Tuesday, September 22, 2020

திருக்கோட்டியூர்

 🙏 நமஸ்காரம்    

93. திருக்கோட்டியூர்

மூலவர் - உரக மெல்லணையான்

தாயார் - திருமாமகள் நாச்சியார்

உற்சவர் - சௌமிய நாராயணன்

விமானம் - அட்டாங்க விமானம்

தீர்த்தம் - தேவ புட்கரணி

நாமாவளி - ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ சௌம்யநாராயணாய நமஹ:

வழித்தடம்:

மதுரையிலிருந்துதிருப்பத்தூரை அடைந்து அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் இத்திருக்கோவிலைஅடையலாம். திருப்பத்தூர் - சிவகங்கை சாலையின் வழியாகச் செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியாகவே செல்கின்றன. காரைக்குடியிலிருந்து ஏராளமான பேருந்துகள் திருக்கோஷ்டியூர் செல்கின்றன.

பாசுரம்:

கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம்பாடு சீர்

செம்பொனார் மதில்சூழ், செழுங்கனி யுடைத் திருகோட்டியூர்

நம்பனை நரசிங்களை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால்

எம்பிரான்றன் சின்னங்கள் இவரிவர் ரென்றாசைகள் தீர்வனே

- பெரியாழ்வார்  (368)

இத்திருத்தலத்தை பூதத்தாழ்வார் - 2, பேயாழ்வார் - 1, திருமழிசை ஆழ்வார் - 1, பெரியாழ்வார் - 22, திருமங்கையாழ்வார் - 13 என மொத்தம் 39 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாசுரம் பதவுரை:

கொம்பின் ஆர் - கிளைகளாலே நெருங்கின

பொழில் வாய் - சோலைகளிலே

குயில் இனம் - குயிர்களின் திரள்

கோவிந்தன் - கண்ணபிரானுடைய,

குணம் - சீர்மைகளை

படு - பாடாநிற்கப்பெற்றதும்,

சீர் - சிறந்த

செம் பொன் ஆர் - செம்பொன்னாலே சமைந்த

மதிள் - மதிள்களாலே

சூழ் - சூழப்பட்டதும்

செழு - செழுமைதங்கிய

கழனி உடை - கழனிகளையுடையதுமான

திருக்கோட்டியூர் - திருக்கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்).

நம்பனை - (ரக்ஷகன் என்று) விச்வஸிக்கக் கூடியவனும்

நரசிங்கனை - நரஹிம்ஹரூபியுமான ஸர்வேச்வரனை

நலின்று - அநுஸந்தி

ஏத்துவரர்களை - துதிக்கும் பாகவதர்களை

கண்டக்கால் - (யான்) ஸேவிக்கப் பெறுவேனாகில்

இவர் இவர் - “இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்

எம்பிரான் தன - எம்பெருமானுடைய

சின்னங்கள் - அடையாளமாயிருப்பவர்கள்”

என்று - என்று அநுஸந்தித்து

ஆசைகள் - நெடுநாளாய்பிறந்துள்ள ஆசைகளை

தீர்வன் - தலைக்கட்டிக்கொள்வேன்.

பாசுரம் விளக்க உரை:

திருக்கோட்டியூர் எம்பெருமானடியார்களை ஸேவிக்கும்போதே ‘அவ்வெம்பெருமான் ஸாத்விகர்களினால் ஸேவிக்கப்படுமவன்’ என்கிற லக்ஷணம் வெளியாமாதலால் ‘இவர்கள் எம்பெருமானது சிறப்பைத் தெரிவிக்கவல்ல சின்னங்கள்’ என்று அநுஸந்தித்து, யான் நெடுநாளாய்க் கொண்டுள்ள பலவகை ஆசைகளையுந் தீர்வேனென்கிறார். பாகவதர்களின் ஸேவை, பகவத் ஸேவையினும் அரிது என்பார் கண்ணடக்கால் என்கிறார். “மெய்யடியார்கள் தம், ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணுங் கண் பயனாவதே” என்ற குலசேகராழ்வார் பாசுரமுங்காண்க. எம்பிரான் தன = தன -தன் அ - ; அ- ஆறனுருபு. சின்னம் -*. இவர் இவர் என்ற இரட்டிப்புக்குக் கருத்து - ஒவ்வொரு பாகவதையும் தனித்தனியே அநுஸந்திக்கை. காணவேணுமென்றும், கிட்ட வெணுமென்றும்-, கூடவே இருக்கவேணுமென்றும் இப்படி ஆசைகள் பலவாதல்பற்றி ஆசைகள் எனப் பன்மையாக் கூறினர். இவ்வகை ஆசைகளெல்லாம், காண்கையொன்றினாலேயே தீருமென்றது- பாகவத ஸேவாமாத் ரத்துக்குள்ள அருமையையுஞ் சிறப்பபையுங் கூறியவாறு.

- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு:

பிரம்மனைக் குறித்து தவமிருந்த இரண்யன், தனக்கு தேவர்களாலும், மனிதர்களாலும், விலங்குகளாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்று, தேவர்களையுந் துன்புறுத்தி, உலகெங்கும் நமோ ஹிரண்யாய நமஹ என்றே சொல்லுமாறு செய்து வந்தான். இரண்யனின் இம்சை பொறுக்காத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவன் வரங்கொடுத்த பிரம்மாதான் இதற்கு உபாயம் சொல்ல முடியுமென்று சொல்ல பிரம்மரோ ஸ்ரீமந் நாராயணன் ஒருவனால் தான் இரண்யாட்சகனுக்கு சரியான முடிவு கட்ட முடியும் என்று கூற எல்லோரும் திருமால் பள்ளிகொண்டுள்ள பாற்கடலுக்கு விரைந்து பணிந்து நின்று விபரங்கூறினர். இவர்களின் குறையைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களிலும் இரண்யனின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது. இரண்ய நாமம் ஒலிக்காத இடம் எங்காவது இருந்தால் கூறுங்கள் அங்கு சென்று நாமெல்லாரும் ரஹஸ்யமாய் இரண்யவதம் செய்வது பற்றிப் பேசலாம் என்று சொன்னதும், பூவுலகில் ஸ்ரீமந் நாராயணனை சீராப்தி நாதனாகக் காண வேண்டுமென்று “கதம்பரிஷி” கடுந்தவம் புரிகிறார். எந்நேரமும் நாராயண மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த ஒரு ஆஸ்ரமம் தான் இரண்யாதிக்கம் செல்லாத இடம். இப்போது நாம் கூடிப் பேசுவதற்கு அதுவே உகந்த இடம் என்று பிரம்மதேவன் கூற தேவர்களும் மும்மூர்த்திகளும் கதம்பரிஷியின் ஆஸ்ரமத்திற்கு எழுந்தருளி, அம்முனிவரின் தவப்பயனாக சீராப்திநாதனாக எம்பெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து, இரண்ய சம்ஹாரத்தைப் பற்றி பேசி முடித்தனர். பேசி முடித்தபின், மற்றெல்லோரையும் கதம்பரிஷியின் ஆஸ்மரத்திலேயே மறைந்திருக்கச் செய்து தான் மட்டும் திருப்பாற்கடலுக்கு எழுந்தருளினார் ஸ்ரீமந்நாராயணன். மூம்மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம் கூட்டமாய் இவ்விடத்திற்கு (கோஷ்டி கோஷ்டியாய்) வந்தமையால் திருக்கோஷ்டியூர் ஆயிற்று.(திருக்கு + ஓட்டியூர்) திருக்கு என்றால் பாவம். எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்றும் பொருள்படும்.

பாற்கடலுக்கு எழுந்தருளின பரந்தாமன், தனது அருகாமையில் இருந்த சங்கு கர்ணனைப் பார்த்து நீ சென்று இரண்யன் மனைவி வசந்தமாலையின் வயிற்றில் பிரஹலாதனாகப் பிறக்க கடவாய் எனக் கூற, அவ்விதமே பிரஹலாதன் பிறந்து நாராயண மந்திரத்தைச் சொல்ல, எங்கேயடா உன் நாராயணன் என்று இரண்யன் கேட்க, தூணிலிருப்பான், துரும்பில் இருப்பான் என, பிரஹலாதன் சொல்ல, இத்தூணில் உள்ளானோ என்று “பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப, பிறையெயிற் றண்ணல் விழி பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய” தேவாய்த் தோன்றி இரண்யனைக் கொன்று நரசிம்மவதாரம் முடிவுற்றது.

இதையெல்லாம் அறிந்த கதம்பரிஷி ஸ்ரீமந் நாராயணன் இரண்யனைப் பிடித்தது கொன்றது போன்றவற்றைக் குறிக்கும் மங்கள விக்ரகங்களைத் தனக்குத் தரவேண்டுமென்று  பிரம்மனை வேண்ட, பிரம்மன், தேவசிற்பியான விஸ்வகர்மாவையும், அசுர சிற்பியான மயனையும் அழைத்து தேவலோகத்தில் உள்ளது போன்ற விமானத்தை இவ்விடத்தில் எழுப்புங்கள் என்று சொல்ல, மூன்றடுக்குகள் கொண்டதான அஷ்டாங்க விமானத்துடன் அழகிய கோவிலை நிர்மாணித்து முடித்தனர். மூன்று தளங்களுடன் கூடிய இந்த விமானம் மூன்று பதங்களுடன் கூடின மூலமந்திரம் போன்ற தாயும் (ஓம் என ஒருபதம், நமோ என ஒருபதம், நாராயண என ஒரு பதம்) விளங்குகிறது.

இரண்யவதம் முடியும் வரை இங்கு தங்கியிருந்த தேவேந்திரனான இந்திரன் இந்திர லோகத்தில் தன்னால் பூஜிக்கப்பட்ட பேரழகு வாய்ந்த ஸ்ரீபூமி நீளா தேவிகளுடன் கூடின ஸ்ரீ சௌமிய நாராயணனை,  கதம்ப மஹரிஷிக்கு கொடுக்க மிக்க சந்தோஷத்துடன் பெற்று அர்ச்சித்து வரலானார். கதம்பரிஷியை வாழ்த்தி வணங்கிவிட்டு அனைவரும் தேவருலகெய்தினர்.

சிறப்பு:

மற்ற ஸ்தலங்களில் உள்ளதைப்போன்று பஞ்ச லோகங்களால் அமையாது, தூய வெள்ளியில் உற்சவருக்கு விக்ரகமிருப்பது இன்னொரு சிறப்பாகும் (இச்சிலை இந்திரன் கொடுத்ததாக ஐதீகம்) வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

வைணவ மத வளர்ச்சியில் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு ஏற்றமுண்டோ அதற்குச் சமமான ஏற்றம் இந்த திருக்கோட்டியூருக்கு உண்டு. “திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம்” என்ற திருப்பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து 17 முறை இங்கு வந்து திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஞானம் பெறமுயல, 17 முறையும் பல காரணங்களைக் கூறி திருப்பியனுப்பி இறுதியாக 18வது முறை வந்தபோது இராமானுஜருக்குத் “திருமந்திர உபதேசம்” செய்வித்து இதனை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது. அவ்வாறு குருவின் கட்டளையை மீறித் தெரிவித்தால் உமக்கு நரகம்தான் கிடைக்குமென்றார். சரி, என்று ஒப்புக்கொண்ட இராமானுஜர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி “எல்லீரும் வாருங்கள், திருமந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உரக்கக் கூவி திருமந்திரத்தை

எப்படி உச்சரிப்பதென்பதை எல்லோருக்கும் தெரிவித்தார். இதனைச் செவியுற்ற திருக்கோட்டியூர் நம்பி விரைந்து வந்து இராமானுஜரை நோக்கி “இராமானுஜரே திருமந்திரத்தைப் பிறருக்கு உரைத்தால் உமக்கு என்ன தண்டனை கிடைக்குமென்பதை மறந்து விட்டீரா” என்றார். அதற்கு இராமானுஜர் “தெரியும் சுவாமீ, இம்மந்திரத்தைப் பிறருக்குச் சொன்னால் எனக்கு நரகம் கிட்டுமென்றீர் பரவாயில்லை, அடியேன் ஒருவன் நரகம் புகுந்தாலும் பரவாயில்லை. இம்மந்திரம் தெரிந்து உச்சரிக்கும் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் மோட்சம் கிட்டுமே என்றார். இதனைக் கேட்டு, ஒரு கணம் சிந்தித்த நம்பிகள் இராமானுஜரை பகவானின் அவதாரம் என்றே கருதி “நீர் தான் எம்பெருமானாரோ”என்று கூறி கட்டித் தழுவிக் கொண்டார். அது முதல் இராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்னும் திருநாமம் உண்டாயிற்று. இராமானுஜருக்கு, உடையவர், ஸ்ரீபாஷ்யகாரர், திருப்பாவை ஜீயர் என்னும் திருநாமங்களும் உண்டு. எனவே வைஷ்ணவ சம்பிரதாய ஏற்றத்திற்கும் ஒரு மறுமலர்ச்சிக்கும் பாசறையாக திருக்கோட்டியூர் திகழ்ந்ததென்பதில் ஐயமில்லை.

அஷ்டாங்க விமானத்தின் மூன்றாவது தளத்திலிருந்து கொண்டுதான் இராமானுஜர் திருமந்திர ரகசிய அர்த்தத்தை வெளியிட்டார். இந்த 3வது மாடியில் கோபுரத்தின் உச்சியில் ஊரைப் பார்த்தவண்ணம் இராமானுஜருக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது.

கதம்ப முனி 64 சதுர்யுகங்கள் இப்பூவுலகில் இருந்ததாக பிர்ம்மாண்ட புராணங்கூறுகிறது. எனவே இந்த திவ்யதேசத்தின் தொன்மை எழுத்தில் அடங்கும் தன்மையதன்று.

மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் இங்கும் திருக்கூடல் என்னும் மதுரையிலும் ஆகம விதிகட்குட்பட்ட அஷ்டாங்க விமானம் அமைந்துள்ளது. முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற” திருப்பாற்கடல் நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி. பாற்கடலில் இருந்து எழுந்து வந்த காரணத்தால் ஷீராப்தி நாதனாக முதல் தளத்திலும், அதன்பிறகு 2வது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் 3வது தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாள் எழுந்தருளியுள்ளார். தேவர்களின் நடுவில் நின்றமையால் ஸ்தித நாராயணன் எனவும், ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டதால் உரக மெல்லணையான் என்றும் திருப்பெயர்கள் உண்டாயிற்று.

அஷ்டாங்க விமானத்தின் வடபகுதியை மயனும், தென்பகுதியை விஸ்வகர்மாவாகவும் அமைத்தனர். விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட பாகத்தில் இரண்யனைப் பிடித்துக் கொண்ட நரசிம்ம உருவமும், மயனால் செய்யப்பட்ட பகுதியில் இரண்யனைக் கொன்ற நரசிம்ம உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நரசிம்ம மூர்த்திகள் காண்போரை பிரம்மிக்கச் செய்யும் தோற்றமுள்ளவை.

அஷ்டாங்க விமானத்தில் தென்திசை நோக்கிய நரசிம்மனுக்கு தெற்காழ்வான் (தட்சினேஸ்வரன்) என்றும், வடதிசை நோக்கிய நரசிம்மனுக்கு வடக்காழ்வான் (உத்தரேசுவன்) என்பதும் திருநாமம்.

திருக்கோட்டியூர் நம்பியின் அவதாரஸ்தலமான இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருக்கோட்டியூர் நம்பியின் வம்சா வழியினர் இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.

மற்றவிடத்து இல்லாதவாறு, இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்ற மூன்று திருநாமங்களுண்டு.

இங்குள்ள திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதியில் அவரின் திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன், சீதை, இலட்சுமணன், அனுமான், பவிஷ்யதாச்சாரியர் விக்ரகமும் எழுந்தருளியுள்ளன.

பத்ரிகாச்ரமத்தைப் போல இத்தலம் பெருமைவாய்ந்ததெனவும், அதனால் இதனை தென்பத்ரியென்றும் கூறுவர் “நைமிசாரண்யத்தில் செய்ததவப்பயனும், கங்கை கரையில் நேர்ந்த மரண பலமும் (ஆயுள் விருத்தி) குருச்சேத்திரத்தில் செய்த தனப்பிரயோஜனமும்” ஆகிய இம்மூன்றும் திருக்கோட்டியூரைச் சேவிப்பதால் கிடைக்குமென்று ப்ரம்மாண்ட புராணத்தில் 47வது ஸ்லோகம் கூறுகிறது. கோஷ்டியூர் போகாதவன் குரங்காய்ப் போவான் என்பதும் வைணவப் பழமொழி.

பராசர பட்டர் என்பவர் கூரத்தாழ்வாருடைய திருக்குமாரர். வீரசுதந்திர சிம்மராயன் என்னும், சிற்றரசன் திருவரங்கன் கோயிலை ஜீர்னோத்தரணம் செய்கையில் “திருவீதி பிள்ளை பட்டர் என்பாரின் திருமாளிகை மதிற்புரத்து மூலையில் இருந்தது. அதை இடித்து அப்புறப்படுத்த சிற்றரசன் முனைந்த போது மனம் வெதும்பிய பராசர பட்டர் சிற்றரசனை பகைத்துக்கொண்டு திருவரங்கத்தினின்றும் வெளியேறி 1 1/2 ஆண்டுகள் திருக்கோட்டியூரில் தங்கி இருந்தார். இவர் கோஷ்டிஸ்தவம் என்னும் நூல் எழுதியுள்ளார்.

செல்வ நம்பிகள் பெரியாழ்வாரைத் திருக்கோட்டியூருக்கு அழைத்து வந்த பொழுது ஸ்ரீஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. பக்திப் பரவசத்துடன் மிகவும் நேர்த்தியான ஆடல்பாடலால் உற்சவம் நடந்ததைக் கண்டு இதுதான் ஆயர்பாடி என்றும், வண்ண மாடங்கள் சூழ்.... திருக்கோட்டியூர் என்று மங்களாசாசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தாலாட்டு, நீராட்டல், பூச்சூடல் போன்றனவும் இவருக்கே பாடினதாயும் கொள்வர்.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/pX2DSEL4abo

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.


https://www.facebook.com/102047988262304/posts/138211701312599/?sfnsn=wiwspmo&extid=xd4dhQbZV7GcVkjt

No comments:

Post a Comment