நெல்லை சுற்றுலா பகுதி 9
மன்னார் கோயில்
ஆட்டோ நெல்லை சீமையின் அழகு மலைகள்,வயல்கள்,வழியே சென்று ஒரு குக்கிராமத்தில் கம்பீரமான ஒரு கோயிலின் முன்னே சென்று நிற்கிறது.
நதிகள் சூழ்ந்த கோவில்
தமிழகத்திலுள்ள பழமையான வைணவ கோயில்களில் மன்னார் கோயிலும் ஒன்று. ஆதியில் இந்தத் தலத்தை வேதபுரி என்றும் இடைக் காலத்தில் ராஜேந்திர விண்ணகரம் என்றும் அழைத்தார்கள். தற்போது மன்னார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. திருவரங்கத்தை காவிரி சூழ்ந்திருப்பதைப் போல வேதபுரியின் தென்புரத்தில் ஜீவநதியாம் தாமிரபரணியும் வடபுறத்தில் கடனா நதியும் சூழ அழகிய தலமாக மாறியிருக்கிறது. கருவறையில் வேதநாராயணப் பெருமாள் சேவை சாதிக்கிறார்.
நோய்கள் தீர்க்கும் பெருமாள்
இந்தக் கோயிலை இரட்டை மாடி கோயில் என்றும் கூறுவர். இந்தக் கோயிலில் யானை முடுக்கு, பூனை முடுக்கு என்று இரண்டு பகுதிகள் உள்ளன. இதன் வழியாக பக்தர்கள் நுழைந்து சென்றால் பல வித நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
மூலவரின் சிலைகள் சுதை வடிவத்தில் மூலிகைகளால் ஆன வர்ண கபால திவ்யத் திருமேனியாகும்.
இங்கு காண்பதற்கு அரியவகை விமானமான அஷ்டாங்க விமானத்தின் கீழே ஸ்ரீவேதநாராயணர் நின்று, இருந்த, கிடந்த திருக்கோலங்களில் மூன்று அடுக்குகளில் இருக்கிறார். சப்த பிரகாரங்களை உள்ளடக்கிய கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. குலசேகரஆழ்வார் இறைவன் மீது கொண்ட அன்பால் தனது அரச பதவியை துறந்து பல திவ்ய தேசங்களுக்கு சென்று இறுதியில் இந்த வேதபுரி வந்தடைந்தார். வேதநாராயணர் பார்ப்பதற்கு அரங்கநாதனை போலவே காட்சியளித்தாலும் ராமபிரான் காலத்திலேயே விபீஷணாழ்வார் மங்களா சாஸணம் செய்த வேதநாராயணர் திவ்ய அழகில் மயங்கி இங்கு பல கைங்கரியங்களை மேற்கொண்டு இறுதியில் இத்திருத்தலத்திலேயே பரமபதம் அடைந்தார்.
குலசேகர ஆழ்வாரின் திருவாராதனப் பெருமாளான ராமபிரான், சீதா, லெட்சுமணன் ஆகிய விக்கிரகங்கள் இன்றும் இக்கோயிலில் இருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். குலசேகர ஆழ்வாருக்கு மற்ற ஆழ்வார்களை விட தனிச்சிறப்பாக அந்த பெருமாளையும் சேர்த்து அவரது பெயரை குலசேகர பெருமாள் என்று அழைப்பதும் உண்டு. கோயிலில் பெருமாள் சன்னதி போல் அவரது அருகிலேயே கொடிமரத்துடன் கூடிய தனி சந்நிதி அமைந்துள்ளது. ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு பன்னாயிரப்படி என்ற அழகிய உரை தயாரித்து வழங்கிய வாதிசேகரி அழகிய மணவாள ஜீயர் அவதரித்த திருத்தலம் என்ற சிறப்பு இந்த கோயிலுக்கு உள்ளது.
ஆழ்வார் அமுத மொழியாம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் அருளி செய்தது பெருமாள் திருமொழி என்றும், ஆழ்வார் வடமொழியில் செய்த அற்புத கருத்துக்கள் அடங்கிய துதி நூல் முகுந்த மாலை என வழங்கப்படுகிறது. இந்த கோயிலில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் பிள்ளைத் தொண்டுப் பாதை உள்ளது. சிறிய துளை போன்ற இந்தப் பாதையில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நுழைந்து, பெருமாளைப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்! மண்டப விதானத்தில், 12 ராசிகளுக்கு உரிய கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 6.30 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 7 மணிவரையிலும் கோயில் பூஜைகள் நடைபெறுகின்றன.
தரிசனம் முடித்து டவுன் பஸ் ஏறி குற்றாலம் போக தென் காசி பஸ் ஏறரோம்.
படங்கள் அம்பாசமுத்திரம் மற்றும் மன்னார்கோயில் ,குலசேகர ஆழ்வார் சன்னதி,அஷ்டாங்க விமானம் வீடியோ...
தொடரும்




No comments:
Post a Comment