பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 28
(சுஜாதா&வெங்கடேசன்
மறுபடியும் திரு நெல்வேலி திரும்பி மாலையில் மீண்டும் தாமிரபரணி ஸ்நானம் செய்தபின் நெல்லையப்பர் கோயில் போகிறோம்.
சுடச்சுட அல்வா...
இருட்டுக்கடை அல்வாவிற்கென்று தனிச்சுவை வரக் காரணம் அல்வா செய்ய பயன்படுத்தும் கோதுமையைஇயந்திரத்தில் அரைக்காமல் கைகளால் தான் அரைக்கிறார்கள் மற்றும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும், இந்த அல்வாவிற்கான தனி சுவையை தருவதாக சொல்லப்படுகிறது. கைகளால் தான் அல்வா கிண்டுகிறார்கள் என்பதால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு அல்வா மட்டுமே தயார் செய்கிறார்கள்
இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம், 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி, ‘இருட்டுக் கடை அல்வா’ என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று, ஒரு 200 வாட்ச் பல்பு எரிகிறது, அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை.
உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுடச்சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட , சற்று மிக்சர் இலவசமாக தருகிறார்கள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டியுள்ள பேப்பரை எடுத்து கையை துடைத்துக் கொண்டே செல்வதை காண முடிந்தது
சமீபத்தில் உரிமையாளர் ஹரிசிங்கின் துயர முடிவு துரதிர்ஷ்டமானது...
பெருமாள் கோயில் எங்கே என்று விஜாரித்து நரசிங்கர் கோயில் போகிறோம்.எலுமிச்சம் சாதம் பிரசாதம் கிடைக்கிறது. பின் நெல்லையப்பர் தரிசனத்திற்கு பின் இருட்டுக்கடை பக்கத்தில் கோமதி மெஸ்ஸில் நெல்லை தாளித்த கொழுக்கட்டை சாப்பிட்டோம்... தொட்டுக்கொள்ள கார சட்னி....
ரெசிப்பி
இரண்டு டம்ளர் இட்லி அரிசியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, மாவை அதில் சேர்த்து கொழுக்கட்டை பதத்துக்கு வதக்கவும். பிறகு வேறொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து, மாவில் கலக்கவும்.
அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசையுங்கள். மாவை விரும்பிய வடிவில் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வேகவைத்து எடுத்தால் சுவையான தாளித்த கொழுக்கட்டை ரெடி.!
இனி இரவு உணவு வேண்டாமென முடிவு செய்து டவுன் பஸ் ஏறி ஓட்டல் திரும்பறோம்.
காலையில் 6.00 மணிக்கெல்லாம் ஆட்டோ முருகனை வரச்சொல்லி போன் செய்ததால் காலையில் ஆஜர்..
பாண்டிநாட்டுத்திருப்பதியில் மீதி உள்ள எட்டு திருப்பதிகளையும் காலை ஏழு மணி முதல் மதியம் 1.00 மணிக்குள் சுற்றிக்காட்ட 1000/ரூ பேசியிருந்தோம்.
வழியில் டீ சாப்பிட்டு முதலில் ஸ்ரீவைகுண்டம் வாசலில் இறங்கிக் கொண்டோம்.
படம் அல்வா,கொழுக்கட்டை தொடரும்
No comments:
Post a Comment