🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முக்தி நாத் நோக்கி ஒரு முரட்டுப்பயணம் பகுதி 5 * 🙏🏻🙏🏻🙏🏻
பயணத்தின் நடுவே ஏற்பட்ட தடைகளை நீக்கி பேருந்து விரைவில் ஜம்சம் அடைய முக்தி நாதனை வேண்டி சேற்றை தாண்டிய உணவு விடுதியில் சாதம் ரொட்டி கீரைகளை கொறித்து அக்காவுக்கு பழங்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் பேருந்தை அடைகிறோம். எங்கிருந்தோ ஒரு ஜேசிபி வந்து சேற்றில் மாட்டிய லாரியை இழுத்து கரை சேர்க்கிறது. மீண்டும் பயணம் தொடங்க உண்ட களைப்பில் தலை சாய்ந்து முக்தி நாத் பற்றி கூகுளில் படித்ததை அசை போடுகிறேன்.
நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ளது, சாளக்கிராமம். இது இமயமலைத் தொடரில் அன்னபூர்ணா தொடருக்கு அப்பால் தௌலத்கிரி சிகரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 12,300 அடி உயரம். வராக புராணத்தில் முக்தி க்ஷேத்ரம் என்றும் பத்ம, பாகவத, ஸ்கந்த புராணங்களில் சாளக்கிராம க்ஷேத்ரம்
என்றும் இந்தத் தலம் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. சாளக்கிராமம் என்பது ஸ்ரீமூர்த்திப் பெருமாளின் திவ்ய ஸ்தலம் என்பதோடு, இங்கே புரண்டோடும் கண்டகி நதியில் கிடைக்கும் தெய்வீகக் கல் என்றும் பொருளாகும்.
பலவித வடிவங்களில் கிடைக்கும் இந்தக் கற்களைப் பற்றிய தகவல்கள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் சில வெளிநாட்டவர்களால் எழுத்து மூலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எஸ். கிருஷ்ணமாச்சார்யார் தொகுத்த, ‘ஸாளக்கிராம சிலோத்பத்தி விமர்சனம்’ என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்: ‘‘கல்கத்தா ஏஷியாடிக் ஸொஸைட்டியில் அக்டோபர் 1830ல் ஒரு கூட்டத்தில் ஸுபாது டாக்டர் ஜிரார்டு என்பவர் தெரிவித்தது யாதெனில், தான் 15,000 அடி உயரத்தில் இமயமலைச் சாரலில் அதிக தாராளமாக கனிப்பொருளால் ஏற்படுத்தப்பட்ட கூடுகளைக் கண்டதாகச் சொல்கிறார்.
இது மாதிரி நான்கு விதங்களை கண்ட அவர், நான்காவதைப் பற்றி பின்வருமாறு உரைக்கிறார்: பெலெம் நைட், ஆர்த்தோ ஸெராடைட் முதலியவற்றால் உண்டாக்கப்பட்ட அம்மோநைட் வர்க்கத்தை சேர்ந்த கனிப் பொருட்களால் இவை ஏற்பட்டவை என்றும் மலைபிரவாகத்தில், முக்கியமாக கண்டகி நதி தீரத்தில் கண்டதாகவும் அவற்றை ஸாளக்கிராமம் என்றும் இந்துக்களின் பூஜைகளில் முக்கிய அம்சமாக இருக்கின்றன என்றும் சொல்லுகிறார்
.’’ பி.டி.பாசு என்ற எழுத்தாளர் தொகுத்த ‘தெ ஸேக்ரட் புக் ஆஃப் ஹிந்துஸ்’ என்ற புத்தகத்தில், இந்த சாளக்கிராமங்களைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இவற்றை மஹாவிஷ்ணுவாகக் கருதி இந்துக்கள் வழிபடுகிறார்கள் என்றும், அவை இப்பொழுதும் கண்டகி நதியின் படுகையில் கிடைக்கின்றன என்றும் தெரிவிக்கிறார்.
‘ஆன் த ஏன்ஷியன்ட் ஜியாகிர`பி’ என்ற ஏஷியாடிக் ரிஸர்ச் அமைப்பின் 14வது தொகுதியில் கீழ்க்காணுமாறு சொல்லப்பட்டிருக்கிறது: கண்டகி அல்லது கண்டகாவதி என்பது கண்டக் என்று அங்கு பேசும் பாஷையில் சொல்லப்படுகிறது. அதைப் பற்றி மெகாஸ்தனீஸின் ‘கண்டோ கேட்ஸி’ல் விளக்கப்படுகிறது. இந்தக் கல்லின் பெயர் ஸைலக்ராம், ஸாளக்ராம், ஸைல சக்ர கண்டகி சிலா என்று பலவிதமாகச் சொல்லப்படுகிறது. ஸாளக்கிராமம் கிடைப்பதற்காக ஜனங்கள் பனி நிறைந்த மலைகளின் வாயிலான தக்ஷிண கோட் என்கிற ஸ்தலம்வரை செல்லுகிறார்கள்.
இதற்குத் தெற்கிலுள்ள ஒரு கிராமத்தில் தங்கி யிருந்து மளிகை சாமான்களை வாங்குகிறார்கள். இந்த கிராமத்திற்கு ஸைலாப்பூர் அல்லது ஸாளக்கிராமம் என்ற பெயர், அதன் பக்கத்திலுள்ள ஸைலா அல்லது மலைக்குன்றிலிருந்து வந்திருக்கலாம். இதனால் இந்தக் கல்லுக்கும் அங்குள்ள நதிக்கும் ஸாளகிராமம் என்கிற பெயர் உண்டாயிற்று. *இந்த நதி டாக்கா என்று ஆரோ ஸ்மித்தின் தேசப்படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கண்டகி என்ற பெயர் அதே பெயருள்ள மலையிலிருந்து ஏற்பட்டிருக்கிறது. நேபாள தேச ஜனங்கள் அதை கண்ட ஸ்தானம் என்றும் இரண்டு மலைக் குன்றுகளின் பள்ளத்தாக்கிலிருந்து புறப்படுவதால் இதை கண்டகி என்றும் வழங்குகிறார்கள்.
அந்த மலைகளை விஷ்ணுவின் கோயில் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். பிளாவட்ஸ்கி என்ற ரஷ்யர் தன்னுடைய ‘கேவ்ஸ் அண்ட் ஜங்கிள்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ‘‘நேபாள தேசத்திலிருந்து புறப்படுகிறதான கண்டகி, கங்கையின் ஒரு உபநதி. அந்த நதியின் அடிப்பாகத்தில்தான் உண்மையானதும் விலை உயர்ந்ததுமான *ஸாளக்கிராம சிலைகள் அகப்படுகின்றன. இந்த இடம் நேபாள தேசத்து சிப்பாய்களால் அரசரின் ஆஞ்ஞைப்படி மற்றவர்கள் எடுத்துக்கொள்ளாதபடி வருடம் முழுவதும் பாதுகாக்கப்படுகிறது.
அவ்விடம் கிடைக்கும் ஒவ்வொரு சிலையையும் அவர்கள் அரசரின் கஜானாவுக்கு அனுப்பி விடுகிறார்கள். அவற்றை மகாராஜாவிடமிருந்து விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், சிற்சில சமயங்களில் அவ்வரசனே சில அடிகள் தூரத்திலிருந்து அந்தக் கல்லை எறிய, அது யாருடைய கையில் அட்டைபோல் ஒட்டிக்கொள்ளுகிறதோ அந்த ஸாளக்கிராமத்தை அவனுக்கு தானம் செய்துவிடுவார். ஆனால், இந்த பரிசோதனை ஒரு காலும் சித்திக்கிறதில்லை.
வழவழப்பான ஸாளக்கிராமங்களாயிருந்தும் முக்கிய அடையாளங்கள் இல்லாவிடில் அவற்றிற்கு மதிப்பு இல்லை, அவற்றில் சில வகை துவாரங்கள் உள்ளவையாக இருக்கும். மற்றவற்றில் சுதர்சனம் (சக்கரம்) போல் அடையாளங்கள் இருக்கும். துவாரங்கள் இல்லாமலும் சில ஸாளக்கிராமங்கள் இருக்கின்றன. துவாரமுள்ளதை இரண்டு பாகங்களாக ஜாக்கிரதையுடன் பிரித்துப் பார்த்தால் வழவழப்பான அந்த துவாரங்களின் உட்புறத்தில் மீன், ஆமை அல்லது மற்ற விஷ்ணு அவதார சின்னங்கள் தென்படும்.
மேலும், அப்பேற்பட்ட ஸாளக்கிராமத்தை பால் நிறைந்த ஒரு பாத்திரத்தில் போட்டால் அது அடிபாகத்திற்குச் செல்லாமல் மீன் போலும் ஆமை போலும் மிதக்கும், நீந்தும்! அப்படியிருந்தால் சந்தேகமில்லாத நல்ல ஸாளக்கிராமம் என்று அறியலாம். அப்படியானதால் பகவானான விஷ்ணுவே அவ்விடம் இருப்பதாகக் கருதி உரிய மரியாதைகள் செய்வார்கள்.’’ஏஷியாடிக் ரிஸர்ச் அமைப்பு குறிப்பிட்ட இரு குன்றுகளை, இப்பகுதி மக்கள் *மஹாலக்ஷ்மியாகவும், ஸ்ரீமன் நாராயணனாகவும் பாவிக்கிறார்கள். இந்த இரு குன்றுகளின் இடையிலிருந்து கண்டகி நதி உற்பத்தி ஆகிறது என்கிறார்கள்.
இந்த இரு குன்றுகளும் தாது வர்க்கங்களுடன் கூடியதாக, கடினமாக விளங்குகின்றன. அவற்றின் கற்கள் மிகவும் துல்லியமானதாகவும், பளபளப்புடனும் இருக்கும். இப்பகுதியில் எப்போதும் பனி மூடியிருப்பதால், அந்தக் கற்களின் இயற்கை வடிவை நம்மால் காண இயலவில்லை. அதே சமயம், இங்குள்ள கறுப்பு நிறக் கற்கள் கூழாங்கல் போன்றவை. இவையே கண்டகி நதி பிரவாகத்தில் வெளிவருகின்றன. இந்த சாளக்கிராம கற்களில் விதவிதமான ரேகைகள், இயற்கையின் ஓவியங்களாகக் காணப்படுகின்றன.
‘வஜ்ரகீடம்’ எனும் ஒரு பூச்சி சிறிய சாளக்கிராம சிலாக்களில் துவாரம் செய்து அங்கு வசிக்குமாம். ஆனால், இதனை யாரும் பார்த்ததில்லை. எப்போதும் பனி மூடியிருப்பதால், தானே இயல்பாக ரேகைகள் உருவாகியிருக்க முடியுமா என்ற சந்தேகத்தால், ஏதேனும் வெளிப் பொருள் தான் இப்படி ரேகையை உண்டாக்கியிருக்க முடியும் என்பதால், ஒரு ஐதீகமாக வஜ்ரகீடம் என்கிற ஜந்து தான் வாழ்வதற்காகக் குடைந்திருக்கும் அடையாளம்தான் இது என்று ஊகிக்கலாம். இந்த வஜ்ரகீடப் பூச்சிகள் சாளக்கிராம மூர்த்தி களுக்குள் சில துவாரக் கோடுகளை உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உண்டாக்குகின்றன.
அவையே சக்கரக் கோடுகளாகத் தோன்றுகின்றன. இப்படி துவாரம் ஏதுமில்லாத சாளக்கிராம மூர்த்திகளை ஹிரண்ய கர்ப்ப மூர்த்திகள் என்கிறார்கள். சாளக்கிராம க்ஷேத்ரம், கண்டகி நதியில் எண்ணிலடங்காத சாளக்கிராம சிலாக்கள் கிடைக்கின்றன. முக்கியமாக கண்டகி நதி படுகை யில் சக்கர தீர்த்தம் எனும் புனிதமான இடத்தில் நிறைய கிடைக்கின்றன. சிறிய மிளகு அளவிலிருந்து மிகப் பெரிய வடிவில் அதி அற்புத மான மூர்த்திகளாகக் கிடைக்கின்றன. இவற்றை விஷ்ணு மூர்த்திகள் என்கின்றனர். சில சாளக்கிராம மூர்த்திகளில் *ஸ்வர்ண ரேகைகள் (தங்க ரேக்குகள்) இருக்குமாம். இவற்றை ‘ஹிரண்யவதி’ என்கிறார்கள்.
பாக்கியமுள்ள பக்தர்கள் சிலருக்கு, பெருமாள் அருளால் இந்த ஹிரண்யவதிகள் கிடைக்கக்கூடும். சில சாளக்கிராம மூர்த்திகள் அபூர்வமாக வெள்ளை, நீலம், சிவப்பு நிறங்களிலும் கிடைக்கின்றன. இவை விலை மதிக்க முடியாதவை. கிடைப்பதும் மிகவும் அரிது. சாந்நித்தியம் நிறைந்த சாளக்கிராம மூர்த்தி களை பொதுவாக பிரதிஷ்டை செய்வதோ, விசேஷ பூஜை செய்வதோ இல்லை என்கிறார்கள். இவற்றை வைத்துக்கொள்வதற்கு எந்த கடினமான நியதிகளும் இல்லையாம்.
இவற்றை வைத்திருப்பவர்கள் பல நாட்கள் வீட்டைவிட்டு வெளியே போகவேண்டிய சந்தர்ப்பம் வந்தால், அவற்றை அரிசிப் பானையில் போட்டு வைக்கலாம். ஏற்கென வே சாளக்கிராம மூர்த்திகளை ஆராதித்து வரும் பெரியோர்களின் ஆசிபெற்று அவற்றை நாமும் ஆராதிக்கலாம் என்கின்றனர். 12 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் சாளக்கிராமம் வைத்து ஆராதிக்கும் இடம் அல்லது இல்லம், திவ்ய தேசமாகவே கருதப்படுகிறது. இத்தகைய இல்லங்களில் எம்பெருமான் நித்யவாசம் புரிகிறார் என்கிறார்கள்.
இவ்வளவு பெருமை வாய்ந்த அபூர்வ இறைவனையும் இடத்தையும் நதியையும் தரிசித்து சாளக்ராமம் வாங்கி வர துன்பத்தை தந்தாலும் வழி நெடுக இயற்கையின் அற்புத்த்தை காணப்போகும் ஆவலில் பேருந்தில் பயணிக்கிறோம்
படங்கள்.வெவ்வேறு வகையான சாளக்ராம கற்கள்
No comments:
Post a Comment