Sunday, September 20, 2020

திருமோகூர்

 🙏 நமஸ்காரம்    

92. திருமோகூர்

மூலவர் - காளமேகப் பெருமாள்

தாயார் - மோகூர் வல்லி, மோகன வல்லி, மேக வல்லி

உற்சவர் - திருமோகூர் ஆப்தன்

விமானம் - சதுர்முக விமானம்

தீர்த்தம் - ஷீராப்தி புட்கரணி

நாமாவளி - ஸ்ரீ மோஹவல்லீ ஸமேத ஸ்ரீ காளமேக ஸ்வாமிநே நமஹ:

வழித்தடம்:

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை என்ற இடத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

 பாசுரம்:

நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர் தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால் 

காமரூபங் கொண்டு எழுந்தருளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்!

- திருவாய்மொழி (3676)

நம்மாழ்வார் 11 பாசுரங்களாலும், திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தாலும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாசுரம் பதவுரை:

நமக்கு நாம் அடைந்த நல் அரன் எனறு ஸாதுக்களான தேவர்கள் - நல் அமரர்      நமக்குப் புகலாக நாம் அடைந்த நல்ல ரக்ஷகமான தலம் இதுவென்று

எழுந்து அளிப்பான் - கிளர்ந்து ரக்ஷிக்கும் பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான

தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால் - தங்களுக்குப் பொல்லாங்கு அஞ்சி வந்தது பணிந்தால்

காமரூபம் கொண்டு - திருவுள்ளமான வடிவைக் கொண்டு

திருமோகூர் நாமமே - திருமோகூரிப்பதியின் பெயரையே

நமர்காள நவின்று எண்ணுமின் ஏத்துமின்      . - நம்முடையவர்களே! பயின்று நினையுங்கோள், வாய் விட்டுமேந்துங்கள்

பாசுரம் விளக்க உரை:

அடியார்களின் விஷயத்தில் அபீஷ்டவிக்ரஹ பர்க்ரஹம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பெருமான் வர்த்திக்கிற திருமோகூர்த் திருப்பதியின் திருநாமத்தைச் சொல்லி ஏத்துங்கோ என்று, தம்மோடு அந்வயமுடையார்க்கு உரைத்தருளுகிறார். நல்லமரர், தீமை செய்யும் வல்லசுரரையஞ்சி, நமக்கு நாமடைந்த நல்லரணென்று சென்றடைந்தால், காமரூபங்கொண்டு எழுந்தளிப்பான் என்று அந்வயிப்பது. அசுரர்கள் எப்போதும் அமரர்கட்குத் தீங்கிழைத்துக் கொண்டே இருப்பாகளாதலால் அவர்கட்கு அஞ்சி எம்பெருமானிடம் வந்து ’ நமக்கு நாமடைந்த நல்லரண்’ ( நமக்கு அஸாதாரணமாக நாம் பற்றின விலக்ஷணமான அரண்) என்று கொண்டு வந்தடைகின்ற நல்லமரர்கட்காக, காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான். அடியாருடைய ஆபத் ரக்ஷணதநுரூபமாக வேண்டினபடி பர்க்ரஹிக்கும் திருமேனிக்குக் காமரூபம். அதைக்  கொண்டு புறப்பட்டு ரக்ஷிக்குமவன் வர்த்திக்கிற திருமோகூர். இவ்வூர்ன் பெயரை வாயாலே சொல்லி யநுஸந்தித்து அன்பு மிகுதியினால் ஏத்துங்கோள் நம்முடையவர்களே! என்றாயிற்று.

-ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு:

ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சென்று மஹா விஷ்ணுவைத் துதித்து சாகாவரமளிக்கும் அமிர்தம் வேண்டும் எனக் கேட்க, அவ்விதமே அவர்களுக்கு வழங்குவதாக வாக்களித்த திருமால், தேவர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு பாற்கடலைக் கடைந்து அமுதமெடுக்க ஆயத்தமானார். மந்தர பர்வதம் என்னும் மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை பெரிய கயிறாகவுங் கொண்டு ஆயிரம் கைகளால் பாற்கடலைக் கடைந்தனர். கடையப்பட்ட பாற்கடலிலிருந்து முதன் முதலில் காளகூட விஷம் உண்டானது. அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். அதன் பின் சந்திரன், உச்சைச்சிரவசு என்னும் குதிரை, கற்பக விருட்சம், ஐராவதம் என்னும் யானை, அகல்யை போன்றோர் தோன்றினர்.  இதன் பிறகு மஹாலட்சுமியும் கௌஸ்துப மணியும் தோன்றின. இறுதியில் தேவர்கள் வெகுகாலமாக வேண்டிப்பட்ட அமிர்தம் உண்டாயிற்று.     இதில் உச்சை சிரவசு என்னும் குதிரையும், ஐராவதம் என்னும் யானையும் இந்திரனை அடைந்தன. காமதேனுவை வசிட்டரும், அகல்யயைக் கௌதம முனிவரும், விஷத்தையும் சந்திரனையும், பரமசிவனும் பெற்றார்கள், லட்சுமியும், கௌஸ்துப மணியும் மஹாவிஷ்ணுவைச் சார்ந்தன.  அமிர்தத்தை எடுக்க தேவர்கள் விரைந்ததும், அசுரர்களும் ஓடி வந்து தமக்கும் பங்கு கேட்டனர். அமிர்தம் வேண்டி நெடுங்காலம் மஹாவிஷ்ணுவைக் குறித்து துதி செய்தது நாங்கள் தான். எங்கள் வேண்டுதலுக்கு இசைந்து தான் பெருமாள் பாற்கடல் கடைந்தார், எனவே உங்களுக்கு அமிர்தம் கிடையாதென்றனர் தேவர்கள். உடனே தேவாசுர யுத்தம் தொடங்கி விட்டது, யுத்தத்தில் அசுரர்களின் கை ஓங்கிக் கொண்டே வந்ததும், தம்மைக் காப்பாற்றுமாறு தேவர்கள் திருமாலைத் தொழ, தேவரட்சகனான திருமால் ஒரு அழகான மோகினி வேடங்கொண்டு அமிர்தத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தேவர்களையும், அசுரர்களையும் நோக்கி நீங்கள் இரண்டு வரிசைகளாக அமர்ந்து கொள்ளுங்கள் நான் அமிர்தத்தை உங்களுக்குப் பகிர்ந்து தருகிறேன் என்று சொல்ல, தேவர்கள் ஒரு வரிசையிலும், அசுரர்கள் ஒரு வரிசையிலும் அமர்ந்தனர். அசுரர்கள் மோகினியின் அலங்காரத்திலேயே மனதைப் பறி கொடுத்தவர்களாயிருந்து கொண்டு சலன சித்தத்துடன் வீற்றிருக்க, மோகினி அவதாரங்கொண்ட பெருமாள் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தைக் கொடுத்துக் கொண்டு வந்தார். இதனைக் கண்ட ராகு, கேதுக்களிருவரும் தேவர்களின் வடிவங்கொண்டு தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டனர். இவர்களிருவரும் சந்திரனாலும், சூரியனாலும் திருமாலுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டனர். சினங்கொண்ட திருமால் தமது சக்ராயுதத்தால் அவ்விருவரின் சிரங்களைக் கொய்தார். இதனால், சூரீய, சந்திரர் மீது பகைமை பூண்ட ராகு கேதுக்கள் பருவ காலங்களில், சூரிய சந்திரனைப் பிடித்து அவர்களது பலத்தை குறைக்கிறார்கள். பெருமாள் மோகினி அவதாரங்கொண்டு, திருப்பாற் கடலில் கடையப்பட்ட அமிர்தத்தை இவ்விடத்திலிருந்து தேவர்கட்கு வழங்கினமையால் “மோஹன சேத்திரம்” என்றாயிற்று, தூய தமிழில் மோஹினியூராகி, மோகியூராகி, இறுதியில் திருமோகூராயிற்று.  திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து ஒரு துளியானது இந்த சேத்திரத்தில் விழுந்ததாகவும், அவ்விடத்தில் தேவர்களால் ஒரு குளம் வெட்டப்பட்டதென்றும், அந்த தீர்த்தத்திற்கு க்ஷீராப்தி தீர்த்தம் (திருப்பாற்கடல்) என்ற பெயருண்டாயிற்றென்றும் மாத்ஸய புராணம் கூறும்.

புலஸ்தியர் என்னும் முனிவர் துவாபரயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனை குறித்து இத்தலத்தில் தவமியற்றினார். பாற்கடல் கடையுங்கால் பெருமாள் கொண்ட கோலத்தை இச் சேத்திரத்தில் காணவேண்டும் என்று கடுந்தவம் இயற்றினார். இவரின் தவத்தை மெச்சிய எம்பெருமான், புலஸ்தியர் விரும்பியவாறே அவருக்கு காட்சிக் கொடுத்தது மட்டுமின்றி,  புத்திரப்பேறு இல்லாதிருந்த புலஸ்தியருக்கு “விச்ருவர்” என்ற பெயர் கொண்ட புத்திரனை விரைவில் பெறுவதற்கான வரத்தையும் அளித்தார். எனவேதான் இங்கு பாற்கடல் வண்ணனுக்கு திருப்பாற்கடல் நாதனாக காட்சி தரும்) தனிச் சந்நிதியுள்ளது.

சிறப்பு:

காளமேகம் (கருமேகம்) நீரை தனக்குள் வைத்துக்கொண்டு, அதை மக்களுக்கு மழையாக பெய்விப்பது போல இத்தலத்தில் மகாவிஷ்ணு, அருள் என்னும் மழையை தருகிறார். எனவே இவர், “காளமேகப்பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். பஞ்சாயுதங்களுடன் காட்சி தரும் இவர், மார்பில் சாளக்ராம மாலை அணிந்து, வலது கையால் தன் திருவடியைக் காட்டியபடி இருக்கிறார். இங்குள்ள உற்சவர், “ஆப்தன்’ என்று அழைக்கப்படுகிறார். “நண்பன்’ என்பது இதன் பொருள். தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களது இறுதிக்காலத்திற்கு பிறகு வழித்துணைவனாகவும் அருளுவதவால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது’ என்பர். இவ்வாறு தூங்குவது போல நடிப்பதை, “கள்ளத்தூக்கம்’ என்பர். இத்தலத்தில் கள்ளத்தூக்க கோலத்தில், பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது.தேவர்கள், தங்களைக் காக்க மகாவிஷ்ணுவிடம் முறையிடச் சென்றபோது அவர், ஏதுமறியாதவர் போல சயனித்திருந்தாராம். தேவர்களுக்கு, சுவாமியின் நித்திரைக்கு இடையூறு இன்றியும், அதே சமயம் தங்களது குறையையும் சொல்ல வேண்டும் என்ற நிலையில், அவரை எழுப்ப விரும்பாத அவர்கள், ஸ்ரீதேவி, பூதேவியிடம் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொல்லி விட்டு திரும்பி விட்டனர்.இப்போது தாயார்கள் இருவருக்கும், தேவர்களின் வேண்டுதலை சுவாமியிடம் சொல்ல வேண்டும், அதேசமயம் அவரது நித்திரையைக் கலைக்கக்கூடாது என்ற நிலை! எனவே, அவர்களிருவரும் மனதிற்குள் வேண்டிக்கொள்ளவே, மகாவிஷ்ணு கருணையுடன் கண்திறந்து, மோகினி வடிவில் சென்று தேவர்களுக்கு அருள்புரிந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் வலது கையை தலைக்கு வைத்து சயனித்திருக்கிறார். பாதத்திற்கு அருகில் தாயார்கள் இருவரும் கைகளை தாழ்த்தி வைத்து, பிரார்த்தனை செய்யும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இவருக்கு, “பிரார்த்தனை சயனப்பெருமாள்’ என்று பெயர். இந்த சன்னதிக்கு கீழே திருப்பாற்கடல் தீர்த்தம் இருப்பதாக ஐதீகம். பாற்கடலின் ஒரு துளி இதில் விழுந்ததால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது.

மோட்சம் தரும் பெருமாள்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்களும் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர். அழகர்கோவில் கள்ளழகரையும், திருமோகூர் பெருமாளையும் இணைத்து, “சீராறும் மாலிருஞ்சோலை திருமோகூர்’ என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். நம்மாழ்வார்  இறைவனை சரணாகதியடைய வேண்டி பாடிய திருவாய்மொழியில் இத்தலம் பற்றி பாடியுள்ளார். இங்கு வேண்டிக்கொள்ள மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே சுவாமிக்கு, “மோட்சம் தரும் பெருமாள்’ என்றும் பெயருண்டு. 

பெருமாள், பெண் வடிவம் எடுத்த தலமென்பதால், அவருக்கு மரியாதை தரும் விதமாக தாயார் மோகனவல்லி, சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை. இவளுக்கென விழாவும் கிடையாது. இவளது சன்னதியில் சடாரி சேவை, தீர்த்த பிரசாதமும் தரப்படுவதில்லை. நவராத்திரியின் போது மட்டும் விசேஷ பூஜை செய்கின்றனர். பங்குனி உத்திரத்தன்று சுவாமி,  தாயார் சன்னதிக்கு எழுந்தருளி, சேர்த்தியாகக் காட்சி தருகிறார். இந்த வைபவம் மூன்று மணி நேரம் மட்டுமே நடக்கும்.

ஆண்டாளுடன் புறப்பாடு: மோகனவல்லி தாயார், சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை என்பதால், சுவாமியுடன் ஆண்டாள் பிரதானமாக புறப்பாடாகிறாள். வைகாசி பிரம்மோற்ஸவத்தில் காளமேகப்பெருமாள், ஆண்டாளின் மாலையை அணிந்தபடி, சேர்த்தியாக காட்சி தருவார். பங்குனி உத்திரம், அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத்திருவிழா, மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன், ஆண்டாளை தரிசிக்கலாம்.வைகாசி பிரம்மோற்ஸவத்தின் எட்டாம் நாள், மாசி மகம் ஆகிய நாட்களில் மோகினி வடிவில் சுவாமி காட்சி தருவார். மாசி மகத்தன்று சுவாமி, ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு மோகினி வடிவில் அலங்காரம் செய்து, சடை பின்னி, எண்ணெய் தடவி தைலக்காப்பு செய்கின்றனர். அன்று நள்ளிரவில் சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி, கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கும். மோட்ச தீபம்: சிவ பூஜைக்கு உகந்த வில்வம், அவருக்கான தலங்களில் பிரதான விருட்சமாக இருக்கும். ஆனால், பெருமாள் தலமான இங்கும் வில்வமே, தல விருட்சமாக இருக்கிறது. இத்தலத்து தாயார் மோகனவல்லிக்கும், வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக் களுக்கு திதி, தர்ப்பணம் செய்பவர்கள், செய்ய மறந்தவர்கள்.

காளமேகப்பெருமாளை வேண்டி, அரிசி மாவில் செய்த தீபத்தில், நெய் விட்டு தீபமேற்றி வழிபடுகின்றனர். இதை “மோட்ச தீபம்’ என்பர். 3, 5, 9 என்ற எண்ணிக்கையில் இந்த தீபம் ஏற்றலாம். சுவாமி சன்னதியில் தரும் தீர்த்தத்தைப் பெற்றுச்சென்று, உயிர் பிரியும் நிலையில் இருப்பவர்களுக்கு புகட்டுகிறார்கள். இதனால், அவர்கள் அமைதியான மரணத்தைச் சந்திப்பர் என்பதுடன், மோட்சமும் பெறுவர் என்பது நம்பிக்கை. நான்கு சக்கர நரசிம்மர்: சக்கரத்தாழ்வார் சிலையின் மேல் பகுதியில், மடியில் இரணியனை கிடத்தி சம்ஹாரம் செய்யும் நரசிம்மரும், கீழ் பகுதியில் லட்சுமி வராகரும் காட்சி தருகின்றனர். இவரது திருநட்சத்திர தினமான ஆனி சித்திரையில், விசேஷ ஹோமம் செய்து, எண்ணெய் காப்பிடுகின்றனர். சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமுள்ள நரசிம்மர், நான்கு கரங்களிலும் சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு இல்லை. தற்போது சக்கரத்தாழ்வார் சன்னதியில் தங்க விமானம் அமைக்கும் திருப்பணி நடந்து வருகிறது. இத்திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்.

தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்கு இத்தலம் காரணமாக இருந்தமையால் தேவேந்திரனால் அனுப்பப்பட்ட சிற்பிகளுடன் விஸ்வகர்மாவும் சேர்ந்து இந்தக் கோவிலின் விமானத்தை (கேதச விமானத்தை) அமைத்தனர்.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/6T0q_ioopDk

No comments:

Post a Comment