ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் கி்ராமத்து சூழலில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு நான் சொல்லப்போகும் விஷயம் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.
காலையிலிருந்து வீட்டில் உள்ள வேலை, வெளிவேலை, உள்ளூரிலேயே உள்ள வேலை என கடுமையாக உழைத்து களைத்தவர்கள் மாலையில் வேலை முடிந்து குளித்துமுடித்து, சமைத்து, அனைவரும் உண்டபின்பு, குழு குழுவாக ஒரு தெருவுக்கு குறைந்தது நாலைந்து குழுவினர் ஒரு சீரான இடைவெளியில், குறிப்பிட்ட சில வீட்டின் முன் அமர்ந்து அரட்டை அடிப்பது என்பது அன்றைய நாளில் பார்த்திருக்கலாம்.
அப்படி அரட்டை அடிப்பதினால் அன்றைய நாள் முழுவதும் அவர்கள் பட்ட கஷ்டங்கள், அனுபவங்கள், அன்று முழுவதும் நடந்த அத்தனை நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் என அனைத்தும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு தனது மன அழுத்தத்தை போக்கிக்கொள்வார்கள்.
அன்றைய All India radio இந்த குழுக்கள்தான். மூக்குப்பொடி மூக்கில் போடுவது முதல் மிளகாய்ப்பொடி சாம்பாரில் போடுவது வரை இங்கு ஒலிபரப்பு செய்யப்படாத செய்திகளே இருக்காது, அலசப்படாத விஷயங்களே இருக்காது.
மாலை 7 மணிக்கு துவங்கும் இதன் சிறப்பு ஒலிபரப்பு அநேகமாக இரவு 11 மணிக்குத்தான் முடியும். அத்தனை செய்திகளும், அனைத்துவகையான கோணங்களில் இங்கு இவர்களால் அலசப்படும். இன்றைய TV விவாதங்களுக்கெல்லாம் முன்னோடி இவை, TV விவாதங்களில் கேட்கப்படும் காட்டுக்கூச்சல் போன்றெல்லாம் இல்லாமல் மிகவும் மெதுவாக, மிகவும் ரகசிய குரலில், யாருக்கும் கேட்டுவிடாதபடிக்கு மிக்க ஜாக்கிரதை உணர்வோடு பேசப்படும். காரணம், இரவில் சுவறுக்கும் காது இருக்குமாம். இப்படியாக தெருவுக்கு நாலு குழுக்கள் இந்த சிறப்பு ஒலிபரப்பில் பங்கெடுக்கும். இதில் அத்தெருவில் உள்ள ஒருவர் ஏதாவது ஒரு குழுவில் கண்டிப்பாக உறுப்பினராக இருந்தே ஆகவேண்டும். அப்படியிருந்தால் மற்ற குழுவிலிருந்து கழுவி ஊற்றும் போது வரும் எதிர்ப்புக்களை இந்த குழுவின் படை பலதைக் கொண்டு அதை முறியடிக்க முடியும். எந்த குழுவோடும் சேராமல் நடுநிலை வகித்தால் மேற்கண்ட நான்கு குழுவிலிருந்தும் மொத்தமாக கழுவி கழுவி ஊற்றப்படுவார்கள்....
ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்கு யாராவது கட்சிமாறி சென்றாலோ, இந்த குழுவிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வேறு குழுவிற்கு சென்றுவிட்டாலோ அன்றைய தினம் சிறப்பு கழுவி ஊற்றும் விவாதம் ஒலிபரப்பபடும்.
பொதுவாக இங்கு அலசப்படும் விஷயங்கள் என்று பார்த்தால் தன் வீட்டில் அன்றைய சமையல், அன்றைய தினம் அணிந்திருந்த ஆடையின் நிறம், வடிவம், குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள், கட்சிதாவும் உறுப்பினர்களுடன் குழு உறுப்பினர்கள் யாரும் பேசக்கூடாது, எவ்விதமான கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ள கூடாது, அன்னம், தண்ணி, ஆகாரம் பொழங்கக்கூடாது, அவர்களின் பக்கமே திரும்பிக்கூட பார்க்க்கூடாது, குழுவின் விதிகளுக்கு மீறி யாராவது செயல்பட்டால் இவர்களும் குழுவிலிருந்து நீக்கப்படுவர் போன்ற பல சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
அனைத்துக்கும் மேலாக அவர்களின் இயற்கையான ஸ்வபாவமான தனக்கு பிடிக்காதவர்களின் கற்பு நெறியை பற்றி மிக காட்டமாகவும், காரசாரமாகவும் விவாதித்து, வாய்மொழியாக அறிக்கைகள் வெளியிடுவார்கள். இதன் தொடர்ச்சியாக மறுநாள் குழாயடியில், (அதுதான் அவர்களின் சண்டை நடக்கும் பானிப்பட்டு யுத்த களம்) மயிர்கூச்செறியும் சண்டைகாட்சிகள் (தலைமயிரை பிடித்துக்கொண்டு) நடக்கும். பின்னர் நடக்கும் நிகழ்ச்சிகளை பற்றி நான் மேற்கொண்டு எதுவும் சொல்லத் தேவையில்லை...
இதற்கு ஊர் வம்பு என்று பெயர்...
பின்னர் காலமாற்றத்தால் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள் இந்த ஊர் வம்பைவிட சுவாரஸ்யமாகவும், தனக்கு எவ்விதமான ரிஸ்க் இல்லாமல் இருப்பதாலும், இவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமான, கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவனை இவ வெச்சிருக்கா, இவளை அவன் வெச்சிருக்கான் போன்ற இவர்கள் இயல்பாகவே விரும்பும் பிறரின் கற்பு ஒழுக்கத்தை இன்னும் அதிக சுவாரஸ்யமாக தந்ததாலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஊர்வம்பு தனது இயல்பான மதிப்பை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி வேறு பரிமாணத்துக்கு மாறியது...
பிறகு சிறிது காலத்திற்கு பிறகு இந்த ஊர்வம்பு ஆனது ஆண்ட்ராய்டு மொபைல் போன் என்ற அதிநவீன விஞ்ஞான கண்டுபிடிப்பின் பலனாக Facebook, WhatsApp, messenger, internet போன்றவற்றில் உதவியால் update ஆகி இன்று நவீனப்படுத்தப்பட்டு, புதிய பொலிவோடு பரிணமித்து மிளிர்கிறது.
இதில் ஊர்வம்பில் ஏற்கனவே என்னென்ன அம்சங்களெல்லாம் இருந்தனவோ அவற்றின் அடிப்படை கொஞ்சம் கூட மாறாமல், ஆனால் அதேசமயம் நவீனப்படுத்தப்பட்டு இவர்களால் கையாளப்படுகிறது.
இதில் வேறு குழுவில் உள்ளவர்களின் பதிவிற்கு லைக் போடக்கூடாது, கமென்ட் பண்ணக்கூடாது என்ற ஊர்வம்பில் உள்ள அதே கட்டுப்பாடுகளும், அப்படி யாராவது லைக்கோ, கமென்டோ போட்டால் இந்த குழுவிலி்ருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக அதிவேக 4G தொழில்நுட்ப உதவியுடன் உடனடியாக ஒருவரின் பேச்சு பிடிக்கவில்லை என்றால் மிகக்குறுகியகால நடவடிக்கையாக டெலிட் பண்ணும் வசதியும் குறுகியகால நடவடிக்கையாக unfriend பண்ணும் வசதியும், சாகறவரைக்கும் இனி உன் மூஞ்சியிலயே முழிக்கமாட்டேன் என்ற வசதிக்காக block பண்ணும் வசதியும் ஒருங்கே அலையப்பெற்றுள்ளது. மேலும் hide செய்தல் போன்ற அல்ப வசதிகளும் இப்போது இதில் உள்ளது.
முன்னர் ஒரே தெருவில் உள்ள மற்றொரு குழுவுடன் ஊர்வம்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே அது அதே தெருவில் உள்ள மற்றொரு குழுவை சென்று அடையவே குறைந்தது ஒருநாள் அல்லது இரண்டு நாளாவது ஆகும்
ஆனால் தற்போதைய நவீன 4G வசதியில் ஒரு தெருவில் மட்டுமல்லாமல், அடுத்த தெரு, அந்த ஊர், அடுத்த ஊர், அண்டை மாநிலம், ஏன், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் உள்ளவருடனே உட்கார்ந்த இடத்திலிருந்தே ஊர் வம்பு அளக்கமுடியும், அதுவும் இந்த கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணைகளாள அக்னி, ப்ருதிவி, ஸ்கட், பேட்ரியாட் போன்றவைகளைவிட பலமடங்கு வேகத்தில் எதிரியின் இலக்கை இலக்கு தவறாமல் மிக துல்லியமாக தாக்க முடியும்.
இந்த புதியவகை ஊர்வம்பில் என்னென்ன புதிய வசதிகள் உள்ளது என்றால்
1) ரகசிய ஊர் வம்புக்கு messenger, WhatsApp...
2)குழுவாக ஊர் வம்புக்கு WhatsApp group...
3) மணத்தக்காளி வத்தகுழம்பு செய்வதை பற்றி ஒருவர் ஊர்வம்பு செய்தால் அவரை வம்புக்கிழுத்து, கழுவி கழுவி ஊற்ற Twitter...
4) open combat அதாவது திறந்தவெளி ஊர் வம்புக்கு Facebook post மற்றும் அதனை தொடர்ந்து வரும் "உன் யோக்கியதை தெரியாதா, அன்னிக்கி அவன பாத்து பல்ல காமிச்சு இளிச்சு, இளிச்சு வழிஞ்சுகிட்டு இருந்தையே" என இந்த தரப்பிலிருந்தும், "அன்னிக்கு நீ முதுகு தெரியறாப்பல போட்டிருந்த dress ல இருந்தே தெரியலயா நீ யாருக்கெல்லாம் வலைவீச வந்தே" என்பது போன்ற அதிரடியான ஊர்வம்பு comments, replies மூலமும்... மயிர் கூச்செரியும் காது கொடுத்து கேட்க தயங்கும் ஒரு குழாயடிச் சண்டை காட்சிகளை நேரடியாக கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் வசதி இதில் உண்டு.
4) இந்த ஊர்வம்பில் நேரடியாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்பதில்லை, உலகத்தின் எந்தவொரு மூலையிலிருந்தும் இருந்த இடத்திலிருந்தே அத்தனை அஸ்த்திரங்களையும் பிரயோகிக்க முடியும்...
முன்னர் எதிரணியினரை உன் மூஞ்சி குரங்கு மாதிரி இருக்கு என சொல்ல வேண்டுமானால் தனது முகத்தை குரங்குபோல வைத்து "பழிப்பு" கட்டவேண்டும். இதனால் உண்மையான குரங்குகளே பயந்து ஓடும் ஆபத்து இருப்பதால், குரங்கு படத்தை stickers ஆக ஒட்டினாலே போதும். பதிலுக்கு கழுதை, பன்றி, நாய் என இவர்களைவிட அழகிய பல stickers பதிலுக்கு பதில் போட்டு attacks யை இன்னும் interesting ஆக, சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் வசதியும் இதில் உண்டு...
இதற்கு உலக வம்பு என்று பெயர்...
இப்படியாக ஊர்வம்பின் பாரம்பரியம் சிதைவுறாமல், பண்பாடு கெடாமல், அதன் கலாச்சாரம் அழியாமல், அதன் பழமை மாறாமல், சிந்தாமல், சிதறாமல், அடிப்படை மாறாமல், அதன் பழைய வடிவத்திலேயே, அதே நேரத்தில் நவீனத்துவமாக நடைபெறும் இந்த ஊர்வம்பு தன் வடிவம் மாறாமல் update ஆகி இன்று உலகமயமாக்கலில்(globalization) உலக வம்பாக புதிய பரிமாணத்தில் பொலிவுறுகிறது...
ஓர் எச்சரிக்கை... :
ஊர்வம்பில் தனிதிறமைகள் பெற்றவர்களால் மட்டுமே இதில் திறமையாக சமாளித்து, நீடித்து நிலைக்க முடியும்...
No comments:
Post a Comment