'அந்தக் கால' கிராம ஜீவனம்!
கிராமத்துத் திண்ணையில் தெருவுக்கே ஒரே பிரதியாக "சுதேசமித்திரன்"
அல்லது "தினமணி"
காரைவாசல் கயிற்றுக் கட்டிலில் ஒருவர் உரக்கப் படிக்கையில்...
சுற்றி வந்து அமரும் கும்பலில் எவரோ ஒரு கிழவர் காதில் நிச்சயமாய் 'செவிட்டு மிஷின்'!
திண்ணை ஓரம் 'தூரமணாள்' அறை உள்ளில் 3 நாள் படிக்கவே...
கல்கி, ஆனந்தவிகடனில் தொடர் கிழித்து பைண்டு செய்த 'அலை ஓசை' / 'சிவகாமியின் சபதம்/ பொன்னியின் செல்வன்'
கூடத்து ஊஞ்சலில் வெள்ளி வெற்றிலைப் பெட்டி!
(பாக்கு சீவித் தரும் வேலைக்காரப் பெண்ணே, 'மிராஸ்தாருக்கு' சில சமயம் ரகசியமாய் தலையும் சீவி விடுவாள்!)
கொல்லையில் பசுமாடு - அதில் ஒன்று சினையாக...
கன்று ஈன்று நல்லபடிப் பிழைக்க வேண்டிய கவலை!
அநேகமாக அதே நேரம் 'வீட்டம்மா' கடைக்குட்டி என...
(தான் நினைக்கும்) மகவை ஈன்றெடுக்க மருத்துவச்சி துணையோடு முயன்று கொண்டு இருப்பாள்!
புதிதாகப் பிறந்த சிசுவுக்கு அம்மா முலை அவிழ்க்க...
மூன்று வயசு ஆன மூத்ததற்கு 'அன்ன பிராசனம்'
அதற்கும் மூத்த ஐந்து வயசுக்கு நெல் பரப்பி
"அட்சராப்யாஸம்"
அதற்கும் மூத்த பதின் பருவ அக்காவுக்கு
"பூப்பு நன்னீராட்டு"
அதற்கும் பெரிய இருபதைத் தொட்டவளுக்கு "ஜாதகப் பரிவர்த்தனை"
அதற்கும் மூத்தவளுக்கு "வளைகாப்பு"
அவளும் அவள் தாயாரும் ஒரே வாரத்தில் பிரசவிக்க மாப்பிள்ளை எதிரில் தன்
'கடைக்குட்டி' யுடன்
வர வெட்கப்படும் மாமியார்!
கொல்லையில் காராம்பசு! வாசலில் வில் வண்டி!
காலையில் நீராகாரம்!
கால் தேய "மெயின் ரோடு" பஸ்பிடிக்க காதங்கள் சில கடந்து நடை!
மதியத்தில் சிறு உறக்கம்!
இரவு ஒளியடங்கும் முன்
ராச்சோறு!
முதல் ஜாமத்திலேயே உறக்கம்!
விண்மீன்கள் மறையாத விடிகாலையில் விழிப்பு!
கிணற்றடியோ, ஆற்றோரமோ குளிர்ந்த நீர்க்குளியல்!
கம்பங்கூழ், ராகிக்களி, தினைமாவு, மொச்சைக் குழம்பு, கொத்துக் கடலை சுண்டல், பயறுகளில் பட்சணங்கள்!
ஆரோக்ய வாழ்க்கை!
ஆயுள் அபிவிருத்தி!
அந்தக் காலம்! அந்தக் காலம்!
No comments:
Post a Comment