இந்த மாதம் முழுவதும் புரட்டாசியில் தினம் ஓர் வைணவ ஆலயம் பற்றி தெரிந்து கொள்வோம்*
திருமண்டங்குடி
நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருக்கோயில்.
தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார ஸ்தலம்
புள்ளபூதங்குடி திவ்யதேசத்திற்கு அருகில், கும்பகோணம் மாவட்டம்
திருவரங்கம் போன்றே இத்தலத்திலும் வடதிசையில் கொள்ளிடம் ஆறும் தென்திசையில் காவிரி ஆறும் அமைந்துள்ளன.
மூலவர்: ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீரங்கநாதர் (நின்ற திருக்கோலம்)
தாயார்: ஸ்ரீரங்கநாயகி தாயார் (தனிக்கோயில் நாச்சியார்)
சந்தான லக்ஷ்மி
கோயிலில் உள்ள மற்ற ஸந்நிதிகள்:
ஸ்ரீஆழ்வார் ஸந்நதி , திருவேங்கடமுடையான்
#தரிசனநேரம்:
காலை 10மணி முதல் மாலை 4 மணி வரை
அரங்கனின் செல்லப்பிள்ளை, திருவரங்கத்தின் செல்வன்,
தொண்டர்களின் திருவடியாய் தன்னை நினைத்த ஆழ்வார், ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வார் சோறுடைத்த சோழ மண்டலத்தில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருஷம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார்.
ஆழ்வார் வரிசைக்கிரமத்தில் பத்தாமவராக வரும் இவருக்கு விப்ரநாராயணர் என்பது இயற்பெயராம்.
திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறையாம் அரங்கனுக்கு பாமாலையோடு பூமாலையும் சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார்.
இவர் திருமாலிடம் என்றும் பச்சையாக காணப்படும் வைஜெயந்தி மாலையின் அம்சமாக கருதப்படுகிறார்.
திருப்பள்ளியெழுச்சி (10 பாசுரம்),
திருமாலை (45 பாசுரம்)
என இரு பாமாலையும் இவருக்கு உரித்தானது.
திருவரங்கத்து இறையாகிய அரங்கனுக்காக பூமாலை கைங்கர்யம் செய்வதற்குண்டான நந்தவனம் அமைத்து அன்றலர்ந்த மலர்களை பறித்து அழகான பூச்சரங்களாக தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பித்து வரும் வேளையில் தேவதேவி எனும் சோழநாட்டு கணிகை மங்கையின் பால் கொண்ட விருப்பில் தன்னையே மறந்து, தன் செல்வம் யாவும் இழந்த இவருக்காக அரங்கன் தன் கோயில் வட்டிலைக் கொடுத்துதவ,
அதை களவாடிய பழி இவர் மீது வீழ்ந்து அரசன் முன் இவரை இட்டுச்சென்றது.
முடிவில் அரங்கனால் உலகத்திற்கு உண்மை அறிவிக்கப்பட்டு, அவரால் ஆட்கொண்டபின் மீண்டு வந்த இவர் தன் இறுதிவரை அரங்கனுக்கே அடிமைப்பூண்டார். தான் எனும் ஆணவத்தை தவிர்க்கும் பொருட்டு தன்னை சிறுமைப்படுத்திக் கொள்வது ஞானியர்தம் இயல்பு.
மேலும் பரமனுக்கு அடிமை என்பதினும் அவன்தன் உத்தம அடியார்க்கு அடிமை என்பதை பெரிதாக எண்ணுவது வைணவ மரபு. அதனாலேயே அரங்கனுடைய தொண்டர்களின் அடியாகிய திருவடியின் தூசி எனும் பொருள்பட தொண்டர்தம் அடிப்பொடி என்றும், அரங்கனின் பக்தியில் ஆழ்ந்துப் போனவரை ஆழ்வார் என்று அழைப்பதற்கிணங்க தொண்டர் அடிப்பொடியாழ்வார் ஆனார்.
தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட பள்ளியெழுச்சியே பள்ளியெழுச்சி வகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
மார்கழியில் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.
"திருமாலை அறியாதர் திருமாலையே அறியாதர்" எனும் வழக்கு இவரின் படைப்புகளுள் ஒன்றான திருமாலையின் உயர்வை செப்புகிறது.
இதன் பொருள் யாதெனில் ஆழ்வார் இயற்றிய திருமாலை எனும் நூலை அறிந்திடாதவர் பரமனாகிய திருமாலையே அறிந்திடாதவர்கள் ஆவார் என்பதாம். அதாவது பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர் ஆழ்வாரின் திருமாலை எனும் நூலை படித்தல் போதுமென்பதாம்.
இவர் தொடுத்த பாசுரத்தில்
செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே.
என்கிறார்
மற்றொன்றில் ஆதரம் அற்றிருக்கிற எம்பெருமானார் திருவடிகளே நமக்குச் சரணமென்கிறார் இதில் அவர் ஸ்ரீரங்கநாதன் திருவடிகளில் இரண்டு மாலைகளைச் செய்து ஸமர்ப்பித்ததாக சாடூக்தியாக இயம்புகிறார் இவ்வமுதனார்.
துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி
என்றும்
தொடையொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்றும் தாமே அருளிச் செய்தபடிக்குப் பொருந்தத் திருத்துழாய் மாலைகளையும், திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகிய சொல் மாலைகளையும் அரங்கத்தையன் கழல்களிலே ஸமர்ப்பித்தவரே தொண்டரடிப்பொடியாழ்வார்.
துளஸியினாலாகிய எழில் மாலை என்றபடி.
இப்பாடல் அழகிய தேயாயினாம் வியாக்கியானத்தில் ஆதரிக்கப்பட்ட பாடமன்றாதலால்
உபேக்ஷிக்கத் தக்கதெனலாம்.
மேலும் இவர் எம்பெருமானை அனுபவித்ததை
பச்சை மாமலைபோல் மேனி
பவளவாய் கமலச்செங்கன் அச்சுதா அமரரேறே
ஆயர் தம் கொழுந்தே எண்ணும்
இச்சுவைத் தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும் அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள்ளானே
என்ற இந்தப் பாசுரம் பக்தி அல்லாதவரையும் பக்தி செய்யத் தூண்டுவதை போல் அருளியுள்ளார்.
காலைப்பொழுது விடிவதை வெகு இயல்பாக நம் கண்முன் காட்சிப்படுத்தும் தேமதுரமிர்தத்தின் முதல் துளி இதோ:
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்
வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்த்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருளாயே.
திருவரங்கனை தொண்டரடிப்பொடியாழ்வார் மிக அழகாக விவரித்து பாடிய பாசுரம்.
குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி
தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக்கடவுளெந்தை
அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக் குருகுமாலோ
என்செய்வேன் உலகத்தீரே !
மன்னுமதிள் திருமண்டங்குடி வந்தோன் வாழியே
மார்கழியில் நல்கேட்டை வந்துதித்தான் வாழியே
தென்னரங்கரடியிணையே பற்றி நின்றான் வாழியே
திருமாலை ஐயொன்ப தருளினான் வாழியே
துன்னுபுகழ்த் திருப்பள்ளியெழுச்சி சொன்னான் வாழியே
தொல்புகழ் சேரன்பர்க்கே தொண்டுகொண்டான் வாழியே
தொன்னகரில் பொன்பாவைக் களித்தபிரான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணையடிகள் வாழியே.
No comments:
Post a Comment