Saturday, October 31, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 40 சிதம்பரம்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 40 🌹🌹🌹

ஸ்ரீமந்நாராயணன் சிவபெருமானின் நடனத்தைக் காண அவதரித்த தலம்.

சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தலம்.

அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில் :-
திருசிதம்பரம் என்ற திருச்சித்ரகூடம்.
மூலவர்: கோவிந்தராஜன்
தாயார்: புண்டரீகவல்லி
உற்சவர்: தேவாதிதேவன்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சாத்வீக விமானம்
தீர்த்தம்: புண்டரீக புட்கரணி
மங்களாசாசனம்: குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ புண்டரீகவல்லீ ஸமேத ஸ்ரீ கோவிந்தராஜாய நமஹ.


ஊர்: சிதம்பரம்


🌺🌺 தலவரலாறு:-

நம்பினோர்க்கு அருளை வாரி வழங்கும் ஸ்ரீமந்நாராயணன் "இறைவன் சிவபெருமானின் திருநடனத்தைக் காண அவதரித்த திருத்தலம்".

பூலோக கைலாயமாக விளங்கும் தில்லை திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.

மகாதேவனான இறைவன் சிவபெருமானின் வேண்டுகோளுக்கிணங்க இங்கேயே கோவிந்தராஜப் பெருமாளாக கிடந்த கோலத்தில் காட்சி தந்து அருளுவதாகத் தலவரலாறு கூறுகிறது.

🌺🌺 சிவன் - பார்வதி திருநடனம் :-

கைலாயத்தில் ஒரு சமயத்தில் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் ஆனந்தமாக நடனமாடினர்.

நடனம் முடிந்த போது தங்களில் யார் நன்றாக நடனம் ஆடினர்???? என்ற சந்தேகம் அவர்களுக்குள் ஏற்பட்டது.

அவர்கள் பிரம்மனிடம் கேட்டார்கள். பிரம்மாவால் சரியான தீர்ப்பு கொடுக்க முடியவில்லை.

அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று சரியான தீர்ப்பு சொல்லும்படி கேட்டுக் கொண்டார்கள்.

அவர் தேவசிற்பியான விஷ்வகர்மாவைக் வொண்டு இங்கு ஒரு சித்திர சபையை அமைத்து அங்கு இருவரையும் நடனம் ஆடும்படிக் கூறினார்.

சிவனுக்கும் பார்வதிக்கும் நடனப் போட்டி ஆரம்பமானது.

சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக்காட்டினார். பார்வதியும் சலைக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து நடனமாடினார்.

ஒருவர் மிஞ்சும்படி இருவரும் ஆடிக்கொண்டிருக்க, இறுதியில் தன் வலக்காலைத் தூக்கி தலைக்கு மேல் நிறுத்தினார் சிவன்.

பார்வதியால் அவ்வாறு நடனமாட முடியவில்லை. சிவபெருமான் வெற்றி பெற்றதாக மகாவிஷ்ணு அறிவித்தார்.

பின், சிவபெருமான் இங்கு நடராஜராக எழுந்தருளி மகாவிஷ்ணுவையும் இங்கே தங்கும்படிக் கூறினார்.

மகாவிஷ்ணுவும் இங்கே பள்ளி கொண்ட கோலத்தில் தங்கினார்.

🌺🌺 நின்ற கோலத்தில் பிரம்மா :-

மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் இருப்பார்.

ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். இது ஓர் அதிசயமாகும்.

பஞ்சபூதங்களில் ஆகாயத்தலமான இங்கு மகாவிஷ்ணு ஆகாயத்தைப் பார்ப்பது போல் இருப்பது சிறப்பு.

🌺🌺 குலசேகராழ்வார் :-

இராமவதார நாயகனான இராமபிரான் மீது அளவற்ற பக்தி கொண்ட குலசேகராழ்வார் இத்தலத்தில் பாடிய 10 பாசுரங்களில் இராமாவதார காப்பிய வரலாற்றையே பதிவு செய்துள்ளார்.

இது இவர் மட்டுமே செய்த சிறப்பாகும்.

🌺🌺 தலச்சிறப்புகள் :-

பூலோகக் கைலாயமாகவும், திவ்யதேசமாகவும் விளங்கும் சிறப்பு வாய்ந்த திவ்யதேசம்.

சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோவிலில் அமைந்துள்ள திவ்யதேசம்.

திருமகள் தாயார் புண்டரீகவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

பெருமாளின் திவ்யதேசங்களில் மோட்சம் கொடுக்கும் திவ்யதேசமாகத் திகழ்கிறது.

பதஞ்சலி முனிவருக்கு மோட்சம் அருளிய திருத்தலம்.

பதஞ்சலி சுவாமிக்கு நேராக அவரை வணங்கிய நிலையில் தனிச்சன்னிதியில் இருப்பாது சிறப்பு.

குலசேகராழ்வார் 11 பாசுரம் திருமங்கையாழ்வார் 21 பாசுரம் என 32 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

அருள்மிகு கோவிந்தராஜர் திருவடிகளே சரணம்.

அருமிகு புண்டரீகவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

சோழ நாட்டுத் திவ்யதேசங்கள் 40 இன்றுடன் நிறைவடைகிறது.

அடுத்தது நடுநாட்டில் 2 திவ்யதேசங்கள்.

நாளை நடுநாட்டின் முதல் திவ்யதேசமான அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோவில் - திருவயிந்திரபுரம் திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

108 திவ்யதேசங்கள் - பதிவு 39 திருப்பார்த்தன்பள்ளி

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 39 🌹🌹🌹


அர்ஜீனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் பெருமாளின் தரிசனம் பெற்ற திருத்தலம்.

அதிசயத்திலும் அதிசயமான பார்த்தன்பள்ளியில் குடிகொண்டருளும் "ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சி தரும் திருத்தலம்!!!".

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில் :-

திருப்பார்த்தன்பள்ளி.
மூலவர்: தாமரையாள் கேள்வன்
தாயார்: தாமரை நாயகி
உற்சவர்: பார்த்தசாரதி
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: நாராயணா விமானம்
தீர்த்தம்: சங்கராஸ் தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ தாமரை நாயகீ ஸமேத ஸ்ரீ தாமரையாள் கேள்வன் ஸ்வாமிநே நமஹ.

ஊர்: திருநாங்கூர்.

🌺🌺 திருப்பார்த்தன்பள்ளி :-

திருவருள் புரியும் இறைவன் நாராயணன் பாற்கடலை விட்டு பார்த்தனான அர்ஜீனனுக்காக காட்சி தந்து அருளியதால் இத்தலத்திற்கு திருப்பார்த்தன்பள்ளி என்பது பெயர்.

இங்குள்ள உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும்.

🌺🌺 இரண்டு தேவியர்களுடன் ராமன் :-

தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணர் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்கப் போகிறார் என்பது இவருக்குத் தெரிந்தது.

தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள நாராயணரை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி, தான் எப்படி இருப்பேன் என்பதை தசதரருக்குக் காட்டினார்.

இரு தேவியரும் இராமாயண காலத்தில் வாழ முடியாது என்பதால், தங்கள் கண் குளிர இராமரைத் தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சி தருவது அதிசயத்திலும் அதிசயம்.

🌺🌺 தலவரலாறு:-

கவுரவர்களிடம் நாடிழந்து வனவாசம் சென்ற போது, அர்ஜீனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அழைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானம் இருப்பதைப் பார்த்தான்.

தியானம் முடிந்து கண் திறக்கும் நேரம் வரை தன்னால் தாகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால், அகத்தியரின் தியானத்தைக் கலைத்து தனக்குத் தண்ணீர் தருமாறு கேட்டான்.

அவரின் அனுமதியுடன் கமண்டலத்தைத் திறந்தான். அதில் ஒரு சொட்டுக் கூட தண்ணீர் இல்லை. கேள்விக்குறியுடன் அகத்தியரின் முகத்தைப் பார்க்க அகத்தியர் அர்ஜீனனிடம்,

"அர்ஜீனா! நீ எப்போது எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணரிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்!" என்றார்.

தன் தவறை உணர்ந்த அர்ஜீனன், "கிருஷ்ணா! கிருஷ்ணா!" என்றழைத்தான். கிருஷ்ணரும் அவன் முன்பு தோன்றி கத்தியைக் கொடுத்து, "இந்தக் கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் கீறினாலும் தண்ணீர் வரும்" என்று கூறி மறைந்தார்.

அர்ஜீனனும் இந்தக் கத்தியால் தரையைக் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தைத் தணித்துக் கொண்டான். இந்த நிகழ்வு நடந்த இடம் "திருப்பார்த்தன்பள்ளி" என்று தலவரலாறு கூறுகிறது.

இத்தலத்தில் பார்த்தனாகிய அர்ஜீனனுக்குத் தனிச் சன்னதி உள்ளது.

🌺🌺 மங்களாசாசனம் :-

திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தை 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

"கவளயானைக் கொம்பொசித்த
கண்ணனென்றும் காமருசீர்க்
குவளைமேக மன்னமேனி
கொண்டகோனென் னானையென்றும்
தவளமாட நீடுநாங்கைத்
தாமரையாள் கேள்வனென்றும்
பவளவாயா ளென்மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே!!!".

விளக்கம் :-

குவலயாபீடம் என்ற மத யானையின் தந்தங்களை முறித்த கண்ணன். காண்போரைக் கவரும் அழகும் குணமும் உடைய சீராளன். குவளை மலர் போன்றும், மேகம் போன்றும் வண்ணம் கொண்டவன் என் மன்னன் அவன். அவன் யானையைப் போன்றவன், வெண்மையான உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருநாங்கூர் திவ்ய தேசத்தில் அவன் தாமரையாள் கணவன் என்றும், பவழம் போல் சிவந்த வாயை உடைய என்னுடையப் பெண், பார்த்தன்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பாடுவாள்! என்று பாசுரம் பாடியருளியுள்ளார்.

கூடுதல் விளக்கம் :-

திருமங்கை ஆழ்வார், தன்னையே தாயாகவும் மகளாகவும் பாவித்துக் கொண்டு, தன் மகள் பார்த்தன்பள்ளி பெருமானுடைய அருமை பெருமைகளைப் பாடுவதாக அமைந்த பாசுரம்.

பார்த்தன் பள்ளி திவ்ய தேசத்தின் மூலவர் திருநாமம் 'தாமரையாள் கேள்வன்' என்பது சிறப்பு.

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். திருவெண்காட்டிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் என இரு ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ள அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில் - திருசிதம்பரம் (திருசித்ரகூடம்) திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

108 திவ்யதேசங்கள் - பதிவு 38 அண்ணன் கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 38 🌹🌹🌹

வைகுண்ட வாசனான இறைவன் நாராயணன் ஸ்ரீநிவாசனாக திருஅவதாரம் செய்த திருமலையைப் போலவே தென்னகத்திலும் இரண்டு ஆலயங்களில் குடிகொண்டுள்ளார்.

அவை திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் மற்றும் திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில்களாகும்.

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோவில்:-

திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்).
மூலவர்: அண்ணன் பெருமாள், ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன்
தாயார்: அலர்மேல் மங்கை
உற்சவர்: ஸ்ரீநிவாசன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: தத்வத்யோதக விமானம்
தீர்த்தம்: திருவெள்ளக்குளம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ கண்ணநாராயணாய நமஹ

ஊர்: அண்ணன் கோவில்

🌺🌺 அண்ணன்கோவில் பெயர்க் காரணம் :-

திவ்ய தேசங்களில் திருமங்கையாழ்வார் இரண்டு ஸ்தல பெருமாள்களை மட்டுமே அண்ணா என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.

ஒன்று திருப்பதியில் அருளும் பெருமாள், மற்றொன்று திருவெள்ளக்குளம் பெருமாள் ஆவர்.

திருமங்கையாழ்வார் இத்தல இறைவனைத் தான் முதலில் "அண்ணா" என்றழைத்தார். அதனால் தான் இத்தல இறைவனுக்கு "அண்ணா" என்ற திருநாமம் உண்டானது.

எனவே தான் இங்கு அருளும் பெருமாளை "அண்ணன் பெருமாள்", "அண்ணன் கோவில்" என்றும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

திருமலை போன்றே இங்குள்ள பெருமாளின் நாமம் ஸ்ரீநிவாசன், தாயார் - அலர்மேல்மங்கை எனும் திருநாமம் கொண்டு அருள்கின்றனர்.

இத்தலத்தைப் பற்றிப் பத்மபுராணத்திலும் குறிப்புகள் உள்ளன.

🌺🌺 தலச் சிறப்புகள் :-

இத்திருத்தலத்தைத் 'தென் திருப்பதி' என்றும் அழைப்பர். இங்கே திருப்பதி போல் தலைமுடி காணிக்கை செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இக்கோயிலில் கல்யாணமும் நடத்திக் கொள்கின்றனர். இங்கே மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகம் கொண்டு காட்சி தருகிறார்.

🌺🌺 தலபுராணம் :-

அக்காலத்தில் சூரிய வம்சத்தில் துந்துமாரன் என்ற மன்னனுக்குச் சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான்.

அவனுக்கு ஒன்பதாவது வயதில் "மரணகண்டம்" என்று சாஸ்திர வாதிகளால் அறிந்ததும், அதற்கு பிராயச்சித்தம் காண தன்குல குருவான வசிட்டரை அணுகினார் மன்னன்.

அரசன் தன் மகனைக் காப்பாற்ற வசிஷ்ட முனிவரிடம் வேண்டினார். அதற்கு முனிவர் பெருமாளை வேண்டி தவமிருந்தால், மூவுலகையும் காக்கும் "ஸ்ரீமந்நாராயணன்" தன்மகனையும் காத்தருள்வார் என்றார்.

வசிஷ்டர் கூறியபடி சுவேதன் இங்குள்ள புட்கரணியில் நீராடி தவமிருக்கும் முன்பு, மருத்த முனிவர் ஆசிரமம் சென்று ஆயுள் விருத்தி மந்திரத்தை பயிற்சி பெற்று இங்குக் கடுந்தவம் இயற்றினார்.

அவனது தவத்திற்கு மனமிறங்கிய "மகாவிஷ்ணு" சுவேதனுக்குக் காட்சி கொடுத்து மரண கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல் நீண்ட ஆயுளை நல்கினார். பின்பு, பேரின்பக் கடலான முக்தியையும் தந்தருளினார்.

வைணவத் தலங்களில் இத்தலம் "எமபயம் நீக்கும் தலம்" என்ற சிறப்பு பெற்றது.

இதனால் இத்தலத்தின் எதிர்புறம் அமைந்துள்ள "சுவேத புஷ்கரிணி", "திருவெள்ளக்குளம்" என்ற பெயர் பெற்றது.

🌺🌺 குமுதவல்லியை நீலன் சந்தித்தல் :-

இத்திருத்தலத்தின் சுவேத புஷ்கரிணியில் உள்ள குமுத மலர்களைப் பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த பொழுது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் "குமுத வல்லி" தேவலோகம் செல்லும் சக்தியை இழந்து விடுகிறாள்.

இதைக்கேள்வி பட்ட நீலன் என்று படை தளபதி ஆன திருமங்கை மன்னன் இவளை திருமணம் புரிய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் புரிய பல நிபந்தனைகளை கூறுகிறாள்.

நீலனும் அவற்றை எல்லாம் நிறைவேற்றி வந்தார். இறுதியில் 1000 வைணவ அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்தால் தான் தங்களைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தாள்.

இதனை அறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து "திரு" மந்திரத்தை உபதேசம் செய்து அவரை ஆழ்வராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வராக மாறியதால் " திருமங்கை ஆழ்வார் " என்று அழைக்கப்பட்டார்.

அவ்வாறு ஒரு சமயம் வந்த தேவகுலப்பெண்களில் மானிடப் பார்வைக்கு இலக்காகி இங்கேயே நின்று விட்ட குமுதவல்லியைத் தான் திருமங்கைழ்வாருக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டது. இங்கு குமுத வல்லிக்குத் திருமங்கையாழ்வாரோடு ஒரு தனிச் சந்நிதி உள்ளது.

🌺🌺 மங்களாசாசனம் :-

இத்திருத்தலத்தை திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் பாடியுள்ளார்.

"கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார்முனை வென்றி கொள்வார்
மன்னுநாங்கூர் திண்ணார் மதிள்சூழ்
திருவெள்ளக்குளத்துள் அண்ணா!
அடியேன் இடரைக் களையாயே!!!".


- திருமங்கையாழ்வார்.

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். சீர்காழியிலிருந்து ஆக்கூர், பொறையாறு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இவ்வூர் வழியாகவே செல்கின்றன.

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருவடிகளே சரணம்.

அருள்மிகு அலர்மேல் மங்கை தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில் - திருப்பார்த்தன்பள்ளி திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!

108 திவ்யதேசங்கள் - பதிவு 37 திருமணிக்கூடம் (திருநாங்கூர்)

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 37 🌹🌹🌹

தீராத நோய்களைத் தீர்க்கும் திருத்தலம்!! சந்திரனுக்கு காட்சி கொடுத்து, சாபநிவர்த்திகொடுத்த திருத்தலம்.

அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில்:-

திருமணிக்கூடம் (திருநாங்கூர்)

மூலவர்: வரதராஜபெருமாள், கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்
தாயார்: திருமாமகள் நாச்சியார்
உற்சவர்: வரதராஜபெருமாள்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: கனக விமானம்
தீர்த்தம்: சந்திர புட்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ தீருமாமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ மணிக்கூட நாயகாய நமஹ.
ஊர்: திருநாங்கூர்


🌺🌺 திருமணிக்கூடம் :-

எல்லா உலகையும் காத்தருளும் இறைவன் நாராயணர் வரமளிக்கும் வரதனாக கச்சி மாநகரில் (காஞ்சிபுரம்) காட்சி தந்து அருள்கிறார். தொண்டை நாட்டிற்கு ஒரு வரதர் போல, சோழ நாட்டிற்கு ஒரு வரதர் இவரே ஆவார். இரு தேவியருடன் காட்சி தந்து அருள்வது மற்றொரு சிறப்பாகும்.

மணிக்கூடம் அமைப்பில் இத்தலம் அமைந்துள்ளதால் "திருமணிக்கூடம்" என்பது பெயராகும். இத்தல இறைவனுக்கு மணிக்கூட நாயகன் என்று மற்றொரு திருநாமமும் உண்டு.

பெரியதிருவடி சந்திரன் இவ்விருவருக்கும் பெருமாள் இத்தலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம் நாங்கூர் மணிக்கூடத்திலே எங்கும் தென்றல் உலவுகிறது என்றும் அந்தத் தென்றலும் மணங்கொண்டு உலவுகிறது என்றும் திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார்.

மலர் மணத்தைக் குறிப்பிடாமல் இப்பெருமாளின் தெய்வீக மணத்தைத்தான் இப்படிக் குறிப்பால் திருமங்கையாழ்வார் உணர்த்துகிறார். இத்தலத்திலுள்ள பகவானை எந்தை என்று உரிமையோடும் பாசத்தோடும் அழைக்கிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வார் பெருமாளை அவனே குன்றம் எனவும், அவனே மண் எனவும், அவனே குளிர் புனல் எனவும் அவனே திங்கள் எனவும், அவனே வெண்சுடர் எனவும், அவனே எல்லாம் எனவும் பகவானின் அளப்பரிய தன்மையை எடுத்துரைக்கிறார்.

🌺🌺 மூலவர் :-

மூலஸ்தானத்தில் பெருமாள் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு சக்கரமும், முன் கைகளில் அபய, ஊரு முத்திரை காட்டியபடி சேவை சாதிக்கிறார்.

பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்றபடி இடது கரத்தில் தாமரை மலரும், வலது கரத்தினை தொங்கவிட்டபடியும் ஸ்ரீதேவி காட்சியளிக்கிறாள்.

இடது புறத்தில் பூமாதேவி வலது கரத்தில் தாமரை மொட்டும் இடது கரத்தை தொங்கவிட்டபடியும் காட்சி கொடுக்கின்றனர்.

🌺🌺 சந்திரனின் சாபநிவர்த்தி :-

தக்கனுக்கு 27 மகள்கள், இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே போல் அன்பு செலுத்துவதாக சந்திரன், தக்கனுக்கு வாக்கு கொடுத்தான். ஆனால், ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான்.

இதனால் மற்ற மனைவியர்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன், சந்திரனிடம் " உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்" என சாபம் இட்டான். சாபம் பலித்ததால் முழு சந்திரன் மெல்ல மெல்ல தேயத் தொடங்கினான்.

சந்திரன் சாபம் தீர்வதற்கு ஸ்ரீ ரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியில் திருமணிகூடத்திற்கு வந்தான்.

அங்கே பெருமாளிடம் சந்திரன் மனமுருகி தொழுதான். பெருமாள் சந்திரனுக்கு வரதராஜனாக காட்சி கொடுத்து வரம் அளித்தார். சந்திரனின் நோய் நீங்கியது, சாப விமோசனம் கிடைத்தது.

🌺🌺 மங்களாசாசனம் :-

""கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும்
மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றதுமாய
எந்தை ஒண்டிறல் தென்ன னோட வடவர
சோட்டங்கண்ட திண்டிற லாளர்
நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே!!!"".

- திருமங்கையாழ்வார்.


🌺🌺 சிறப்புகள் :-

இறைவன் மணிக்கூட நாயகன் தாமரை பீடத்தில் நின்று காட்சி தரும் திருத்தலம்.

திருமகள் தாயார் திருமாமகள் நாச்சியார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

திருநாங்கூரில் நடைபெறும் புகழ் பெற்ற 11 திருத்தல கருட சேவைக்கு இத்தல இறைவனும் எழுந்தருள்வார்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திருநாங்கூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புளியன்தோப்பின் நடுவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

அருள்மிகு வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்.

அருள்மிகு திருமாமகள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோவில் - திருவெள்ளங்குளம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!"

டிக்கெட் : சுஜாதா

 டிக்கெட் : சுஜாதா (சிறுகதை) -

இந்த கதை வாத்தியார் எழுதி வந்த வருடம் 1983

===============

கதையைப் படிக்கும் முன்:

ஆனந்த விகடனில் பொறுப்பான பதவியில் (உதவி ஆசிரியர் என நினைக்கிறேன்) ஒரு காலத்தில் இருந்தவர் திரு. மணியன் அவர்கள். 

ஆனந்த விகடன் சார்பில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து அந்தப் பயணக் கட்டுரைகளை "இதயம் பேசுகிறது" என்ற தலைப்பில் எழுதி வந்தார். (அதற்கு முன் விகடனில் பல கதைகளையும் எழுதியுள்ளார் மணியன்).

பிறகு, மணியன் விகடனில் இருந்து வெளியேறி. சொந்தமாக வாரப் பத்திரிக்கை ஒன்று ஆரம்பித்து அதற்கும் "இதயம் பேசுகிறது" என்றே பெயரிட்டார். 

அன்றைய காலகட்டத்தில், வாரப் பத்திரிக்கை என்றால் சுஜாதாவின் தொடர்கதை / சிறுகதை/ கட்டுரை என ஏதோ ஒரு பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நியதியை இந்தப் பத்திரிக்கையும் கடைபிடித்தது. "பெண் இயந்திரம்" உட்பட சில கதைகளை இதயம் பேசுகிறது பத்திரிக்கையில் தலைவர் சுஜாதா எழுதினார்.

"இதயம் பேசுகிறது" வார இதழின் ஆசிரியர் மணியன் பிரபல தமிழ் எழுத்தாளர்களை வைத்து "அந்தாதி கதைகள்" என்ற பெயரில் வாரம் ஒரு கதை வெளியிட்டார். 

அந்தாதி என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். இந்த விதியின்படி ஒவ்வொரு வாரமும் ஒரு எழுத்தாளர் ஒரு சிறுகதையை எழுதுவார். அடுத்த வாரம், வேறு ஒரு எழுத்தாளர் கடந்த வாரம் சிறுகதை எந்த வரியில் முடிந்ததோ அதை வைத்து அடுத்த சிறுகதையை ஆரம்பித்து எழுதுவார். இது 12 வாரங்கள் தொடர்ந்தது.

11ம் வாரம் சிறுகதை எழுதிய திருமதி. அனுராதா ரமணன் கதையின் முடிவில் "ஒரு வழியாக கல்யாணம் என்ற வார்த்தையே மறந்து போயிற்று" என முடித்திருப்பார். 

ஒரு நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன் , தன் தங்கைகளுக்கு, மிகுந்த சிரமங்களுக்கு இடையே அவர்களின் திருமணங்களை நடத்தி வைத்து வெறுத்து போய் இனி கல்யாணமே வேண்டாம் என்ற நிலைக்கு வருவதாக குறிப்பிட்டு, "ஒரு வழியாக கல்யாணம் என்கிற வார்த்தை அவனுக்கு நிரந்தரமாக மறந்து போயிற்று" என்ற வார்த்தையுடன் முடித்திருப்பார்.

அடுத்தவாரம் (12ம் வாரம்) சுஜாதா, அனுராதா ராமனின் "ஒரு வழியாக கல்யாணம் என்கிற வார்த்தை அவனுக்கு நிரந்தரமாக மறந்து போயிற்று" என்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு ஒரு அட்டகாசமான, யாருமே எதிர்பார்க்காத கதையை எழுதியிருந்தார். சிறுகதையின் பெயர் : டிக்கெட்

இதைப் போன்ற மிக சாதாரணமாக, ஒரு மத்யமரின் பிரச்னையை வைத்துக் கொண்டு வந்த கதையின் முடிவை வைத்து, ஒரு சற்றும் எதிர்பாராத விஞ்ஞானப் புனைவு எழுதிருந்தார் சுஜாதா. 

மிக அபாரமான அக்மார்க் சுஜாதா கதை. இவர் முடித்த விதத்தை வைத்து வேறு யாரும் அந்தாதிக் கதை தொடர முடியாது என்பதால் வாத்தியார் எழுதிய கதையோடு அந்த அந்தாதிக் கதை சமாச்சாரத்தை நிறுத்திக் கொண்டார் மணியன்..

==========================

இனி கதை........

ஒரு வழியாக கல்யாணம் என்கிற வார்த்தை அவனுக்கு நிரந்தரமாக மறந்து போயிற்று. 

முதலில் அதை தற்செயலாகத்தான் கவனித்தான். பொழுதே போகாதபோது மேஜையில் கலர், கலராக இறைந்திருந்த பத்திரிக்கைகளைப் புரட்டிக்கொண்டிருந்தான், ஏதோ ஒரு தொடர் கதையை ஏதோ ஒரு அத்தியாயத்தைப் படிக்கத் துவங்கினான்.

"கல்யாண காரியங்கள் மும்முரமாக நடக்கிறது...."

சற்று நெருடியது. என்ன காரியங்கள் ? க.....ல்...யா....ண....என்றால் என்ன அர்த்தம் ?

'இனிமேல் இந்தக் கல்யாணத்தை யாராலும் நிறுத்த முடியாது...'

இதைப் படிக்கும்போது, 'இனிமேல் இந்த .......யாராலும் நிறுத்த முடியது என்றுதான் அவன் மூளைக்குள் பதிந்தது. ஒரு முறை தலையைச் சிலிர்த்துக் கொண்டான்.

'எவனோ முன்னே பின்னே தெரியாதவனை ....... பண்ணிண்டு திண்டாடறதுக்கு....'

'ஒருவேளை, மனசுக்குப் பிடித்தமில்லாத இந்த .....திலிருந்து கழண்டுக்கற நோக்கத்தில்.....'

ஹேய், வாட்ஸ் ஹாப்பனிங் டு மி ? கல்யாணம் என்று வருகிற போதெல்லாம் அவனுக்குள் ஏதோ படக்கென்று ஸ்விட்ச் அணைந்து விடுகிறாற்போல.......

என்ன ஆயிற்று ? 

சற்றே திகைத்துப் போய் சும்மா இருந்தான். மறுபடி அந்தத் தொடர்கதை அத்தியாயம் பன்னிரண்டைப் பார்த்தான். எதிரே படத்தில், ஜிப்பா போட்டுக்கொண்டு ஒருவன் அகலமான மார்பின் மேல் விண் என்ற மார்பகத்துடன் ஒருத்தி ஓரப்பார்வை பார்த்துக் கொண்டு சாய்ந்திருந்தாள். கொஞ்சம் நிறுத்தி, தாமதித்து மறுபடி பார்த்தான்....

'.......... காரியங்கள் மும்முரமாக நடக்கிறது...'

உதடு படிக்கிறது. மனது அல்லது ஞாபகம் அல்லது மூளை நிராகரிக்கிறது. அதன் அர்த்தம் கொஞ்சம் கூட உணர்வில் பட மறுக்கிறது. 

க....புரிகிறது, ....... ல் .....புரிகிறது, யா.......புரிகிறது, எல்லா எழுத்துக்களும் இதோ இருக்கின்றன. ஆனால் அந்தச் சொற்றொடர் ? ஏன் இப்படி அதைச் சந்தித்ததும் அவனுக்குள் ஏதோ ஓட்டை விழுந்தது போல சுத்தமாக ஒன்றுமே தோன்றமாட்டேன் என்கிறது? அர்த்தம் தெரியாத தமிழ் வார்த்தையா?

ஆம். இந்த மாதிரி வார்த்தை தமிழில் கிடையாது. அதுதான் ! இது ஏதோ அச்சுப்பிழை இல்லை ! மூன்று இடத்திலுமா அச்சுப்பிழை ? மறுபடி அதைப் பார்த்தான்.

'திருமணத்திற்குப் பிறகு இவனிடம் பழகுவது போல இத்தனை சுதந்திரமாக பழக முடியாது என்பதை உணரும்போது ....'

திருமணம் ?

'ஹேமா, நாளைக்கு விடிகாலம்பரச் சத்திரத்துக்குக் கிளம்பனும்' மறுபடி அந்த வார்த்தை ! அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நிச்சயம் அச்சுப்பிழை இல்லை, இதோ, இன்னொன்று......

'ஏதோ இஷ்டமில்லாம ஒருத்தனைக் ......... பண்ணிக்க வேண்டியதை நினைத்து....'

பட்டென்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டான். நேராக நின்று பார்த்தான். கண்களில் இரண்டு விரல்களை அழுத்தி, கண்ணுக்குள் தீப்பிழம்பு போல் ஓடும் ஸர்ரியலிஸ்ட் (surrealist) காட்சிகளை நிறுத்திப் பார்த்தான்.

என்னவோ ஆகிவிட்டது எனக்கு?

சே ! நேற்று சரியாகாது தூங்கினேனே ! காலை சரியாகப் போனேனே ! ஒரு வேளை பசியோ ? இல்லை காஃபி சாப்பிட்டால் சரியாகி விடுமோ ? 

அது என்ன வார்த்தை ? க இல் யாண இம் ! என்ன அது ? 

அறையைப் பார்த்தான். காலண்டரில் ஒருத்தி சோப்புக்காக டாப்பை நீக்கியிருந்தாள். ஒரு கணம் அந்தப் பெண் அந்தப் பாறைகளையும், நீர்வீழ்ச்சியையும் விட்டு எழுந்துவருவது போலத் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டான் 

தூரத்தில் ஒரே ஒரு பிழம்பு தெரிந்தது. "மாது" என்று கூப்பிட்டுப் பார்த்தான். மாதுவை போஸ்ட் ஆபிஸ் அனுப்பியிருப்பது ஞாபகம் வந்தது. டிகாஷன் இருக்கும். சொந்தமாக்க காஃபி போட்டு சாப்பிட்டுப் பார்க்கலாம். பக்கத்துக்கு அறைக்குச் சென்று நெருப்பெட்டியைத் தேடினான். கிடைக்காமல் அலமாரிக்கு வந்தான். அம்மாவின் இன்லண்ட் பிரிந்து இருந்தது.

'பிரியமுள்ள துரை,நான் போன லெட்டரில் எழுதியபடி உன் ........ விஷயமாக....'

ஐயோ, மறுபடி அது ! படக்கென கடிதத்தை மூடி வைத்துவிட்டு நெருப்புப் பெட்டியுடன் உள்ளே சென்றான். காஸ் திறந்து, குச்சி கிழித்து இரண்டுக்கும் உறவு ஏற்பட்டு, நீலம் எரியும் வேளை அவனை அது தாக்கியது. கொஞ்சம் நேரம்தான். கொஞ்சம் நேரம்தான். கொஞ்சமோ கொஞ்சம் நேரம்தான். 

அவன் காதுகளுக்குள் விர்ர்ர் என்று ஒலி கேட்டது. அந்த ஒலியை அவன் அதன்முன் கேட்டதில்லை. வர்ணிக்கமுடியாத, கீழ் ஸ்தாயியில், ராத்திரி வேளையில் ஒரு புறாவை விரட்டினாற்போல, அந்தப் படபடப்புடன்.......

ஏதோ ஒரு வாத்தியத்தின் ராட்சத தந்தியைத் தட்டினாற்போல ! அதைத் தொடர்ந்து அவன் ஒரு செகண்டு அல்லது முப்பது செகண்டு அல்லது முப்பது நிமிஷம் நினைவிழந்தான். விழிப்பு ஏற்பட்டபோது அவனுக்கு உடம்பு பூரா வியர்த்திருந்தது. நாக்கைக் கடித்துக் கொண்டதில், தொட்டுப் பார்த்ததில், ரத்தம் தெரிந்தது. பூட்டுக்குப் பூட்டு வலித்தது. உடனே டாக்டரைப் பார்க்கத் தீர்மானித்தான்.

எட்டு பேர் காத்திருந்தார்கள். ரிஸப்ஷனில் இருந்த பெண் டெலிஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள். இடையிடையே ஒரு போர்ட்டபிள் டைப்ரைட்டரில் டப் டப் என்று அமெச்சூர்தனமாக பில் அடித்துக்கொண்டிருந்தாள். 

ஒரு சிறுவன் துரையையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு மாமிகளுக்கு இடையே வைரக்கல் மின்னியது ! யார் பேசுகிறாள் என்று தெரியவில்லை......

"போன வருஷம்தான் மாமி.....ஆச்சு, அப்பவே சொல்லியிருக்கலாமில்லையோ !"

"சொல்லவே இல்லையா ?"

"இல்லையே ! இப்ப உண்டாயிருக்கு. இதுக்கு என்னன்னு சொல்வேன் ........ ஆயி தலை தீபாவளிக்குளே.....

இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் ?

"மிஸ்டர் துரை !" என்றார்.

திடுக்கிட்டு எழுந்தான்.

டாக்டர் அறையில் பேஸினில் கை கழுவிக்கொண்டிருந்தார். நர்ஸ் இவனை சந்தேகத்துடன் பார்ப்பது போல இருந்தது. அந்த ஆயுதங்களில் எதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. காலண்டரில் சுஸ்ருதரோ யாரோ யாரையோ படுக்க வைத்து முன்னால் சுரண்டிக்கொண்டிருக்க பணிப்பெண்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"என்ன மிஸ்டர் துரை?"

"டாக்டர், இன்னிக்கு சாயங்காலம்தான் ஆரம்பிச்சது. ஒரு வினோதமான உணர்ச்சி. ரூம்ல உக்காந்துகிட்டு போது போகாம படிச்சுக்கிட்டே இருந்தேனா....." சொன்னான்.

டாக்டர் முகத்தில் மாறுதல் ஏதும் இல்லாமலே கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் முகத்தில் மூக்குக்கு அருகில் இருந்த மரு ஒன்று திடீர் என்று பெரிசாகி விடும் போலிருந்தது. அவரைப் பார்பதைத் தவிர்த்தான்.தன் நகங்களைப் பார்த்துக்கொண்டே சொன்னான். நம்புகிறாரா தெரியவில்லை.

முழுவதும் கேட்டுவிட்டு சற்று நேரம் கழித்து, "ஆரா (aura) வந்ததுன்னு சொன்னிங்க இல்லை...."

"ஆரா ?"

"அ அதுதான் ஒரு மாதிரி சவுண்டு...."

"ஆமா டாக்டர், அந்த மாதிரி சப்தத்தை நான் இது வரை கேட்டதே இல்லை......"

"அது என்ன வார்த்தை சொன்னிங்க?"

"புஸ்தகம் படிச்சுக்கிட்டே இருக்கேனா....ஒரு வார்த்தை மட்டும் கன்சிஸ்டண்டா உதைக்குது. அதைப் பிடிக்கவே முடியவில்லை..."

"என்ன வார்த்தை?"

"தெரியலையே.....அது வந்தபோது மூளையில ஒருவிதமான பள்ளம். டோட்டல் பிளாங்க் !"

"அப்படியா ! படுத்துக்கங்க..."

நர்ஸ் பக்கத்தில் இருந்த திரைகளை விலக்க, சற்று உயரமாக இருந்த நீண்ட மேஜைமேல் படுத்தான். டாக்டர் ரத்த அழுத்தம் எடுத்தார். இதயத்தைக் கேட்டார். கண்களுக்குள் ஊசிபோல ஒளி செலுத்திப் பார்த்தார்.

"உங்க ஃபாமிலியில யாருக்காவது ஃபிட்ஸ் வருமா ?"

"எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இல்லை டாக்டர்..."

"இதுக்கு முந்தி உங்களுக்கு இது மாதிரி வந்திருக்கா?"

"இல்லை, இதுதான் முதல் தடவை"

"உடம்பு வலி இருக்கா?"

"இருக்கு. முறுக்கிவிட்டாற்போல"

"உங்களுக்கு என்ன வயது?"

"இருபத்தி அஞ்சு"

"கல்யாணம் ஆயியிடுச்சா?"

"என்ன கேட்டீங்க?"

"கல்யாணம் ஆயிடுச்சான்னு..."

"புரியலை"

டாக்டர் சற்று யோசித்து, "ஓ, அதுதான் அந்த வார்த்தையா?"

"எதுதான்...எந்த வார்த்தையா!"

"உங்களுக்கு ப்ளாங்க்கா இருக்குதுன்னு சொன்னீங்களே, கல்யாணம் ! அந்த வார்த்தைதானே ?"

"எழுதிக் காட்டுங்க"

டாக்டர் எழுதிக் காட்ட, "இதான் ஸார்" என்றான் பளிச்சென்று.

"கொஞ்சம் இருங்க! இதைப்பாருங்க" "திருமணம்" என்று எழுதினார்.

"ம்ஹும்" என்றான் துரை.

"இன்டரஸ்டிங்! சட்டையை போட்டுக்கங்க"

"வாட்ஸ் ராங் வித் மீ டாக்டர்?"

"இப்ப சொல்ல முடியாது. உங்களுக்கு ஜி.ஹெச்லே டாக்டர் கல்யாணராமனைத் தெரியுமா? நியூரோ சர்ஜன்."

"டாக்டர், அது என்ன ராமன்?"

"ஓ .எஸ். புரியறது.ஒரு ஸ்கான் எடுக்கணும். அதுக்குதான். ஜி.ஹெச்லே எடுத்தா சார்ஜ் அதிகம் ஆகாது."

"ஸ்கான்?"

"கம்பியூட்டரைஸ்ட் டோமோக்ராஃபிக் ஸ்கான். ஸிடி ஸ்கான்னு புதுசா வந்திருக்கு. அதில உங்க ப்ரைய்ன் ஸ்கான் பண்ணனும். கே.ஜே ல இருக்கு. ஆனா, கொஞ்சம் சார்ஜ் ஆகும். அப்புறம் சில எக்ஸ்ரேக்களும் எடுக்கணும். அதுவரைக்கும் தீர்மானமா எதையும் சொல்ல முடியாது. நீங்க நாளைக்கு காலைல வந்திங்கன்னா எழுதிக் கொடுக்கறேன். ராத்திரிக்கு இந்த மாத்திரை மட்டும் போட்டுக்கங்க. லைட்டா சாப்பிடுங்க. அஜீரணம் கூடாது. புஸ்தம், கிஸ்தகம் படிக்காதீங்க. டிவி பார்க்காதீங்க. சீக்கிரம் படுத்துக்கங்க. மாத்திரை தூக்கத்துக்குத்தான் கொடுத்திருக்கேன். டெஸ்ட் பண்ணப்புறம்தான் விஷயம் தெரியும். கவலைப்படாதீங்க..."

"டாக்டர், இது ஒண்ணும் ப்ரைய்ன் ட்யூமர், எபிலெப்ஸின்னு..."

"இமாஜின் பண்ணிக்காதிங்க. போயிட்டு வாங்க"

அவன் போனதும் டாக்டர் நம்பி ராஜன் மற்ற பேஷண்டுகளை சற்று அவசரமாகவே பார்த்தார். அவருக்கு ஷெரட்டனில் பார்ட்டியிருந்தது. அவசரமாக வீடு திரும்பி, தயாராகாத தன் மனைவியைக் கடிந்து கொண்டு, அவள் ஜோடித்துக் கொண்டு கிளம்பி அங்கே போவதற்குள் ஸ்வர்ணமுகி டான்ஸ் முடிந்துவிட்டது. எல்லோரும் காக்டெய்லில் இருந்தார்கள். ஓரத்தில் பாண்டு வாத்தியக்காரர்கள் 'வாய்ஸஸ் இன்ஸைட் மை ஹெட்' வாசித்துக்கொண்டிருந்தார்கள். வெய்ட்டர்கள் டாக்டர்களுக்கு நடுவே உலவிக் கொண்டிருக்க, யாரும் சாப்பிடப் போவதாக இல்லை. டெர்ரஸில் சென்னை விரிந்திருந்தது.

மனைவிகள் மனைவிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"டாக்டர் ரெங்கசாமியுடைய ஒய்ஃபைப் பாத்திங்களா, புதுசா செயின் போட்டுண்டிருக்கா...பதினஞ்சு சவரன் இருக்கும்" என்ற மனைவியை உட்கார்த்தி வைத்துவிட்டு, சிவ்குமாரின் நரைத்த தலையைத் தேடினார். 

சிவ்குமார் நிம்ஹான்ஸில் பிரபலமான நியூரோ சர்ஜன்.அவரைப் பல இளம் டாக்டர்கள் சூழ்ந்திருந்தார்கள். நம்பி ராஜன் தானாகப் போய் அறிமுகம் செய்து கொண்டார்.

"நம்பி ராஜன், நம்பி ராஜன்....வெயிட் எ மினிட், உங்க பேப்பரை நான் படிச்சிருக்கேன்.....ஐ.எம்.ஜே ல ...."

"நான் அந்த நம்பி ராஜன் இல்லை, டாக்டர், ஒரு சாதாரண ஜி.பி !"

"இருந்தால் என்ன ?  உங்கள் கையில் என்ன ஆரஞ்சு ஜுஸா ....டாக்டர்கள் குடிக்கக்கூடாது என்று மாதாஜி சட்டம் கொண்டு வரவில்லையே, டாக்டர். ஆ தட் ஸ்வர்ணமுகி ! மெட்ராஸ் டாக்டர்ஸ் யாராவது அவளுடைய ஜாய்ண்ட்ஸை எல்லாம் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா...ஐ திங்க் ஷி ஐஸ் மேட் ஆஃப் சிலிகோன்.."

"டாக்டர், இன்னிக்கு என் க்ளினிக்குக்கு ஒரு வினோதமான கேஸ் வந்தது. அதை உங்களிடம் சொல்ல விருப்பம்,"

"ப்ரெய்ன் என்றால் சொல்லுங்கள், எனக்கு அதைத்தவிர வேறு எதுவும் தெரியாது. அப்பெண்டிக்ஸ்னா நான் புஸ்தகத்தில் தேடுவேன்"

சின்ன டாக்டர்கள் விசுவாசமாகச் சிரித்தார்கள்.

"இல்லை, டாக்டர். இந்த மாதிரி கேஸை நான் பார்த்ததில்லை. அவன் சொல்கிறான், ஒரு வார்த்தை மட்டும், ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவனுக்கு சூன்யமா இருக்காம். அந்த வார்த்தையை மூணு, நாலு தடவை பார்த்ததும் எபிலெப்டிக் ஷீர் (epileptic sheer) மாதிரி வந்திருக்கு. ஹி டிஸ்க்ரைப்ஸ் என் ஆரா ....."

"வெயிட் எ மினிட், அது என்ன வார்த்தை?"

"கல்யாணம்"

டாக்டர் சிவ்குமார் விசிலடித்தார்.

"டாக்டர் நம்பி ராஜன், கொஞ்சம் தனியா வாங்க"

அவரை தொழில் அணைத்து அழைத்துச் சென்று, காலி நாற்காலியின் எதிரே உட்கார்ந்துகொண்டார். "என்ன சொன்னிங்க ? திருப்பி சொல்லுங்க"

நம்பி ராஜன் முதலிலிருந்து விவரிக்க, சிவ்குமார் மிகக் கவனமாகக் கேட்டார்.

:டாக்டர், இது ஒண்ணும் கற்பனை இல்லையே?"

"சேச்சே...!"

"நீங்க ராபின் குக் எழுதின ப்ரெய்ன் படிச்சிங்களா?"

"இல்லை, ஏன் ?"

"அதில் இப்படித்தான் சில பெண்களுக்கு ஒரு எழுத்து மட்டும் தெரியாமப் போயி, ஸி.ஐ.ஏ / ஃஎப்.பி ஐ (CIA / FBI) ன்னு என்ன என்னமோ வருது. ஆனா, நீங்க சொல்ற கேஸ் வேற மாதிரி இருக்கு. ஒரு வார்த்தை மட்டும்...அதும், கல்யாணம்....சம்திங் சீரியஸ், டாக்டர் அந்த ஆளை நான் பார்க்க முடியுமா?"

"தாராளமா. இட் வில் பி எ ப்ளெஷர். உங்க  மாதிரி பிரபல டாக்டருக்கு ஆர்வம் ஏற்பட்டதுன்னா...."

"கிளினிக்கில் இருக்கானா ?"

"இல்லை. வீட்டுக்குப் போய்ட்டான். நாளைக்கு வரச் சொல்லியிருக்கேன்..."

"போச்சுரா"

"ஏன் டாக்டர் ?"

"நாளைக்கு அவன் வரலைன்னா?" அட்ரஸ் வாங்கி வெச்சிருக்கீங்களா?"

"அட்ரஸ் இல்லை. நாளைக்கு நிச்சயம் வருவான் டாக்டர். வராம எங்க போயிருவான்? டெஸ்ட்டே ஆரம்பிக்கலையே"

"எனக்கு நம்பிக்கை இல்லை"

"என்ன சொல்றிங்க, டாக்டர்?"

"இதப் பாருங்க, நம்பி ராஜன். நான் சொல்றது உங்களுக்கு இந்த யுகத்தில், இந்த தினத்தில், அபத்தமா படலாம். எனக்குத் தெரிஞ்சது உங்களுக்குத் தெரியாது. அமெரிக்காவில் நான் டீச்சிங் அஸைன்மென்டுக்குப் போறபோது சில டாக்டர்களையம்,விஞ்ஞானிகளையும் சந்திச்சேன். எல்லோருக்கும் பொதுவா ஒரு ஆர்வம் எதிர்காலத்தில் ! ஃப்யூச்சராலஜி (Futurology), பயானிக்ஸ் (Bionics), குளோனிங் (cloning), டி.என்.ஏ (DNA) ஸின்தஸிஸ்னு ஃப்ராண்டியர் (Frontier) சப்ஜெக்ட்ஸ் எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவோம். ஃப்ரெட் ஹாயில் (Fred Hoyle) , அஸிமோவ் (Asimov), ப்ராட்பரி (Bradbury), க்ளார்க் (Clarke), டாஃப்ளர் (Doffler) இந்த மாதிரி ஆட்களை எல்லாம் கூப்பிட்டு பேச வைப்போம். அதில டாக்டர் ஜான்ஸ்டன்னு (Johnston) ஒருத்தர் இருக்கார். பயோ கெமிஸ்ட்ரி, எலெக்ட்ரானிக்ஸ் இரண்டிலயும் விற்பன்னர். அவர் போன தடவை போயிருந்தபோது ஒரு சித்தாந்தம் சொன்னார். சொல்லி முடிச்சப்புறம் எல்லோரும் சிரிச்சோம்,ஏதோ போட்டுட்டு உளறார்ன்னு. ஆனா, இன்னைக்கு அவர் சொன்னதில் முதல் பாதி நடந்திருக்கு!"

"ஜான்ஸ்டன் மற்ற கிரகங்களில் அல்லது ஸூப்பர் நோவாக்களில் நம்மைவிட புத்திசாலித்தனமான உயிர்கள் இருக்கிறதை தீவிரமா நம்பறவர். அவங்கள்ளாம் நம்ம கூட மன அலைகள் (mind waves) மூலம் தொடர்பு கொள்ளுவாங்கன்னு நம்பறவர்"

"மன அலைகள்?"

"ஆமாம் ! அவர் என்ன சொன்னார் தெரியுமா? நம்ம நாகரிகம்,விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் அவங்க மாதிரி ஸூப்பர் நோவாக்களில் இருக்கிற ஸூப்பர்

ப்ரெய்ன்களோடஒப்பிட்டால் ஒரு தூசிக்கு சமானமாகும்.அவங்க ஒரு கணத்தில் நம்ம உலகை எடுத்து ஆள முடியுமாம்"

"எப்படி?"

டாக்டர் சிவ்குமார் ஒரு முழுங்கு எடுத்துக்கொண்டு தொடர்ந்தார், "அங்கிருந்து அனுப்புற எண்ண அலைகள் மூலம் ! கேளுங்க ....ஒரு மனிதனுடைய மூளையில் ஒரு பாகத்தில் விதை விதைக்கிறாற்போல மையக் கேந்தித்திரத்தை உருவாக்கிப் படிப்படியா அந்தக் கேந்திரம் விரிவடைய, கொஞ்சம் கொஞ்சமா ஒரு நாள், இரண்டு நாளிலேயே அவன் மற்ற மனிதர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்த ஆரம்பிச்சிருவானாம். "எண்ணப் பார்வை" னு சொல்றார்.அதை, அந்தப் பார்வையில் ஒரு கட்டளை இருக்குமாம்.கொஞ்சம், கொஞ்சமா, அவன் மூளை விஸ்தாரம் அடைந்து அவன் தேசத்தை, அதுக்கப்புறம் அண்டை தேசத்தை, அப்புறம் ஒரு கண்டத்தை, அப்புறம் உலகையே தன்னுடைய ஆக்கிரமிப்பில் கொண்டு வந்திருவானாம்..."

"சேச்சே, என்ன டாக்டர் சயின்ஸ் ஃபிக் ஷன் மாதிரி ரொம்ப ரீலா இருக்கு!"

"அப்படித்தான் நானும் நினைச்சேன். டாக்டர் ஜான்ஸ்டன் ஸூப்பர் நோவாவைப் பற்றியும், ப்ராபபிலிட்டி (Probability) பற்றியும் பேசறதை நீங்க கேட்டிங்கன்னா இது நிச்சயம் சாத்தியம்ன்னு தோணும். அதைவிட..."

டாக்டர் சிவ்குமார் மற்றொரு ஸ்காட்ச் வாங்கிக்கொண்டு அதில் ஐஸ் கட்டிகளைக் குலுக்கி ஒரே விழுங்கில் துரத்தினார்.

"இதெல்லாம் நீங்க சொல்ற மாதிரி ரீல்னுதான் நானும் நம்பிக்கிட்டு இருந்தேன், இன்னிவரைக்கும்...."

"இன்னிக்கு என்ன?"

"நீங்க சொன்னிங்களே, மாலைல உங்களை வந்து சந்திச்ச பேஷண்ட் பத்தி...அதுதான் என்னைக் கொஞ்சம் திகைக்க வைக்கிறது,,"

"ஏன்/"

"டாக்டர் ஜான்ஸ்டன் சொன்னபடி முதல்ல அந்த விதையை எப்படி விதைப்பாங்க தெரியுமா? ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து, மன அலைகள் அல்லது தனிப்பட்ட ரேடியேஷன் மூலம் அவனுடைய மூளையின் ஒரு பாகத்தை ஆக்கிரமிப்பாங்களாம். அந்த ஆக்கிரமிப்புக்கிங்கிறது என்னன்னு அவர் சொன்னார் தெரியுமா? முதல்ல ஒரு வார்த்தை, ஒரு சித்தாந்தம் மூளையிலிருந்து நீக்கப்படுமாம். உதாரணத்துக்கு, என்ன வார்த்தை சொன்னார்...? கல்யாணம்...."

"மை காட்" என்றார் நம்பி ராஜன்.கொஞ்சம் நேரம் கழித்து நெர்வஸாகச் சிரித்தார்.

"சேச்சே ...இம்பாஸிபிள் டாக்டர்"

"லெட்ஸ் ஹோப் ஸோ" என்றார் சிவகுமார்.

"நீங்க என்ன சொல்றிங்க டாக்டர்?"

"அந்த ஆள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள், இவன் மூலமா விண்வெளியில் உள்ள நம்மை விட மஹா புத்திசாலியான உயிரினங்கள் இவனை ஆக்கிரமித்து, இவன் மூலமா நம் உலகத்தை எடுத்தாளப் போறாங்க ! அதுனால நாளைக்கு உங்களைப் பார்க்க வரமாட்டான்னு சொல்றேன்"

"பின்ன எங்கே போவான்?"

"எங்க போவான்? டில்லிக்கு. முதல்ல இந்திய அரசாங்கத்தைக் கவர்ந்து கொள்ள....அங்க போய் .." டாக்ட சிவ்குமார் சற்று நிதானித்து, தலையை குளித்த காகம் போல உதறிக்கொண்டார். 

"சே,அப்படி எதுவும் நடக்காது.எல்லாம் இந்த ஸ்காட்ச் செய்யற வேலை. டாக்டர் ஜான்ஸ்டன் ரொம்பவே அவுட் திங்க்கர் (Out thinker) ! நீங்க கவலைப்படாதீங்க நம்பி ராஜன்.எதுக்கும் நாளைக்கு காலைல அவன் வந்ததும் எங்கிட்ட கூட்டிட்டு வாங்க"

"சரி" என்றார் நம்பி ராஜன். அவர் விரல்கள் நடுங்கின. அவருக்கும் ஸ்காட்ச் சாப்பிட வேண்டும்போல இருந்தது.

                        ======================

துரை மணி பார்த்தான்.நல்லவேளை இன்னும் மூடியிருக்க மாட்டார்கள்.மூடியிருந்தால்தான் என்ன? திறக்க வைத்துவிடலாம் என்று தோன்றியது.

துரை ஏர்லைன்ஸ் கட்டடத்துக்குள் நுழைந்து சுற்றும் முற்றும் பார்த்தான். நிதானமாக ஒரு கவுண்டரை நோக்கி நடந்தான். அங்கே டிக்கெட் பெண்ணுக்கு எதிரே நாற்காலியில் வீற்றிருந்தவர் இவனைப் பார்த்தவுடன் பயத்துடன் எழுந்து விலகி நின்றார்.

"கான் ஐ ஹெல்ப் யு சார் ?" என்றாள் பெண் மரியாதையுடன்.

"டில்லிக்கு நாளைக்கு ஒரு டிக்கெட் வேண்டும்" என்றான்.

Wednesday, October 28, 2020

நவக்கிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர்

 எனது ஊரின்  சிறப்பு

நவக்கிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர்

திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்க முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, வேதாரண்யத்தில் நீராடல் முக்தி என்பது பழமொழி.

வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. சப்தவிடங்க தலங்களில் புவனி விடங்க தலமாகும். தேவார பாடல் ஆசிரியர்களால் பாடப்பெற்றது. சோழநாட்டு காவிரி தென்கரை தலங்களில் 125–வது தலம்.

நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி வழியாக 50 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி வழியாக திருத்துறைப்பூண்டியில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய வேதங்களாலும் பூஜிக்கப்பட்ட தலம். வேதம் செடியாகி, கொடியாகி, மரமாகி வழிபட்ட தலமானதால் வேதாரண்யம் என்னும் பெயர் பெற்றது. 64 சக்தி பீடங்களில் இது சுந்தரி பீடமாகும். இங்குள்ள சுவாமி பெயர் வேதாரண்யேஸ்வரர். அம்பாள் பெயர் வேதநாயகி.

சிவபெருமானின் திருமணம் கைலாயத்தில் நடந்த போது அனைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்களும் அங்கு கூடியதால் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந் தது. இதனால் நிலைகுலைந்த தேவர்கள் உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினர். அவர் அகத்திய முனிவரை அழைத்து நீ தென்திசைக்கு சென்று உலகை சமநிலைப்படுத்து என்று கேட்டுக் கொண்டார். உடனே அகத்தியர் பணிந்து வணங்கி ‘ஈஸ்வரா, தங்கள் திருமணக் கோலத்தை தரிசிக்க இவ்விடம் முனிவர்களும் ரிஷிகளும் கூடி நிற்க, நான் என்ன பாவம் செய்தேன். எனக்கு இந்த பாக்கியம் கிடையாதா?’ என்று மன வேதனையுடன் கேட்டார்.

அதற்கு சிவபெருமான், ‘தென்திசையில் நீ எந்த இடத்தில் இருந்து உலகை சமநிலைப்படுத்துகிறாயோ அங்கு நான் உனக்கு திருமணப் கோலத்தில் காட்சி தருவேன்’ என்று சொல்லி அனுப்பினார். இதனை ஏற்றுக் கொண்ட அகத்திய முனிவர் தென்திசை நோக்கி வந்த போது வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் வன்னிமரத்தடியில் தவம் மேற்கொண்டார். அப்போது உலகம் சமநிலை அடைந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அகத்தியர், இறைவனின் திருமண தரிசனம் கிடைத்திட இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள அகஸ்தியன் பள்ளியில் தங்கி, வேதாரண்யத்தில் இறைவன் தரிசனம் வேண்டி தியானித்து வணங்கி வந்தார்.

பக்தர்களின் மனக்குறையை தாயினும் மேலாய் பரிந்து வந்து நிறைவேற்றும் தென்னாடுடைய சிவன், அகத்தியர் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு வேதாரண்யத்தில் பார்வதி தேவியுடன், திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார்.

பின்னர் அகத்தியருக்கு ஈஸ்வரன் பட்டம் கொடுத்து இனி நீ அகத்தீஸ்வரன் என அழைக்கப்படுவாய் என அருள்புரிந்தார்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சப்தமி திதியில் அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கு சிவபெருமான் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிலையாக தம்பதியராய் அமர்ந்து காட்சி கொடுப்பது சிறப்புடையது. இங்கு சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஆண்டுக்கு ஒரு முறை அபிஷேகம் நடைபெறும். அப்போது கையால் அரைத்த சந்தனம் பூசப்படும்.

திருக்கதவு திறந்தது

தேவாரபாடல் ஆசிரியர்களான திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், வேதாரண்யத்திற்கு வந்தனர். திருக்கோவிலை வலம் வந்த போது அங்கு வேதங்கள் வழிபட்டு அடைத்து சென்ற கோவில் கதவை பார்த்தனர். அந்த கதவை திறக்க முடியாததால் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் ‘திட்டி வாயில்’ என்றும் பக்கவாயில் அமைத்து கொண்டு ஆலயத்திற்கு சென்று வந்தனர். இதனை அறிந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் நேர் வழியாக இறைவனை வணங்க வேண்டி விரும்பினர். உடனே திருநாவுக் கரசர்

‘பண்ணின் நேர்மொழியாளுமை பங்கரோ 
மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ 
கண்ணினாலுமைக் காண கதவினைக் 
திண்ணமாக திறந்தருள் செய்ம்மினே...’

என தொடங்கும் பாடலை பாடினார்.

பதினோரு பாடல்கள் முடிவில் அங்கு அற்புதம் நிகழ்ந்து, திருக்கதவு திறந்தது. இருவரும் இறைவனை தரிசித்து பின் திருக்கதவை அடைக்கவும், திறக்கவும் செய்திடும் நிலையில் கதவினை அடைக்கும் படி திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரை வேண்டினார். அதன்படி திருஞானசம்பந்தரும்...

‘சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் 
மதுரம் பொழில் சூழ்மறைக்காட்டுறை மைந்தா 
இதுநன்கிறை வைத்தருள் செய்க வெணக்குன்
கதவுந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே’

என்ற பாடலை பாடுகிறார்.

திருக்கதவும் மூடப்பெற்றது.

மாசிமகப் பெருவிழாவில் இந்த ஐதீக விழா நடைபெறுகிறது.

நவக்கிரகங்கள்

வேதாரண்யம் கோவிலில் இறைவனின் திருமணக் கோலத்தை தரிசிப்பதற்காக மற்ற கோவில்களில் உள்ளது போல் இல்லாமல் தங்கள் வக்ர அமைப்பை விட்டு, இங்கு அனைத்து கோள்களும் நேர் பக்க வரிசையில் இறைவனின் திருமணக்கோலத்தை தரிசிப்பது போல் காட்சி தரும் வகையில் அமைந்துள்ளன. அதனால் இங்கு வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழ் கிறார்கள்.

கோளறு பதிகம்

வேதாரண்யத்தில் இருந்து திருஞானசம்பந்தர் மதுரைக்கு செல்ல விரும்பினார். அப்போது அருகில் இருந்த திருநாவுக்கரசர் இப்போது நாளும், கோளும் சரியில்லை. மிக்க துன்பம் உண்டாகும். இப்போது போக வேண்டாம் எனக்கூறி தடுத்தார். அதற்கு சம்பந்தர் நாம் போற்றுவது சிவபெருமானின் பாதத்தை நாளும், கோளும் என்ன செய்யும் என்று சொல்லி

‘வேயுறு தோளி பங்கன் விட முன்டகண்டன் 
மிக நல்ல வீணை தடவி 
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால் 
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி 
சனி பாம்பு இரண்டும் உடனே 
ஆசறு நல்ல, நல்ல அவை நல்ல, நல்ல 
அடியாரவர்க்கு மிகவே’


என்ற கோளறு பதிகத்தை பாடினார்.

இந்த பாடலை பாடி வணங்கினால் நவக்கிரகங்களும் நலம் தரும். பின்னர் அப்பர் பெருமானும், சம்பந்தரை ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

அனைத்து கோவில்களிலும் துர்க்கை அம்மன் வடக்கு பக்கத்தில் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு தெற்கு நோக்கி நின்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்தது. மேலும் 96 தீர்த்தங்களை கொண்டு விளங்கும் தலம். ஸ்ரீகங்கா தேவி (நதி) இங்கு மணிக்கர்ணிகை தீர்த்தத்தில் நீராடி புனிதம் பெற்ற தலம். வங்ககடல், சன்னிதிகடல், வேதநதியாக அழைக்கப்படும் தீர்த்ததலம்.

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, அர்த்தோ தயம், மகோதய புண்ணியக்காலம், சந்திர கிரகணத்தில் கல்யாண சுந்தரர் எழுந்தருளி வேதநதி என்னும் கடலில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பு ஆகும்.

இந்த புண்ணிய காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆதிசேது என்னும் கோடியக் கரையில் உள்ள சித்தர் கட்டத்தில் நீராடி, பின்பு வேதாரண்யம் சன்னிதி கடல் என்னும் வேதநதியில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் இங்கு விழா நடைபெறும். ஆடிபூரமும், மாசிமக விழாவும் பெருவிழாவாக கொண்டாடப்படும்.

மார்கழி மாதம் வேதங்களுக்கு காட்சி கொடுப்பதற்காக ரிஷப வாகனத்தில் கல்யாண சுந்தரர் எழுந்தருளி வேதாமிர்த ஏரியில் தீர்த்தம் கொடுத்து விதயபாத நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.

வேதாரண்யேசுவரர் கோவிலில் கடந்த 2000–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது  சென்ற ஆண்டு 26–ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

– செந்தூர்திருமாலன்.

எலிக்கு அரசபதவி கொடுத்த சிவபெருமான்

வேதாரண்யம் விளக்கழகு என்ற பெயர் பெற்றது. வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அர்த்தசாமபூஜை முடிந்து திருக்கதவு தாழிட்ட பிறகு கருவறை விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. அப்போது எலி ஒன்று நெய்யை குடிப்பதற்காக சென்ற போது அதன்மூக்கு பட்டு தீபம் தூண்டப்பட்டு, பிரகாசமாக எரிந்தது. அணைய இருந்த விளக்கை, தூண்டிவிட்டதற்காக எலிக்கு, சிவபெருமான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக்கி அருள் புரிந்தார்.

ஸ்ரீராமரின் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிய விநாயகர்

ஸ்ரீராமபிரான் இலங்கையில் ராவணனை வதம் செய்த பிறகு அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது அவரை துரத்தி வந்தது. ராமர் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்த போது மேற்கு முகமாக அமைந்துள்ள விநாயகரை வணங்கினார். அப்போது விநாயகர் தனது வலது காலை தூக்கி ராமருக்கு பிடித்திருந்த பிரம்மஹஸ்தி தோஷத்தை உதைத்து நீக்கியதாக தலபுராணம் கூறுகிறது. அதனால் இந்த விநாயகருக்கு ராமவீரஹத்தி விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. வலது காலை தூக்கிய படி நர்த்தன விநாயகர் போல் இந்த விநாயகர் காட்சி அளிப்பது சிறப்புடையது.

விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற தலம்

வசிஷ்ட முனிவருக்கும், விசுவாமித்திரர் முனிவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதனால் விசுவாமித்திரர் கடும் தவம் செய்து பல சித்திகளை பெற்றார். ஆனால் அவருக்கு பிரம்ம ரிஷியாகும் பேறு கிடைக்கவில்லை. இதனால் மனம் வருந்திய விசுவாமித்திரர் வேதாரண்யத்திற்கு வந்து தீர்த்தத்தில் நீராடி வன்னி மரத்தடியில் கடும் தவம் மேற்கொண்டார்.

அவரது தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மதேவன், விசுவாமித்திரர் முன் தோன்றி வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டத்தை விசுவாமித்திரருக்கு அளித்தார்.

ஆதிசேது

ராமபிரான் சீதையை தேடி இங்கு வந்த போது கோடியக்கரையில் இருந்து இலங்கையை பார்த்தார். அப்போது ராவணனின் அரண்மனையின் பின்புறம் தெரிந்தது. ஒரு வீரன் கொல்லைப்புறமாக போருக்கு செல்லக் கூடாது என்று நினைத்த அவர் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து இலங்கைக்கு சென்றதாக வரலாறு. அதனால் ராமர் இங்கு முதன் முதலில் வந்ததால் ‘ஆதி சேது’ என இப்பகுதி அழைக்கப்படுகிறது.

வீணை இல்லாத சரஸ்வதி

பல்வேறு சிறப்புகளை பெற்ற இத்தலத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி கையில் வீணை இல்லாமல் பக்தர் களுக்கு காட்சி அளிக்கிறாள். இந்த கோவிலில் உள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் அம்மனின் குரல் இனிமையானதா, சரஸ்வதி வீணையின் நாதம் இனிமையானதா என்ற போட்டி நிலவியது. இதில் வீணையின் நாதத்தை விட அம்மனின் குரல் இனிமையாக இருந்தது. இதனால் சரஸ்வதி தவக்கோலத்தில் வீணை இல்லாமல் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.



108 திவ்யதேசங்கள் - பதிவு 36 திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 36 🌹🌹🌹

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இத்தலம் மட்டும் தான் "அம்பலம்" என்றழைக்கப்படுகிறது.

சிவபெருமான், செங்கமல நாச்சியார், ஆதிசேஷன் இத்தல இறைவனை வழிபட்டு இறைவனின் தரிசனம் பெற்ற தலம்.

அருள்மிகு செங்கண்மால் திருக்கோவில் :-
திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்) .
மூலவர்: செங்கண்மால், ரங்கநாதர், லட்சுமி ரங்கர்
தாயார்: செங்கமலவல்லி
உற்சவர்: அரங்கநாதன்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: வேத விமானம்
தீர்த்தம்: சூரிய புட்கரணி
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ செங்கண்மால் ஸ்வாமிநே நமஹ.


ஊர்: திருநாங்கூர்.

🌺🌺 தலவரலாறு:-

ஆதிமூர்த்தியான இறைவன் நாராயணன் கிடந்த கோலத்தில் எத்தனையோ திருத்தலத்தில் காட்சி தந்து அருள்கிறார். ஆனால், இத்திருத்தலத்தில் சிவந்த கண்களோடு செங்கண்மால் என்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இத்தலத்தின் பெருமை பற்றி பத்மபுராணத்தில் "லக்ஷ்மி வைபவம்" என்ற தலைப்பில், அகத்திய மாமுனிவர் வாசு என்ற அரசனுக்குக் கூறுவது போல அமைந்துள்ளது.

இத்தலத்திற்குத் திருத்தெற்றியம்பலம் எனப் பெயர் பெற்றதற்கான காரணம் தெளிவாகக் கிடைக்கப்பெறவில்லை. தில்லை திருச்சிற்றம்பலம் என்று போற்றப்படும் நடராஜப் பெருமான் திருத்தலத்தில் குடிகொண்டுள்ள சித்திரக்கூடத்து இறைவன் தேவாதிராஜனைப் போலவே இத்தலத்திலும் காட்சி தருவதால் திருத்தெற்றியம்பலம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

🌺🌺 செங்கண்மால் ரங்கநாதர் :-

இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைத் தூக்கிக் கொண்டு பாதாள உலகத்தில் வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியைக் காப்பதற்காக வராக அவதாரம் எடுக்கச் சம்மதித்தார்.

இதைக் கேட்ட மகாலட்சுமி, "பகவானே! நான்ஒரு நொடி கூட உங்களை விட்டுப் பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்கப் போவதாகக் கூறுகிறீர்கள். நான்எப்படித் தனியாக இருப்பது???" என வருத்தப்பட்டாள்.

இதேபோல் ஆதிசேஷனும் "பரந்தாமா! நீங்கள் பூமியைக் காக்க பாதாள உலகம் சென்றுவிட்டால் , என் கதி என்னாவது???" என வருத்தப்பட்டார்.

இதைக்கேட்ட பெருமாள், "பயப்படாதீர்கள். எல்லாம் நமக்கு நன்மை தான். நீங்கள் இருவரும் "பலாசவனம்" சென்று என்னை தியானம் செய்யப் புறப்படுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். ரேரான் இரண்யாட்சனை வதம் செய்துவிட்டு உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்" என்றார்.

அத்துடன் கலியுகத்தில் இத்தலம் "திருத்தெற்றியம்பலம்" என அழைக்கப்படும். என் தீவிர பக்தனான ஸ்ரீபாஷ்யகாரர், தீட்சை பெற்ற 108 வைஷ்ணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய இருக்கிறார்.

"நான் அங்கிருந்து உலகத்தை காத்து ரட்சிக்க போகிறேன். கலியுகம் முழுவதும் அங்கே நித்தியவாசம் செய்யப் போகிறேன்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.

வராக அவதாரம் எடுத்த விஷ்ணு பூமிக்குள் சென்று இரண்யாட்சனை அழித்துவிட்டு, பூமியை மீட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் மெல்லச் சுழலவிட்டார்.

இதையறிந்த மகாலட்சுமியும், ஆதிசேஷனும் பூமிக்கு வந்து மகாவிஷ்ணு குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர்.

மகாவிஷ்ணு தான் கொடுத்த வாக்குப்படி திருத்தெற்றியம்பலம் சென்று அங்கிருந்த சிவன், மகாலட்சுமி, ஆதிசேஷன் ஆகியோருக்கு அருள் புரிந்தார்.

பின் அங்கேயே போர் புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளி கொண்டார்.

இதனால், இத்தல பெருமான் "செங்கண்மால் ரங்கநாதர்" என்ற திருநாமம் பெற்றார்.

🌺🌺 சிறப்புகள் :-

இறைவன் செங்கண்மால் லட்சுமி நாராயணன் காட்சி தந்தருளும் திவ்யதேசம்.

திருமகள் தாயார் செங்கமலவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தந்தருளும் திவ்யதேசம்.

திருநாங்கூரில் நடைபெறும் புகழ் பெற்ற 11 திருத்தல கருடசேவைக்கு இத்தல பெருமாளும் எழுந்தருள்வார்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 மங்களாசாசனம் :-

"சீரணந்த மணிமாடம் திகழும் திருநாங்கூர் திருத்தெற்றியம்பலத்துளென்
செங்கண்மாலை கூரணிந்த வேல்வலவன்
ஆலிநாடன் கொடிமாட
மங்கையர்கோன் குறையலாளி பாரணிந்த தொல்புகழோன்
கலியன் சொன்ன
பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார் சீரணிந்த
உலகத்து மன்னராகிச்
சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வார் தாமே!!"

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். பள்ளி கொண்ட பெருமாள் என்று சொன்னால் மட்டுமே அனைவருக்கும் புரியும்.

அருள்மிகு செங்கண்மால் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு செங்கமலவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் - திருமணிக்கூடம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!"

108 திவ்யதேசங்கள் - பதிவு 35 திருத்தேவனார்த்தொகை (திருநாங்கூர்)

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 35🌹🌹🌹


அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில்:-

திருத்தேவனார்த்தொகை (திருநாங்கூர்)

மூலவர்: தெய்வநாயகன்
தாயார்: கடல்மகள் நாச்சியார், மாதவ நாயகி
உற்சவர்: மாதவப் பெருமாள்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சோபன விமானம்
தீர்த்தம்: சோபன புட்கரணி, தேவசபா புட்கரணி
நாமாவளி: ஸ்ரீ கடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

ஊர்: கீழச்சாலை

🌺🌺 தலவரலாறு:-

துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்குக் கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி, அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய்.

எனவே, லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும்!! என்று சாபம் கொடுத்ததைக் கேட்டு அதிர்ந்து போனான் இந்திரன்.

ஐராவதம் யானையும் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன்.

துர்வாசரும், இந்திரனே "இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான்". "இறைவனது பிரசாதப்பொருட்களை அவமதிக்கக் கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா?". நீ உன் குருவிடமே சாப விமோசனம் கேள்", எனக் கூறிச் சென்றுவிட்டார்.

கங்கைக் கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என்று கூறி அனுப்பி விட்டார்.

பிரம்மனோ! இது பெருமாள் காரியம்! தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகாவிஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடுவாயாக, அவர் உனக்கு அருள் புரிவார் என்றார்.

பெருமாளிடம் மகாவிஷ்ணு தனது தவறுக்கு வருந்தி சாப விமோசனம் நீங்குவதற்கு வழி கேட்டபோது, பெருமாள் கூறுவது :-

"இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும், என் மனைவியும் தங்க மாட்டோம். நீ தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம்வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாயாக" என்று கூறி ஆசி வழங்கினார்.

பாற்கடலைக் கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதைத் தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.

🌺🌺 திருத்தேவனார்த்தொகை பெயர்க் காரணம் :-

பரமபதநாதனாம் இறைவன் நாராயணன் குடிகொண்டுள்ள பாற்கடலை ஒரு முறை அமுதம் வேண்டிக் கடையும் போது, அதிலிருந்து திருமகள் தாயார் வெளிப்பட்டாள்.

பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட திருமகள் தாயாரை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். அத்தகைய திருமணக் கோலத்தில் இறைவன் இத்திருக்கோவிலில் காட்சி தருவதாகத் தலவரலாறு கூறுகிறது.

திருமகளைத், தேவனார் (பெருமாள்) மணமுடிக்கும் காட்சியைக் காண தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த திருத்தலத்திற்கு "திருத்தேவனார்த்தொகை" எனப்பெயர் வந்தது. இதைத் திருமங்கையாழ்வாரும் உறுதி செய்கிறார்.

"இந்திரனும் இமையவரும்
முனிவர்களும் எழில் அமைந்த
சந்த மலர்ச் சதுமுகனும்
கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என
நின்றருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நல்பொழில் புடை சூழ்
திருத்தேவனார்த்தொகையே!!!"

என்று திருமங்கையாழ்வார் பாசுரத்தால் பாடுகிறார்.

🌺🌺 அமர்ந்த நாயகன் :-

இத்தலத்தைப் பற்றி மேலும் திருமங்கையாழ்வார் """இத்தல இறைவன் அமர்ந்து காட்சி தருவதாகப் பாடுகிறார்"""". ஆனால், இறைவன் நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள்கிறார்.

""யாவரும் ஆய் யாவையும் ஆய் எழில்
வேதப் பொருள்களும் ஆய்
மூவரும் ஆய் முதல் ஆய மூர்த்தி
அமர்ந்து உறையும் இடம்"".

என்று பாசுரம் செய்கிறார். இதன் பொருள் என்னவென்றால்??

இதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். இறைவன் பூமியில் வந்து இருந்த இடம் என்ற பொருளின் அடிப்படையில் குறிப்பிட்டிருக்கலாம்.

காவிரியின் கிளை நதியான மண்ணியாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆழ்வார் காலத்தில் அமைந்திருந்த ஆலயம் சிதைந்து, பின்னாளில் இவ்வாலயம் உருவாகி இருக்கலாம்.

இதன் காரணமாக முதல் மூர்த்தி அமர்ந்த கோலத்திலும்,

இன்றைய மூர்த்தி நின்ற கோலத்திலும் குடிகொண்டிருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

🌺🌺 சிறப்புகள் :-

தேவர்களே தொகையாக வந்து தரிசித்த திருத்தலம் இந்த திருத்தலம்.

திருமகள் தாயார் கடல்மகள் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

கல்யாண வரம் அருளும் திருத்தலம்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரம் பாடியருளிய திருத்தலம்.

திருநாங்கூரில் நடைபெறும் புகழ் பெற்ற 11 திருத்தல கருடசேவைக்கு இத்தல பெருமாளும் எழுந்தருள்வார்.

🌺🌺 வழித்தடம் :-

சீர்காழி - திருவெண்காடு சாலையில் திருவாலியில் இறங்கி 1 கி.மீ செல்ல வேண்டும். சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அருள்மிகு தெய்வநாயகன் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு கடல்மகள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு செங்கண்மால் திருக்கோவில் - திருத்தெற்றியம்பலம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நமஹ!"

திருத்தண்கால் திவ்யதேசம்

 திருத்தண்கால் திவ்யதேசம்

100வது திவ்யதேசம் - திருத்தண்கால் (திருதண்காலூர்)

ஶ்ரீ நின்ற நாராயணன்

தாயார்-

ஶ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்தநாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)

ஶ்ரீமந் நாராயணன் பாற்கடலில் சயனித்திருந்தபோது, அருகில் இருந்த ஶ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது.

ஶ்ரீதேவியின் தோழிகள், "இவளே உயர்ந்தவள், இவளே அதிர்ஷ்ட தேவதை! இவளே மஹாலக்ஷ்மி(ஶ்ரீ) என்று அழைக்கப்படுபவள்! இந்திரன் இவளால்தான் பலம் பெறுகிறான்! வேதங்கள் இவளை திருமகள் என்று போற்றுகின்றன! பெருமாளுக்கு இவரிடம்தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஶ்ரீநிவாசன், ஶ்ரீபதி, ஶ்ரீநிகேதன் என்ற திருநாமங்கள் உண்டு! பெருமாள் இவளை தன் வலது மார்பினில் தாங்குகிறார்" என்று புகழ்பாடினர்!! 

பூமாதேவியின் தோழியரோ "இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூதேவியே! அவள் மிகவும் சாந்தமானவள், பொறுமை மிகுந்தவள்! இவளை காக்கவே பெருமாள் வராஹ அவதாரம் எடுத்தார்" என்று வாதாடினர்!!

நீளாதேவியின் தோழிகள் "எங்கள் நீளாதேவி தண்ணீர் தேவதையாக இருக்கிறாள்! தண்ணீரை நாரம் என்பர். இதனால் தான் பெருமாளுக்கு நாராயணன் என்ற சிறப்பு திருநாமம் உள்ளது! உலகிலுள்ள எல்லோரும் உச்சரிக்கும் நாமம் நாராயண நாமமே! தண்ணீரைப் பாலாக்கி அதில் ஆதிசேஷனை மிதக்கச் செய்து, தாங்குபவள் எங்கள் நீளாதேவி! எனவே இவளே உயர்ந்தவள்" என்றனர்!!

விவாதம் வளர்ந்ததே தவிர முடிந்தபாடில்லை. எனவே ஶ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க இந்த தங்காலமலை என்னும் திருத்தங்களுக்கு வந்து செங்கமல நாச்சியார் என்ற பெயரில் கடுந்தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்று, நின்ற நாராயணப் பெருமாளாக இத்திவ்யதேசத்தில் அருள்பாலித்து வருகிறார்!!

திருமகள் தங்கியதால் இத்தலம் திருத்தங்கல் ஆயிற்று!!

"தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை-தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிகுட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக்கிடம்"

-பூதத்தாழ்வார் 

(2ம் திருவந்தாதி)

-அடியவர்களின் உள்ளமானது, தஞ்சை மாமணிக் கோயில், தலைசிறந்ததாகத் திகழ்கின்ற திருவரங்கம், திருத்தண்கால் ஆகிய திருத்தலங்கள், அடியார்கள் உகக்கின்ற திருமலை, திருப்பாற்கடல், திருக்கடல்மல்லை, திருக்கோவலூர், மதிள்கள் நிறைந்த திருக்குடந்தை ஆகிய திருத்தலங்களில், அம்பு எய்வதில் வல்லமை மிக்கவரான எந்தைபிரானாகிய ஶ்ரீ இராமபிரான் திருக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றான்!



108 திவ்யதேசங்கள் - பதிவு 34 திருவாலி திருநகரி

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 34 🌹🌹🌹

அருள்மிகு அழகியசிங்கர், வயலாளி மணவாளன் திருக்கோவில்:-

திருவாலி திருநகரி.

இரண்டு தலங்களைக் கொண்ட திவ்யதேசம் இதுவாகும்.திருவாலி தனியாகவும், திருநகரி தனியாகவும் 04 கி.மீ தொலைவில் இருந்தாலும் ஒரே திவ்யதேசமாகக் கருதப்படுகிறது.

🌺🌺 திருவாலி - முதல் தலம்:-

மூலவர்: லட்சுமி நரசிம்மர், அழகிய சிங்கர்.
தாயார்: பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
உற்சவர்: திருவாலி திருநகராளன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: அட்டாச்சர விமானம்
தீர்த்தம்: இலாட்சன புட்கரணி
மங்களாசாசனம்: குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அம்ருத கடவல்லீ ஸமேத வயலாளி மணவாளன் ஸ்வாமிநே நமஹ!!!

ஊர்: திருவாலி திருநகரி

🌺🌺 அழகியசிங்கர் பெயர்க் காரணம் :-

நாளும் நலமளிக்கும் நாதனான இறைவன் நாராயணன் வையகத்தை வாழ்விக்க பத்து அவதாரங்களை எடுத்தார்.

அத்தகைய பத்து அவதாரங்களில் தன்னகரில்லா தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் அவதாரம் "நரசிம்ம அவதாரம்".

சாந்த சொரூபியயயாகத் திகழும் இறைவன் உக்கிர மூர்த்தியாக அவதரித்து அவனி(உலககம்)யையே நடுநடுங்கச் செய்தார்.

அத்தகைய நரசிம்மர் சுவாமியைப் பாடாத ஆழ்வார்களே இல்லை என்றே கூறலாம். அத்தகைய நரசிம்ம மூர்த்தி சாதாரண ஒரு மனிதரையும் ஆழ்வாராக உருவாக்கி அழகு சேர்த்தவர் என்பதால் இத்தல இறைவனுக்கு "அழகியசிங்கர்" என்பது திருநாமம்.

பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, இரண்யனை வதம்செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இந்த சீற்றத்தைக் கண்ட தேவர்களும், ரிஷிகளும் பயந்து பூலோகம் மேலும் அழியாமல் இருக்க காக்கப்படவேண்டும் என்று லட்சுமிதேவியை வேண்டினர்.

இவர்களது வேண்டுதலை ஏற்ற தாயார் பெருமாளின் வலதுதொடையில் வந்தமர்ந்தாள். அப்போது பெருமாள் தேவியை ஆலிங்கனம் செய்துக்கொண்டார். எனவே, இவ்வூர் "திருஆலிங்கனம்" எனப்பெயர் பெற்றது.

திரு ஆகிய லட்சுமி தேவியை ஆலிங்கனம் செய்தலால் திருவாலி என்றானது. இத்தலத்தின் பெருமாளை "குலசேகராழ்வார்" வந்து மங்களாசாசனம் செய்துள்ளார்.

இந்த பகுதியில் ஆலிநாடு "திருமங்கையாழ்வார்" குறுநில மன்னனாகத் திகழ்ந்தார். எனவே, அவருக்கு "ஆலிநாடன்" என்ற பெயர் ஏற்பட்டது.

🌺🌺 திருமங்கையாழ்வார் :-

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் திருஅவதாரத் திருத்தலம் இதுவாகும். திருமங்கை மன்னர், ஆலிநாட்டைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டிற்கு கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர், என்று கூறப்படுகிறது.

இதனால், இவருக்கு "ஆலிநாடன்" என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இருப்பினும் திருவாலி முதல் அவர் பிறந்த குறையலூர் வரை திருமங்கை மன்னர் பிறந்து வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சுவடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும், ஆழ்வார் காரணமாகவே திருவாலி எனப் பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

திருமங்கையாழ்வாருக்கு இறைவன் காட்சி தந்த தலமாகக் கூறப்படுகிறது.

🌺🌺 தலபெருமை :-

இந்த திருத்தலம் பத்ரிகாசிரமத்திற்கு திருத்தலத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்தயிடமானதால், இத்தலம் "பத்ரி"க்கு இணையானது.

இங்கு லட்சுமி தேவி தாயாருடன் நம் பெருமாள் நரசிம்மர் கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "நரசிம்மஷேத்திரம்" என்கிற பெயருண்டு. இந்த திருவாலியைத் தரிசிப்பதால் இங்கே "பஞ்சநரசிம்ம" தலங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

🌺🌺 வேடுபறி உற்சவம் :-

திருமங்கையாழ்வார்க்கு விரைவில் அருள்பாலிக்கவேண்டும் என்று லட்சுமிதேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். இந்த நரசிம்மர் அருளியப்படி லகட்சுமி தேவி இத்தலத்திற்கு வந்து தவம் செய்து கொண்டிருக்கும் பூர்ணமகரிஷியின் மகளாக பிறந்தாள். இந்த பெண் பெருமாளை திருமணம் செய்து, திருவாலி அருகே "தேவராஜபுரம்" என்ற இடத்திற்கு வரும்போது திருமங்கைமன்னன் வழிமறித்து, வழிப்பறி செய்ய நரசிம்மர் திருமங்கைமன்னனின் காதில் "அஷ்டாட்சரம்" மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.

திருமங்கையாழ்வார் வரலாற்றை நினைவு கூறும் விதமாக, இன்றளவும் இத்தலத்தில் வேடுபறி உற்சவம் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

பங்குனி உத்திரத்திற்கு முதல்நாள் வயலாளி மணவாளப் பெருமாள், தாயாருடன் திருநகரியிலிருந்து புறப்பட்டு வந்து திருவாலியில் எழுந்தருள்வார்.

அன்று திருக்கல்யாணம் நடைபெறும். இரவு திருமங்கை மன்னன் வேடுபறி, பெருமாள் உபதேசம் ஆகியவை நடைபெறும். பின்பு ஆழ்வார் பெருமாளோடு திருவீதியுலா வருவார்.

இந்த திருத்தலத்தில் திருமங்கை மன்னன் வழிப்பறி செய்த மண்டபத்தை இன்றும் காணலாம்.


🌹🌹 அருள்மிகு வயலாளி மணவாளன் திருக்கோவில் :-

மூலவர்: தேவராஜன்
தாயார்: அம்ருதகடவல்லி
உற்சவர்: வயலாளி மணவாளன், கல்யாண ரங்கநாதர்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: அட்டாச்சர விமானம்
தீர்த்தம்: இலாட்சன புட்கரணி
மங்களாசாசனம்: குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அம்ருதகடவல்லீ ஸமேத ஸ்ரீ வயலாளி மணவாளன் ஸ்வாமிநே நமஹ

ஊர்: திருநகரி


🌺🌺 தலவரலாறு :-

உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரம்மாவை நாபியின் வழியாக படைத்த இறைவன் நாராயணனின் திருவடியை அடைந்த ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.

அத்தகைய ஆழ்வார்களில் ஒருவரான திருஅவதாரம் செய்த திருத்தலம் இதுவாகும்.

அத்தகைய ஆழ்வார் முற்பிறவியில் செய்தை புண்ணியப்பலன் காரணமாக இத்தலம் உருவானதாக தலவரலாறு கூறுகிறது.

பிரம்மாவின் புத்திரனான கர்த்தம பிரஜாபதி என்பவர் பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடுந்தவம் செய்தான்.

அவனது தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் காட்சி தந்து அருளினார். அப்போது, தான் யுகந்தோறும் பிறக்க விரும்புவதாகவும்,

இறைவன் பெயரால் பல நற்காரியங்களைச் செய்ய முற்படுவதாகவும் வரம் பெற்றார்.

இதன் காரணமாகவே, திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவசு மன்னனாகப் பிறந்தான்.

கலியுகத்தில் நீலன் என்ற பெயரில்ஒரு படைத்தலைவனின் மகனாகப் பிறந்தான். அவனே திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்து கொண்ட திருமங்கையாழ்வார் ஆவார்.

🌺🌺 சிறப்புகள் :-

இரண்டு தலங்களைக் கொண்ட திவ்யதேசம்.

திருமங்கையாழ்வாருக்காக இறைவன் திருமந்திரத்தைத் தானே உபதேசம் செய்த தலம்.

திருமங்கையாழ்வார் திருஅவதாரத் திருத்தலம்.

திருமங்கையாழ்வார் - 41, குலசேகராழ்வார் - 1, என மொத்தம் 42 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

திருவாலி திவ்யதேசம் சீர்காழி - பூம்புகார் சாலையில் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருவடிகளே சரணம்.

அருள்மிகு பூரணவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

அருள்மிகு வயலாளி மணவாளன் திருவடிகளே சரணம்.

அருள்மிகு அமிர்தவல்லி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோவில் - திருத்தேவனார்த் தொகை (திருநாங்கூர்) திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!

கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில்

 இந்த மாதம் முழுவதும் புரட்டாசியில் தினம் ஓர் வைணவ ஆலயம் பற்றி தெரிந்து கொள்வோம்* 

*🌿🌿

அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் 

 மூலவர்  : கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்
   அம்மன்/தாயார்  : ஸ்ரீதேவி, பூதேவி
   ஊர்  : பாடகச்சேரி
   மாவட்டம்  : திருவாரூர்
   மாநிலம்  : தமிழ்நாடு
   திருவிழா : 

       ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி  

       தல சிறப்பு : 

       பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்கள் உள்ளம் மகிழ்வதால் இவருக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  

      திறக்கும் நேரம் : 

       காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  

       முகவரி : 

       அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில், பாடகச்சேரி போஸ்ட்-612 804, வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்  

      பொது தகவல் : 

       பாடகச்சேரி மகான் ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் வாழ்ந்த கிராமம். ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் குடந்தை நாகேஸ்வர சுவாமி கோயிலுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்வித்து அழியா புகழ் பெற்றவர். வேறு பல கோயில்களின் திருப்பணிகளுக்கு காரணமாகயிருந்தவர். தமிழகமெங்கும் பலரையும் பல திருப்பணிகளில் ஈடுபடுத்தியவர். அவரது மகிமைகளையும் பெருமைகளையும் எல்லையற்ற தெய்வீக சக்திகளையும் இன்றும் பலர் பசுமையாக நினைவு கூறுகின்றனர். அவருக்காக ஒரு மடம் அவர் தங்கியிருந்த இடத்தில் கட்டப்பட்டு அவர் சமாதியான ஆடிபூரம், மற்றும் பவுர்ணமி நாட்களில் அன்னதானம் வெகுவிமர்சையாக கொடுக்கப்படுகிறது. சுவாமிகள் எண்ணற்ற வியாதிகளை குணமாக்கியவர். எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தவர். அவருடைய ஜீவ சமாதி திருவற்றியூரில் பட்டினத்தார் சமாதிக்கு பக்கத்தில் உள்ளது. அவர் பைரவர் உபாசகர். அவர் அன்னதானம் செய்யும் பொழுது நூற்றுக்கணக்கான நாய்கள் திடீரென்று மனிதர்கள் போல இலைகளில் உணவு அருந்தி நொடியில் எங்கோ சென்றுவிடுமாம். இன்றும் அவருடைய மடங்களில் அந்த அதிசயம் நடைபெறுகிறது. அவர் 1949 ஆம் வருடம் ஆடிப்பூரம் வெள்ளிக்கிழமை சமாதி கொண்டார்.

  பிரார்த்தனை  

     இந்த பெருமாளை தரிசித்த, மனதால் நினைத்த அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் என்பது உறுதி. இந்த பெருமாளை வேண்டியவருக்கு சந்தான பாக்கியமும் கொடுத்த கடன்களும் வசூலாகும் என்கிறார்கள்.

     நேர்த்திக்கடன் : 

      சுவாமிக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.  

       தலபெருமை : 

       ஸ்ரீ தேவி, பூதேவி உடனாய தாயார்களுடன் நெகிழ்வான - மகிழ்வான - திவ்யமான தரிசனம் தருகிறார் கண்டுளம் மகிழ்ந்த பெருமாள். மூலவர்களான இந்தக் கல் திருமேனிகள் தவிர கருடாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீராமானுஜர் ஆகியோரின் திருமேனிகளும் இங்கு உள்ளன. பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற புதுமையான திருநாமம். பெருமாள் கோயில் பெரியதாகத்தான் இருந்திருக்கிறது. ஸ்வாமிகள் நாளிலேயே பாலாலயம் செய்யப்பட்டு என்னகாரணத்தினாலோ முடிவு பெறமால் உள்ளது என்கிறார்கள். அதற்கான அடித்தளங்களையும் காணமுடிகிறது. காலத்தால் கரைந்து மூலமூர்த்திகள் கருவறையிலிருந்து அகற்றப்பட்டு ஓலைவேய்ந்த சிறுகுடிசைகுள் சுமார் 250 வருடமாக வைக்கப்பட்டுள்ளது. மூன்றரையடி உயரமுள்ள திருமேனியழகு வார்த்தைகளுக்கு அடங்காத வனப்புடன் திகழ்கிறது. ஸ்ரீதேவி, பூதேவியும் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

திருமாலை யார் தரிசிக்க வந்தாலும் உண்மையிலேயே கண்டவர் உ<ள்ளத்தை மகிழ்விக்கும் பெருமாளாக இன்றும் காட்சி தந்து அருளுகிறார். இப்பொழுது சமீபத்தில் ஒரு பக்தைக்கு தன் திருநாம நெற்றியில் இருந்து ஓர் பேரொளி தோன்றி அங்கு தரிசிக்க வந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். இங்கேயே சவுந்தர நாயகி சமேத பசுபதீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். பசுபதீஸ்வரர் மிகவும் சக்திவாய்ந்தவர். ஓலையே கூரையாக கொண்டு கணபதி, நந்தியுடன், அமர்ந்திருக்கின்றனர். சவுந்தர்ய நாயகி அழகு வர்ணிக்க வார்த்தை இல்லை. இங்குள்ள சிவபெருமான் மண்புற்றுக்குள் தன்னை மூடிக்கொண்டு தவம் இருப்பது பார்வதி தேவியை தவிர வேறு யாருக்கும் தெரியா வண்ணம் தவம் செய்து வந்தார். பார்வதி தேவியையும் இந்த புற்றை புஷ்பங்களால் பூஜை செய்து வந்தார். அப்போது தேவலோகத்து காமதேனு இதை அறிந்து கொண்டு தானும் புற்றின் மேல் பால் சுரைப்பதை வழக்கமாக கொண்டது. ஒருநாள் பார்வதிதேவி பூஜை செய்ய தாமதம் ஆனது. அதை அறியாத பசு அவ்விடம் வந்து பாலை சுரக்க, இருவரது பூஜையும் கண்டு மகிழ்ந்த ஈசன் தவம் கலைந்து எழுந்தார். இங்கு பசு பூஜைசெய்தாலும், பால் சுரந்தாலும், ஈசனுக்கு பசுபதீஸ்வரர் என்று பெயர். பசுவை பால் சுரக்க வைத்த பார்வதி தேவிக்கு சவுந்தர்ய நாயகி என்று பெயர். சவுந்தர்யம் என்றால் அனைத்து அம்சங்கள் உடையவர் என்று பெயர். இன்றும் புற்றானது காட்சி தருகிறது. இந்த சிவனை திங்கட்கிழமைகளில் பூஜித்தால் வியாபாரம் பெருகும், நிம்மதி கிடைக்கும், திருமண வரம் அருளும் என்கிறார்கள்.

சிவ விஷ்ணு ஆலயங்களுக்கு திருப்பணி நடைபெறுவதால் பக்தர்கள் பெரிய அளவில் கலந்துகொண்டு, நிறைய பொருள் உதவி செய்து பாடகச்சேரிமகான் அருளுக்கு பாத்திரமாக வேண்டுகிறோம். கண்டுளம் மகிழ்ந்த பெருமாளைத் தரிசித்தால், நம் உள்ளமும் மகிழும் என்கிறார்கள் ஆலயத் திருப்பணி அன்பர்கள். எந்தப் பிரார்த்தனையை இவரிடம் வைத்தாலும், நம் உள்ளம் மகிழும்படி அதை நிறைவேற்றித் தந்து விடுவார் இந்தப் பெருமாள். கொடுத்த கடன் தொகை வசூலாகாமல் இருந்தால், இவரை வழிபடுவதன் மூலம் அந்தத் தொகை வசூலாகி விடும். அதுபோல் புத்திர பாக்கியம் வேண்டுவோர் இவரைப் பிரார்த்தித்தால், பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

     தல வரலாறு : 

     இந்தத் திருநாமத்துக்கு ராமாயணக் கதையில் இருந்து பெயர்க் காரணம் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். சீதாதேவியை வஞ்சகமான திட்டத்தின் மூலம் ராவணன் கவர்ந்து சென்றது அனைவருக்கும் தெரியும். தன் கணவர் குடிலில் இல்லாதபோது இப்படி இவர் இவன் கடத்திச் செல்ல முற்படுகிறானே என்று சீதாதேவி ராவணனிடம் கதறினாள். தன்னை விடுவிக்குமாறு வேண்டினாள். ஆனால், அவளது பேச்சை லட்சியம் செய்யாமல், புஷ்பக விமானத்தில் அவளுடன் இலங்கையை நோக்கிப் பறந்தான் ராவணன், அப்போதுதான் சீதாதேவிக்கு ஓர் எண்ணம் உதித்தது. அதாவது, ராவணன் தன்னை எங்கே கடத்திச் சென்று வைத்திருக்கிறான் என்பதை தன்னைத் தேடி வரும் ஸ்ரீராமபிரான் அறிந்து கொள்வதற்கு வசதியாக, கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பூமியில் போட்டுக் கொண்டே போனாளாம். அப்படி அவள் அணிந்திருந்த பாடகம் எனப்படும் காலில் அணியக் கூடிய கொலுசை ஓரிடத்தில் கழற்றிப் போட்டாள். இறுதியில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். சிறையில் இருந்து தன்னை மீட்கச் செல்ல ஸ்ரீராமபிரான் வர மாட்டாரா என்று ஏங்கித் தவிக்க ஆரம்பித்தாள்.

குடிலில் சீதாதேவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகி, அவளைத் தேடிப் புறப்பட்டனர் ராமனும் லட்சுமணனும். சீதாதேவி அணியும் ஆபரணங்களை ஆங்காங்கே தரையில் கண்டார் ஸ்ரீராமபிரான். அந்த ஆபரணங்கள் கிடைத்த வழியைத் தொடர்ந்தே தன் தேடுதல் யாத்திரையை நடத்தினார். ஒரு கிராமத்தில் சீதாதேவியின் பாடகம் எனப்படும் அணிகலன் தரையில் கிடப்பதைப் பார்த்த ஸ்ரீராமபிரான், தம்பி லட்சுமணா... இந்த அணிகலனைப் பார். இது யாருடையது? என்று கேட்டபோது, லட்சுமணன் முகம் மலர்ந்து, இது என் அண்ணியாருடையது. அவர் தன் திருப்பாதங்களில் இந்த பாடகங்களை அணிந்திருப்பார். இந்தக் காட்சியை நான் தரிசித்திருக்கிறேன் என்று உளம் மகிழ்ந்து சொன்னானாம்.

அதுவரை தரையில் விழுந்து கிடந்த மற்ற ஆபரணங்களை ஸ்ரீராமபிரான் காட்டிக் கேட்டபோது, இது அண்ணியாருடையதா என்று எனக்குத் தெரியாது என்றே சொல்லி வந்த லட்சுமணன், காலில் அணியும் பாடகத்தைக் கண்டு, இது நிச்சயம் அண்ணியார் அணியும் அணிகலன்தான் என்று உறுதிபடச் சொன்னது, ராமனுக்குப் பெருத்த மகிழ்வைத் தந்ததாம். அண்ணியாரை - ஒரு தெய்வமாக எந்த அளவுக்கு லட்சுமணன் தொழுது வந்திருக்கிறான் என்கிற பக்தி உணர்வு அப்போது வெளிப்பட்டது. பாடகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார் ராமபிரான். இதனால் இந்த ஊருக்கு பாடகப்பதி என்றும் (பின்னாளில் பாடகச்சேரி), இங்கு அருள் பாலிக்கும் பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்கிற திருநாமமும் வந்ததாகச் சொல்கிறார்கள் (மாறுபட்ட கருத்தும் உண்டு).

  சிறப்பம்சம் : 

       அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்கள் உள்ளம் மகிழ்வதால் இவருக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.



திருப்பரமபதம்

 🙏  நமஸ்காரம்

108. திருப்பரமபதம் (திருநாடு, வைகுண்டம்)

மூலவர் - பரமபதநாதன், வைகுந்தநாதன்
தாயார் - ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி
தீர்த்தம் - விரஜா நதி, அயிரமத புஷ்கரணி
நாமாவளி - ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸமேத ஸ்ரீ பரமபதநாதாய நமஹ:


பாசுரம்:

வைகுந்தம்புகுதலும் வாசலில்வானவர் *
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று *
வைகுந்தத்தமரரும் முனிவரும்வியந்தனர் *
வகுந்தம்புகுவது மண்ணவர்விதியே.

- திருவாய்மொழி (3763)

8 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாடாகும் இது. நம்மாழ்வார் வைகுந்தம் செல்லும் காட்சிகளை பத்துப் பாசுரங்களில் விளக்குகிறார்.

பாசுரம் பதவுரை:

வைகுந்தம் புகுதலும் - ஸ்ரீ வைகுண்டத்திலே சென்று புகுந்தவளவிலே
வாசலில் வானவர் - திருவாசல்காக்கும் முதலிகளானவர்கள்
வைகுந்தன் தமர் எமர் - “ஸ்ரீவைகுண்ட நாதனுடையார்கள் எங்களுடைய ஸ்வாமிகள் (ஆகையாலே)
எமது இடம் புகுது என்று வியத்தனர் - எங்களதிகாரத்திலே புக வேணும்” என்றுசொல்லி உகந்தார்கள்;
வைகுந்தத்து - அவ்விடத்திலே
அமரரும் முனிவரும் - கைங்கரிய நிஷ்டராயும் குணாநுபவ நிஷ்டராயுமுள்ளவர்கள்
மண்ணவர் வைகுந்தம புகுவது விதியே (என்று) வியந்தனர் - “லீலாவிபூதியி லிருந்தவர்கள் நித்ய விபூதியேற வருவது மஹா பாக்யமே!” என்று சொல்லி உகந்தார்கள்.

 பாசுரம் விளக்க உரை:

அங்குள்ள நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில். வாசலில் வானவர்-திருவாசல் காக்கும் முதலிகள் என்ன சொன்னார்களென்னில்; (வைகுந்தன் தமர் எமர்) வைகுந்தநாதனுக்கு அடியவர்களாக வருகின்ற இவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றார்கள். இன்னமும் என்ன சொன்னார்கள்? (எமதிடம்புகுதென்று) எங்களுடைய பதவியை நீங்கள் வஹித்து நிர்வஹிக்கவேணுமென்று சொல்லிக் கையிலே பிரம்பையும் கொடுப்பர்களாம். வியந்தனர்-ஆச்சாரியப்பட்டார்கள்; மண்ணவர் விண்ணவராயினரே என்று வியப்படைந்தனர். அப்படி வியந்தவர்கள் யாவரென்னில்; (வைகுந்தத்து அமரரும் முனிவரும்) “ஸ்ரீ பரதாழ்வானையும் இளையபெருமாளையும் போலே குணநிஷ்டரூம் கைங்காரிய நிஷ்டரும்” என்பது ஈடு, வைகுண்டே து பரே லோகே ச்ரியா ஸாரித்தம் ஜகத்பத்:, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்iதர் பாகவதைஸ் ஸஹ என்று பகவச் சாஸ்த்ரத்திலும் பக்தை பாகவதை: என்கிற இரண்டு சொற்களையிட்டுச் சொல்லிற்று. உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் என்கிறாள் ஆண்டாளும். குணாநுபவமே போதுபோக்கா யிருப்பவர்களும் கைங்காரியமே காலNகூஷபமாயிருப்பவர்களுமான இருவகுப்பினருமுளரே!

“வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்ற ஈற்றடியை “மன்னவர் வைகுந்தம் புகுவது விதியே” என்று அந்வயித்துக்கொள்வது பாங்கு. ஸம்ஸாரிகள் பரமபதத்தே வந்து சேரும்படியாக நாம் பாக்யம் பண்ணினோமே! என்று சொல்லி வியந்தனராயிற்று. தைவம் தீஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸத்ர் நியதிரி வீதி: என்ற அமரகோசத்தின்படி விதியென்னுஞ் சொல் பாக்யத்தைச் சொல்லக்கடவது. இதன் பரமதாற்பாரியம் யாதெனில்; திருமங்கையாழ்வார் ஏரார்துமுயல்விட்டுக் காக்கைப்பின் பேரவதே என்று சொல்லி லீலாவிபூதியில் அநுபவந்தான் உண்மையில் சிறக்குமாகையாலே அப்படிச் சிறந்ததான தேச விசேஷத்திலே சென்று நாங்கள்; அநுபவிக்கப் பார்த் திருக்கையில் நீங்கள் அங்கிருந்து இங்கே வந்தீர்களே! இது எங்களுடைய பரம பாக்கியமன்றோ வென்று கொண்டாடினார்களென்கை.

- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு:

வைணவ அடியார்கட்கு, அவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும். பரமபதத்திலிருந்து தன்னை வ்யூகப்படுத்தி விபவ, அர்ச்சாவதாரங்களில் தன்னைக் காட்டிக் கொடுத்து இவைகளே பரத்தினும் மேலானவை என்று எண்ணி ஆட்பட்ட அடியவர்களை, பூவுலகில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவுற்ற பின் அவனே வந்து அழைத்துச் செல்கிறான். மோட்சம் பெறுவதே குறிக்கோள் என்றென்னும் அடியார்கட்கு இந்த பரமபதமே எல்லை நிலமாகும்.

திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாக இருக்கும், இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

“திருவனந்தாழ்வானின் மேல் - தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய், காயாம்பூ இதழ்போல் கருத்தவனாய் தாமரை இதழ்போன்ற திருக்கண்களை உடையவனாய், கோடி மன்மதர்களை ஒத்த அழகு உடையவனாய். உலகை மயக்கும் திருமேனி உடையவனாய், கோடிச்சூர்யப் பிரகாசமுடையவனாய், கோமளமான அவயவங்களால் நிற்பவனாய், தோள்வளை, ஹாரம் முன்கைவளை, சதங்கை முதலான திருஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாய், அப்ராக்ருத சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியை உடையவனாய். பீதாம்பரத்தை தரித்தவனாய், நித்யயௌவன முடையவனாய், எப்போதும் ஸ்ரீபூமி, நீளா தேவிகளோடு கூடினவனாய் (ஈஸ்வரர்களுக்கெல்லாம் மேலான) பரமேஸ்வரனாய் நித்தியர்களாலும் முக்தர்களாலும் சேவிக்கப்படுபவனாய் (அனைவரினும்) பெரியவனாய் ஸர்வவ்வியாபியான பரமபத நாதன் பேரின்பத்துடன் எழுந்தருளியிருக்கிறான்”.

சிறப்பு:

இத்திருநாட்டை அடைய இரண்டு பாதைகள் உண்டு. 1.) எல்லாவற்றையும் துறந்துவிட்டு அவன் ஒருவனே பற்றுக்கோடு என்று எண்ணி, மாலையில் இம்மியும் சிக்காதிருந்து அவனுக்கே கைங்கர்யம் பூண்டிருத்தல் 2). வைணவ அடியார்கட்கு பேதமற்ற தொண்டு செய்தல்.

இங்கு செல்லும் ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் ஆகின்றன. அதாவது எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. இங்கு பகவானைப் போலவே ஸ்வரூபம் அவர்கட்கும் உண்டாகிறது. ஆயினும் பகவானோடு இரண்டறக் கலக்காமல் உடனிருந்து கைங்கர்யம் செய்து கொண்டு எப்போதும் பல்லாண்டிசைத்துக் கொண்டிருப்பர்.

நமக்கு இந்தப் பூவுலகில் இருக்கும்போதும் விசும்பைப் பற்றி (ஆகாயத்தப் பற்றி) ஒன்றும் புரியாத புதிராக இருக்கும் நித்ய சூரியாகி இங்கு சென்று விட்டால் படைப்புகளும், பிரபஞ்சங்களும் என்னவென்று தெளிவாகத் தெரிவதால் இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.

இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும் இன்பத்திற்கு “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பெயர் சூட்டியுள்ளார். அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை என்று தனக்கு வைகுந்தம் அளிப்பதாக பாடுகிறார். திருப்புளியாழ்வார் அடியிலே இருந்து கொண்டு மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தது போல் வைகுந்தம் சென்றதாகவும் பாடுகிறார்.

எம்பெருமானின் சகல ரூபங்களுக்கும் ஆதியானதாக, மூலமானதாக, உற்பத்தி ஸ்தானமாய் பரமாய் இருப்பதால் பரமபதம் என்று பெயர்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!

ஸ்ரீவைஷ்ணவனுக்கு உய்ய ஒரே வழி ~ எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து, திருவடிகளில் பிரபத்தி செய்வதே.  ஸ்ரீவைகுண்டத்து எம்பெருமானிடம் நம்மை சேர்விப்பவர் நம் ஆசார்யரே

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/LRsPtuGnpvM

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/143339834133119/?sfnsn=wiwspmo