Monday, September 21, 2020

நெல்லை சுற்றுலா 16

 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻16🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மறுநாள் குற்றாலத்தில் மீண்டும் நீராடியபின் அருகிலுள்ள கோயில்களை தரிசிக்க கிளம்புகிறோம்....

இலஞ்சி

இலஞ்சி என்ற சொல்லுக்கு ஏரி, குளம், மடு, பொய்கை, மதில், மகிழ மரம் என பல பொருள் உண்டு என இலஞ்சி தல புராணம் குறிப்பிடுகிறது.

“இலஞ்சி” என்ற சொல்லை பல கவிஞர்கள் தங்கள் கவிப்பாக்களில் பயன்படுத்தி உள்ளனர். “இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே” என அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தை குறிப்பிடுகிறார். அது போல மதுரைக் காஞ்சியில் “ஒளிறு இலஞ்சி” என்றும் மலைபடுகடாகத்தில் ” சுடர்ப்பூ இலஞ்சி” என்றும் சிறப்பிக்கப் பட்டுள்ளது.

இயற்கை வளங்கள் நிறைந்த இலஞ்சி என்னும் இந்த ஊரானது மா, பலா, வாழை, கமுகு, தென்னை போன்ற மரங்கள் மற்றும் நெல் வயல்கள் சூழ்ந்த சோலையாக திகழுகிறது.

இலஞ்சி குமாரர் கோவில் என்றே இத்தலம் அழைக்கப்பட்டாலும் இங்கு ஈசனே நடுநயமாக காட்சித் தருகிறார்.

இங்கு எழுந்தருளி உள்ள வரதராஜ குமரன் என்று சிறப்பிக்கப்படும் திருவிலஞ்சி குமரன் நான்கு கரங்கள் கொண்டு வேல் தாங்கியும், மயிலை வாகனமாக கொண்டபடியும், நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சியருள்கிறார்.

இயற்கை எழில் சூழ்ந்த வயல்கள் மற்றும் சோலைகளுக்கு நடுவே, சித்ரா நதியும், ஐந்தருவியாறும் சங்கமிக்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ள இத் திருக்கோவிலுக்குள் செல்ல கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இரண்டு வாயில்கள் உள்ளன.

மீண்டும் அழகு அருவிகள் குதித்தோடி வர பஸ் ஏறி செங்கோட்டை செல்கிறோம். 

 செங்கோட்டையில் சுந்தர்ராஜ பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. திவ்ய அழகுடன் தரிசனம்.  

செங்கோட்டையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருமலைக் குமார சாமி

திருக்கோவில். அழகான குன்றின் மீது நின்ற கோலக் குமரன் கோவில். சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலை தொட்டுத் தழுவும் இடம். மேகக் கூட்டங்கள் ஒட்டி உரசிச் செல்லும் அனுபவம் சிறப்பானது. 

அதில் இருந்து 3 கி.மீ. முன்னதாக உள்ள பண்பொழியில்

குமரனுக்கு அடிவாரக் கோயில் 

முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதம், இடது கையில் வச்சிராயுதம் தாங்கியும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரம், இடது கையில் சிம்ம கர்ண முத்திரையும் காட்டி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தேவார வைப்புத் தலமான இந்தக் கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 520 அடி உயரத்தில் உள்ளது. கோவிலுக்கு செல்ல சுமார் 600 படிக்கட்டுகள் ஏற வேண்டும். அந்த படிக்கட்டுகள் ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும். நல்ல வாரிசுகள் உருவாகும் என்பது ஐதீகம்.

படங்கள் இலஞ்சி,பண்பொழில் 

கீழே பண்பொழில் குறித்த நண்பரின் விரிவான பதிவு. 

          தொடர்வது கண்ணுப்புளிமெட்டு....




No comments:

Post a Comment