Sunday, September 20, 2020

108 திவ்யதேசங்கள் - பதிவு 1

 🌺🌺 108 திவ்யதேசங்கள் - பதிவு 1 🌺🌺


திவ்யதேசம் என்றால் என்ன?

திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் இடம் பெற்ற சிறப்பு மிக்க வைணவத் திருத்தலங்கள் "திவ்யதேசம்" எனவும், திவ்யதேசங்களைப் பற்றிய பாடல்கள் "மங்களாசாசனம்" எனவும் அழைக்கப்படுகின்றன.

"நின்ற திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம், கிடந்த திருக்கோலம்" என்ற மூன்று நிலைகளில் பெருமாள் காட்சி கொடுக்கிறார்.

சோழ நாடு - 40, நடு நாடு - 2, தொண்டை நாடு - 22, மலைநாடு - 13, பாண்டியநாடு - 18, வடநாடு - 11, திருநாடு - 2 கோவில்கள் என மொத்தம் 108 திருக்கோவில்கள் உள்ளன.

🌺🌺முதல் திவ்யதேசம் :-

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் :-

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்தாலே 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

மூலவர் : அரங்கநாதர், பெரிய பெருமாள்

தாயார் : அரங்கநாயகி

உற்சவர் : நம்பெருமாள்

கோலம் : சயனத் திருக்கோலம்

திசை : தெற்கு

தீர்த்தம் : சந்திர புஷ்கரணி

மங்களாசாசனம் : 11 ஆழ்வார்கள் பாசுரம் பாடியுள்ளனர்.

🌺🌺 தலப்பெருமை 7 :-

பெரிய கோவில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரிய வசரம், பெரிய திருமதில், பெரிய கோபுரம் என ஏழு தலப்பெருமைகளைக் கொண்டது.

இவ்வாறு அனைத்தும் "ஏழு" என்ற பெருமையை உடையது திருவரங்கம் திருக்கோவில்.

🌺🌺 ஏழு நாச்சியார்கள் :-

திருவரங்கம் அரங்கநாதருக்கு ஏழு நாச்சிமார்கள் உள்ளனர்.

ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி தாயார், கமலவல்லி நாச்சியார், கோதை (ஆண்டாள்) நாச்சியார், ரெங்க நாச்சியார் என ஏழு நாச்சிமார்கள் இருக்கிறார்கள்.

🌺🌺 தானாகவே தோன்றிய ராமானுஜர் திருமேனி சிறப்பு :-

ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் உள்ள ராமானுஜர் (உடையவர்) சன்னிதி சிறப்பு வாய்ந்தது. ராமானுஜர் மறைந்த பிறகு அவரது திருமேனி அகளங்கன் திருச்சுற்றில் வசந்த மண்டபத்தில் திருப்பள்ளிப்படுத்தப்பட்டது.

அதுவே உடையவர் சன்னிதியாகத் தற்போது உள்ளது. ராமானுஜர் திருமேனியைப் பள்ளிப்படுத்திய பிறகு, "தானாகவே திருமேனி தோன்றியுள்ளது". ராமானுஜ மூலவருக்குத் திருமஞ்சனம் கிடையாது.

ஆண்டுதோறும் ஐப்பசி மாதமும், சித்திரை மாதமும் குங்குமப்பூ மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவை கலந்து திருமேனியில் சாற்றப்படுகின்றன.


🌺🌺சிறப்புகள் :-

"பூலோக வைகுண்டம்" என்று போற்றப்படும் முதன்மையான திவ்யதேசம் "ஸ்ரீரங்கம்".

11 ஆழ்வார்களால் 247 பாசுரங்கள் பாடல்பெற்ற ஒரே திவ்யதேசம்.

ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கம் ரங்கநாதராகிய எம்பெருமானோடு ஐக்கியமான திவ்யதேசம்.

திருப்பாணாழ்வார், இராமானுஜர் போன்ற பலர் முக்தியடைந்த திவ்யதேசம்.

156 ஏக்கர் பரப்பளவில் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய மிகப்பெரிய திவ்யதேசம்.

பஞ்ச ரங்கத் தலங்களில் இது இரண்டாவது தலம்.

🌺🌺 தலவரலாறு :-


திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்).


பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் "இட்சுவாகு" இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.

ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான்.

விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர், அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான்.

அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

குடதிசை முடியை வைத்துக் 

குணதிசை பாதம் நீட்டி

வட திசை பின்பு காட்டித் 

தென்திசை இலங்கை நோக்கிக்

கடல்-நிறக் கடவுள் எந்தை 

அரவணைத் துயிலிமா கண்டு

உடல் எனக்கு உருகுமாலோ 

என்செய்கேன் உலகத்தீரே?

- ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார்.


🌺🌺 விமானத்தைக் கண்டெடுத்தல் :-


தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது.


பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.

🌺🌺 கோவில் அமைப்பு :-

கோவிலின் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

🌺🌺 திருச்சுற்றுகள் :-


இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் "ஏழு உலகங்கள்" என்று கூறுவர்.


1. மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று "பூலோகம்".

2. திரிவிக்ரம சோழன் சுற்று "புவர்லோகம்".

3. அகளங்கனென்னும் கிளிச்சோழன் சுற்று "ஸுவர்லோகம்".

4. திருமங்கை மன்னன் சுற்று "மஹர்லோகம்".

5. குலசேகரன் சுற்று "ஜநோலோகம்".

6. ராஜ மஹேந்திர சோழன் சுற்று "தபோலோகம்".

7. தர்ம வர்ம சோழன் சுற்று "ஸத்யலோகம்".

🌺🌺 நவ தீர்த்தம்:-

இத்திருக்கோவிலில் 9 தீர்த்தங்கள் உள்ளன. நவம் என்றால் 9. இது நவதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

1. சந்திர புஷ்கரணி

2. வில்வ தீர்த்தம்

3. சம்பு தீர்த்தம்

4. பகுள தீர்த்தம்

5. பலாச தீர்த்தம்

6. அசுவ தீர்த்தம்

7. ஆம்ர தீர்த்தம்

8. கதம்ப தீர்த்தம்

9. புன்னாக தீர்த்தம்


அருள்மிகு அரங்கநாதர் சுவாமி 

திருவடிகளே சரணம்.

அருள்மிகு அரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

இரண்டாவது திவ்யதேசம் பற்றி நாளைய பதிவில் பார்க்கலாம்.


""ஓம் நமோ நாராயணாய நமஹ".

No comments:

Post a Comment