கு ம்ருதுளா ராஜேஸ்வரியிடம் "இல்லம்மா.நான் நம்பாத்துக்கே வந்துடறேன்" என்று சொன்னாள்.  பெண்கள் தான் எவ்வளவு சீக்கிரமாக தங்களை அட்ஜஸ்ட்  செய்து கொண்டு விடுகிறார்கள். 

மறுநாள் காலை குளித்து, சந்தியை செய்து முடித்த வைத்தியநாத சாஸ்திரிகள் "சாந்தி முகூர்த்தத்தை எப்போ வச்சிகறதா உத்தேசம்" என்று கேட்டார் .அதன் பின்பு அவர் அடுத்த வாரத்தில் ஒரு நாள் நன்றாக இருப்பதாக கூறி அது பெண்ணிற்கு சௌகரியப்படுமா என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். மைதிலியிடம் இது விஷயம் பற்றி போனில் பேசிய ராஜேஸ்வரி அன்றே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினாள்.

அடுத்தநாள் காலை சிதம்பரம் ராஜராஜபுரத்திற்கு கிளம்பினார்.அவர் எவ்வளவு சொல்லியும் அதை கேட்க்காமல் ராஜேஸ்வரி அவருக்கு திரும்பிப்போக டூரிஸ்ட் கார் ஏற்பாடு செய்திருந்தாள். ம்ருதுளாவும்,சங்கர க்ருஷ்ணனும் அவரை நமஸ்கரித்தார்கள். "சீக்ரமேவ சந்தான ப்ராப்தி ரஸ்து"என்று அவர்களை ஆசிர்வதித்தார். ஒரு தட்டில் முஹுர்த்த தாம்பூலத்தை வைத்து அதனுடன் வெற்றிலை பாக்கோடு இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் வைத்து ராஜேஸ்வரியும்,மார்கபந்துவும் அவரிடம் நீட்டினார்கள். சிதம்பரம் அதை பெற்றுக்கொள்வதற்கு முன் "ஒரே ஒரு கண்டிஷன் பேர்ல நான் இதை எடுத்துக் கொள்வேன்" என்று கூறினார்." என்ன கண்டிஷன் சொல்லுங்கோ" என்றாள் ராஜேஸ்வரி. "இனிமே நம்மளுக்குள்ள ஒரு தொடர்பும் இல்ல அப்படின்னு இருக்கும் பட்சத்தில் நான் இதை எடுத்துக் கொள்வேன். இப்படி ரூபாய் எல்லாம் கொடுத்து நம்ப நட்பை கொச்சைப்படுத்தாதீர்கள்" என்று கூறியவர் முகூர்த்த தாம்பூலத்தையும், வெற்றிலை, பாக்கையும் மட்டும் எடுத்துக்கொண்டு, ரூபாயை தட்டிலேயே வைத்து அதே சங்கர கிருஷ்ணனுக்கும், ம்ருதுளாவுக்கும் அளித்தார்.

மார்ககபந்துவும், ராஜேஸ்வரியும் அவருக்கு நமஸ்காரம் செய்தார்கள். சிதம்பரம் எல்லோரையும் பார்த்து "ராஜராஜபரத்துக்கு அடிக்கடி வந்து போயிண்டிருங்கோ"என்று கூறி காரில் ஏறினார்.

சாந்தி முகூர்த்தத்திற்கு ராஜேஸ்வரியின் வீட்டில் ஒரு அறை அலங்கரிக்கப்பட்டது அன்று  மாலை மைதிலி, சாரங்கன், வசுமதி, ஸ்ரீவத்சன், ரங்கநாயகி, பத்மநாபன் ,கோமளா சக்கரவர்த்தி ஆகியோர்  ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வைத்தியநாத சாஸ்திரிகள்  தன்னால் வர முடியவில்லை என்று அவருடைய சிஷ்யன்  ஒருவரை அனுப்பி இருந்தார் .வைதீக காரியங்கள் முடிந்தபின் ம்ருதுளாவும், சங்கர க்ருஷ்ணனும்  அறைக்குள் விடப்பட்டார்கள்.

இறைவன் என்னும் சூத்ரதாரி நம்மையெல்லாம் படைத்து, சம்சாரம் என்னும் மாயவலையில் நம்மை சிக்க வைக்க,புத்ரபாக்யத்தை கொடுக்க வேண்டி, நமக்கு சரியான பருவத்தையும், சூழ்நிலையையும் தருகின்றான். இது போன்ற தருணத்தில் இருக்கும் ம்ருதுளா,சங்கர க்ருஷ்ணன் தம்பதிகளை நாம் இப்போதைக்கு விட்டு விடுவோம்.

Sunday, February 25, 2024

வசந்தகாலம் வருமோ?-120

 வசந்தகாலம் வருமோ?-120

By N Krishnamurthy 

ஜோசியர் "நீங்கள் சிவனுக்கு பல கோவில்கள் கட்டியுள்ளீர்கள். மகாவிஷ்ணுவிற்கு , தனக்கு நீங்கள் ஒரு கோவில் கூட கட்டவில்லையே என்ற குறை உள்ளது. நீங்கள் மட்டும் அவருக்கு ஒரு கோவில் கட்டீனீர்களே ஆனால், அவர் உங்களுக்கு ஒரு ஆயுதத்தை அளிப்பார். அதை வைத்து போரிட்டால் உங்களை யாராலும் வெல்ல முடியாது " என்று கோச்செங்கணானிடம் கூறினார். உடனேயே பெருமாளுக்கு கோவில் கட்டத்துவங்கினான் மன்னன். அந்த கோவில்தான் கல் கருடனுக்கு பிரசத்தி பெற்ற,திரு நரையூர் எனப்படும் நாச்சியார் கோவில். மன்னன் கோவில் கட்டி முடித்ததும் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தான். அப்போது அங்கே ஒரு சிக்கல் முளைத்தது. Chief  பட்டர் கோவில் ஆகம விதிப்படி இல்லாததால் கும்பாபிஷேகத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

எப்பவும் ஒரு நல்ல காரியம் செய்யும்போது அதற்கு தடங்கலா சில பேர் எல்லா காலத்திலும் இருப்பா போல இருக்கு.

அன்னிக்கு Chief  பட்டர் கனவில் பெருமாள் எழுந்தருளினார்.

"ஏண்டாப்பா.நான் நோக்கு என்ன கெடுதல் பண்ணேன். வெண்ணை தெரண்டு வரும் போது தாழியை ஒடச்சூடுவ போல இருக்கே.அவனோ சிவபக்தன். அவனுக்கு ஒரு வீர வாள் பரிசளிக்கறேன்னு ஆசை காட்டி நேக்கு ஒரு கோவிலை கட்டச்சொல்ல, அவனும் அப்படியே செஞ்சிருக்கான். இப்ப நீ கும்பாபிஷேகத்திற்கு பிரேக் போடற.நீ என்ன செய்வயோ,ஏதுசெய்வயோ,நேக்கு தெரியாது. நாளைக்கு கும்பாபிஷேகம் நடந்தே தீரணும்" என்று கண்டிப்புடன் கூற, பட்டர் நடு நடுங்கிப்போனார். மறு நாள் கும்பாபிஷேகம் அமோகமா நடந்தது. 

பெருமாள் அவனுக்கு வீர வாளை  பரிசளிச்சார். அதன் பின் அவன் எந்தப்போரிலும் தோற்றதே இல்லை.

எனவேதான் திரு மங்கை ஆழ்வார் இவனை போற்றி பாடியிருக்கார் "என்று சிதம்பரம் முடித்தார்.

சக்ரவர்த்தி சிதம்பரத்திடம் "இதையெல்லாம் நீங்க படிச்சு தெரிஞ்சுப்பேளா"என்று கேட்டார்.

அதற்கு சிதம்பரம் "கண்டது கற்க பண்டிதவன் ஆவான்னு" சொல்வா. பலசமயம் கற்றலை விட கேட்டல் செறந்தது என்பது என் கொள்கை.

"கற்றலின் கேட்டலே  நன்று" என்று 

பழமொழி நானூறுன்ற தமிழ் இலக்கியதத்ல

"உணற்(கு) இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று"ன்னு சொல்லியிருக்கு.

இந்தகதையை நான் படிச்சு தெரிஞ்சுக்கல.கேட்டுதெரிஞ்சுண்டேன்.

ஜெயா டீவீல உ.வே.கருணாகராச்சாரியார் என்ற ஸ்ரீவைஷ்ணவ பௌராணிகர்,ஒரு வெள்ளிசிம்மாசனம் மேல உக்காந்துண்டு, இந்த கதையை ரசமா சொன்னார்.அவர் ஒரு என்ஜினீயர். சென்ட்ரல் கவர்ன்மெண்ட்ல பெரிய உத்யோகத்ல இருந்திருக்கார்.

அவர் சொன்ன கதையை கருத்து மாத்தாம,அங்க இங்க கொஞ்சம் கூட்டி கொறச்சி நான் சொன்னேன்.

நானும் ஒரு என்ஜினீயர் தான்.என்ஜினீயர் எல்லாம் பொதுவா கதை வுடறதல வல்லவோ போலயிருக்கு" என்றார்.

அவர் முடித்ததும் பத்மநாபன் அவரிடம்"நாங்கூட ராஜ ராஜபுரத்துக்கு ஜாகையை மாத்திக்கலாமோன்னு பாக்கறேன்.தினம்தினம்புதுசு புதுசா ஏதாவது கதையோ,ஜோக்கோ  கேட்டிண்டிருக்கலாமோன்னோ"என்றார். இதைக்கேட்ட சிதம்பரம் "பத்மநாபன் சார் மட்டுமில்லை. இங்கியிருக்கற யார் வேணூண்னாலும் ராஜராஜபுரத்துக்கு குடியேறலாம். இப்போதைக்கு ஒரு சிவன் கோவில் தான் அங்க இருக்கு. பெருமாள் கடாக்ஷம் கெடச்சா அங்கே அவருக்கும் ஒரு கோவில் கட்டிடலாம்" என்றார்.

ஹை வேயிலிருந்த சரவண பவன் ஹோட்டல் முன் ட்ரைவர்,காபி சாப்பிட பஸ்சை நிறுத்தினார்.

புதுமண தம்பதிகளான ம்ருதுளாவும், சங்கர க்ருஷ்ணனும் ரகசியமாக,மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்த தங்கள் சம்பாஷணையை நிறுத்தினார்கள்.

ரங்கநாயகியை பார்த்து ராஜேஸ்வரி "இப்போ வலி கொறஞ்சிருக்கா மாமி"என்று கேட்க அவள் "முன்னக்கி இப்போ எவ்ளவோ தேவலை "என்றாள்."சூடா காபி வாயிண்டு வறேன்.குடியுங்கோ" என்றாள் ராஜேஸ்வரி.

"நானு வரேன்"என்று சொல்லிய ரங்கநாயகி ராஜேஸ்வரி அவளை பிடித்துக்கொள்ள, எழுந்து அவளை பிடித்துக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கினாள். இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து வசுமதி ஆனந்தம் அடைந்தாள்.

வசந்த காலம் வருமோ?-119

 வசந்த காலம் வருமோ?-119

By N Krishnamurthy 

திருவானைக்காவில் சிவ பெருமானை  ஒரு சிலந்தியும், யானையும் பூஜித்த  கதையை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். யானை காவிரியில் இருந்து  தீர்த்தத்தை கொண்டு வந்து  சிவனக்கு அபிஷேகம் பண்ணறதும், சிலந்தி அதுக்கு மேல வலை பின்றதும், யானை அந்த வலையை  அழிக்கறதுமான நிகழ்ச்சிகள்  தினம் நடந்துண்டிருந்தது. யானைக்கும், சிலந்திக்கும் பெரிய விரோதம் வளர்ந்து கொண்டிருந்தது.இது ஜென்ம பகையாக முடிந்தது. இந்த சிலந்தி வாழ்நாள் முடிந்ததும் அடுத்த பிறவியில் இறைவன் அதனுடைய பக்தியை பாராட்டி அரசு பதவி அளித்தார். இப்போ இருக்கற அமைச்சர்கள் எல்லாம் போன பிறவில சிலந்திகளா,சிவ பக்த்தாளா  இருந்திருப்போளோன்னு நெனச்சுக்க வேண்டாம்.(சிலர் சிரிக்கிறார்கள்). 

அந்த ராஜாதான் கோச்செங்கணான். அவனுடைய அம்மா ராஜமாதா கோச்செங்கணானை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தபோது, அவனைப் பிரசவிக்க வேண்டிய சமயம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு புகழ்பெற்ற ஜோசியரை கூப்பிட்டு கொண்டு வர சொன்ன ராஜமாதா  அவரிடம் " என் பையன் எப்போது பிறந்தால் ஒரு குடையின் கீழ் உலகை ஆள முடியும்"என்று கேட்டாள். நம்பள கேட்டிருந்தா என்ன சொல்லி இருப்போம்? அவ்வளவு பெரிய கொடைக்கு எங்க போறது என்று சொல்லி இருப்போம் (  கூட்டம் சிரித்தது). அந்த ஜோசியர் ராஜ மாதாவிடம் "இன்னும் ஒரு அரை நாழிகை கழித்த அவன் பிறந்தால் பெரிய சக்கரவர்த்தியாக உலகத்தை ஆளுவான்" என்று கூறினார். எனவே குழந்தை உடனடியாக பிறக்கக் கூடாது என்று நினைத்த ராஜமாதா தன்னை தலைகீழாக கட்டி தொங்கவிடச் சொன்னாள். அரை நாழிகை போனதும்  அவள் தன்னை பிரசவத்திற்கு ஏற்ற நிலையில் இருத்திக்கொள்ள, குழந்தை பிறந்தது. ஆனால் பாவம், ராஜமாதா பிரசவத்தில் இறந்தாள். குழந்தையின் கண்கள் முழுதும் அன்னையின் ரத்தம் மிகவும் பாய்ந்திருந்ததால் அதன்  கண் சிகப்பாக இருந்தது. அதனால் தான் செங்கணான்.

சிவந்த கண்களை உடையவன்.

கோ என்றால் அரசன் .எனவே அவன்

கோச்செங்கணான் என பெயரிடப்பட்டான்.

அவன் வயதுக்கு வந்ததும் பெரிய  வீரனாக மாறி பல ராஜ்யங்களை வென்று வெற்றி வீரனாக திகழ்ந்தான். 

முன் பிறவிவியில் அவனுக்கு சிவபக்தி அதிகமாக இருந்தது. இந்த பிறவிலும் அது  தொடர்ந்ததால், அவன் சிவனுக்கு பல கோவில்களை கட்டினான். அதே சமயத்தில் முன் ஜென்மத்தில் அவன் யானையின் மேல் இருந்த பகையை  நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டு, அவன் கட்டிய எந்த கோவிலிலும் யானை ஏற முடியாதபடி நிறைய படிக்கட்டுகளை அமைத்து *மாடக்கோயிலாக* கட்டினான்.

ஒரு சமயத்தில் அவன் ஒரு போரில் தோற்றுப் போய் தன்னுடைய சிறு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு, ஒரு காட்டிற்கு தப்பி ஓடினான். அங்கு சென்றதும் தன் மெய்காப்பாளனை  கூப்பிட்டு,தான்  பிறக்கும்போது ஜோசியம் சொன்ன ஜோசியரை கூப்பிட்டுக்கொண்டு வரச் சொன்னான். அந்த ஜோசியர் வந்தவுடன்"  அப்போது நான் தோற்கடிக்க முடியாதவன் என்று சொன்னீரே. என் நிலைமை இப்படி ஆகிவிட்டதே" என்று கேட்டான். அதற்கு அந்த ஜோசியர்" நீங்கள் இன்னும் செய்ய வேண்டியது ஒன்று பாக்கி இருக்கிறது. அதை செய்தீர்களானால் நீங்கள் பழையபடி இந்த அகில புவனத்திற்கு சக்கரவர்த்தி ஆகலாம்" என்று கூறினார். "அது என்ன சொல்லுங்கள், நான் உடனே செய்கிறேன்" என்றார் மன்னன் .

வசந்த காலம் வருமோ?- 118

 வசந்த காலம் வருமோ?- 118

By N Krishnamurthy 

பஸ் திருச்சூரை அடைந்த உடன் பத்மநாபன் அருகில் அமர்ந்து கொண்டிருந்த சிதம்பரத்தை பார்த்து "போர் அடிக்கறது. நீங்க எதாவது பேசுங்களேன்" என்றார். உடனே  சிதம்பரம் தன் பையில் இருந்த ஒயர்லெஸ்  மைக்கை எடுத்து வைத்துக் கொண்டு எல்லோரையும் பார்த்து "பத்மநாபன் மாமா போர் அடிக்கிறது அப்படின்னு  சொல்லி  என்ன பேச சொல்றார் . நான் இப்ப பேசி போர் அடிக்க போறேன்" என்றார்.

" இந்த பஸ்ஸில் நிறைய ஸ்ரீவைஷ்ணவர்களும், ஸ்மார்த்தர்களும்  இருக்கா. நம்ப ஒண்ணுக்குள்ள ஒண்ணு சம்பந்தம் வெச்சுண்டு இருக்கோம்.

உங்களுக்கு நான் இப்போ ரெண்டு விஷயம் சொல்ல போறேன்.ரெண்டுமே சிவ, விஷ்ணு பேதம் பார்க்க வேண்டாம் என்பதற்கான  அறிவுரையாகும்.

முதல் விஷயம் காஞ்சி மகா பெரியவா அவருடைய தெய்வத்தின் குரலில் எழுதியிருக்கார். அவர் சொல்றபடி ஈஸ்வரன் மேல் அதீத பக்தியும், வெறியும் கொண்ட ஒரு அன்பர் பெரியவாள பார்த்து நமஸ்காரம் பண்றார். பெரியவா அவர்கிட்ட நாலு வரி கொண்ட ஒரு சம்ஸ்க்ருத  ஸ்லோகத்தினுடைய முதல் இரண்டு வரிகளை சொல்லி அர்த்தம் சொல்றார். அந்த ரெண்டு வரில சிவன் ரொம்ப உசத்தியாகவும்,விஷ்ணு  ஒரு படி கம்மியாகவும் சொல்வதாக இருந்தததாம். அத கேட்டு அந்த அன்பருக்கு பரம சந்தோஷம். இந்த சந்தோஷத்தோட பெரியவாள மறுபடியும் நமஸ்காரம் பண்ணீட்டு அந்த இடத்தை விட்டு கெளம்பறார். இதுக்கு அப்புறம் பெரியவா சொல்றா "அடுத்த ரெண்டு வரி அர்தத்த  நான் சொல்லி இருந்தேன்னா  அவன் பெரிய ஆட்டம் ஆடி இருப்பான். அங்கு ஒரு பிரளயமமே உண்டாகியிருக்கும். ஏன்னா அடுத்த ரெண்டு வரில விஷ்ணுவை பத்தி ரொம்ப ஒசத்தியும், சிவனப் பத்தி தாழ்த்தியும் எழுதி இருக்கார் அந்த கவிஞர். நான் எதுக்கு சொல்றேன்னா அப்படின்னா சிவ, விஷ்ணு பேதம் பாக்க கூடாது அப்படின்னு வற்புறுத்த அந்த கவிஞர் அந்த ஸ்லோகத்த பண்ணியிருக்கார்" 

மகா பெரியவா இந்த விஷயத்த என்ன சமத்காரமா ஹேண்டில் பண்ணியிருக்கா பாருங்கோ.

சரி அடுத்த விஷயத்துக்கு வரேன்.

உங்களுக்கெல்லாம் ஒண்ணு தெரியுமா?

ஒரு ஆழ்வார் ஓரு  சிவனடியாரை அதுவும் ஒரு ராஜாவைப் பாராட்டி  பத்து பாடல்கள் எழுதி மங்களாசாசனம் பண்ணி இருக்கார்" என்று கூறிய சிதம்பரம் "இது பத்தி  யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டார். சக்கரவர்த்தி "நேக்கு தெரிஞ்சு அப்படி  எந்த ஆழ்வாரும் சிவனடியாரை பாராட்டின மாதிரி தெரியல. பாராட்டவும் மாட்டான்னு  நான் நெனக்கிறேன்.யாராவாது அப்படி ஒரு கதையை இட்டு கட்டியிருந்தாதான் உண்டு" என்றார். இதைக் கேட்ட சிதம்பரம்" இல்லை. இல்லை.திருமங்கை ஆழ்வார் தான் அப்படி செஞ்சிருக்கார். கோச்செங்கணான் அப்படின்ற சோழ மன்னன பத்தி அவர் புகழ்ந்து பத்து பாடல் எழுதி இருக்கிறார்" என்று கூறி திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி, திருநறையூர் பாசுரத்தில் பத்து பாசுரத்தில் நாற்பது வரிகளில் கோச்செங்கட்ச் சோழனாரின் திறத்தை  வியந்து பாடி இருக்கார். அதுமட்டுமா "செங்கணார் அமைச்ச கோயிலுக்கு வாருங்கள், வாருங்கள்" என்று  கூவி அழைக்கின்றார் என்றார்

"செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

தென் தமிழின், வட புலக்கோன்சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை"

"திருமங்க ஆழ்வார்  ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்" என்று ஒரு கதையை கூற ஆரம்பித்தார் சிதம்பரம்.

எல்லோரும் மிகவும் கவனமாக அவருடைய கதையை கேட்க காதுக ளை கூர்மையாக்கிக்கொண்டார்கள்.

வசந்த காலம் வருமோ?-117

 வசந்த காலம் வருமோ?-117

By N Krishnamurthy 

இரவு இரண்டு மணிக்கு ரங்கநாயகிக்கு  முழிப்பு வந்தது .அவள் கண் திறந்தாள். அவள்  தலை விண் விண்ணென்று வலிப்பதை உணர்ந்தாள்.  அப்பொழுது அங்கிருந்த டூட்டி டாக்டர் அவளிடம்  தனக்குத் தெரிந்த தமிழில்" நீங்கள் எங்கு இருக்கிறீர்கள். உங்கள் பெயர் என்ன" என்றெல்லாம் கேட்டார். "என் பெயர் ரங்கநாயகி. நான் என் தம்பி பெண் ம்ருதுளாவின் கல்யாணத்துக்கு குருவாயூர் வந்திருக்கிறேன்.  கிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும்போது  ஒரு கார் மோதி  கீழே விழுந்துவிட்டேன். அதுதான் எனக்கு தெரியும் "என்றாள். உடனே டாக்டர்  சென்று எல்லோரிடமும் "பேஷண்ட்  முழித்துக் கொண்டு விட்டார்கள். இப்போது அவர்கள் உடல்நிலை நன்றாக இருக்கிறது. இப்படியே போனால் காலை 8 மணிக்கு சீப் டாக்டர் வந்ததும் அவர்களை டிஸ் சார்ஜ் செய்துவிடலாம்" என்று கூறினார். எல்லோரும் விழுந்தடித்து கொண்டு ரங்கநாயகி படுத்திருந்த அறைக்கு  சென்றார்கள். ரங்கநாயகியின்  கைகளைப் பிடித்துக் கொண்ட வசுமதியும், பத்மநாபனும் கண் கலங்கினார்கள் ரங்கநாயகி அவர்களிடம் "அதான் நான்  பொழைச்சூட்டேனே. அப்புறம் என்ன.எதுக்கு கண் கலங்கறேள்" என்று கூறி சிரித்தாள். அதன் பின்பு பத்மநாபன் அவளிடம்" நீ இப்போ உயிரோட இருக்கிறதுக்கு முக்கிய காரணம் யார் தெரியுமா?" என்று கேட்டார். படுக்கையின் எதிர்ப்புற சுவற்றில் சிரித்துக்கொண்டிருந்த இருந்த குருவாயூரப்பனின் படத்தை காண்பித்தாள் ரங்நாயகி.

 " இல்லை.இல்லை ரங்கம்" என்ற பத்மநாபன், "மாமி,இங்க வாங்கோ" என்று ராஜேஸ்வரியை அழைத்து ரங்கநாயகியிடம் " இந்த மாமி ரத்தமும் உன் ரத்தமும் ஒரே க்ரூப். இந்த மாமி சமயத்ல கொடுத்த ரத்தம் தான் உன்ன  உயிர் பொழக்க வெச்சுது "என்றார். இதைக் கேட்டு ரங்கநாயகி கண் கலங்கினாள். . ராஜேஸ்வரியை  பார்த்து "கொஞ்சம் கிட்ட வாங்க ,மாமி"  என்றாள். அவள் அருகில் வந்ததும், அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு " நான் உங்களுக்கு மனசார நல்லது பண்ண நினைச்சதே இல்ல. இப்படி நீங்க உங்க ரத்தத்தை கொடுத்து என்ன பொழைக்க வச்சிருக்கேள். உங்களுக்கு நான் இதுக்கு எப்படி கைமாறு செய்வேன். உங்க ரத்தம் என் உடம்புல ஊறினதுக்கு அப்புறமாவது உங்கள மாதிரி நல்ல புத்திய  அந்த குருவாயூரப்பன் நேக்கு தரட்டும்" என்றாள் ரங்கநாயகி

மனப்பூர்வமாக. இந்த வார்த்தைகளை கேட்ட ராஜேஸ்வரி மட்டுமல்லாமல் வசுமதியும் கண் கலங்கினாள்.

ராஜேஸ்வரி அவளிடம் "நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம். இப்போ ரத்த சம்பந்தமும் ஏற்பட்டூட்த்து. பழசயெல்லாம் கெளற வேண்டாமே" என்றாள்.

பின்பு டாக்டர், யாராவது இருவர்  இருந்தால் போதும்,மீதி பேர் சென்று விடலாம்" என்று கூறியதும் பத்மநாபனும், ஸ்ரீவத்சனும் மட்டும் அங்கு இருப்பதாக கூறினார்கள். வசுமதி, ராஜேஸ்வரி, சங்கர க்ருஷ்ணன் ஆகியோர் கல்யாண மண்டபத்துக்கு வந்து விஷயத்தை  எல்லோரிடமும் சொல்ல, எல்லோருக்கும்  போன உயிர் திரும்ப வந்தது.

கோமளம் நிம்மதி பெருமூச்சு விட்டாள். பின்பு அனைவரும் படுத்து உறங்கலானார்கள்.

மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு எழுந்திருந்த ராஜேஸ்வரி, மார்க்கபந்து, சங்கர க்ருஷ்ணன், மற்றும் ம்ருதுளாவை எழுப்பினாள். எல்லோரும் குளித்து முடித்த பின்,6 மணிக்கு குருவாயூரப்பன் கோவிலை அடைந்தார்கள். கல்யாணம் நல்லபடியாக முடிந்ததும் சங்கர க்ருஷ்ணனை  அங்கப்பிரதக்ஷணம் செய்ய வைப்பதாக ராஜேஸ்வரி வேண்டிக் கொண்டிருந்ததால், சங்கர க்ருஷ்ணன் அங்கப்பிரதக்ஷணம் செய்ய ஆரம்பித்தான். ராஜேஸ்வரியும், மார்கபந்துவும்  அவனை தள்ளிவிட ஆரம்பித்தார்கள். சங்கர க்ருஷ்ணன் தன்னுடைய அங்கப்பிரதக்ஷணத்தை முடித்துக்கொள்ளும் வேளையில் அங்கு பத்மநாபன், வசுபதி மற்றும் ஸ்ரீ வத்சன் வந்து சேர்ந்தார்கள். அவர்களை ராஜேஸ்வரி  வரவேற்றாள். பத்மநாபன் ரங்கநாயகி நல்லபடி உயிர் பிழைத்தால் தானும் மறுநாள் அங்கப்பிரதக்ஷணம் செய்வதாக வேண்டிக் கொண்டதால் அவரும்  இப்பொழுது செய்யப் போவதாக கூறினார். அவரும் அங்கப்பிரதக்ஷணம் செய்ய ஆரம்பித்தார். அவரை ஸ்ரீவத்சனும், வசுமதியும் தள்ளிவிட ஆரம்பித்தார்கள். பத்மநாபன் அங்கப்பிரதக்ஷணம் செய்து முடிக்கும் வரை ராஜேஸ்வரி குடும்பம் அங்கே காத்துக் கொண்டிருந்தது. இதன் பின்னர்  எல்லோரும் சேர்ந்து குருவாயூரப்பன்  சந்ததிக்கு சென்று மனமுருக குருவாயூரப்பனை வழிபட்டார்கள். ராஜேஸ்வரிக்கு, பகவான் வைகுண்ட வாசியாக காட்சி கொடுத்ததும், பட்டர் அருளிச்செய்த

"அக்ரே பஸ்சாமி தேஜோ
நிபிட தர கலா யாவலி லோபனீயம்"என்ற வரிகள் ஞாபகம் வந்தது.

பகவானின் திவ்ய தர்சனம் கிடைத்தது.

ராஜேஸ்வரி குருவாயூரப்பனிடம் மானசீகமாக " நீ எதுக்கு இந்த நாடகம் ஆடினேன்னு  நேக்கு தெரியல. ஆனால் ஒண்ணு மட்டும் நேக்கு புரியறது. ரங்கநாயகிக்கு மனமாற்றம் கொடுக்க ணம்னு  நெனச்ச  நீ இதை செய்திருக்கிறாயோன்னு நான்  நெனைக்கிறேன். எல்லாம் நல்லதுக்கே நீ செய்வாய் என்று திடமான நம்பிக்கை நேக்கு உண்டு. ம்ருதுளாவுக்கும், சங்கர க்ருஷ்ணனுக்கும் நல்ல வாழ்க்கையை கொடுத்து,  சீக்கிரமே சந்தான பிராப்தத்தையும் நீ அளிக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள்.

பின்பு அவர்கள் எல்லோரும் கல்யாண மண்டபத்துக்கு திரும்பினார்கள். பத்மநாபன் மற்றும் வசுமதி  நர்சிங்ஹோம் சென்று ரங்கநாயகியை டிஸ்சார்ஜ் செய்து கல்யாண மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கிருந்த சிதம்பரம் அவர்களைப் பார்த்து "என்ன நீங்க உங்க வேண்டுதல முடிச்சுட்டு வரேங்களாக்கும்" என்றார். அதைக் கேட்ட ராஜேஸ்வரி "ஆமாம்" என்றவுடன் அவர் "நான் என் வேண்டுதலை முடிக்க வேண்டாமா" என்று கேட்டார்." அப்ப நீங்களும் அங்கப்பிரதக்ஷணம் பண்ண போறேளா" என்றாள் ராஜேஸ்வரி. "இல்லம்மா. நான் அங்கப்பிரதக்ஷணம் செய்யறதா  வேண்டிக்கல. அப்படி செஞ்சா என்னை தள்ளி விட சாரதா இங்கு இல்லையே. என் சத்குருநாதன் ஞானானந்தர்கிட்ட  நான் வேண்டிண்டேன். இப்பதான் குளிச்சு முடிச்சு, சந்தி பண்ணி இருக்கேன். ஞானானந்தரின்   படத்து முன்னால  உக்காந்து பத்து நிமிஷம் தியானம் பண்ணி,சத்குரு நாதனுக்கு  நான் வேண்டிக் கொண்டபடி "ரங்கநாயகி மாமியை காப்பாத்தி  கொடுத்ததற்கு"  நன்றி  சொல்லப்போறேன்" என்று கூறினார்.

ரங்கநாயகி முழித்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்திருந்தாள்.ஒருவர் பின்  ஒருவராக அவளிடம் வந்து" மாமி எப்படி இருக்கீங்க" என்று கேட்டார்கள். ரங்கநாயகி மெல்லிய குரலில் ஒவ்வொருவரிடம் " நான் நண்ணா  இருக்கேன். எல்லாம் அந்த குருவாயூரப்பனும், ராஜேஸ்வரி மாமியும் செய்த உபகாரத்தால் தான்" என்று கூறிக்கொண்டிருந்தாள்.

காலை 9 மணிக்கு சாப்பாட்டுக்கடை ஆரம்பித்தது. கட்டு சாதக் கூடையை கையில் எடுத்துக் கொண்டு கோயம்புத்தூர் அடைந்ததும் சாப்பிட்டு விடலாம் என்று முடிவு செய்தார்கள்.

பின்பு ராஜேஸ்வரி ரங்கநாயகியிடம்  சென்று "உங்களால் பஸ்ஸில் வர முடியும என்று நேக்கு தோணல. நான் பேசாம ஒரு டாக்ஸி ஏற்பாடு பண்றேன்.நீங்க, உங்காத்து மாமா, வசுமதி,அவ ஆத்துகார் ஆகியோர் அதல மெட்ராஸுக்கே போய்விடலாம். என்ன சொல்றீங்க" என்றாள். அதற்கு ரெங்கநாயகி "இல்ல மாமி, அதெல்லாம் வேண்டாம். ஏற்கனவே நீங்க இது வர பண்ணியிருக்கறதே எதேஷ்டம். எப்படி நன்றி சொல்லப் போறேன்னு தெரியல. இதுக்கு மேலயும் உங்க உபகாரத்தை அடிக்கிண்டே போகாதீங்க. இப்ப நேக்கு உடம்பு சரியா போயிட்த்து. தல தான் கொஞ்சம் லேசா வலிக்கிறது. அதுக்கு மாத்திரை போட்டுண்டா சரியா போயிடும். நான் பஸ்லே வந்துடறேன். அதோட இல்லாம உங்க எல்லார் கூடயும் பஸ்ல ட்ராவல் பண்ண தான் என் மனசு நிம்மதியா இருக்கும்" என்றாள். 

ராஜேஸ்வரி திருமண மண்டப மேனேஜரிடம் கணக்கு வழக்குகளை சரி பார்த்து, செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தினாள். அதன் பிறகு திருவிழா ஜெய்சங்கருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் மரியாதை செய்து பேசிய பணத்திற்கு மேல் கூடவே போட்டு கொடுத்தாள். போவதற்கு முன்னால் திருவிழா ஜெய்சங்கர், அரை மணி நேரம், அங்கிருந்தவர்கள்  கேட்டுக்கொண்டபடி எல்லா  பாடல்களையும் வாசித்தார். பத்தரை மணிக்கு கட்டு சாத கூடைகளை  பஸ்ஸில் அரேஞ்ச் செய்தார்கள். பத்தே முக்காலுக்கு எல்லோரும் அமர்ந்த பின் பஸ் கிளம்ப ஆரம்பித்தது. சிதம்பரம் உரத்த குரலில் "திருப்பதி வெங்கடாஜலபதிக்கு ஜே " என்றும் "  ஸத்குரு மஹராஜ்   ஞானானந்த ஸ்வாமிக்கு ஜே" என்றும் கூற, பஸ்ஸில் இருந்தவர்கள் ஜே ஜே என்று குரல் எழுப்பினார்கள்.

மம்மியூரில் பஸ்ஸை விட்டு இ றங்கி  மகாதேவனை தரிசித்தார்கள். குருவாயூரை விட்டு கிளம்பிய  பஸ் திருச்சூரை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

வசந்த காலம் வருமோ?- 116

 வசந்த காலம் வருமோ?- 116

By N Krishnamurthy 

சிதம்பரம் அவருடைய உரையை முடிக்கும் போது மாலை 6 மணி ஆகிவிட்டது. எல்லோரும் முகம், கை, கால்களை கழுவிக்கொண்டு சுவாமி தரிசனத்திற்கு குருவாயூரப்பன் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். ராஜேஸ்வரி குடும்பம் கோவிலுக்கு கிளம்பும் போது, எதிர்புறம் ரங்கநாயகி வர " வாங்களேன். கோயிலுக்கு போயிட்டு வந்தூடலாம்" என்று ராஜேஸ்வரி அவளை கூப்பிட்டாள். "நீங்க போயிண்டு  இருங்கோ  மாமி. நாங்க பின்னாடியே வந்துடறோம். எங்க ரூம் சாவிய தேடிண்டிருக்கோம்" என்றாள் ரங்கநாயகி.

ராஜேஸ்வரி, ம்ருதுளா, சங்கர க்ருஷ்ணன், மார்கபந்து ஆகியோர் குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று, திருப்தியாக ஸ்வாமி தரிசனம்  செய்து விட்டு  திரும்பி வந்தபோது, கல்யாண மண்டபம் வெறிச்சோடி கிடந்தது. ஹாலில் சக்கரவர்த்தி முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். கோமளம் கண்ணீரும், கம்பலையுமாக இருந்தாள். இதைப் பார்த்த ராஜேஸ்வரி பதறிப் போய் " என்ன மாமி ஆச்சு? ஏன் அழறேள்" என்று கேட்டாள். அவள் கைகளை பிடித்துக்கொண்ட கோமளா" நான் என்னத்த சொல்லறதடி .நீங்க எல்லாம் கோவிலுக்கு போய் பத்து நிமிஷம் கழிச்சு ரங்கநாயகியும், மாப்பிள்ளையும்  கோவிலுக்கு போய் இருக்கா . போற வழியில அவ ரோட சரியா  பாக்காம  கிராஸ் பண்ணியிருக்காளா அல்லது அந்த கடங்கார கார் ட்ரைவர் அவளை பாக்கலயான்னு தெரீல. கார் அவ மேல மோதி அவ கீழ உழுந்தூட்டாளாம். நெத்தியில காயம் பட்டு இருக்கு. ரத்தம் கொட்டிண்டு இருக்காம். ஆஸ்பத்திரிக்கு  அழிசிண்டு போயிருக்கா. பெருமாளே.நான் என்ன பண்ணுவேன்.என் பொண்ணு பொழப்பாளா"என்று கூறி அழுதாள். ராஜேஸ்வரி பதறிப் போனாள். "குருவாயூரப்பா.இது என்ன சோதனை. எல்லாம் நல்லபடியாக நடத்திக் கொண்டிருந்த நீ  இப்ப ஏன் இப்படி பண்ற. நேக்கு அவப்பேர் வந்தூடுமே" என்றெல்லாம் மனதுக்குள் புலம்பித் தீர்த்தாள் .

" எந்த நர்சிங் ஹோமுக்கு  கொண்டு போய் இருக்கா"  என்று கோமளத்திடம் ராஜேஸ்வரி கேட்க அதற்கு அவள் "நேக்கு நர்சிங் ஹோம் பேர் வாயில நுழையல" என்றாள்  கோமளம்.

அப்போதுதான் பத்மநாபன் உள்ளே நுழைந்தார். அவரைப் பார்த்து ராஜேஸ்வரி "மாமா, மாமிக்கு எப்படி இருக்கு" என்று கேட்டாள்."  ரத்தம் வரது நிந்தூடுத்து. ஆனா பிரக்ஞை இல்லாமல இருக்கா. டாக்டர் பிளட் கொடுக்கணும்னு சொல்றார். அவ பிளட் குரூப் என்னன்னு தெரியல. அவ ஹேண்ட்பேக்ல ரிசன்ட்டா எடுத்த அவ பிளட் க்ரூப் சர்டிபிகேட்  இருக்கு.  அதை எடுத்துண்டு போக  தான் நான் வந்து இருக்கேன்" என்றார்.

அவர் முகம் வாடி கிடந்தது. ரங்கநாயகி ப்ளட் க்ரூப் சர்டிபிகேட்டை  எடுத்துக்கொண்டு அவர்  கிளம்பும்போது ராஜேஸ்வரி, சங்கர கிருஷ்ணன், ம்ருதுளா மற்றும் மார்கபந்து அவருடன்  கிளம்பி நர்சிங் ஹோம் சென்றார்கள். 

நர்சிங் ஹோம் கல்யாணத்துக்கு வந்தவர்கள் கூட்டத்தால் ஜெ ஜெ என்று நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

ரங்கநாயகியின் ப்ளட் குரூப்பை அறிந்து கொண்ட டாக்டர் "இது ரொம்ப ரேர் ப்ளட் க்ரூப் ஆச்சே. இந்த குரூப் பிளட் எங்க ஹாஸ்பிடல்ல இல்ல. வேற எங்கேயும் கிடைக்கறது கஷ்டம். என்ன பண்றதுன்னு தெரியலை. பேசாம பேஷண்ட்டை திருச்சூருக்கு ஷிப்ட் பண்ணிடுங்க " என்றார்.

பத்மநாமன் முகத்தில் ஈயாடவில்லை. வசுமதி  "அம்மா" "அம்மா" என்று புலம்பினாள். ஸ்ரீவத்சன் வசுமதியை தேற்ற முயன்றான். இதையெல்லாம் கண்டு மனதுடைந்து போன  ராஜேஸ்வரி, பத்மநாபனிடம் "மாமி என்ன பிளட் குரூப் மாமா"என்று கேட்டாள். "பி பாசிடிவ் " என்றார் பத்மநாபன். ராஜேஸ்வரி உடனே உரத்த  குரலில் "என்து பி பாசிடிவ் தான். நான் பிளட் கொடுக்கிறேன்" என்றாள். இதை டாக்டரிடம் சொல்லவும் அவர் ராஜேஸ்வரியிடம் "உங்களது நிச்சயமாக பி பாசிடீவ்தான்னு  சொல்ல முடியுமா? உங்க  பிளட்ட எடுத்து அதை  எந்த க்ரூப்ன்னு கண்டு பிடிக்க டைம் இல்லை. வேற குரூப்ல ப்ளட்டா இருந்தா காம்ப்ளிகேஷன் ஆகிவிடும்" என்று சொன்னவுடன், ராஜேஸ்வரி " எனக்கு நன்றாக தெரியும் .என் ப்ளட் குரூப் பீ பாசிட்டிவ் தான் "என்றாள். உடனே  ராஜேஸ்வரியை  அழைத்துக்கொண்டு போன  டாக்டர் அவள் கையில் இருந்து பிளட் எடுக்க ஆரம்பித்தார். பின்பு டாக்டர் "இங்கு அதிகம் கூட்டம் கூட வேண்டாம் "என்று கேட்டுக் கொண்டதின்  பேரில் பத்மநாபன், சங்கர க்ருஷ்ணன் ஸ்ரீவத்சன்,வசுமதி, ராஜேஸ்வரி தவிர மற்ற அனைவரும் மண்டபத்துக்கு திரும்ப வேண்டியதாயிற்று.

மண்டபத்தில் இரவு சமைத்தது அப்படியே இருந்தது. நர்சிங் ஹோமிலிருந்து  வந்தவர்கள் ஏதோ பேருக்குத்தான் சாப்பிட்டார்கள்.என்ன முயன்றும் கோமளாவின் புலம்பலை  நிறுத்த யாராலும் முடியவில்லை.

சிதம்பரம் தான் கொண்டு வந்திருந்த ஞானனந்தர் படத்தின் முன்னால் அமர்ந்து, கண் மூடி "சத்குருநாதா. ராஜேஸ்வரி மாமி சிறு துரும்புக்கும் மனசால கூட கெடுதல் நெனைக்கற டைப் இல்ல. அப்படிபட்டவளுக்கு அவப்பெயர் வராம நீ தான் ரங்கநாயகியை காப்பாத்தி கொடுக்கணம்"என்று மனமுருகி வேண்டிக்கொண்டார்.

ராஜேஸ்வரியிடமிருந்து  முடிந்த அளவு ரத்தம் எடுக்கப்பட்ட பின் அதை ரங்கநாயகியின்  உடலில் செலுத்தினார்கள்.

அங்கிருந்தவர்கள் மனதில் ஒடிக்கொண்டிருந்தது ஒரே கேள்வி தான்.

ரங்கநாயகி பிழைத்து, மறு நாள் நல்ல நாளாக  விடியுமா என்பதே. எல்லாம் வல்ல குருவாயூரப்பன் தான் இதற்கு விடை அளிக்க வேண்டும். இது அவன் நடத்தும் நாடகமா?அப்படி என்றால் அவன் ஏன் இதை நடத்தவேண்டும்?

கூட்டுப்பிரார்த்தனைக்கு நிச்சயம் பலனுண்டு என சொல்கிறார்கள். ரங்கநாயகி உயிர் பிழைக்க வேண்டுமென்று நாமெல்லாம் குருவாயூரப்பனிடம் கூட்டாக வேண்டிக்கொள்வோமே.