Saturday, September 26, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 5 - திருஅன்பில்

🌺🌺 108 திவ்யதேசங்கள் - பதிவு 5 🌺🌺

அருள்மிகு வடிவழகிய நம்பி திருக்கோவில் - திருஅன்பில் :-

மூலவர்: வடிவழகிய நம்பி

தாயார்: அழகியவல்லி நாச்சியார்

உற்சவர்: சுந்தரராஜன்

ஆகமம்: பாஞ்சராத்ரம்

கோலம்: சயனத் திருக்கோலம்

விமானம்: தாரக விமானம்

தலவிருட்சம்: தாழம்பூ

தீர்த்தம்: மண்டூக புட்கரணி

மங்களாசாசனம்: திருமழிசை ஆழ்வார் 1 பாசுரம்

நாமாவளி: ஸ்ரீ அழகியவல்லீ ஸமேத திருவடிவழகிய நம்பி ஸ்வாமிநே நமஹ

ஊர்: அன்பில்.

🌺🌺 தலவரலாறு:-

சுதபா எனும் முனிவர் ஒருவர் தன் தவ வலிமையால் நீரிலும், நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக விளங்கினார். ஒருநாள் அவரைக் காண துர்வாச முனிவர் வந்தார்.

பகவான் மீது கொண்டிருந்த பக்தியால் தண்ணீருக்கடியில் தவம் செய்து கொண்டிருந்த சுதபா தவத்தில் துர்வாசர் வந்ததைக் கவனிக்கவில்லை.

காலம் தாழ்த்த வைத்ததால் சினம் கொண்ட துர்வாசர், அவரை தண்ணீரில் வாழும் மண்டுகராக (தவளையாக) மாறும்படி சபித்து விட்டார்.

இதனால், சுதபா முனிவருக்கு மண்டுகர் என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரின் சாபத்திற்கு ஆளான மண்டுகர் சாபவிமோசனம் பெற இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் சுவாமியை மனமுருகி வழிபட்டார். இதனால், இங்கு உள்ள தீர்த்தத்திற்கு மண்டூக தீர்த்தம் என்று பெயர் வந்தது.

அவரது தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் சாபவிமோசனம் அளித்து "சுந்தர்ராஜப் பெருமாளாகக்" காட்சி தந்து அருளினார்.

🌺🌺 அன்பில் பெயர்க் காரணம் :-

ஒருசமயம் பிரம்மாவிற்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகாக இருப்பதற்கு நாம் தான் காரணம். அந்த அழகிய உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் தாம்தான் அழகானவர் என்ற ஆணவம் உண்டானது.

பிரம்மாவின் ஆணவத்தை அறிந்த விஷ்ணு ஆணவத்தை விடும்படி சொல்லிப் பார்த்தார். அதற்கு பிரம்மா செவி சாய்க்கவில்லை. எனவே, பூலோகத்தில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார்.

பூலோகம் வந்த பிரம்மா ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று சுவாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்த அவர் சுவாமியை எண்ணி தவம் இருந்தார். அப்போது பேரழகு வாய்ந்த மனிதராக விஷ்ணு அவர் முன்பு வந்தார். அவரைக் கண்ட பிரம்மா "இவ்வளவு அழகான எவரையும் நான் பார்த்ததில்லையே. நீ யங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?". எனக் கேட்டார்.

அவரிடம் அன்பாகப் பேசிய விஷ்ணு "அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்டு குணங்களையும் கொண்டிருப்பவர்கள் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை" என்று உபதேசம் செய்து பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்தார் மஹாவிஷ்ணு.

பிரம்மாவின் ஆணவம் அழிந்தது . பிரம்மா கேட்டுக்கொண்டதற்கிணங்க இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்திலேயே எழுந்தருளினார்.

பிரம்மாவின் மீது அன்பு கொண்டு மஹாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் "அன்பில்" என்ற பெயரும் பெற்றது.

🌺🌺 கருவறை :-

சுவாமி கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார். உத்தமர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற சிவன், இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளைத் தரிசித்து விட்டுச் சென்றார்.

🌺🌺 ஒரே சமயத்தில் இரண்டு கோலங்கள் :-

ஆண்டாள் தனிச்சன்னிதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். மூலவர் நின்ற கோலத்தில் இருக்க, உற்சவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். ஒரே சமயத்தில் இரண்டு கோலங்களையும் தரிசனம் செய்வது அபூர்வம்.

🌺🌺 தலச்சிறப்புகள் :-

பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப் போல, இங்கும் சுவாமி தாரகவிமானத்தின் கீழ் இருக்கிறார். இவ்விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் இருப்பது சிறப்பு.

இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. இறைவன் அழகிய நம்பியாகக் காட்சி தந்தருளும் திருத்தலம்.

திருமகள் தாயார் "அழகிய வல்லி" என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

🌺🌺 மங்களாசாசனம் :-

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத்
தணையரங்கம் பேர் அன்பில் - நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு
மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான்.

- திருமழிசையாழ்வார்.

🌺🌺 வழித்தடம் :-

திருச்சியிலிருந்து 26 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.லால்குடி இரயில் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

அருள்மிகு வடிவழகிய நம்பி திருவடிகளே சரணம்.

அருள்மிகு அழகியவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

நாளைய பதிவில் அருள்மிகு "அப்பக்குடத்தான் திருக்கோவில் - கோவிலடி" இத்திருக்கோவிலைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:". 

No comments:

Post a Comment